செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர்.
கேழ்வரகில், புரதமும் தாதுப்புகளும் அதிகளவில் உள்ளன. முக்கிய அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. இதிலுள்ள கால்சியம் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைச் சமன்படுத்த உதவுகிறது. தமிழ்நாட்டில் அதிகமாகப் பயன்படும் கேழ்வரகைக் கொண்டு விதவிதமான உணவுகளைத் தயாரிக்கலாம்.
கேழ்வரகு உருளைக்கிழங்கு சப்பாத்தி
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 2 கிண்ணம், அரிசி மாவு 1 கிண்ணம், மூன்று உருளைக்கிழங்கை வேக வைத்த மசியல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்த் துண்டுகள் தேவைக்கேற்ப, கொத்தமல்லித் தழை சிறிதளவு, உப்பு மற்றும் காரப்பொடி தேவைக்கேற்ப.
செய்முறை: கேழ்வரகு மாவு, அரிசி மாவு, மசித்த உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, உப்பு, காரப்பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைய வேண்டும். பிறகு, அதைச் சப்பாத்தியாகத் தட்டி, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், சுவையான கேழ்வரகு உருளைக்கிழங்கு சப்பாத்தி தயார்.
கேழ்வரகு மோர் பானம்
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 1 தேக்கரண்டி, நீர் 1 கிண்ணம், மோர் அரை கிண்ணம்.
செய்முறை: நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். பிறகு, இதில் நீர்விட்டுக் கரைத்த கேழ்வரகு மாவைக் கலந்து கட்டியில்லாமல் கிளற வேண்டும். நெருப்பின் அளவைக் குறைத்து அது கெட்டியாகும் வரை கலக்கி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பிறகு, மோரையும் உப்பையும் சேர்த்துக் கலந்தால், கோடைக் காலத்துக்கு ஏற்ற, கேழ்வரகு மோர் பானம் தயார்.
கேழ்வரகு தோசை
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 1 கிண்ணம், மோர் 1 கிண்ணம், சீரகம் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு, நீரும் உப்பும் தேவையான அளவு.
செய்முறை: மேலே கூறியுள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, தோசைமாவுப் பதத்தில் கலக்கி, ஒருமணி நேரம் புளிக்கவிட வேண்டும். பிறகு எடுத்துத் தோசையாக வார்த்தால், சத்தான கேழ்வரகு தோசை தயார். இதைச் சட்னியுடன் சூடாகச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கேழ்வரகு இட்லி
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 3 கிண்ணம், உளுத்தம் பருப்பு 1 கிண்ணம், வெந்தயம் 1 தேக்கரண்டி, உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை: உளுத்தம் பருப்பையும் வெந்தயத்தையும் நீரில் நன்கு ஊற வைக்க வேண்டும். பிறகு, நன்றாக அரைத்து அதனுடன், கேழ்வரகு மாவு, உப்பைச் சேர்த்து, இட்லி மாவுப் பதத்தில் கரைத்து வைத்து, மறுநாள் இட்லியாக வார்த்தால் சத்தான இராகி இட்லி தயார்.
கேழ்வரகு அடை
தேவையான பொருள்கள்: கேழ்வரகு, புழுங்கல் அரிசி தலா ஒரு கிண்ணம், பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு, நொறுக்கிய மிளகு 2 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள், மிளகாய் வற்றல் 4, புதினா ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகை அரிசியுடன் சேர்த்து ஒருமணி நேரம் ஊறவிட வேண்டும். பிறகு, இதைக் களைந்து மிளகாய் வற்றலைச் சேர்த்து அடைமாவுப் பதத்தில் அரைக்க வேண்டும். இதில், தேங்காய்த் துண்டுகள், இஞ்சி, மிளகைச் சேர்க்க வேண்டும். புதினாவைப் பொடியாக நறுக்கி, எண்ணெய்யில் வதக்கிப் போட வேண்டும். பிறகு, தேவையான உப்பைச் சேர்த்துக் கலந்து அடையாகத் தட்டி, எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால் உடல் சுவையான அடை தயார்.
கேழ்வரகுத் தட்டை
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 1 கிண்ணம், அரிசி மாவு 1 கிண்ணம், பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி, வெண்ணெய்1 தேக்கரண்டி, மிளகுத்தூள் 2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரம் ஒன்றில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், பெருங்காயத் தூள், வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். கடலைப் பருப்பை ஊற வைத்து நீரை வடித்து விட்டுக் கேழ்வரகு மாவுக் கலவையுடன் சேர்க்க வேண்டும்.
பிறகு, இதனுடன் தேவையான அளவு நீரை விட்டு, பூரி மாவுப் பதத்தில் பிசைய வேண்டும். அடுத்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, வட்டமான தட்டைகளாகச் செய்து நன்றாகக் காய்ந்த எண்ணெய்யில் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்து எடுத்தால், சுவையான கேழ்வரகுத் தட்டை தயார்.
கேழ்வரகு சோள அடை
தேவையான பொருள்கள்: கேழ்வரகு 1 கிண்ணம், வெங்காயம் 1, மிளகாய் வற்றல் 5, வெள்ளைச் சோளம் கால் கிண்ணம், மஞ்சள் சோளம் கால் கிண்ணம், பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சிறிதளவு, உப்பு, தேங்காய் எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு, வெள்ளைச் சோளம். மஞ்சள் சோளம் ஆகியவற்றைத் தனித்தனியே 2 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிக்க வேண்டும். இதனுடன் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, கரகரப்பாக அரைக்க வேண்டும்.
பிறகு, இத்துடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழையைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அடுத்து, சூடான தவாவில் தேங்காய் எண்ணெய்யைத் தடவி, சிறிய அடைகளாக மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் சுட்டு மொறு மொறுப்பாக எடுத்தால், சுவையான கேழ்வரகு சோள அடை தயார்.
இராகி மால்ட் என்னும் பானப்பொடி
மால்ட் என்னும் பானப்பொடியைச் செய்ய ஏற்ற தானியமாக இராகி உள்ளது. ஒரு கிலோ கேழ்வரகைச் சுத்தம் செய்து 12 மணி நேரம் ஊற வைத்து முளைக்கட்ட வேண்டும். 48 மணி நேரம் கழித்து, இதை 24 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். 70-75 டிகிரி செ.கி. வெப்பத்தில் முளைகளை நீக்க வேண்டும். பிறகு, இதை அரைத்து 80 சி.எஸ். சல்லடையில் சலித்து மாவைப் பிரித்தெடுக்க வேண்டும். பின்பு, கொழுப்பு நீக்கிய பால் பொடி 100 கிராம், வெல்லம் 200 கிராம் சேர்த்துக் கலந்து நெகிழிப் பையில் வைத்துக் கொண்டால் தேவைக்குப் பயன்படுத்தலாம்.
கேழ்வரகு பக்கோடா
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 700 கிராம், அரிசி மாவு 150 கிராம், வெங்காயம் 100 கிராம், பச்சை மிளகாய் 20 கிராம், கறிவேப்பிலை 20 கிராம், கொத்தமல்லி 10 கிராம், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவையும் அரிசி மாவையும், போதுமான உப்பைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, மாவுக் கலவையில் சேர்த்து, நீரையூற்றிப் பிசைய வேண்டும். பிறகு, இந்த மாவைச் சிறிய துண்டுகளாக எண்ணெய்யில் இட்டுப் பொரித்து எடுத்தால், கேழ்வரகு பக்கோடா தயார்.
கேழ்வரகு ரிப்பன் பக்கோடா
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 700 கிராம், அரிசி மாவு 200 கிராம், மிளகாய்த்தூள் 20 கிராம், சீரகத்தூள் 20 கிராம், வனஸ்பதி 50 கிராம், பெருங்காயம் 10 கிராம், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவைச் சலிக்க வேண்டும். இதனுடன் அரிசி மாவு, வனஸ்பதி, மிளகாய்த் தூள், சீரகத்தூள், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து, நீரையூற்றிப் பிசைய வேண்டும். பிறகு, இந்த மாவை முறுக்கு அச்சிலிட்டுப் பிழிந்து எண்ணெய்யில் பொரித்தால், சுவையான கேழ்வரகு ரிப்பன் பக்கோடா தயார்.
கேழ்வரகு சிம்ளி
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 1 கிண்ணம், வறுத்த வேர்க்கடலை அரைக் கிண்ணம், வெல்லம் 100 கிராம், நெய், உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பையும் நீரையும் சேர்த்து அடைமாவுப் பதத்தில் பிசைந்து, அடைகளாகத் தட்டி வேகவிட்டு எடுக்க வேண்டும். பிறகு, இந்த அடைகளைச் சிறிய துண்டுகளாக்கி மிக்சியிலிட்டுப் பொடிக்க வேண்டும். வறுத்த வேர்க்கடலையையும் பொடிக்க வேண்டும். வெல்லத்தைக் கட்டியில்லாமல் நொறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அனைத்தையும் ஒன்றாக்கி, நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாகப் பிடித்தால், கேழ்வரகுச் சிம்ளி தயார்.
கேழ்வரகு முறுக்கு
தேவையான பொருள்கள்: கேழ்வரகு மாவு 2 கிண்ணம், கடலை மாவு 1 கிண்ணம், பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி, உப்பு, வனஸ்பதி, எண்ணெய் தேவைக்கேற்ப.
செய்முறை: கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் சலித்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். இதில் வனஸ்பதியை உருக்கி ஊற்ற வேண்டும். பிறகு, பூண்டு விழுது. மிளகாய்த்தூள் மற்றும் உப்பைச் சேர்த்துக் கலக்க வேண்டும். அடுத்து, அதில் கால் கிண்ண நீரையூற்றி, முறுக்கு மாவுப் பதத்துக்குக் கெட்டியாகப் பிசைய வேண்டும். இந்த மாவை முறுக்கு அச்சிலிட்டு, வாணலியில் காய்ந்த எண்ணெய்யில் பிழிந்து பொரித்தால், சத்தும் சுவையும் நிறைந்த கேழ்வரகு முறுக்குத் தயார்.
முனைவர் இரா.இராஜசேகரன், தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரி, சகாயத்தோட்டம், வேலூர் – 631 151, முனைவர் இந்துமதி, ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரி, கலவை, வேலூர் – 632 506.
சந்தேகமா? கேளுங்கள்!