காய்கறிப் பயிர்களில் களையெடுக்கும் கருவி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019

விவசாயத்தில் கட்டுப்படுத்த வேண்டியவற்றில் ஒன்று களை. பயிருக்கு ஊடே முளைக்கும் புல் பூண்டு, செடி கொடிகளைக் கட்டுப்படுத்தா விட்டால், அவை பயிருக்கு விடப்படும் பாசன நீரை உறிஞ்சும்; உரத்தை உறிஞ்சும்; காற்றோட்டத்தைத் தடுக்கும்; பயிருக்கு இடையூறாக வளரும்; பூச்சி நோய்களின் தங்குமிடமாக மாறும். மொத்தத்தில் மகசூல் இழப்புக்கு இந்தக் களைகள் முக்கியக் காரணமாகும்.

எனவே, சாகுபடியுள்ள நிலத்தில் களைகளைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகமிக அவசியம். இந்தக் களைகளை, கைகளாலும், களைக்கொல்லியாலும், கருவியாலும் அகற்றலாம். ஆள் பற்றாக்குறையும், கூடுதல் கூலியும் நிறைந்துள்ள இன்றைய சூழலில், குறைந்த செலவில் களைகளை அகற்றுவதற்கான களைக்கருவி நடைமுறையில் உள்ளது.

இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் உரிய நேரத்தில் அதிகப் பரப்பில் களையெடுக்க முடியும். இதைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் நிலத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அதிக ஈரமுள்ள நிலத்தில் இந்தக் கருவியைச் சிறப்பாக இயக்க முடியாது.

ஈரமான மண் இக்கருவியில் உள்ள கத்திகளில் ஒட்டிக் கொள்வதால் களைகளைச் சரியாக வெட்டி அகற்ற முடியாது. இதைப் போல நன்கு காய்ந்த நிலத்திலும் இந்தக் கருவியைக் கொண்டு களைகளைக் கொத்தியெடுக்க முடியாது. அதனால் சரியான அளவில் ஈரப்பதம் இருத்தல் அவசியமாகும்.

மேலும், இந்தக் கருவியைப் பயன்படுத்த ஏதுவாக இடைவெளி விட்டு, வரிசையாகக் காய்கறிப் பயிர்கள் நடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தக் கருவியில் உள்ள எந்திரம் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கக் கூடியது. பெட்ரோலில் இயங்கும் கருவியைவிட டீசலில் இயங்கும் கருவியின் இழுதிறன் அதிகமாகும். இந்தக் கருவி பவர் டில்லரைப் போன்ற வடிவமைப்பில் இருக்கும் போது இயக்க முறைகளும் அதைப் போன்றே இருக்கும்.

சந்தைகளில் இந்தக் கருவியானது ரோட்டோ மேக்ஸ், ரோட்டரி டில்லர், மைக்ரோ டில்லர் என மூன்று வகைகளில் கிடைக்கிறது. இவற்றில் ரோட்டோ மேக்ஸின் திறன் மிகவும் அதிகமாகும். இதற்கடுத்து, இரண்டாம் இடத்தில் ரோட்டரி டில்லரின் பயன்பாடு இருக்கும். மூன்றாவதாக மைக்ரோ டில்லரின் பயனைச் சொல்லலாம்.

ரோட்டோ மேக்ஸ் எந்திரத்தின் சக்தி 6 எச்.பி./4.4 கிலோ வாட் ஆகும். இதன் சுழல் திறன் 3,600 ஆர்.பி.எம், எனவே தான் இதன் இழுதிறன் அதிகமாக இருக்கிறது. இதன் எரிபொருள் டீசலாகும்.

3.5 லிட்டர் அளவுள்ள டீசல் கொள்கலன் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஈரப்பதம் சரியாக இருக்கும் போது, இக்கருவி 750 மி,மீ. அகலத்தில் 4-6 அங்குல ஆழத்தில் வெட்டிக் களைகளை அகற்றும். இந்தக் கருவியின் சக்கரங்களின் இடைவெளியை 206 மி.மீ. முதல் 640 மி.மீ. வரையில் மாற்றிக் கொள்ளலாம்.

இந்தக் கருவியை முன்னும் பின்னும் இயக்க முடியும். இதன் மொத்த எடை சுமார் 110 கிலோவாகும். விலை 30 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் வரையில் உள்ளது.


முனைவர் மா.சித்தார்த்,

முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம்,

காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!