My page - topic 1, topic 2, topic 3

நம்ம பிள்ளைக வாழணும்ன்னா மரங்கள வளர்க்கணும்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை.

ருமபுரி மாவட்டத்தின் இயற்கையெழில் கொஞ்சும் இடங்களில் வத்தல் மலையும் ஒன்று. சங்க காலத்தில் தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி என்ற அரசன், இப்போது வத்தல்மலை என்றழைக்கப்படும் குதிரைமலையை ஆட்சி செய்ததாகவும், அந்த மலையிலிருந்து தான் கிடைப்பதற்கரிய கருநெல்லிக்கனியைப் பறித்து வந்து தமிழ் மூதாட்டி ஒளவைக்குக் கொடுத்து, வள்ளல் என்று பெயர் பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இத்தகைய வத்தல்மலைச் சாரலில் மிட்டாநூல அள்ளி என்னும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், விவசாயத்தை விருப்பத்துடன் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் பொறியாளர் நரசிம்மன். நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக இருந்தாலும், இந்த மண்ணைக் காக்கும் உன்னதப் பணியாம் மரங்களை வளர்ப்பதிலும், மக்களைக் காக்கும் அற்புதப் பணியாம் விவசாயத்திலும், தனது ஓய்வு நேரத்தைச் செலவழித்து வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தனது வேளாண் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

மிட்டாநூல அள்ளி கிராமத்துக்குப் பக்கத்துல இருக்கும் பழனிக்கொட்டாய் தான் எங்க ஊர். நானு பொறியாளரா அரசு பணியில இருக்கிறதால, என் மனைவி தான் விவசாயத்தைப் பாத்துக்கிறாங்க. நானு என்னோட ஓய்வு நேரத்துல அவங்களுக்கு உதவியா விவசாயத்தைப் பாத்துக்குவேன்.

எங்க அப்பா பழனிக் கவுண்டர் இறந்துட்டாரு. அவரு எங்க பக்கத்து விவசாயிகளுக்கு முன்னுதாரணமா இருந்தவரு. அவருக்குப் பிறகு விவசாயத்தைக் கவனிக்க முடியல. நானு பொறியியல் படிப்பை முடிச்சதும் சொந்தமா தொழில் தொடங்கலாம்ன்னு கோழிப்பண்ணை வச்சேன். ஆனா பாருங்க, அதுல போதுமான அனுபவம் இல்லாததுனால ஒட்டுமொத்தத்துல நஷ்டமாகிருச்சு. இனி, இது நமக்குச் சரிப்பட்டு வராதுங்குற முடிவுக்கு வந்த நானு, ஏதாவது வேலைக்குப் போயிடலாம்ன்னு முடிவு பண்ணி கஷ்டப்பட்டுப் படிச்சேன். என் முயற்சி வீண் போகல. நெடுஞ்சாலைத் துறையில பொறியாளர் வேலை கிடைச்சது.

அரசாங்க வேலையில இருந்தாலும், அப்பா அம்மா நமக்கு விட்டுட்டுப் போன விவசாயத்தை நாமும் தொடர்ந்து செய்யணும், நம்மால முடிஞ்ச வரையில இந்த மண்ணுக்கும் மனுசங்களுக்கும் உதவியா இருக்கணும்ன்னு நெனச்சேன். இப்போ எவ்வளவு தான் சம்பாதிச்சாலும் வயசான காலத்துல நமக்கு ஆதரவா இருக்கப் போறது இந்த விவசாயம்தான்னு முடிவு பண்ணி, என் கருத்தை என் மனைவிகிட்ட சொன்னேன். அவங்களும் சரின்னு சொல்லி விவசாயத்துல ஆர்வம் காட்டுனாங்க. என்னையும் ஊக்கப்படுத்துனாங்க.

அந்த அடிப்படையில எங்க பூர்வீக நெலம் ரெண்டரை ஏக்கருல இப்போ விவசாயம் நடந்துக்கிட்டு இருக்கு. இதுக்கு முழுப் பொறுப்பு என் மனைவி தான். எங்க நெலத்துல வேம்பு, மலை வேம்பு, புங்கன், தேக்கு மரங்கள் இருக்கு. இதுபோக, தென்னை, வாழை, சப்போட்டா, பேரீச்சையும் சாகுபடியில இருக்கு. இந்த மரங்களுக்கு இடையில ஊடுபயிரா கத்தரி, வெண்டை, மிளகாய்ச் செடிகள் இருக்கு. மல்லிகைச் செடிகளையும் வச்சிருக்கோம். எல்லாத்துக்கும் தெளிப்பு நீர்ப் பாசனம் தான் போட்டுருக்கோம்.

வேலைக்கு ஆள் பற்றாக்குறை, தண்ணீர்ப் பற்றாக்குறைன்னு ஒரு பக்கம் இருந்தாலும், இன்னிக்கு இந்த பூமியில மரங்களின் தேவை அதிகமா இருக்குறதும், இதுக்கு ஒவ்வொருத்தரும் அவங்கங்க பங்கைச் செய்யணும்ங்குற கடமை இருக்குறதும் தான் நாங்க மர வளர்ப்புல ஈடுபட முக்கியக் காரணம்.

அப்புறம் பாத்தீங்கன்னா, எங்களுக்குச் சொந்தமான புளியந்தோப்பு இருந்துச்சு. அதுல 23 மரங்கள் இருந்துச்சு. ஒரு கட்டத்துல அது அழிஞ்சு போச்சு. அது எனக்கு ஒரு வருத்தமான விஷயம். இதனாலயும் மரங்கள வளர்க்கணும்ன்னு ஆசைப்பட்டோம். மேலும், மரங்கள வளர்க்குறதன் மூலமா, நம்ம பிள்ளைகளுக்கு நிரந்தரச் சொத்தைக் குடுக்க முடியும்.

மரமே மழைக்கு உறவு, அந்த மரமிருந்தால் தான் மழை வரும்ன்னு சொல்லுவாங்க. அதனால, இந்த பூமியில நல்லா மழை பெய்யணும்ன்னா மரங்கள் கட்டாயம் வேணும். உயிர் வாழ நல்ல காத்து வேணும். நல்ல காத்துக்கும் மரங்கள் அவசியம். இந்த பூமியோட வெப்பத்தைக் குறைக்கணும்ன்னா மரங்கள நெறையா வளர்க்கணும். ஒரு மரம் தன்னை வளர்க்குறவனுக்கு மட்டும் உதவியா இருக்குறதில்ல. மண்ணுக்கும் மற்ற மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் பயனா இருக்கு. அதனால, நிலம் இருக்குறவங்க, நிலத்துல மரங்கள வளர்க்கணும். நிலம் இல்லாதவங்க வீட்டுல, வீட்டுக்கு முன்னால தெருவுல, பொது இடங்கள்ல மரங்கள வளர்க்கணும்.

தவித்த வாய்க்குக் கொடுப்பது தண்ணீர் – அந்தத் தண்ணீரை வீணாக்கினால் மீள்வது கண்ணீர்ன்னு சொல்லுவாங்க. இதுமட்டுமில்ல, காசைப்போல கண்டபடி செலவழிக்காதீர், நீரைக் கணக்காகச் செலவழிக்க மறந்து விடாதீர் அப்படின்னும் சொல்லுவாங்க. இதுல இருந்து நீரோட முக்கியத்துவம் புரியும். மரங்களால, நீர் செலவாகுறதில்ல, சேமிக்கப்படுது. மழை வரவழைக்கப்படுது.

இப்பிடி, மரங்களால கிடைக்கும் நன்மைகளைச் சொல்லிக்கிட்டே இருக்கலாம். இன்னும் அழுத்தமாச் சொல்லணும்ன்னா, பிள்ளைங்க நல்லா இருக்கணும்ன்னு ஆசைப்படாத அம்மா அப்பா இருக்கவே முடியாது. அந்தப் பிள்ளைங்க இந்த மண்ணுல நல்லா இருக்கணும்ன்னா மரங்கள் நிறைய வேணும். இதுல என்னோட பங்களிப்பைச் செஞ்சிருக்கேன். இன்னும் வாய்ப்புக் கிடைச்சா நெறைய மரங்கள வளர்ப்பேன்.

இதோட, எதிர்காலத்துல, இந்தப் பகுதியில மாதிரி விவசாயப் பண்ணையை அமைக்கணும்ங்கிறது என்னோட ஆசை. அதுல இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, மூலிகை சாகுபடின்னு நெறையச் செய்யணும். இயற்கையான சூழலில் பிறந்து வளர்ந்த நான், பிறருக்கு உதவியா இருந்து வாழணும். இதுதான் என்னோட ஆசை. அந்த ஆசையை நோக்கி என்னோட பயணம் தொடர்ந்துக்கிட்டிருக்கு என்றார். இவரை 94437 71590 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


பொம்மிடி முருகேசன்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks