மீன் கழிவிலிருந்து திரவ உரம் தயாரித்தல்!

மீன் பல்துறை உணவுப் பொருளாகும். மீன்களைப் பதப்படுத்தும் தொழிற் சாலைகளின் விரிவாக்கம், மீன் கழிவுகளை அதிகளவில் உருவாக்குகிறது. இது, மொத்த அளவில் 75% வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மீனின் துடுப்பு, தலை, தோல் மற்றும் உள்ளுறுப்புகள் ஆகியன, மீன் கழிவுகளாக அகற்றப்படுகின்றன.

உலகளவில் ஆண்டுதோறும் 20 மில்லியன் டன்களுக்கு மேல் மீன் கழிவுகள் கிடைக்கின்றன. இது, மொத்த மீன் உற்பத்தியில் 25% ஆகும். மீன் கழிவுகளை அகற்றுவது உலகச் சிக்கலாக மாறி, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இப்போது மீன் கழிவை, மீன் உபபொருள்கள் தயாரிப்புக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தும் உத்திகள் கண்டறியப்பட்டு உள்ளன.

துடுப்பு மீன்கழிவு

ஒரு துடுப்பு மீனில், தலை 9-20%, முதுகெலும்பு 9-15%, டிரிம்மிங்ஸ் 8-17%, உள்ளுறுப்புகள் 12-18%, தோல் 1-3% கழிவுகளாக அகற்றப்படலாம். முழுதாக வளர்ந்த முட்டைகள், இனம் மற்றும் முதிர்ச்சியின் நிலையைப் பொறுத்து முட்டைக் கழிவு 8-27% இருக்கும். இவை அனைத்தும் மீன்பதனக் கழிவுகளாகும். இவற்றை மேலும் பதனஞ் செய்தால் நல்ல பொருள்களை உற்பத்தி செய்யலாம்; மீனின் எந்தப் பகுதியும் வீணாகாது.

மீன் கழிவுகளின் பயன்பாடு 2012 இல் 40% ஆக இருந்தது. 2018 ஆம் ஆண்டில் 60% ஆகக் கூடியுள்ளது. இது, ஓராண்டில் 300 டன்கள் வரை இருக்கலாம். மீன் கழிவுகளை உரமாக மாற்றிப் பயிர்களுக்கு இடலாம். முக்கியமாக, பாஸ்பரசுக்கான சிறந்த ஆதாரமாக மீனுரம் உள்ளது. எனவே, மீன் கழிவுகளை உரமாக மாற்றி விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும்.

மீனுரத்தின் நன்மைகள்

செயற்கை அல்லது வேதியியல் கூறுகளுக்குப் பதிலாக, கரிம மாற்றங்களைப் (Organic) பயன்படுத்திச் செய்யப்படும் உற்பத்தி முறைகள், நீண்ட கால நன்மைகளின் அடிப்படையில் மிகவும் பயன்மிக்கதாக உள்ளன. மீன் கழிவுகளைப் போன்ற அனைத்துக் கரிமக் கழிவுகளையும் பயன்படுத்துவது, சுற்றுச்சூழலை எளிதாகப் பராமரிக்க உதவுவதுடன், விவசாய உற்பத்திக்கும் பொருத்தமாக அமையும்.

மேலும், கரிமக் கழிவுகளை நிலத்தில் இடுவது, மண் துளைகள், நீர்ப்பிடிப்புத் திறன் மற்றும் மண்ணின் உயிரியல் பண்புகளையும், இயற்பியல் பண்புகளையும் மேம்படுத்தும்.

மொத்தத்தில் கரிம முறையில் பெறப்பட்ட உரங்கள், மண்ணில் நெடுநாட்கள் வரை இருந்து பயன்படும். செயற்கை உரங்களுடன் ஒப்பிடும் போது, நீர் மாசடையும் வாய்ப்பும் மிகவும் குறைவு. எனவே, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் நல்ல பலன்களைக் கொடுப்பதால், மீன் உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது.

மீன் கழிவுகளை உரமாக மாற்றிப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், மீனில் புரத மூலம் அதிகமாக உள்ளது. மேலும், பரந்த அளவில் நுண் சத்துகளும் உள்ளன. இவை, தாவர வளர்ச்சிக்கு அவசியம். மீன் கழிவுகளில் இருந்து திட வடிவிலும் திரவ வடிவிலும் உரங்களைத் தயாரிக்கலாம். இருப்பினும், திரவ உரங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள் அதிகம். இதை, இலைகளில் எளிதாகத் தெளிக்கலாம்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உள்ள உயிரி உரங்களுக்கான செலவு குறைவு. நிலையான விவசாய முறையில், இரசாயன உரங்களுக்கு மாற்றீடாக, தாவரச் சத்துகளின் புதுப்பிக்கத்தக்க ஆதாரமாக, இயற்கை உரங்கள் பயன்படுகின்றன. மேலும், விவசாயிகளுக்கு இயற்கை உரங்களால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, குறைந்த உள்ளீட்டுச் செலவு மற்றும் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தும் திறனாகும்.

மீனுரம் தயாரித்தல்

மீன் கழிவுகளை, உள்ளூர் மீன் சந்தையில் அல்லது மீன்பதன ஆலைகளில் இருந்து சேகரிக்க வேண்டும். இந்தக் கழிவுகளின் அளவு பெரியதாக இருந்தால், 6-7 செ.மீ. அளவுள்ள துண்டுகளாக வெட்ட வேண்டும். அடுத்து, இவற்றை நொதிக்க வைப்பதற்கு, சர்க்கரை ஆலைக்கழிவு (Jaggery) மற்றும் வெல்லப்பாகைக் (molasses) கலக்க வேண்டும். நான்கு கிலோ சர்க்கரை ஆலைக்கழிவுக்கு 500 மி.லி. நீர் வீதம் சேர்த்துச் சற்றுச் சூடாக்கி நீர்மமாக்க வேண்டும்.

அதைப்போல, நான்கு கிலோ வெல்லப் பாகுவுக்கு 200 மி.லி. நீர் வீதம் சேர்த்துச் சூடாக்கி நீர்மமாக்க வேண்டும். பிறகு, 2:1:1 விகிதத்தில் மீன்கழிவு, சர்க்கரை ஆலைக்கழிவு, வெல்லப்பாகைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை, நெகிழி வாளி அல்லது சிமெண்ட் தொட்டியில் இட்டு, காற்றுப் புகாமல் மூடி, மூன்று வாரங்கள் வரை அப்படியே வைத்திருந்து நொதிக்க விட வேண்டும்.

மூன்று வாரங்கள் கழித்து அதைத் திறந்து, நீர்மத்தை மட்டும் வடிகட்டி எடுத்து, திரவ உரமாகத் தெளிக்கலாம். திட நிலையில் மீந்திருக்கும் பொருளை, திட உரமாக நிலத்தில் இடலாம். இவ்வகை உரத் தயாரிப்பில் சேர்க்கப்படும் வெல்லப்பாகு, சர்க்கரை ஆலைக்கழிவின் அளவு மிகமிக முக்கியமாகும். வெல்லப்பாகும், சர்க்கரை ஆலைக்கழிவும் 5-10% சேர்க்கப்பட்டால், உரத்தில் கார அமிலத்தன்மை அதிகமாகலாம்.

எனவே, 15-25% அளவில், சர்க்கரை ஆலைக்கழிவு, வெல்லப்பாகைச் சேர்த்தால், நொதித்தல் சிறப்பாக அமையும். ஆயினும், வெல்லப் பாகையும், சர்க்கரை ஆலைக் கழிவையும் அதிகமாகப் பயன்படுத்துவது நல்லது.

இவ்விதம் பெறப்படும் திரவ உரத்தை, 0.3% அளவில் நீரில் கலந்து தெளித்தால், உளுந்தில் நல்ல மகசூல் கிடைக்கும் என, ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எனவே, மீன் கழிவுகளை நொதித்தல் முறையில் திரவ உரமாக மாற்றிப் பயிர்களுக்குப் பயன்படுத்துவது சாலச்சிறந்த முறையாகும்.


மு.முருகானந்தம், இரா.சாந்தகுமார், ப.அகிலன், மீன்பதனத் தொழில்நுட்பத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி – 628 008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!