செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சரபோஜிராஜபுரம், ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட விவசாய கிராமம். எண்ணூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை ஆதாரம் விவசாயம். இவர்களில் நாற்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் மிக்கவர்கள். ஆனாலும், முழுமையாக இயற்கை விவசாயம் செய்யாமல், தங்களின் உணவுத் தேவைக்காக மட்டும் இயற்கை விவசாயம் செய்பவர்கள்.
ஒரு பத்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முழுமையான இயற்கை விவசாயிகள். அவர்களில் ஒருவர் க.குணசீலன். இவரிடம், உங்கள் இயற்கை விவசாய அனுபவங்களைக் கூறுங்கள் எனக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:
“எனக்கு ஐம்பத்தி நாலு வயசாகுது. ஒரு அஞ்சு ஏக்கர் நெலமிருக்கு. இதுல பதினோரு வருசமா இயற்கை விவசாயம் செய்யிறேன். ஆத்துல தண்ணி வரும் போது, அதை வச்சு விவசாயம் நடக்கும். ஆத்துல தண்ணி வராத நேரத்துல ஆழ்குழாய்க் கிணத்துத் தண்ணிய வச்சு விவசாயம் செய்வோம். இயற்கை விவசாயத்துக்கு வர்றதுக்கு முன்னால, நெல்லு போடுவோம், பருத்தியைப் போடுவோம், இரசாயன உரங்கள வாங்கிட்டு வந்து உரமா குடுப்போம்.
நானு இயற்கை விவசாயத்துக்கு மாறுனதுக்குப் பிறகு, சாகுபடி முறையவே மாத்திட்டேன். சம்பா பட்டத்துல நெலத்துல நெல்லு இருக்கும். அது தைய்யி பத்துத் தேதிக்குள்ள அறுவடைக்கு வந்துரும். அது முடிஞ்சதும் அந்த நெல் தரிசுல, பாசிப்பயறு, உளுந்து, எள்ளுன்னு வெதச்சிருவேன். நெல்லு அறுவடைக்குப் பத்து நாள் இருக்கும் போதே, இந்த விதைகள நெல்லு வயலுக்குள்ள வெதச்சு விட்டுருவேன்.
இதனால ஈரத்தை வீணாக்காம பயன்படுத்துறோம், தண்ணிய சிக்கனமா செலவழிச்சு, நல்ல முறையில ஒரு மகசூல எடுக்குறோம். அப்புறம் முக்கியமா, வேர் முடிச்சுள்ள பயறு வகைகள சாகுபடி செய்யிறதுனால, காத்துல இருக்குற தழைச்சத்த நெலத்துல உரமா சேர்க்குறோம், பயிர்க் கழிவும் நெலத்துக்கு உரமாகுது. இப்பிடி, இயற்கையா நெலத்தை வளமாக்குறோம்.
இந்தப் பயறு வகை சாகுபடி முடிஞ்சதும், சம்பா சாகுபடிக்கான வேலைய தொடங்குற வரைக்கும் நெலத்துக்குக் கொஞ்சம் ஓய்வு குடுக்குறோம். அடுத்து, சம்பா சாகுபடிக் காலம் வந்ததும், முதல் வேலையா நெலத்துல, ஏக்கருக்குப் பதினஞ்சு கிலோ தக்கைப் பூண்டு, அஞ்சு கிலோ சணப்புங்கிற கணக்குல வெதச்சு விட்டுருவோம். நெல்லுக்குப் பசுந்தாள் உரம் ரொம்ப ரொம்ப முக்கியம்.
ஏன்னா, சேத்துக்குள்ள பசுந்தழையை அமுக்கி விடுறது, அது நல்லா மக்கி நெலத்துக்கு உரமா மாறுறதுக்கான நல்ல வாய்ப்பு. காலங்காலமா நெல்லு விவசாயம் இப்பிடித் தான நடந்துச்சு? நவீன விவசாயம் வந்துச்சு, வண்டி வண்டியா எருவைக் கொட்டுறத மறந்துட்டோம், பசுந்தாள் உரத்தையும் மறந்துட்டோம்.
இந்த நெலத்துல நம்ம பாரம்பரியமான நெல் வகைகள மட்டும் தான் பயிரிடுறேன். இலுப்பைப்பூ சம்பா, இரத்தசாலி, மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக்கவுனி, தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தங்கச் சம்பா, மணிச்சம்பா, காளாபாத், வாசனைச் சீரகச் சம்பா, பிசினி, மைசூர் மல்லி, சிவன் சம்பா, பூங்காருன்னு, பதினாலு நெல்லு வகைகள சாகுபடி செய்யிறேன்.
இதுல, கறுப்புக்கவுனி, இரத்தசாலி, இலுப்பைப்பூ சம்பா, வாசனைச் சீரகச்சம்பா, சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பான்னு, மக்கள் விரும்புற அரிசிக்கான இரகங்கள அதிகமாவும், மத்த இரகங்கள விதைக்காகவும், பாதுகாக்குற நோக்கத்துலயும், ஒரு பதினஞ்சு சென்ட் அளவுல சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன்.
மணிச்சம்பா, கறுப்புக்கவுனி, மாப்பிள்ளைச் சம்பா நாத்துகள, பன்னெண்டுல இருந்து பதினஞ்சு நாளுக்குள்ள பறிச்சு நடணும். வாசனைச் சம்பா, சீரகச்சம்பா, இரத்தசாலி, இலுப்பைப்பூ சம்பா நாத்துகள, பதினஞ்சுல இருந்து இருபது நாளுக்குள்ள பறிச்சு நடணும்.
வயலுல பசுந்தாள் உரத்தோட ஏக்கருக்கு 30 கிலோ கடலைப் புண்ணாக்கு, 20 கிலோ வேப்பம் புண்ணாக்கையும் அடியுரமா போட்டு நடுவேன். நட்டு பதினஞ்சு நாள்ல ஏக்கருக்கு இருநூறு லிட்டர் அமுதக் கரைசல பாசனத்துல கலந்து குடுப்பேன். நட்டு முப்பது நாள்ல பத்து லிட்டர் தண்ணிக்கு முந்நூறு மில்லி பஞ்சகவ்யாங்கிற கணக்குல கலந்து தெளிப்பேன். அடுத்து ஒரு வாரத்துல, பத்து லிட்டர் தண்ணிக்கு நூறு மில்லி மீன் அமிலம்ங்கிற கணக்குல கலந்து தெளிப்பேன்.
வயலுக்குத் தண்ணி விடும் போதெல்லாம் அமுதக் கரைசல கலந்து விட்டுருவேன். இதுபோக, மேலுரமா 30 கிலோ கடலைப் புண்ணாக்கு, 20 கிலோ வேப்பம் புண்ணாக்கை 40 கிலோ மக்குன ஆட்டுப் புழுக்கையில கலந்து போடுவேன். தேவையிருந்தா, கதிர் வரும் போது தேமோர் கரைசலை தெளிப்பேன்.
பயிருல பூச்சித் தாக்குதல் இருந்தா, எங்க பக்கத்துல கிடைக்கக் கூடிய, ஆடாதொடை, நொச்சி, ஊமத்தை, எருக்கு, சீத்தா, பப்பாளி, சோற்றுக் கற்றாழை, துளசி, புங்கன், காட்டாமணக்கு, வேம்பு, ஆடுதின்னாப் பாலை தழைகள்ல இருந்து பூச்சி விரட்டிய தயாரிச்சு தெளிப்பேன்.
இந்தத் தழைகள்ல இருந்து ரெண்டு ரெண்டு கிலோ எடுத்து இடிச்சு, தண்ணியில ஊற வச்சா, ஒரு வாரத்துல பூச்சி விரட்டி தயாராகிரும். இந்த எல்லா தழைகளையும் போடணும்ங்கிற அவசியமில்ல. இதுல இருந்து ஏதாவது அஞ்சு தழைகளை வச்சே பூச்சி விரட்டிய தயாரிக்கலாம்.
இதுல இருந்து, ஏக்கருக்கு அஞ்சு லிட்டர் கணக்குல எடுத்து, தண்ணியில கலந்து தெளிப்பேன். இது தான் என்னோட இயற்கை விவசாய அனுபவம். இதுல இரசாயன உரத்துக்கோ, பூச்சி மருந்துக்கோ வேலையே இல்ல. விதைக்கோ, உரத்துக்கோ செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்ல. என்னோட சொந்த விதை, என்னோட வயலுல கிடைக்கக் கூடிய உரமே போதுமானது.
இந்தப் பராமரிப்புலயே நெல்லு அருமையா வெளஞ்சிரும். இலுப்பைப்பூ சம்பா ஏக்கருக்கு பன்னெண்டு மூட்டை கிடைக்கும். ஒரு மூட்டையில் அறுபது கிலோ நெல்லு இருக்கும். கறுப்புக்கவுனி பதினெட்டு மூட்டை கிடைக்கும். தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, இரத்தசாலி முப்பது மூட்டை கிடைக்கும். மாப்பிள்ளைச் சம்பா இருபத்து நாலு மூட்டை கிடைக்கும்.
அரிசிக்காக சாகுபடி செய்யிற நெல்ல, அஞ்சு மாசம் இருப்பு வச்சு, அதுக்குப் பிறகு தான் அரிசியாக்கி விக்கிறேன். நெல்லு பழசாகும் போது அந்த அரிசி சத்தான அரிசியா இருக்கும். முன்னால, பெங்களூரு, சென்னை, திருப்பூருல இருந்து தான் அரிசி வேணும்ன்னு கேப்பாங்க. இப்போ, பாரம்பரிய அரிசியோட நன்மைகளப் பத்தி மக்களுக்குத் தெரியுறதுனால, உள்ளூர் மக்களே நெறயா வாங்கிட்டுப் போறாங்க.
கறுப்புக்கவுனி அரிசி கிலோ 140-150 ரூபா, இரத்தசாலி அரிசி 150 ரூபா, இலுப்பைப்பூ சம்பா அரிசி 130 ரூபா, சீரகச்சம்பா, வாசனைச் சீரகச்சம்பா 100 ரூபா, மாப்பிள்ளைச் சம்பா 80-90 ரூபா, தங்கச்சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூயமல்லி 70-75 ரூபா, மணிச்சம்பா 80 ரூபான்னு குடுக்குறேன். விதை நெல்ல மட்டும் தான் நெல்லா குடுக்குறேன். மத்ததெல்லாம் அரிசியாக்கித் தான் விக்கிறேன்.
இயற்கை விவசாயத்துக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்துல இருந்து நல்ல ஆதரவு குடுக்குறாங்க. இங்க, அங்கக வேளாண்மைப் பிரிவு செயல்படுது. இதுல இருந்து, பசுந்தாள் உரப்பயிர் விதைகள், பஞ்சகவ்யா, மீன் அமிலம் இலவசமா குடுத்து, இயற்கை விவசாயத்த ஊக்கப்படுத்துறாங்க. அரிசி விற்பனைக்கு, விதை நெல் விற்பனைக்கு, வாய்ப்பை ஏற்படுத்திக் குடுக்குறாங்க. சிறந்த இயற்கை விவசாயி விருதை எனக்குக் குடுத்துப் பாராட்டுனாங்க.
இதைப்போல, திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் நெல் மையத்துல இருந்து, நெல் ஜெயராமன் விருதைக் குடுத்தாங்க. கிரியேட் நிறுவனத்துல இருந்து நம்மாழ்வார் விருதைக் குடுத்தாங்க. இந்த இயற்கை விவசாயமோ, நல்ல உடல் நலத்தையும், அமைதியான வாழ்க்கையையும் குடுத்திருக்கு. அதனால எல்லா விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாறணும், நல்ல வாழ்க்கை வாழணும்’’ என்றார். இவருடன் பேச:95857 57675.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!