அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!

மானாவாரிப் பண்ணையத்துக்கு ஏற்ற மகத்தான பயிர் பனிவரகு. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், மஞ்சூரியா பகுதியிலிருந்து ஐரோப்பாவில் அறிமுகமானது. இதற்கு மிகவும் குறைந்த அளவே நீர்த் தேவைப்படுகிறது. இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளிலும் கூடப் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. மேலும், தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில், குறிப்பாக, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது.

குறைந்த ஈரப்பதத்தில் உழுது போட்ட மண்ணில் கூட விளைச்சல் தரும் பனிவரகில் 70-75 நாட்கள் எனக் குறைந்த வயது, சாயாத்தன்மை மற்றும் பருத்த விதையுள்ள ஏ.டி.எல்.2 என்னும் புதிய பனிவரகு இரகத்தை, திருவண்ணமாலை மாவட்டம் அத்தியந்தலில் உள்ள சிறுதானிய மகத்துவ மையம் 2023 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல்.2 இரகம், எக்டருக்கு 2,296 கிலோ தானியத்தையும், 3,109 கிலோ வைக்கோலையும் தரவல்லது. இந்த இரகத்தைத் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், அதாவது, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களிலும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், அதாவது, அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் பயிரிடலாம்.

ஏ.டி.எல்.2 பனிவரகின் சிறப்புகள்

குறுகிய வயதுடையது (70-75 நாட்கள்). சாயாத் தன்மையுடையது. வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டது. இலைக்கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் மிக்கது. தண்டு ஈக்களின் தாக்குதலை மிதமாகத் தாங்கும் தன்மை உள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்களைச் செய்வதற்கு உகந்தது. இயந்திர அறுவடைக்கு உகந்தது. 5-10 என, அதிகத் தூர்களைக் கட்டவல்லது. தூர்களின் நீளம் 40 செ.மீ. இருக்கும். திரட்சியான தங்க மஞ்சள் நிறத் தானியத்தைத் தரவல்லது. வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டது. பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரும் தன்மை.

பருவம்

ஆடிப்பட்டமும் புரட்டாசிப் பட்டமும் ஏற்றவை. செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் இப்பயிருக்கு உகந்தவை. கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தைச் சட்டிக் கலப்பையால் ஆழமாக உழ வேண்டும். இந்த உழவினால் மண்ணரிப்புத் தடுக்கப்பட்டு, மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகளும் கட்டுப்படுத்தப்படும். உழவின் போது நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால், பயிர்க் காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும்.

விதையளவு

வரிசை விதைப்பு என்றால், எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். பயிருக்குப் பயிர் 7 செ.மீ., வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். சாதாரணக் கை விதைப்பு எனில், எக்டருக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும்.  

விதைப்பு

கையால் விதைக்கலாம். வரிசை விதைப்பை, விதைப்பான் அல்லது கொர்ரு கருவி மூலம் செய்யலாம். இப்படிச் செய்வதால் மண் ஈரம் காய்வதற்கு முன்பே அதிகப் பரப்பளவில் விதைத்து முடிக்கலாம்.

நுண்ணுயிர் உர விதை நேர்த்தி

ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, மூன்று பொட்டலம், அதாவது, 600 கிராம் அஸோபாஸை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைத்தல் வேண்டும். அல்லது ஒரு எக்டருக்கு 10 பொட்டலம், அதாவது 2 கிலோ அஸோபாசை, 25 கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் தூவியும் விடலாம்.

உரமிடுதல்

எக்டருக்கு 12.5 டன் மக்கிய தொழுவுரம் வீதம் எடுத்து அடியுரமாக, கடைசி உழவுக்கு முன் இட வேண்டும். பின்னர் 20 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ மணிச்சத்து ஆகியவற்றை, விதைப்பின் போது அடியுரமாக இட வேண்டும். மேலும், 20 கிலோ தழைச்சத்தை, விதைத்த 20-25 நாட்கள் கழித்துக் கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி மேலுரமாக இட வேண்டும்.

பயிர்களைக் கலைத்தல்

விதைத்த 12-15 நாளில் பயிர்களைக் கலைத்து, தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

களை நிர்வாகம்

விதைத்த 18-20 நாட்களில் ஒருமுறையும், அடுத்து, 40 ஆம் நாளில் தேவைப்பட்டால் இன்னொரு முறையும் கைக்களை எடுக்கலாம்.

நீர் நிர்வாகம்

பனிவரகுப் பயிர் நன்கு வளர்வதற்கு 300 முதல் 350 மி.மீ. மழை போதுமானது. தேவையான அளவு ஈரப்பதம் மண்ணில் இல்லையெனில் அல்லது தேவையான அளவு மழைப்பொழிவு இல்லையெனில், பண்ணைக் குட்டைகளில் சேமிக்கப்பட்ட மழைநீரைப் பயன்படுத்த வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

இந்த இரகத்தைப் பொதுவாகப் பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. ஆதலால் பயிர்ப் பாதுகாப்புச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடை

நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து அடித்து, தானியங்களைப் பிரித்துச் சுத்தம் செய்தல் வேண்டும். மானாவாரியில் எக்டருக்கு 2,296 தானியமும், 3,109 தட்டையும் மகசூலாகக் கிடைக்கும்.

மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள்கள்

பனிவரகிலிருந்து அரிசி, அவல், உப்புமா, சப்பாத்தி, ரொட்டி, தோசை, கூழ், புட்டு, முறுக்கு, பக்கோடா, சேலட் போன்ற பல்வேறு சுவையான உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம்.

சந்தை நிலவரம்

இன்றைய சந்தை நிலவரப்படி, ஒரு கிலோ பனிவரகு ரூபாய் 50 முதல் 65 வரை விற்கப்படுகிறது. தற்போது குறுந்தானியங்களில் உள்ள சத்துப் பொருள்களைப் பற்றியும், அவற்றின் நன்மைகளைப் பற்றியும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், வரும் காலத்தில் உறுதியாக இவற்றின் தேவை மேலும் அதிகரிக்கும். இவ்வகையில், சந்தையில் பனிவரகின் விலை மேலும் உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

உழவர்களே, கடைசி நம்பிக்கையாகக் கானப்பயிர் போட்ட போதும் கையைச் சுட்டுக் கொள்ளத் தேவையில்லை. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலும் பனிவரகின் தேவை அதிகமாக உள்ளது. எனவே, ஒரு பகுதியில் உள்ள விவசாயிகள் பெருவாரியாய் முடிவெடுத்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் சந்தைப்படுத்துவதில் சிக்கலிருக்காது. நிறைந்த இலாபம் பார்ப்பதில் இடையூறும் இருக்காது.

இதுவரை கூறியுள்ள தொழில் நுட்ப முறைகளைக் கையாண்டு ஏ.டி.எல்.2 பனிவரகை விவசாயப் பெருமக்கள் பயிரிடும் போது அதிக விளைச்சலைப் பெற இயலும் என்பதில் எள்ளளவும் ஐயமேயில்லை.

மேலும், விவசாயப் பெருமக்கள், புதிய சிறுதானிய இரகங்களைப் பற்றிய ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள, பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானிய மகத்துவ மையம்,  அத்தியந்தல், திருவண்ணாமலை – 606 603 என்னும் முகவரியை அணுகலாம். தொலைபேசி – 99949 16832.


முனைவர் ஆ.தங்கஹேமாவதி, இணைப் பேராசிரியர்,

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை,

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி – 620 027

முனைவர் .வைத்தியலிங்கன், பேராசிரியர் மற்றும் தலைவர்,

சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல், திருவண்ணாமலை – 606 603.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!