My page - topic 1, topic 2, topic 3

தக்காளியில் தயாரிக்கப்படும் பண்டங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.

க்காளி இல்லாத வீட்டைப் பார்க்க முடியாது. எந்தக் குழம்பு என்றாலும் அதில் தக்காளி இருக்கும். இந்தத் தக்காளி அதிகமாக விளையும் காலத்தில் வாங்க ஆளில்லாமல் சாலைகளில் கொட்டப்படும். விளைச்சல் அரிதானால், சாதாரண மக்களால் வாங்க முடியாத அளவில் விலையேற்றம் இருக்கும். விரைவில் அழுகி விடும் பொருள் என்பதால், அதிகமாக விளையும் காலத்தில், மதிப்பூட்டமுள்ள பொருள்களாகத் தயாரித்து வைத்தால், சாலைகளில் கொட்ட வேண்டிய நிலை இருக்காது. அந்த வகையில், தக்காளியில் தயாரிக்கப்படும் சில உணவுப் பண்டங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

தக்காளியில் சுண்ணாம்புச் சத்து 4.8 மி.கிராம், பாஸ்பரஸ் 20 மி.கிராம், கரோட்டின் 351 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 27 மி.கிராம் எனச் சத்துகள் உள்ளன. ஆண்டு முழுவதும் கிடைக்கும் தக்காளியை, குழம்பு, இரசம், கூட்டு, அவியலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், இதன் நிறம், மணம், ருசி ஆகியவற்றைக் கொண்டு, வணிக அடிப்படையில், தக்காளி கெட்சப், சாஸ், ஊறுகாய் போன்ற பொருள்களாகத் தயாரித்து வருமானத்தை ஈட்டலாம். இந்தப் பொருள்களைத் தயாரிக்க, பெரியளவில் இயந்திரங்கள் தேவையில்லை. முதலீடு இல்லாமல் சிறு தொழிலாகத் தொடங்கலாம்.

கெட்சப்புக்கும், சாஸுக்கும் பெரியளவில் வேறுபாடு இல்லை. சாஸை விட, கெட்சப் சற்றுக் கெட்டியாக இருக்கும். இந்தப் பொருள்களைத் தயாரிக்க, நறுமணப் பொருள்களின் சாறும், தோல், விதைகள், காம்புகள் நீக்கப்பட்ட தக்காளிச் சாறு, உப்பு, மசாலாப் பொருள்கள், இனிப்பு ஆகியனவும் தேவை.

தயாரிப்பில் கவனிக்க வேண்டியவை

கெட்சப், சாஸை நிரப்பியுள்ள குப்பிகளின் கழுத்துப் பகுதியில், சில நேரங்களில் கறுப்பு வளையம் போன்று படியும். இதற்குக் காரணம், இவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் அல்லது இயந்திரங்களில் இருக்கும் இரும்பும், நறுமணப் பொருள்களில் உள்ள டேனின்களும் ஒன்று சேர்வதாகும். இதைத் தவிர்க்க, இந்தப் பொருள்கள் சூடாக இருக்கும் போதே, அவற்றைக் குப்பிகளில் நிரப்பிவிட வேண்டும். குப்பிகளில் 2 செ.மீ. அளவில் காலியாக இருக்கும்படி நிரப்ப வேண்டும். சுத்தமான உப்பைப் பயன்படுத்த வேண்டும். கிராம்பிலுள்ள தலைப்பகுதியை நீக்கிவிட வேண்டும்.

கெட்சப் தயாரிப்பு

தேவையான பொருள்கள்: வடிகட்டிய தக்காளிச்சாறு 3 கிலோ, சர்க்கரை 150 கிராம், சின்ன வெங்காயம் 10, பூண்டு 4 பற்கள், கிராம்பு 3, பட்டை 3 அங்குலம், ஏலக்காய் 10, மிளகு, சீரகம், மிளகாய்த்தூள், உப்பு தலா 1 தேக்கரண்டி, வினிகர் 50 மில்லி, சோடியம் பென்சோயேட் கால் தேக்கரண்டி.

தயாரிப்பு முறை: நன்கு பழுத்த சிவப்பான தக்காளிப் பழங்களைக் கழுவி மிக்ஸியில் அரைத்து வடித்த சாறுடன் 100 கிராம் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். வெங்காயம், பட்டை, கிராம்பு, பூண்டு, ஏலக்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை, அம்மியில் வைத்து அரைத்து மிளகாய்த் தூளுடன் சேர்த்து, ஒரு மல் துணியில் கட்டி, தக்காளிச் சாற்றில் போட்டு வேகவிட வேண்டும்.

மூன்றில் ஒரு பங்காகச் சாறு வற்றும் வரையில் வேக வைத்து, துணி முடிச்சை அகற்ற வேண்டும். பிறகு, உப்பு, மீதமுள்ள 50 கிராம் சர்க்கரை, வினிகர், சோடியம் பென்சோயேட்டைச் சேர்த்துக் கலந்தால் கெட்சப் தயார். இதைச் சுத்தமான குப்பிகளில் அடைத்து வைத்து, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

தக்காளி சாஸ் தயாரிப்பு

தேவையான பொருள்கள்: வடித்த தக்காளிச்சாறு 1 கிலோ, சர்க்கரை 100 கிராம், உப்பு 15 கிராம், மிளகாய்த்தூள் அரைத் தேக்கரண்டி, வினிகர் 40 மில்லி, சோடியம் பென்சோயேட் 1 சிட்டிகை.

தயாரிப்பு முறை: வினிகரைத் தவிர, மற்ற பொருள்களைத் தக்காளிச் சாறுடன் சேர்த்து மிதமான சூட்டில் வேகவிட வேண்டும். அது மூன்றில் ஒரு பங்காகக் குறைந்த பிறகு, வினிகரைச் சேர்த்துக் கெட்டியாக வரும் வரையில் கொதிக்க வைத்து, அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். பிறகு, ஆறிய கொஞ்சம் வெந்நீரில், சோடியம் பென்சோயேட்டைக் கரைத்து, சாஸில் சேர்த்து நன்றாகக் கலக்கி, கிருமி நீக்கம் செய்யப்பட்ட குப்பிகளில் அடைத்து வைத்து, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.


முனைவர் பெ.க.தேன்மொழி, முனைவர் சு.செந்தூர் குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை – 630 206.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks