My page - topic 1, topic 2, topic 3

தீவனப் பயிர்கள் சாகுபடி!

தீவனம்

மிழக உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதில் தீவனப் பயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயறுவகைத் தீவனப் பயிர்கள், வான்வெளியில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து, மண்வளத்தைப் பெருக்குகின்றன. பசுந்தீவனப் பயிர்கள், பால் உற்பத்தியின் முதுகெலும்பு என்று கூறலாம்.

கம்பு நேப்பயிர் ஒட்டுப்புல்

இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம். எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது. நிலத்தை 2-3 முறை உழுது பண்படுத்தி 50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.

இரகங்கள்: கோ.4, கோ.5 புல் இரகங்களை நடலாம். எக்டருக்கு 40,000 தண்டுக் கரணைகள் தேவைப்படும். இவற்றை, வரிசைக்கு வரிசை, பயிருக்குப் பயிர் 50 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.

உரம்: எக்டருக்கு 25 டன் தொழுவுரம் மற்றும் 75:50:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும். நட்ட 30 நாளில் 75 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னும், 75 கிலோ தழைச்சத்தை இட்டுப் பாசனம் செய்ய வேண்டும்.

களை நிர்வாகம்: நட்ட 30 நாட்களுக்குப் பிறகு களையெடுக்க வேண்டும். அடுத்து, ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் களையெடுத்து, மண் அணைக்க வேண்டும். பயிர்ப் பாதுகாப்புத் தேவையில்லை

நீர் நிர்வாகம்: நடவு நீர், மூன்றாம் நாள் உயிர்ப்பு நீருக்கு அடுத்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

அறுவடை: முதல் அறுவடையை 75-80 நாட்களிலும், அடுத்தடுத்த அறுவடையை 45 நாட்களுக்கு ஒருமுறையும் செய்ய வேண்டும்.

மகசூல்: கோ.5 இரகத்தைப் பயிரிட்டால், ஓராண்டில் மேற்கொள்ளும் 7 அறுவடைகள் மூலம், 400 டன் பசுந்தீவனம் கிடைக்கும்.

கோ.எப்.எஸ்.31 மறுதாம்புத் தீவனச்சோளம்

பருவம்: இறவையில், ஜனவரி பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மே-யிலும், மானாவாரியில் செப்டம்பர் அக்டோபரிலும் சாகுபடி செய்யலாம்.

நிலம் தயாரித்தல்: நிலத்தை 2-3 முறை உழுது பண்படுத்த வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது கம்போஸ்ட், 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம், 10 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா மற்றும் 20 பொட்டலம் அசோபாசைக் கலந்து இட வேண்டும். பிறகு, 6 மீட்டர் நீளம், 50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.

உரம்: அடியுரமாக, எக்டருக்கு, 45 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக, விதைத்த 30 நாட்கள் கழித்து, 45 கிலோ தழைச்சத்தை இட வேண்டும். அடுத்து, ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் 45 கிலோ தழைச்சத்தை அளிக்க வேண்டும். நான்காம் அறுவடையின் போது, 45 கிலோ தழைச்சத்துடன், 40 கிலோ மணிச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தை அளிக்க வேண்டும்.

விதையளவும் விதைப்பும்: எக்டருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். இவற்றை, வரிசைக்கு வரிசை 50 செ.மீ., பயிருக்குப் பயிர் 50 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி: மூன்று பொட்டலம் அசோஸ்பைரில்லம், மூன்று பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா அல்லது ஆறு பொட்டலம் அசோபாசில் விதைகளைக் கலந்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

களை நிர்வாகம்: விதைத்த 20 நாட்கள் கழித்து, களையெடுக்க வேண்டும். அடுத்து, தேவைப்பட்டால் 35-40 நாட்களில் மீண்டும் களையெடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்: விதைப்பு நீர், மூன்றாம் நாள் உயிர்ப்பு நீர் தர வேண்டும். அடுத்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் அளிப்பது சிறந்தது.

பயிர்ப் பாதுகாப்பு: குருத்து ஈக்கள் இருந்தால், விதைத்த பத்து நாளில் 500 மி.லி. டைமித்தோயேட் 30 ஈசி மருந்தை, 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அறுவடைக்கு 30 நாட்களுக்கு முன், பயிர்ப் பாதுகாப்பு மருந்துத் தெளிப்பை நிறுத்தி விட வேண்டும்.

அறுவடை: விதைத்த 65-70 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்யலாம். தொடர்ந்து 65-70 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.

பசுந்தீவன மகசூல்: ஓராண்டில், 5-6 அறுவடைகள் மூலம், எக்டருக்கு 160-170 டன் தீவனம் கிடைக்கும். நாற்றுப் பருவத்தில் சைனோசெனிக் குளுக்கோசைடு என்னும் நச்சுப்பொருள் அதிகமாக இருப்பதால், பயிர்கள் பூத்த பிறகு தான் அறுவடை செய்து, கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

வேலிமசால்

பருவம்: இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜுன்- அக்டோபர் காலத்தில் விதைக்கலாம்.

நிலம் தயாரித்தல்: இரும்புக் கலப்பை மூலம் 2-3 முறை உழ வேண்டும். 50 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்.

உரம்: கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது கம்போஸ்ட்டை அடியுரமாக இட வேண்டும். மேலும், மண் பரிசோதனைப்படி இரசாயன உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில், எக்டருக்கு 25:40:20 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்தை அடியுரமாக இட வேண்டும்.

விதையளவு: எக்டருக்கு 20 கிலோ விதைகள் தேவைப்படும். இவற்றைப் பார்களின் இருபுறமும் 50 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி: விதைகளை மூன்று பொட்டலம் ரைசோபியத்தில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். விதைகள் நன்றாக முளைக்க, கொதிநீரில் 3-4 நிமிடங்கள் விதைகளை இட்டு எடுத்து, நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இப்படிச் செய்தால், சுமார் 80 சதவீதம் முளைப்புத் திறன் கிடைக்கும்.

களை நிர்வாகம்: விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு களையெடுக்க வேண்டும். அடுத்து ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் களையெடுக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்: விதைப்பு நீர், மூன்றாம் நாள் உயிர்ப்பு நீர் விட வேண்டும். அடுத்து, வாரம் ஒருமுறை பாசனம் அளிப்பது சிறந்தது.

அறுவடை: விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு, செடி 50 செ.மீ. உயரத்தில் இருக்கும் போது, முதல் அறுவடை செய்ய வேண்டும். அடுத்தடுத்த அறுவடையை, 40 நாட்கள் இடைவெளியில் செய்ய வேண்டும். கலப்புப்பயிர் விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடையும், அடுத்தடுத்த அறுவடையை, 45 நாட்கள் இடைவெளியிலும் செய்ய வேண்டும்.

மகசூல்: ஓராண்டில், எக்டருக்கு 80 முதல் 100 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.


N.SATHISH KUMAR 1 e1738044337193

முனைவர் ந.சதீஷ்குமார், முனைவர் சி.ரா.ஸ்ரீரங்கசாமி, முனைவர் ப.துக்கையண்ணன், முனைவர் இரா.ஜெயஸ்ரீனிவாஸ்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!