சிப்பிக் காளானின் மருத்துவப் பயன்கள்!

சிப்பிக் காளானின் mushroom 2

காளான் வகைகள், அடிப்படையில் பூஞ்சை இனத்தைச் சேர்ந்தவை. பல நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ள பூஞ்சை இனத்தில், காளான் வகைகளே கண்களால் பார்க்கக் கூடிய, கைகளால் பறிக்கக் கூடிய வகையில் உள்ளன.

உலகில் சுமார் 2,000 வகை உணவுக் காளான்கள் உள்ளன. எனினும், அவற்றில் பன்னிரண்டு இரகங்கள் மட்டுமே அதிகளவில் சாகுபடியில் உள்ளன. இன்னும் ஒரு சில உள்ளன என்றால், அவை மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தவை.

உலகின் மேற்குப் பகுதிகளில் இக்காளான் வகைகள், ஆடம்பர உணவாகக் கருதப்படுகின்றன. ஆனால், உலகின் வளரும் நாடுகளில் இக்காளான்கள், ஏழைகளின் மூல ரொக்கமாக, புதிய ஊட்ட ஆதாரமாகக் கருதப்படுகின்றன.

காளான் வகைகளில், பட்டன் காளான், சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் வகைகளே பெரும்பாலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுள், பட்டன் காளான் வகைகள், மலைப் பகுதியில் மட்டுமே விளையும். ஆனால், சிப்பி மற்றும் பால் காளான் வகைகள், எல்லா இடங்களிலும் விளையும்.

சிப்பிக் காளானின் தோற்றம், விசிறி வடிவத் தொப்பியைப் போலிருக்கும். இது, வெள்ளை, சாம்பல், நீலம், சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் விளைவதால், பார்ப்பதற்கு மிக அழகாக, நேர்த்தியான வாசத்துடன் இருக்கும். சிப்பிக் காளானின் தாவரப் பெயர், ஃப்ளுரோட்டஸ் ஆஸ்ட்ரியேடஸ் ஆகும்.

சிப்பிக் காளான்களில் சில, உணவாகவும் மற்றும் சில மருந்தாகவும் பயன்படுகின்றன. மனித உடலின் சீரான உடல் நிலைக்குத் தேவையான, அறியப்படாத மர்மக் கூறுகள், காளானில் உள்ளதாக, உயிரி மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

சிப்பிக் காளானில் பல வகைகள் உள்ளன. அவை, கோல்டன் சிப்பிக் காளான், பிங்க் சிப்பிக் காளான், ஃபுளோரிடா சிப்பிக் காளான், புலுரோட்டஸ் எர்ரீங்கி மற்றும் பலவாகும்.

இந்த இரகங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டுக் கால நிலைக்கு உகந்த, வெள்ளைச் சிப்பி (கோ1), சாம்பல் சிப்பி – எம்.டி.யு.1, 2, ஏ.பி.கே.1, 2, ஊட்டி 1, 2 மற்றும் பால் காளான்கள் போன்றவை அதிகமாக உற்பத்தி செய்யபடுகின்றன.

சிப்பிக் காளானில், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாதுகள் இரண்டாம் வளர்சிதை விளைபொருள் ஆகியன உள்ளன.

நூறு கிராம் சிப்பிக் காளானில் 38 கிராம் கலோரி, 15-25 கிராம் புரதச்சத்து, 2 கிராம் கொழுப்புச்சத்து, 6.5 கிராம் மாவுச்சத்து, 2.8 கிராம் நார்ச்சத்து, தயாமின், ரைபோபிளேவின், நியாசின் போன்ற சத்துகள் அனைத்தும் சரிவிகித அளவில் இருப்பதால், இது சரிவிகித உணவு எனப்படுகிறது.

காளானில் அதிகமாக இருக்கும் நார்ச்சத்து, உடல் நலத்தைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. அது மட்டுமின்றி, மனித உடலுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துகள், இறைச்சி உணவுகளில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக, சிப்பிக் காளானில் உள்ளன.

தாவர இனங்களைத் தவிர, காளான்களிலும் மருத்துவ மதிப்புகள் அதிகமாக உள்ளன. இவை, பண்டைக் காலம் முதலே உலகம் முழுவதும் மருத்துவத்தில் பயன்பட்டு வருகின்றன.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், நீரிழிவு, இதய நோய்கள், உடல் பருமன் போன்ற உயிரைக் கொல்லும் நோய்கள், எல்லா வயதினரையும் தாக்கும் நிலை உள்ளது.

மேலும், கல்லீரல் நோய்கள், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சனைகள், இரைப்பை புற்றுநோய், நோயெதிர்ப்பு சக்தி குறைவு, நுண்ணுயிர்த் தொற்று, மஞ்சள் காமாலை போன்ற நாள்பட்ட நோய்களை, தீர்ப்பதில், சிப்பிக் காளான் பெரும்பங்கு வகிக்கிறது.

இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க

உடலில் ஏற்படும் இன்சுலின் குறைவால், இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து நீரிழிவு ஏற்படுகிறது. இதைக் குணப்படுத்த, அன்றாட உணவில் சிப்பிக் காளானைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இதிலுள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியச் சத்துகள், இரத்தத்தில் இன்சுலின் அளவைக் கூட்டி, சர்க்கரை அளவைக் குறைக்கிறது. ஒன்று மற்றும் இரண்டாம் நிலை சர்க்கரை நோயைக் குணப்படுத்த வைட்டமின் டி உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க

உடலில் புதிய செல்கள் பெருக, வைட்டமின் டி உதவுகிறது. காய்ச்சல், ஜலதோசம் மற்றும் நெடுநாள் ஒவ்வாமையைத் தடுக்கிறது. முடக்குவாதம், குடல் புண், உயர் இரத்த மற்றும் செரிமானச் சிக்கலைச் சரி செய்ய உதவுகிறது.

இதய நோயைக் கட்டுப்படுத்த

வைட்டமின் பி3, இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பின் அளவைச் சமநிலை செய்கிறது. சிப்பிக் காளானில் ஸ்டேடின் என்னும் வேதிப் பொருள் இயல்பாகவே அமைந்துள்ளது. இந்த ஸ்டேடின் நமது உடலுக்குத் தீமை செய்யும் பிளாஸ்மா கொழுப்பு அமிலங்களைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இதிலுள்ள பீட்டா குளுக்கன், நோயெதிர்ப்பு அமைப்பைத் தூண்டுகிறது.

நமது உடலில் ஏற்படும் நோய்களைப் பெருமளவில் குணப்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவைச் சமநிலை செய்கிறது. அமிலங்கள் மற்றும் கொழுப்பால் உடலில் ஏற்படும் மாற்றங்களைச் சரி செய்கிறது.

காளானின் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இதிலுள்ள மருத்துவக் குணங்கள் மக்களால் பெரும்பாலும் அறியப்படவில்லை. சிப்பிக் காளானில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குவதே தற்போதைய ஆவணத்தின் நோக்கம்.


முனைவர் இரா.பிரியா, முதுநிலை ஆராய்ச்சியாளர், முனைவர். சு.அமுதா, முதல்வர், சமுதாய அறிவியல் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!