சிறு தானியங்கள் எனப்படும் சாமை, தினை, பனிவரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு ஆகியன, கி.மு. 1700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பட்டு வரும் தானிய வகைகளாகும்.
சிறுதானியங்கள் என்பவை, அளவில் சிறிய, வட்டமான முழுத் தானியங்கள் ஆகும். இவற்றில், பனிவரகு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு ஆகியன குறுந் தானியங்கள் எனப்படும்.
இவற்றில், நமது உடல் நலத்துக்குத் தேவையான சத்துகள் இருப்பதால், இப்போது உயர்தர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், உலக சுகாதார நிறுவனம், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்து உள்ளது. இந்திய அரசு இதைப் போன்ற பல நடவடிக்கைகள் மூலம், சிறு தானியங்களின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துகிறது.
தினையிலுள்ள சத்துகள்
மற்ற தானியங்களைப் போன்றே தினையிலும் சத்துகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. தயாமின் (பி1), நியாசின் (பி3) ஆகிய வைட்டமின்களும் போதியளவில் உள்ளன.
மேலும், நமக்கு அன்றாடம் தேவைப்படும், புரதம், நல்ல கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகியனவும் வேண்டிய அளவில் உள்ளன. இரும்புச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் உள்ளன.
லைசின், மெத்தியோனைன், த்ரோயோனைன், டிரிப்டோபான் போன்ற அடிப்படை அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.
நூறு கிராம் தினையிலுள்ள சத்துகள்
புரதம்: 12.3 கிராம்,
மாவுச்சத்து: 60.9 கிராம்,
கொழுப்பு: 4.3 கிராம்,
நார்ச்சத்து: 8.0 கிராம்,
கால்சியம்: 31 மி.கிராம்,
பாஸ்பரஸ்: 290 மி.கிராம்,
இரும்புச்சத்து: 2.8 மி.கிராம்,
தயாமின்: 0.59 மி.கிராம்,
நயாசின்: 3.2 மி.கிராம்.
தினையின் நன்மைகள்
எலும்பு வலுவாதல்: தினையில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் உள்ளதால், இது, எலும்புகள் மற்றும் தசையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உடலில் எலும்புக் குறைபாடு உள்ளவர்கள், உணவுப் பட்டியலில் தினையைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பயன் பெறலாம்.
நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துதல்: தினையில், பி1, பி3, பி12 ஆகிய வைட்டமின்கள் போதியளவில் இருப்பதால், நரம்பு மண்டலம் வலுவாக உதவுகிறது.
தினை உணவு, நரம்பியல் நோய்களான பார்கின்சன், அல்சைமர் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய நலம் காத்தல்: தினையில் குளூட்டன் இல்லாத புரதமும், குறைந்தளவு மாவுச்சத்தும் உள்ளன. மேலும், இதிலுள்ள சத்துகள் நரம்பிய கடத்தியான அசிடைல் கொலீன் உருவாவதற்கு உதவி செய்கிறது.
இந்த நரம்பிய கடத்தி, இதயச் செயல்களைக் காப்பதோடு, தசை மற்றும் நரம்புகளுக்கு இடையே செய்திகளை அனுப்புகிறது. பல்வேறு நோய்களில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கிறது.
நீரிழிவைக் கட்டுப்படுத்தல்: குறைந்தளவு மாவுச் சத்தைக் கொண்ட தினை, அரிசிக்குச் சிறந்த மாற்றாகும். ஏனெனில், தினை உணவு அவ்வளவு எளிதில் பசிக்காது. அதனால், சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்க, நீரிழிவு உள்ளவர்கள் தினை உணவை உண்ணலாம்.
கெட்ட கொழுப்பைக் குறைத்தல்: தினையில் உள்ள அமினோ அமிலங்கள், கல்லீரலில் கொழுப்புச் சேர்வதைத் தடுக்கிறது. இதன் மூலம், கல்லீரலைக் கெட்ட கொழுப்பில் இருந்து பாதுகாக்கிறது.
எடையிழப்புக்கு உதவுதல்: தினையில் இருக்கும் டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலம், நமக்கு அடிக்கடி பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதன் மூலம், எடை இழப்புக்குத் துணை புரிகிறது.
இதர நன்மைகள்: தினை உணவுகள் செரிப்பு மண்டலம் வலுவாக இருக்க உதவுகிறது. நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகிறது. இவ்வகையில், எல்லாச் சத்துகளும் நிறைந்த தினை, நலந்தரும் உணவாக விளங்குகிறது.
மதிப்புக்கூட்டுத் தயாரிப்புகள்
பண்டைய காலத்தில் நம் முன்னோர், தினையை அன்றாட உணவாகப் பயன்படுத்தினர். இன்றுள்ள நாம் சிறுதானிய உணவுகளை விரும்பி உண்பதில்லை.
ஆனால், இப்போது சிறுதானிய உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வு மிகுந்து வருகிறது.
மேலும், தினையில் உள்ள சத்துகள் காரணமாக, பல்வேறு மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உணவுச் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அவையாவன:
அடுமனைத் தயாரிப்புகள், வெளியேற்றப்பட்ட பிளக்ஸ் (Extruded flakes) ஊடனடி கலவைகள், சிறுதானிய ரவை, தினைமாவு, தினைச் சேமியா, சிறுதானிய பாஸ்தா, சிறுதானிய ரொட்டி, சிறுதானிய கேக்குகள்.
காலை உணவுகள்: இட்லி, தோசை, இடியாப்பம், ரொட்டி, புட்டு, உப்புமா, அடை, பணியாரம், சப்பாத்தி.
இனிப்புகள்: அல்வா, இனிப்புக் கொழுக்கட்டை, அதிரசம், கேசரி, சத்து உருண்டை, வடை, பக்கோடா, ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி, முறுக்கு, தட்டுவடை போன்ற தினை சார்ந்த தயாரிப்புகள் கடைகளில் கிடைக்கின்றன. மேலும், விதவிதமான சமையல் செய்முறைகள் செய்து காட்டப்படுகின்றன.
எனவே, சத்துகள் மிகுந்த தினையை, தனியாகவோ, மற்ற சிறு தானியங்களில் சேர்த்தோ சமைத்து உண்பது சிறந்தது.
மேலும், இளம் வயதினர்க்குத் தினை மற்றும் பிற சிறு தானியங்களில் உள்ள சத்துகள் மற்றும் பயன்களை எடுத்துரைக்க வேண்டும்.
மூத்தோரின் முதுமொழியான உணவே மருந்து என்பதற்கு ஏற்ப, நம் பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் அவற்றின் பயன்களைக் கேட்டறிந்து, அவர்கள் வழி நடந்து, நமது உடலைப் பேணிப் பாதுகாப்போம்.
முனைவர் ச.கீதாஞ்சலி, தி.ஊமா மகேஸ்வரி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, திருச்சி. மா.லை.மினி, ஜெ.செல்வி, வேளாண்மைக் கல்லூரி, மதுரை.
சந்தேகமா? கேளுங்கள்!