My page - topic 1, topic 2, topic 3

ஆசிரியையின் அரளி மலர் சாகுபடி அனுபவம்!

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன்.

ருமபுரியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது பொம்மிடி – மல்லாபுரம் பேரூராட்சி. வேளாண்மையை விருப்பமுடன் செய்து வரும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியிது. இந்த ஊரை ஒட்டியுள்ள ஜாலிப்புதூர், ரேகடஅள்ளி, பத்திரெட்டி அள்ளி, நத்தமேடு உள்ளிட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடி அதிகளவில் உள்ளது. குறிப்பாக, சாமந்தி, செண்டுமல்லி, அரளி, பட்டன்ரோஸ், மல்லிகை, முல்லை, சம்பங்கி ஆகிய மலர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன.

குறைந்த தண்ணீர், ஆண்டு முழுவதும் வருமானம், குறைந்த பராமரிப்பு, குறைந்த செலவு ஆகிய காரணங்களால், இப்பகுதி விவசாயிகள் மலர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வகையில் அரளி மலர் அதிகளவில் பயிரிடப்படுகிறது. பொம்மிடியை ஒட்டியுள்ள குமரி மடுவு என்னும் கிராமத்தில், அரளி மலர் சாகுபடியில் சாதனை புரிந்து வருகிறார் பட்டதாரி ஆசிரியை தமிழ்ச்செல்வி அறிவழகன். அவர் தன்னுடைய அரளி மலர் சாகுபடி அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

நான் தமிழில் முதுகலைப் பட்டத்துடன் கல்வியியல் பட்டமும் வாங்கியிருக்கேன். கடந்தாண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி அடஞ்சிருக்கேன். நாங்க மூனு வருசமா அரளிப்பூவை சாகுபடி செஞ்சிட்டு வர்றோம். அடிப்படையிலேயே விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்கிறதால, எனக்கு விவசாயத்துலயும் அதிகமான ஈடுபாடு உண்டு. அதனால, தண்ணியில்லாம தரிசா கெடக்குற எங்க நெலத்துல கொஞ்சமா ஏதாவது பயிர் பண்ணலாம்ன்னு என்னோட கணவர்கிட்ட சொன்னேன். அதுக்கு அவரும் சரின்னு சொன்னார். அதுக்குப் பெறகு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சோம்.

கெணத்துல இருக்கிற கொஞ்சம் போல தண்ணியில, நெரந்தரமா வருமானம் வர்ற மாதிரி செஞ்சா நல்லதுன்னு முடிவெடுத்து அரளியை சாகுபடி செஞ்சோம். மூனு வருசப் பயிரா இருக்கு. இப்போ இதை நம்பித்தான் நாங்களும் இருக்கோம். படிக்கிற நேரம் போக மீதி நேரத்துல நானு விவசாயத்தைப் பாத்துக்குவேன். மழை பேஞ்சு கெணத்துல அதிகமா தண்ணி வந்தா அரளி சாகுபடிப் பரப்பை இன்னும் கூட்டலாம்ன்னு இருக்கோம்.

அரளி எல்லா மண்ணிலும் வரும். கொஞ்சமாவது தண்ணி வசதி இருக்கணும். அரளி சாகுபடி செய்யப்போற நெலத்தை பக்குவமா உழுது வச்சுக்கிறணும். வரிசைக்கு வரிசை 12 அடி இடைவெளி இருக்கணும். செடிக்குச் செடி இடைவெளி 3 அடி இருக்கணும். நடவுக்கு ஒரு அடி சதுரத்துல குழி எடுக்கணும். இந்தக் குழியில, மட்கிய எரு, செம்மண், மணலைக் கலந்து போட்டு, ஒரு வாரம் கழிச்சு அரளியை நடணும். மூனு வருசமான அரளிச் செடிகள பதியம் போட்டு நாத்துகள உற்பத்தி செய்யலாம்.

நடவுக்கு முன்னாடி, வேர்ப்புழுவைக் கட்டுப்படுத்த, வேப்பம் புண்ணாக்கைப் போட்டுக்கலாம். நடவு ஆனதும் மூனு நாளைக்கு ஒரு தடவை நீரைப் பாய்ச்சணும். அசுவினியைக் கட்டுப்படுத்த, மாசத்துக்கு ஒரு மருந்து அடிக்கணும். செடிகள் நல்லா வளர்றதுக்கு மாசத்துக்கு ஒரு தடவை கலப்பு உரமும், ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை தொழுவுரமும் இடணும். நாலு மாசத்துக்கு ஒரு தடவை களை எடுக்கணும்.

நெலத்துல களைகள் இல்லாம பாத்துக்கணும். களைகள் இல்லாம இருந்தாத் தான் பூப்பறிக்க, உள்ள போக வர வசதியா இருக்கும். இதுல ஊடுபயிரும் சாகுபடி செய்யலாம். அரளியைப் பதியம் போட்டு நடுறதுனால சீக்கிரமாவே பூக்கள் பூக்கத் தொடங்கிரும். தொடக்கத்துல கொஞ்சமா பூக்கள் வந்தாலும் போகப் போக பராமரிப்பைப் பொறுத்து ஆண்டு முழுசும் நல்ல மகசூல் கிடைக்கும். அரளிக்கு மூனு நாளைக்கு ஒரு தண்ணியாவது பாய்ச்சணும். இதுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் ரொம்ப நல்லது.

ஜூன் மாசத்துல அரளி அதிகமா பூக்கும். பனிக்காலத்துல பூக்கள் குறையும். அரளிய, காலையிலும் மாலையிலும் மொட்டா இருக்கும் போதே பறிக்கணும். மலர்ந்த அரளி விற்கப் பயன்படாது. மொட்டு நிலையில பறிச்ச அரளிப் பூக்கள தண்ணியில போட்டு எடுத்து ஈரத் துணியால மூடி ஆற வைக்கணும். பிறகு பைகள்ல போட்டு விற்பனைக்கு அனுப்பலாம். முறையா பைகள்ல போட்டு வச்சா நாலு நாளைக்குக் கூட அரளிப் பூக்கள் அப்படியே இருக்கும்.

அரளிப்பூ, சீசன்ல கிலோ முந்நூறு ரூபா வரைக்கும் போகும். மத்த சமயங்கள்ல கிலோ இருபது ரூபாய்க்கும் போகும். நாங்க பொம்மிடியில இருக்குற மொத்த வியாபாரிகிட்ட கொடுத்துருவோம். அவங்க அன்றாடச் சந்தைப்படி விலை போட்டு மாசம் ஒரு தடவை பணமா தருவாங்க. மொத்த வியாபாரிங்க தருமபுரி, சேலம், பெங்களூரு, கோவைன்னு வெளியிடங்களுக்கு அனுப்பி வைப்பாங்க.

ஒரு ஏக்கருல 500 செடிகள் இருந்தா அன்றாடம் 50 கிலோ பூக்கள் வரைக்கும் கிடைக்கும். கிலோ 20 ரூபான்னு வித்தா 1000 ரூபாயும் கிலோ 200 ரூபான்னு வித்தா பத்தாயிரம் ரூபாயும் அன்றாட வருமானமா கிடைக்கும். எல்லாம் நம்ம பராமரிப்பைப் பொறுத்துத் தான் இருக்கு. வெள்ளை, சிவப்பு, ரோஜா என மூன்று நிறங்களில் பூக்கும் அரளிகளில், சராசரி மகசூலை தரும் நாட்டினமும், அதிக மகசூலை தரும் கலப்பினமும் உள்ளன என்றார்.


பொம்மிடி முருகேசன்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks