பச்சௌலி சாகுபடி!

ச்சௌலியின் அறிவியல் பெயர்: Pogostemon cablin. குடும்பம்: Lamiaceae. பெருங் குடும்பம்: Plantae.

தமிழ்நாட்டில் உள்ள தென்னந் தோப்புகளில், பச்சௌலி என்னும் நறுமண மூலிகை, ஊடுபயிராக சகுபடி செய்யப்படுகிறது. இச்செடி இரண்டடி மூன்றடி உயரம் வளரும்.

இதன் இலைகளில் வாசனை எண்ணெய் உள்ளது. மற்ற வாசனைப் பயிர்களின் எண்ணெய்களை விட, பச்சௌளி எண்ணெய்க்கு உலகளவில் அதிகளவில் தேவையுள்ளது. ஏனெனில், இந்த எண்ணெய், உலகத் தரத்திலான வாசனைத் திரவியங்களைத் தயாரிக்க உதவுகிறது.

வாசனைத் திரவியங்களுக்குத் தேவையான நிறத்தையும், நீடித்து நிற்கும் வாசனைத் தன்மையையும் ஏற்படுத்துகிறது. சோப்பு, கிரீம், ஷாம்பு, அழகுப் பொருள்கள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. இது, மலைப்பகுதியில் வளரக் கூடியது. எனினும், ஓசூர் போன்ற குளிர்ச்சியான சமவெளிப் பகுதிகளிலும் பயிரிடலாம்.

இரகங்கள்

ஜோஹார், சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பச்சௌலி இரகங்கள் வணிக நோக்கில் பயிரிட ஏற்றவை. இவற்றில், ஜோஹார் இரகம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தரமான வாசனை எண்ணெய் உற்பத்திக்கு இந்த இரகம் பயன்படுகிறது. ஆனால், மகசூல் சற்றுக் குறைவாகவே கிடைக்கும்.

இனப்பெருக்கம்

தண்டு அல்லது குச்சிகள் மூலம் பச்சௌலி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நான்கைந்து கணுக்களும், 15-20 செ.மீ. நீளமும் உள்ள குச்சிகளைப் பயன்படுத்தலாம். முதல் மூன்று கணுக்களில் உள்ள இலைகளைக் கிள்ளி விட்டு, பனிமூட்ட அறையில் மணலில் பதித்து நடலாம்.

ஐந்து செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். தினமும் நீரைத் தெளித்து வர வேண்டும். இரண்டு மாதங்களில் குச்சிகள் வேர்ப்பிடித்து விடும். இந்தக் குச்சிகளை எடுத்து நிலத்தில் நடலாம். இப்போது, திசு வளர்ப்புச் செடிகள் அதிகளவில் பயனில் உள்ளன.

மண்ணும் தட்ப வெப்பமும்

பச்சௌலியை வளமான நிலத்தில் பயிரிடலாம். இருமண் கலந்த பொறை மண் மற்றும் கடினமற்ற மண் வகைகள் மிகவும் ஏற்றவை. நிலத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்க வேண்டும். நிலத்தின் கார அமிலத் தன்மை 5.5-6.5 என இருப்பது நல்லது.

இதன் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலை அவசியம். அதாவது, 22-28 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 75 சதம் ஈரமுள்ள காற்றடிக்கும் இடங்கள் மிகவும் ஏற்றவை.

தமிழ்நாட்டில், கீழ்ப்பழனி, கல்லாறு, பரலியாறு, ஏற்காடு, கொல்லிமலை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் பயிர் செய்யலாம். மிதமான தட்பவெப்பம் கொண்ட சமவெளிப் பகுதிகளில் உள்ள தென்னந் தோப்புகளில் ஊடுபயிராகப் பச்சௌலியைப் பயிரிடலாம்.

நடவும் பருவமும்

ஓரளவு நிழலுள்ள இடங்களில் நன்றாக வளரும். இத்தகைய இடங்களை நன்கு உழுது, ஏக்கருக்குப் பத்து டன் எருவை அடியுரமாக இட வேண்டும். 2க்கு 2 மீட்டர் பாத்திகள் அல்லது 60 செ.மீ. பார்களை அமைத்து நடலாம். ஏக்கருக்கு 11,000 செடிகள் தேவைப்படும். ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலம் நடவுக்கு ஏற்றது. செடிகளை நட்டு ஒரு மாதம் வரையில், வாரம் இருமுறை பாசனம் செய்ய வேண்டும்.

உரம்

ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், 132 கிலோ யூரியாவில் 32 கிலோ யூரியா, 126 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாசு ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 100 கிலோ யூரியாவை, ஐந்து பாகமாகப் பிரித்து, ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகு, அதாவது நான்கு மாத இடைவெளியில் இட வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பச்சௌலியை, வேர்ப்புழுவும், அழுகல் நோயும் தாக்கிப் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 12 கிலோ கார்போபியூரான் குருணை வீதம் எடுத்து, செடிகளின் வேர்களுக்கு அருகில் இட வேண்டும்.

வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. காப்பர் ஆக்சி குளோரைடு வீதம் கலந்து, நோயுற்ற செடிகளின் வேர்கள் நனையும் வகையில் நிலத்தில் ஊற்ற வேண்டும். நிலத்தில் நீர்த் தேங்காத வகையில், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும்.

அறுவடை

செடிகளை நட்டு ஆறு மாதங்களில் முதல் அறுவடையைச் செய்யலாம். தரையில் இருந்து பத்து செ.மீ. உயரத்தில் உள்ள கிளைகளை 25-50 செ.மீ. நீளமுள்ள தண்டுகளாக வெட்ட வேண்டும். அடுத்து, ஒவ்வொரு அறுவடையையும் நான்கு மாத இடைவெளியில் செய்யலாம். இப்படி, ஒருமுறை சாகுபடி செய்த பச்சௌளியை, மூன்று ஆண்டுகள் வரையில் பராமரித்து அறுவடை செய்யலாம்.

அறுவடை செய்த இலை மற்றும் தண்டுகளை, நிழலும் காற்றுமுள்ள இடத்தில் பரப்பி வைத்தால், 3-5 நாட்களில் நன்றாகக் காய்ந்து விடும். பிறகு, இவற்றைப் பொதிகளாகக் கட்டி வைத்து, நீராவி வடிப்பு முறையில், எண்ணெய்யைப் பிரித்து எடுக்கலாம். ஏக்கருக்கு ஆயிரம் கிலோ உலர் தழைகள் அல்லது 20 கிலோ வாசனை எண்ணெய் ஆண்டுதோறும் மகசூலாகக் கிடைக்கும்.

பயன்கள்

பச்சௌலி எண்ணெய், ஒவ்வாமையைப் போக்க, வலியைப் போக்க, எடையைக் குறைக்க, பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்க, பூச்சிகளை அழிக்கப் பயன்படுகிறது.

தோல் ஒவ்வாமை, முகப்பரு, வறண்ட தோல், தோல் விரிசல், சளி, தலைவலி, வயிற்று வலி, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றுக்குத் தீர்வைத் தருகிறது, பச்சௌலி எண்ணெய். வேக வைத்த உணவுகள், பானங்கள், மிட்டாய்கள் போன்றவற்றில் சுவையைக் கூட்ட உதவுகிறது. இந்த எண்ணெய்யை, சரியான மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவதே நல்லது.


முனைவர் கா.பரமேஸ்வரி, இணைப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!