நன்மைகள் நிறைந்த திருந்திய நெல் சாகுபடி!

திருந்திய நெல் சாகுபடி Untitled

கண்டமனூர் விவசாயி மு.பாலுச்சாமியின் அனுபவம்

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது கண்டமனூர். இந்த ஊரைச் சேர்ந்த மு.பாலுச்சாமி சிறு விவசாயி. இவர் தேனி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பு விவசாயியாகவும் இருக்கிறார். அதனால், இயற்கை மற்றும் நவீன விவசாயம் குறித்த உத்திகளைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலம் கண்டமனூருக்கு வடமேற்கில் உள்ளது. ஒரு மாலை வேளையில் இவரைச் சந்திக்கப் போனோம். அப்போது வானம் மேக மூட்டமாக இருந்தது. அதனால், விதைத்து இரண்டு நாளான நெல் நாற்றங்காலுக்கு நீர் விட்டுக் கொண்டிருந்தார். அந்த வேலையை முடித்து விட்டு நம்மிடம் அவர் கூறியதாவது:

“ஒரு ஐம்பது சென்ட் நிலத்துல வீட்டுத் தேவைக்காக ஆத்தூர் கிச்சிலிச் சம்பா நெல்லைப் பயிரிடப் போறேன். அதுவும் திருந்திய நெல் சாகுபடி முறையில. அதுக்காக மேட்டுப்பாத்தி அமச்சு அதுல ரெண்டு கிலோ நெல்லை வெதச்சிருக்கேன். பதினாலு நாள் நாத்தைப் பறிச்சு நடணும். நடவு நெலத்துல தக்கைப்பூண்டு, சணப்பு, கொள்ளு, எள்ளு, கம்பு, உளுந்து, பாசிப்பயறு, சூரியகாந்தி, ஆமணக்குன்னு இந்த எல்லாத்தையும் கலந்து வெதச்சிருக்கேன்.

இந்த விதைகள்ல வெவ்வேறு சத்துகள் இருக்கும். சத்து இல்லாத நெலத்துல மூணு தடவை பல தானிய விதைப்புச் செஞ்சா அந்த நெலம் வளமான நெலமா மாறிரும். இந்தப் பயிர்கள் பூக்கும் நேரத்துல மடக்கி உழுதுவிட வேண்டியது மட்டும் தான் நம்ம வேலை. அதைத் தான் நெல் நடவுக்கு முன்னால நானு செய்யப் போறேன்.

திருந்திய நெல் சாகுபடியில முக்கால் அடி இடைவெளியில வரிசையில நாத்துகளை நடணும். காய்ச்சலும் பாய்ச்சலுமா தண்ணி கட்டணும். நட்டு இருபது நாள்ல களைக்கருவியைக் கிழக்கு மேற்கா தெற்கு வடக்கா ஓட்டிக் களைகளை நெலத்துலயே அமுக்கி விடணும். அப்புறம் முப்பத்து அஞ்சாம் நாள்ல ரெண்டாம் களை எடுக்கணும். இப்படிச் செஞ்சா பழைய வேர்கள் அறுபட்டுப் புது வேர்கள் உண்டாகிப் பயிர்கள் நல்லா வளரும். ஆத்தூர் கிச்சிலிச்சம்பா நீண்டகாலப் பயிரு. அதனால மூணு முறை களையெடுக்கணும். குறுகியகாலப் பயிருக்கு ரெண்டு முறை களையெடுத்தா போதும்.

ஒரு தடவை பஞ்சகவ்யாவையும் மூலிகைப் பூச்சிவிரட்டியையும் சமமா எடுத்துத் தெளிக்கணும். வேம்பு, எருக்கு, ஆடாதொடை, நெய்வேலிக் காட்டாமணக்கு, தும்பை, ஊமத்தைத் தழைகளை உரலுல நல்லா இடிச்சு, இந்தக் கலவை மூழ்கும் அளவுக்குக் கோமியத்தை ஊத்தி வச்சுட்டா, பத்து நாள்ல பூச்சி விரட்டித் தயாராகிரும். இதை ஒரு லிட்டர் நீருக்கு முப்பது மில்லி வீதம் கலந்து தெளிச்சா, பயிரைத் தாக்கும் பூச்சிகள் பறந்து ஓடிப் போகும். இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசலைத் தெளிச்சா படைப்புழுக்கள் அழிஞ்சு போகும்.

திருந்திய நெல் சாகுபடியில ஏக்கருக்கு 2-3 கிலோ விதையே போதும். அதனால நமக்கு விதைநெல் மிச்சம், காயவிட்டுக் காயவிட்டுத் தண்ணிக் கட்டுறதுனால தண்ணி மிச்சம், வரிசை நடவுல நல்ல காத்தோட்டம் கிடைக்கிறதுனால, களைக் கருவியைப் பயன்படுத்துவதால சிறப்பான பயிர் வளர்ச்சி, இரசாயன உரச்செலவு மிச்சம், சாதாரண சாகுபடியில கிடைப்பதை விட அதிக மகசூலுன்னு பல நன்மைகள் இருக்கு. இதுல அதிகமா வேலையாள் தேவையும் இல்ல.

அதனால நெல் விவசாயிகள் இந்த முறைக்கு மாறுனா பல நன்மைகளை அடையலாம். ஆத்தூர் கிச்சிலிச்சம்பா 135 நாள் பயிருன்னாலும், நல்ல உணவா இருப்பதுனால நானு இதை விரும்பி சாகுபடி செய்யிறேன்’’ என்றார்.


துரை.சந்தோசு

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading