அஸ்வகந்தா சாகுபடி!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023

அறிவியல் பெயர்: Withania somnifera. குடும்பம்: Solanaceae. பெருங் குடும்பம்: Plantae.

ண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகக் கருதப்படுவது அஸ்வகந்தா. இதற்கு, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி என வேறு பெயர்களும் உண்டு. அசுவகந்தம் என்பது வடமொழிச் சொல்லாகும். அசுவம் என்றால் குதிரை, கந்தம் என்றால் கிழங்கு.

இந்தக் கிழங்கு குதிரை பலத்தைத் தரும் என்பதால், அசுவகந்தி எனப்படுகிறது. மேலும், இதன் இலை குதிரை நாற்றம் அடிப்பதாலும் இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த இலையை அரைத்துக் கட்டியில் பூசினால், அக்கட்டியை அமுக்கி விடும் என்பதால், தமிழில் அமுக்கிரா எனப்படுகிறது.

அஸ்வகந்தா செடியானது, ஒன்று முதல் ஐந்தடி உயரம் வரை வளரும். கிளைகள் இரண்டடி வரை படர்ந்து வளரும். அஸ்வகந்தா பழம், மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். வேர்கள் சற்றுப் பருத்தும், மூன்றடி நீளம் வரையும் இருக்கும். இந்த வேரில் 0.13 முதல் 0.30 சதம் வரை மருந்து மூலப் பொருள்கள் உள்ளன. இவற்றில், விதானைன் (withanine), சாம்னிபெரின் (somniferine), சாம்னிஃபெரினின் (somniferinine) ஆகியன முக்கியமானவை. இலைகளில் இந்தப் பொருள்கள் குறைவாக உள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மன்சூர் வேளாண்மை ஆராய்ச்சிக் கல்லூரியில் இருந்து, ஜவஹர் என்னும் உயர் விளைச்சல் இரகம் வெளியிடப் பட்டுள்ளது. இந்தச் செடிகள் குட்டையாகவும், அதிகக் கிளைகளையும் கொண்டிருக்கும். ஒரு ஏக்கரில் 200 கிலோ உலர்ந்த வேர்கள் கிடைக்கும். 1995 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த இரகத்தை, மானாவாரியிலும் பயிர் செய்யலாம்.

மண்ணும் தட்ப வெப்பமும்

மண்வளம் குறைந்த தரிசு, களர், உவர், மணல் சார்ந்த நிலம் போன்றவற்றில் பயிரிடலாம். மண்ணின் கார அமிலத் தன்மை 7.5-8.0 என இருப்பது மிகவும் ஏற்றது. நீர் அதிகமாகத் தேங்கி நிற்கும் களிமண் மற்றும் கடின மண் இதன் சாகுபடிக்கு ஆகாது. அஸ்வகந்தி வெப்ப மண்டலப் பயிராகும். வேர்கள் அதிகமாக வளரவும், தரமாக இருக்கவும், ஆண்டுக்கு 60-75 செ.மீ. மழை பெய்தால் போதும்.

வறட்சியிலும், அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் நன்றாக வளரும். மத்திய பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், சமவெளிகளில் மானாவாரியாகப் பயிரிட்டு வருகின்றனர். வேர்கள் முதிரும் காலத்தில் மழை அதிகமாக இருந்தால், வேர்கள் உற்பத்தியும், அவற்றிலுள்ள மருந்துப் பொருள்களின் அளவும் குறைந்து விடும்.

விதையளவும் விதைப்பும்

மானாவாரியில் நேரடியாக விதைக்க, ஏக்கருக்கு ஐந்து கிலோ விதைகளும், நாற்றங்கால் அமைக்க, இரண்டு கிலோ விதைகளும் தேவைப்படும். நேரடி விதைப்புக்கு ஜூன் ஜூலை மாதங்கள் ஏற்றவை. நாற்றங்கால் அமைக்க, ஏப்ரல், மே மாதங்கள் ஏற்றவை. ஒரு மீட்டர் அகலத்தில், 14 செ.மீ. உயரத்தில், தேவையான நீளத்தில் மேடைப் பாத்திகளை அமைத்து, நேர்க் கோடுகளில் விதைத்தால், பத்து நாட்களில் விதைகள் முளைத்து விடும். இந்த நாற்றுகளை இருபத்து ஐந்து நாட்களில் பறித்து நடலாம்.

நிலம் தயாரிப்பு

நேரடி விதைப்புக்கு, நிலத்தை 2-3 முறை நன்கு உழ வேண்டும். மழை பெய்ததும் விதைகளை விதைக்க வேண்டும். 25-30 நாட்களில், நாற்றுகளை 60 செ.மீ. இடைவெளியில் இருக்கும்படி கலைத்து விட வேண்டும். இறவையில், 60 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து, அதே இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும்.

உரம்

ஏக்கருக்கு ஐந்து டன் தொழுவுரம் தேவை. இதற்கு, இரசாயன உரங்கள் இடப்படுவதில்லை. வளமற்ற நிலத்தில் பயிரிட விரும்பினால், ஏக்கருக்கு 44 கிலோ யூரியா, 189 கிலோ சூப்பர் பாஸ்பேட், 115 கிலோ பொட்டாசு தேவை. இவற்றில், யூரியாவில் பாதியையும், சூப்பர் பாஸ்பேட், பொட்டாசை முழுதாகவும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள யூரியாவை, விதைத்த 60 நாட்களில் அல்லது நட்ட 30 நாட்களில் மேலுரமாக இட வேண்டும்.

பாசனம்

நாற்றுகளை நட்ட 15, 30 ஆகிய நாட்களில் பாசனம் செய்தால் போதும். நட்ட 30, 50 ஆகிய நாட்களில் களையெடுக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பொருளாதார இழப்பை உண்டாக்கும் அளவில், பூச்சியோ, நோயோ அஸ்வகந்தாவைத் தாக்குவதில்லை. வாடல் நோய் இளம் நாற்றுகளைத் தாக்கும். இந்நோய், ஆகஸ்ட், செப்டம்பரில் காற்றின் ஈரப்பதம் மற்றும் வெப்பம் மிகும் போது அதிகமாக இருக்கும். இதை வருமுன் காக்க, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். சுழற்சி முறையில் பயிரிட்டால், வாடல் நோய் வராமல் தடுக்கலாம்.

அறுவடை

விதைத்த 150-170 நாட்களில் வேர்களை அறுவடை செய்யலாம். ஜூலை ஆகஸ்ட்டில் விதைத்தால், ஜனவரியில் அறுவடை செய்யலாம். செடிகளை வேருடன் பிடுங்கி, வேரையும் தண்டையும் பிரித்து எடுக்கலாம். ஆணிவேர் சேதம் அடையாமல் இருக்க வேண்டும். பிறகு, இந்த வேர்களை 7-10 செ.மீ. நீளமுள்ள துண்டுகளாக வெட்டி, ஒரு வாரம் நிழலில் உலர்த்த வேண்டும். அடுத்து, வேரிலுள்ள மண் மற்றும் தூசியை நீக்கிச் சுத்தப்படுத்தித் தரம் பிரிக்க வேண்டும்.

தரம் பிரித்தல்

அஸ்வகந்தா வேர்கள் நான்கு தரமாகப் பிரிக்கப்படும். முதல் தரமான வேர், ஏழு செ.மீ. நீளம், 1.0-1.5 செ.மீ. குறுக்களவு இருக்க வேண்டும். மேலும், வேர்கள் கடினமாகவும், உள்தோல் வெள்ளையாகவும் இருக்க வேண்டும்.

இரண்டாம் தர வேர்கள், ஐந்து செ.மீ. நீளம், ஒரு செ.மீ. குறுக்களவு இருக்க வேண்டும். உள்தோல் சுமாரான நிறத்தில் இருக்க வேண்டும்.

மூன்றாம் தர வேர்கள், மூன்று செ.மீ. நீளம், ஒரு செ.மீ.க்கும் குறைவான குறுக்களவு இருக்க வேண்டும். நான்காம் தர வேர்களில், சிறு துண்டுகள் மற்றும் உட்புறம் லேசாக உள்ள வேர்கள் அடங்கும். மிகவும் பருத்த வேர்கள் நல்ல விலைக்குப் போவதில்லை. ஏனெனில், இவற்றில் மருந்துப் பொருள்கள் அதிகமாக இருப்பதில்லை

செடிகளில் முற்றிய காய்களைப் பறித்து, விதைகளைத் தனியாகப் பிரித்து எடுக்கலாம். இவ்வகையில், ஏக்கருக்கு 200-300 கிலோ வேர்களும், 30-50 கிலோ விதைகளும் கிடைக்கும்.

பயன்கள்

அஸ்வகந்தா, யுனானி, சித்தா போன்ற இந்திய மருத்துவ முறைகளில் அதிகளவில் பயன்படுகிறது. உடல் நலம் பேண, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை உண்டாக்க, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் போன்ற நோய்களைக் குணமாக்க, பாலுணர்வைப் பெருக்க என, பல வகைகளில் அஸ்வகந்தா பயன்படுகிறது.

நாற்பது வயதைக் கடந்த மக்களின் உடல் பலவீனம், கை, கால் சோர்வு போன்றவற்றைப் போக்கி, உடலுக்கு வலிமையைத் தருகிறது. கொரிய நாட்டின் பிரசித்தி பெற்ற ஜின்செங் என்னும் மூலிகைக்கு ஈடாக இருப்பதால், இது இந்தியாவின் ஜின்செங் என்று அழைக்கப்படுகிறது.


முனைவர் கா.பரமேஸ்வரி, இணைப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!