பெயர் சூட்டி மரம் வளர்க்கும் காவல் துறையினர்!

தழைக்கும் காவல் துணைத் தலைவரின் சூழல் மேம்பாட்டு முயற்சி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020

ணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்

என்பார், உலகப் பொதுமறையை வழங்கிய வள்ளுவப் பெருந்தகை. சுத்தமான நீரும், வளமான நிலமும், உயர்ந்த மலையும், நிழலைத் தரும் மரங்கள் நிறைந்த காடும் தான் ஒரு நாட்டின் சிறந்த அரணாகும்.

அதாவது, இத்தகைய சூழலில் அமைந்துள்ள நாட்டில் தான் மக்கள் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ முடியும்.

ஆனால் இன்று இவை அனைத்துமே கேள்விக்குறியாக உள்ளன. தெளிந்த நீரும், விளைதிறன் நிலமும், சிதைவிலா மலையும், மரமடர்ந்த காடும், காட்சிக்கு அரிதாக உள்ளன.

மக்கள் பெருக்கம், அறிவியல் வளர்ச்சி, கட்டுப்பாடற்ற பயன்பாடு ஆகியவற்றால், ஒட்டுமொத்தப் புவியும் இயல்பு நிலையில் இருந்து விலகியுள்ளது.

நீர்வளம், நிலவளம், தூய காற்று வளம் ஆகியன அழிந்து வருகின்றன. இதைத்தான் சூழல் மாசு என்கிறோம்.

இந்த நிலை தொடர்ந்தால் நமக்குப் பிறகு வரும் நம் மக்கள், பேரன் பேத்திகள் இந்த மண்ணில் நலமாக வாழ முடியாது. அதனால், நீர்வளத்தைக் காக்க வேண்டும், நிலவளத்தைப் பேண வேண்டும், தூய காற்றை உறுதிப்படுத்த வேண்டும் எனில், மரங்களை வளர்க்க வேண்டும்.

ஏனெனில், நீர்வளம், நிலவளம், தூய காற்று வளம் அனைத்துக்கும் அடிப்படை மரங்கள் தான்.

மரமே மழைக்கு உறவாம்; அந்த மரமிருந்தால் தான் மழை வருமாம் என்பது பசுமை மொழி. மரம் மழையை வரவழைத்து நீர்வளத்தைப் பெருக்கும். மரம் தழையுதிர்த்து மண்ணரிப்பைத் தடுத்து நிலவளத்தைக் கூட்டும். மரம் கரியமிலக் காற்றை ஈர்த்துக் கொண்டு உயிர்க் காற்றைப் புவியெங்கும் பரப்பும்.

வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் வீதியெல்லாம் தோப்பாகும்; ஆளுக்கொரு மரம் வளர்த்தால் அண்டமெல்லாம் வனமாகும். மரங்களை வளர்ப்பதில் பாதுகாப்பதில், பாகுபாடற்ற பங்கு எல்லோருக்கும் இருக்கிறது.

இவ்வகையில், திருச்சிக் காவல் சரகத்தில் பணியாற்றும் காவல் துறையினர், சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் பாதுகாப்புப் பணியுடன், சுற்றுச்சூழலையும் காக்கும் வகையில் மரங்களை வளர்த்துப் பராமரிக்கும் பணியிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அறிந்தோம்.

மேலும், இதுகுறித்த முழுமையான விவரங்களை அறியும் பொருட்டு, திருச்சிச் சரகக் காவல் துணைத் தலைவர் வே.பாலகிருஷ்ணன் இ.கா.ப. அவர்களை அணுகினோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது:  

“திருச்சிக் காவல் சரகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், ஆயுதப்படை வளாகங்கள், மாவட்டக் காவல் அலுவலகங்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர் வளாகங்கள் என அனைத்திலும் பசுமை மணம் வீச வேண்டும் என நினைத்தோம்.

அதற்காக, வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பதைப் போல், காவலருக்கொரு மரக்கன்று என்னும் அடிப்படையில், இந்தச் சரகத்தில் உள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஆளுக்கொரு மரக்கன்றை நட்டு, அந்தக் கன்றுகளுக்குத் தங்களின் பெயர்களைச் சூட்டி வளர்த்து வருகிறார்கள்.

இனிவரும் காலங்களில் திருச்சிக் காவல் சரகத்தில் பணியாற்ற வரும் காவலர்களுக்கும் காவல் பணிக்கான உபகரணப் பையுடன், காட்டை உருவாக்கும் பணியையும் செய்யும் வகையில் ஆளுக்கொரு மரக்கன்றும் வழங்கப்படும்.

இதில், ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திறனாய்வுத் தேர்வின் போது, அவர்கள் வளர்க்கும் மரங்களின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து ஊக்கப்படுத்துவோம்.

ஏற்கெனவே காலியாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நட்டு முடித்த பிறகு, காவல் அலுவலகங்களின் அருகிலுள்ள சாலைகள் மற்றும் வீதிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

சிறந்த முறையில் மரக்கன்றுகளை வளர்த்து வரும் காவலர்களை, மர விஞ்ஞானிகள் மூலம் தேர்வு செய்து பரிசளித்துப் பெருமைப்படுத்த இருக்கிறோம். ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, செயலிகள் மூலம், இந்த மரக்கன்றுகள் இருக்கும் இடங்களைத் துல்லியமாகக் குறியிட்டு அவற்றின் வளர்ச்சியைக் கண்காணிக்க உள்ளோம்.

இந்தத் திட்டத்தில் ஆக்சிஜன் என்னும் மூச்சுக்காற்றை அதிகமாக வெளியிடும் வேம்பு மற்றும் புங்கன் மரக்கன்றுகளைத் தான் பெரும்பாலும் வளர்த்து வருகிறோம்.

காவல் நிலையங்களிலும், அலுவலகங்களிலும் வளர்க்கப்படும் மரங்கள் மூலம் மைக்ரோ கிளைமேட் என்னும் நுண்ணிய காலநிலையை ஏற்படுத்தி வருகிறோம்.

அதனால், காற்று வங்கிகளான இந்த மரங்கள், தூசியிலும் புகையிலும் காவல் பணி செய்யும் காவலர்களின் இன்னொரு தாய்மடி என்று சொன்னால் அது மிகையாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் காவல் பசுமைப் படையை ஏற்படுத்தி, அதன் மூலம் காவலர்களின் குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்ப்பதற்கும், தாவரம் மற்றும் விலங்கினங்களின் முக்கியத்தை உணர்ந்து அவற்றின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கும் பயிற்சியளித்து வருகிறோம்.

அதைப்போல், காவலர் வளாகத்தில் பெய்யும் மழைநீரை அங்கேயே நிலைநிறுத்தி நிலத்தடி நீரைப் பெருக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் இயற்கை மற்றும் செயற்கை முறைகளில் மழைநீர்ச் சேகரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

மண்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், திருச்சிக் காவல் சரகத்தில் உள்ள ஆறுகளில் மணலைக் கொள்ளையடிக்கும் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து, இதுவரை செய்திராத வகையில்,

தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவில், சமூகநல விரோதிகளைக் குண்டர் சட்டத்தில், மணல் திருட்டு மற்றும் கடத்தலுக்காகக் கைது செய்து, காக்கிச் சட்டைக்குள் மறைந்திருக்கும் பசுமை உணர்வை வெளிப்படுத்தி வருகிறோம் என்பதுடன், இதில் பெருமையும் அடைகிறோம்.

மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளைக் கைது செய்யும் அதே வேகத்தில், விலங்குகளை வதைக்கும் நபர்களையும், பாதுகாக்க வேண்டிய பறவைகளைப் பதம் பார்க்கும் மயில் திருடர்களையும், மான் கொள்ளையர்களையும் கைது செய்து,

அதாவது, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தருகிறோம்.

ஆண்டுக்கொரு முறை நடக்கும் ஆண்டுக் கவாத்துப் பயிற்சியின் முடிவில் எல்லா ஆயுதப்படைக் காவலர்களுக்கும் மருத்துவக் குணமுள்ள மூலிகைச் செடிகளைப் பரிசாகக் கொடுக்கிறோம். காவல் பணிக்கு நேரம் காலம் எதுவும் கிடையாது.

பெருமழை பெய்தாலும் கடும் வெய்யில் அடித்தாலும் வேலை செய்தே ஆக வேண்டும். இத்தகைய நிலையில், காவலர்களின் உடல் பாதுகாப்பில் இந்த மூலிகைச் செடிகள் பயன்படும். மேலும், நன்மைகள் நிறைந்த இந்த மருத்துவத் தாவரங்களைப் பாதுகாக்கவும் வேண்டும்.

இந்தச் செடிகளைக் காவலர்களுக்கு வழங்குவதன் முக்கிய நோக்கம் இதுதான்.ஏனென்றால், முன்பு எளிதாகக் கிடைத்து வந்த மருத்துவத் தாவரங்களாகிய தூதுவளை, துளசி, ஆடாதோடா, நொச்சி, கற்பூரவள்ளிச் செடிகள் கூட இன்று அரிதாகி வருகின்றன.

பொதுவாக ஏற்படும் சளி மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தும் இந்தத் தாவரங்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை. அதைப்போல், பலவிதக் காரணங்களால், முக்கியமாகக் காற்று மாசால் ஏற்படும் தோல் நோயைக் கட்டுப்படுத்த, குப்பைமேனிக் கீரையைப் பயன்படுத்தவும் கற்றுக் கொடுக்கிறோம்.

திருச்சியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரும், பாரதி மெட்ரிகுலேசன் பள்ளியின் நிர்வாகியுமான பாலகிருஷ்ணன், தாவரங்களைப் பற்றியும், பறவைகளைப் பற்றியும், கோள்களைப் பற்றியும், வியக்கத்தக்க வகையில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

மேலும், இவர் இந்த மாணவர்களைக் கொண்டு, துப்பறியும் இளம் இயற்கை விஞ்ஞானிகள் குழுவையும் உருவாக்கி இருக்கிறார். இந்தக் குழுவினர் மூலம், நாங்கள் வளர்க்கும் மரங்களின் வளர்ச்சியைக் கண்காணிக்க இருக்கிறோம்.

காவல் குடும்பங்களில் உள்ள இளம் விஞ்ஞானிகளிடம் அட்டவணை ஒன்றைக் கொடுத்து அதன் விவரங்களை மாதம் ஒருமுறை அளவிடச் செய்வதன் மூலம், அவர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இயற்கையையும் வளர்க்கிறோம்.

அந்த மரங்கள் வளர வளர அவற்றின் அடையாளங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில், QR CODE உள்ள அடையாள அட்டைகளைப் பொருத்த இருக்கிறோம்.

இப்படி, மரக்கன்றுகளை நட்டதுடன் பணி முடிந்து விட்டது என்று இருக்காமல், கடைசி வரைக்கும் அவற்றைக் காக்கும் காவலாளிகளாகக் காவலர்கள் செயல்படுவார்கள்.

காவல் பணி, மன அழுத்தத்துடன் கூடிய உடல் உழைப்பைக் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில், காவலர்கள் தாங்கள் வைத்த மரங்களைப் பார்க்கும் போது அந்த மன அழுத்தம் மறைந்து புத்துணர்வைப் பெறுவார்கள்.

அந்தப் புத்துணர்வு காவலர்களுக்கு மட்டுமல்லாமல், காவல் நிலையத்துக்கு வரும் பொது மக்களுக்கும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில், காவல் நிலைய மேலாண்மையை, சுற்றுச்சூழல் அணுகுமுறை, அதாவது Eco System Approach வடிவில் செய்கிறோம்.

இப்படி, மரங்களைக் கொண்ட மைக்ரோ கிளைமேட்டை ஏற்படுத்துவதுடன், அதில் காவலர்கள், அவர்களின் குடும்பங்கள், மக்கள் மற்றும் விலங்குகளுடன் கூடிய புதிய சிறு சூழல் மண்டலத்தையும் ஏற்படுத்துகிறோம்.

அதனால் தான், மக்கள் வந்து செல்லும் காவல் நிலையங்களில் நன்றியுள்ள நாய்களும் பாசத்துடன் சுற்றி வருகின்றன.

இந்தச் சூழலை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக, அந்தந்தப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களைக் காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து, காவல் பணியுடன் பசுமைப் பணியைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

எந்த நேரமும் பணிக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டிய காவல் துறையினர், தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், மரவளர்ப்பில் ஈடுபடுவது, போற்றுவதற்கும் வாழ்த்துவதற்கும் உரியது.

இவர்களைப் போல, மற்ற காவல் சரகங்களில் பணியாற்றும் காவல் துறையினரும், மரம் வளர்ப்புப் பணியில் ஈடுபட்டால், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் தமிழகம் புதிய மைல் கல்லை எட்டிப் பிடிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்த நம்பிக்கையில், திருச்சிச் சரகக் காவல் துறையினர் காவல் பணியுடன் சூழல் பணியிலும் சாதிக்க வேண்டுமென வாழ்த்தி விடை பெற்றோம்.


மு.உமாபதி

படங்கள்: ச.மணிக்கிருஷ்ணன்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!