My page - topic 1, topic 2, topic 3

சத்தான சாமை உணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன்.

சிறு தானியங்கள் சத்துகள் நிறைந்தவை. நெல்லரிசிக்குப் பதிலாக, சிறு தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு நல்லது. ஆராய்ச்சிகளும் இதைத் தான் வலியுறுத்துகின்றன. சிறு தானியங்கள் வரிசையில் சாமை அதிகச் சத்துள்ள தானியம். மானாவாரிக்கு ஏற்ற மகத்தான பயிர் சாமை. குறுகிய காலத்தில், குறைந்த செலவில் விளையக் கூடிய பயிராகும்.

சத்து விவரங்கள்

சாமையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளது. உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கும். இரத்தச் சோகையைக் குணமாக்கும். மலச்சிக்கலையும் சளித் தொற்றையும் போக்கும். வயிறு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாய்ச் சிக்கல்களுக்கும், கருப்பை சிக்கல்களுக்கும் சிறந்தது. இதிலுள்ள நார்ச்சத்தானது, கொழுப்புச் சத்தைக் குறைத்து எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.

நூறு கிராம் சாமையில் புரதம் 7.7 கிராம், ஆற்றல் 341 கி. கலோரி, கொழுப்பு 5 கிராம், தாதுப்புகள் 1 கிராம், கார்போஹைடிரேட் 8 கிராம், நார்ச்சத்து 67 கிராம், சுண்ணாம்புச் சத்து 17 மி.கிராம், பாஸ்பரஸ் 220 மி.கிராம், இரும்புச்சத்து 9 மி.கிராம் உள்ளன.

சாமையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாகச் சர்க்கரை நோயாளிகளுக்குச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எண்ணெய் சேர்க்காமல் நீராவியில் வேக வைத்தால் உடலுக்கு நன்மை பயக்கும்.

சாமை அல்வா

தேவையானவை: சாமை அரிசி மாவு 200 கிராம், வெல்லம் 200 கிராம், ஏலக்காய்த் தூள் அரைத் தேக்கரண்டி, சுக்குத்தூள் 2 சிட்டிகை, நெய் 100 கிராம், திராட்சை, முந்திரி, பாதாம் தலா 10 கிராம்.

செய்முறை: சாமை மாவுடன் வெல்லம் மற்றும் நீரைச் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் சிறிது நெய் சேர்த்துச் சூடாக்க வேண்டும். பின்னர், கரைத்து வைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாக விட்டு நன்றாகக் கிளற வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை விட வேண்டும். கட்டியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்வா, கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றைப் போட்டுக் கிளற வேண்டும். கடைசியாக, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூளைச் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும்.

சாமை இடியாப்பம்

தேவையானவை: சாமை அரிசி அரைக்கிலோ, உப்பு தேவையான அளவு.

செய்முறை: சாமை அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், அதை மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, தேவையான அளவு உப்பைச் சேர்த்து உடனே இந்த மாவை இட்லி தட்டில் வேக வைக்க வேண்டும். இப்படி வேக வைத்த இட்லிகளை இடியாப்ப அச்சில் வைத்துப் பிழிந்து சுவையான இடியாப்பம் தயாரிக்கலாம்.

சாமை-காய்கறி பிரியாணி

தேவையானவை: சாமை அரிசி 500 கிராம், வெங்காயம் 100 கிராம், தக்காளி 100 கிராம், காரட், பீன்ஸ் 100 கிராம், பச்சைப் பட்டாணி 50 கிராம், தயிர் அரைக் கிண்ணம், இஞ்சி, பூண்டு, விழுது 2 தேக்கரண்டி, புதினா அரைக்கட்டு, பச்சை மிளகாய் 4, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா 2, உப்பு தேவையான அளவு, எண்ணெய் கால் கிண்ணம்.

செய்முறை: எண்ணெய்யைச் சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை வதக்க வேண்டும். இதனுடன் நறுக்கிய தக்காளி, புதினாவையும் வதக்க வேண்டும். பின்னர், பச்சைப் பட்டாணி, நறுக்கிய காய்கறிகள், உப்பு, தயிரையும் சேர்த்து வதக்க வேண்டும். இவற்றோடு ஒரு லிட்டர் நீரை ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். அடுத்து, சாமை அரிசியைப் போட்டுப் பத்து நிமிடங்கள் வேகவிட வேண்டும். குக்கர் என்றால் 2 விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும்.

சாமை முறுக்கு

தேவையானவை: சாமை மாவு 500 கிராம், பொட்டுக்கடலை மாவு 150 கிராம், எள் 10 கிராம், மிளகாய்ப்பொடி 10 கிராம், ஓமம் 5 கிராம், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: சாமை மாவையும் பொட்டுக்கடலை மாவையும் சலித்து, ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன், உப்பு, மிளகாய்த் தூள், ஓமம், எள், பெருங்காயத்தூள், தேவையான அளவு நீர், 2 தேக்கரண்டி சூடான எண்ணெய் சேர்த்து, முறுக்கு மாவுப் பதத்தில் பிசைய வேண்டும். பின்னர், சூடான எண்ணெய்யில் முறுக்கு மாவை அதற்கான அச்சிலிட்டுப் பிழிந்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். நன்றாக ஆறிய பின் நீண்ட நாட்களுக்கு வைத்து உண்ணலாம்.

சாமைப் பாயாசம்

தேவையானவை: சாமை அரிசி 150 கிராம், பாசிப்பருப்பு 50 கிராம், வெல்லம் 160 கிராம், பால் 100 மில்லி, உலர் திராட்சை, முந்திரி 20 கிராம், ஏலக்காய்த்தூள் 5 கிராம், நெய் 20 கிராம்.

செய்முறை: சாமை அரிசி மற்றும் பாசிப்பருப்பை 2 மடங்கு நீரைச் சேர்த்துப் பத்து நிமிடங்கள் வேக விட வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் நீரைக் கலந்து வெல்லம் கரைந்ததும் வடித்து வைக்க வேண்டும். வேக வைத்த சாமை, பாசிப் பருப்புக் கலவையுடன் வெல்லக் கரைசல், பால் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். இதில், நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரியைச் சேர்க்க வேண்டும். அடுத்து ஏலக்காய் தூளைச் சேர்த்து இறக்கி விடலாம்.

சத்தான சிறு தானியங்களை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வதால் பல நோய்களில் இருந்து விடுபடலாம். நாம் தற்போது அதிகமாக உண்ணும் நெல்லரிசியை விட அதிகச் சத்துகள் உள்ளவை சிறு தானியங்கள். எனவே, சத்துமிக்க பாரம்பரிய உணவு வகைகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நமது கடமையாகும்.


முனைவர் மா.விமலாராணி, முனைவர் பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks