நோனி சாகுபடி!

நோனி noni

தன் அறிவியல் பெயர்: Morinda citrifolia. குடும்பம்: Rubiaceae. பெருங் குடும்பம்: Plantae.

உடல் நலத்தையும் புத்துணர்வையும் தரக்கூடியது நோனிப்பழம். இந்தப் பழத்தில் இருந்து வெளிவரும் விரும்பத்தகாத நெடியால், இதன் பயனை நாம் மறந்து விட்டோம். இது இந்திய மல்பெரிப் பழம் என அழைக்கப்படுகிறது.

மண்ணும் தட்ப வெப்பமும்

நோனி, எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரும். வறட்சியான கால நிலையைத் தாங்கி வளரக் கூடியது. வடிகால் குணமுள்ள மண்ணில் நன்கு வளரும். அமிலத்தன்மை அதிகமாக உள்ள மண்ணிலும் நன்கு வளரும். தட்ப வெப்பம் 20-35 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆண்டுக்கு 260-400 மி.மி. மழை இதற்குத் தேவைப்படுகிறது.

நோனிப் பழங்கள் குளிர் காலத்தை விட வெய்யில் காலத்தில் அதிகமாக விளையும். எந்தப் பகுதியில் விளைந்தாலும் நோனி மரம் ஆண்டு முழுவதும் புதிய இலைகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.
இனப்பெருக்கம்

பல்வேறு அளவுள்ள தண்டுத் துண்டுகளைப் பயன்படுத்தலாம். ஆனால், 20-40 செ.மீ. அளவுள்ள தண்டுத் துண்டுகள் பயனுள்ளதாக இருக்கும். இத்துண்டுகள் மூன்று வாரங்களில் வேர் விட்டு, 6 முதல் 8 வாரங்களில் நடவுக்குத் தயாராகி விடும். வேர்த் தண்டுகளைத் தொட்டிகளில் வளர்த்து, ஆறு மாதங்களில் நட்டால் நல்ல பலன் கிடைக்கும். தரமான மற்றும் வீரியமிக்க பழங்களைப் பறித்து விதைக்காகப் பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி

பழங்களைப் பறித்து, மென்மையாகும் வரை நன்கு பழுக்க வைக்க வேண்டும். இதற்கு, சற்றுப் பழுத்த பழங்களைச் சேகரித்திருந்தால் 3-4 நாட்களில் பழுத்து விடும். இத்தகைய பழங்களின் சதைப் பகுதியை நீக்கி விட்டு, நீரில் நன்கு கழுவி, நீரில் மிதக்க விட வேண்டும். நல்ல விதைகள் நீரில் மிதக்கும். விதைகளைச் சேமித்து வைக்க வேண்டுமெனில், சதைப்பகுதியை முற்றிலுமாக நீக்கி விட்டுக் காற்றில் உலர்த்த வேண்டும்.

பின்பு காகிதப் பைகளில் சேகரித்து, குளிர்ந்த அறையில் குறைவான ஈரப்பதத்தில் வைக்க வேண்டும். புதிய விதைகளில் 90 சதவிகித முளைப்புத் திறன் இருக்கும். ஹவாயன் நோனிப் பழத்தில், ஒரு கிலோவில் 40,000 விதைகள் இருக்கும்.

விதை நேர்த்தி செய்யாமல் விதைத்தால், நோனி விதைகள் 6 முதல் 12 மாதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருக்கும். விதையின் கடினமான மேல் தோலை நீக்கினால், விதையின் முளைப்புக் காலத்தைக் குறைக்கலாம். மேலும், விதையின் முளைப்பையும் அதிகரிக்கலாம். இதில் எளிய முறை, விதைகளின் சதைப்பகுதியை நீக்குவதற்கு முன்பு, கலவை இயந்திரத்தில் வைத்துச் சில முறைகள் வெட்ட வேண்டும்.

மற்றொரு முறை, விதையின் முளைப்பை அதிகரிக்க, அதன் நுனிப் பகுதியைச் சீவி விட்டு நீரில் போட்டுத் தோல் பகுதியை நீக்க வேண்டும். இம்முறைக்கு அதிக நேரம் தேவைப்படும். தோல் நீக்கப்பட்ட நோனி விதைகள் முளைப்பதற்கு, வெப்பநிலை, சுற்றுச்சூழல், இரகம் மற்றும் மரபுவழி அமைப்பைப் பொறுத்து, 20-120 நாட்களாகும். வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் இருந்தால், விதை முளைப்புத் திறன் ஒரே சீராக இருக்கும்.

தொட்டிக் கலவை

களையற்ற மற்றும் நூற்புழு இல்லாத இயற்கையான வனப்பகுதி மண்ணுடன் மணலைக் கலந்து, மட்கிய அங்ககப் பொருள்களை இட்டால், நாற்று உற்பத்தி நன்றாக இருக்கும். நூற்புழுக்கள் உள்ள மண் அல்லது ஊடகத்தைத் தவிர்க்க வேண்டும். அல்லது அதைப் பயன்படுத்து முன், குறைந்தது 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 15 நிமிடங்கள் சூடாக்க வேண்டும்.

நாற்றங்கால் பகுதிகளில் இயற்கை ஊடகங்களை அதிகமாக நோனித் தயாரிப்பில் பயன்படுத்துகின்றனர். வணிக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. மரத்தூள், இலைக்குப்பை மற்றும் மணலை மூடாக்காக இட்டால், களையைக் கட்டுப்படுத்தலாம், ஈரப்பதத்தைப் பாதுகாக்கலாம்.

நோனி விதைகள் நல்ல நிழலிலிருந்து முழு சூரிய ஒளியில் முளைக்கும். முளைப்பு, ஒளி மற்றும் பாதி நிழலில் சீராக இருக்கும். முளைத்ததும் பாதியளவு நிழலில் கொள்கலனில் இட்டு, நாற்றுகளைத் தனித்தனியாக வளர்க்க வேண்டும்.

நடவு

முளைத்த நோனி நாற்றுகளை 2 முதல் 12 மாதங்கள் வரை நடலாம். ஆனால், நடவுக்குப் பிறகு நடவு அதிர்ச்சி மற்றும் வேர்ப் பிடித்தல் காரணமாக, முதலாண்டில் நாற்றின் வளர்ச்சி மெதுவாக இருக்கும். அதன் பிறகு, ஒளிச் சேர்க்கையின் போது வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு

நோனியை, அசுவினி, பூசணி மாவுப்பூச்சி, ஏபிஸ் காசிபி, செதில் பூச்சி, பச்சைச் செதில் பூச்சி, காக்கஸ் விரிடிஸ், கூன்வண்டு, இலைத் துளைப்பான், வெள்ளை ஈ, இலைப்பேன், பச்சை இலைப்பேன், ஹிலியேதிரிப்ஸ் ஹேமாரோடாலிஸ் ஆகிய பூச்சிகள் தாக்கும்.

சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ, செதில் பூச்சியைக் கட்டுப்படுத்த, இரசாயன மருந்தைத் தெளிக்கும் போது, நோனி இலைகளில் புகைக் கரியைப் போல ஏற்படும். எனவே, சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, ஊடுருவும் பூச்சிக் கொல்லிகளை ஆண்டுக்கு இருமுறை தெளிக்கலாம். புழுக்களைக் கட்டுப்படுத்த, தொடு பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கலாம்.

அதிக மழை அல்லது வெள்ளப் பகுதிகளில், நோனியைப் பூஞ்சைகள் தாக்க வாய்ப்புள்ளது. இலைப்புள்ளி (கொலடோடிரைகம்) தண்டு, இலை மற்றும் காய்க் கருகல் (பைடோப்தோரா மற்றும் ஸ்கிலிரோடம்) நோய்கள் ஏற்படும். பூஞ்சை இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட இலைகளை அகற்ற வேண்டும் அல்லது சரியான பூசணக்கொல்லியைத் தெளிக்கலாம்.

பைதோப்தோரா என்னும் பூஞ்சையால் ஏற்படும் இலைப்புள்ளியைப் போன்ற சில இலை நோய்கள் பூஞ்சைகளால் ஏற்படுகின்றன. இவற்றால் இலைகள் மற்றும் காய் வளர்ச்சி பாதிக்கப்படும். நோனியில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் வேர் முடிச்சு ஆகும். இது, மெலாய்டோகைனி என்னும் வேர் முடிச்சு நூற்புழுவால் ஏற்படுகிறது. இதை, பாசனம், செயற்கை உரம் மற்றும் மட்கிய உரங்களை அளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

மருத்துவப் பயிர்கள் உற்பத்தியில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடாது அல்லது பயன்பாடு குறைவாக இருக்க வேண்டும். அங்கக முறையில் கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்தவற்றைப் பயன்படுத்த வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மீன் எண்ணெய் சோப்பைப் பயன்படுத்தலாம்.

பூண்டுச்சாறு, விட்டெக்ஸ், லாண்டனா கேமரா, கிளிரோடென்ரான், காலோடிராபிஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சீரான இடைவெளியில் தெளிப்பதன் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். நாற்றழுகல் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் 2 கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்சை அளிக்க வேண்டும்.

மகசூல்

பழங்கள் வெள்ளை நிறமாக மாறும் போது அல்லது நன்கு பழுத்த பின்பு அறுவடை செய்ய வேண்டும். மரம் மூன்றாம் ஆண்டிலிருந்து மகசூலைத் தரும். ஐந்தாம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மகசூலைக் கொடுக்கும். ஆண்டு மகசூல், நோனி வகை அல்லது மரபுவழி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சாகுபடி முறை அடிப்படையில் மாறுபடும்.

சராசரியாக ஆண்டு மகசூல் எக்டருக்கு 80,000 கிலோ அல்லது அதிக மகசூல் கொடுக்கக் கூடிய இரகமாக இருந்தால் மகசூல் அதிகரிக்கும். மண்வளம், சுற்றுச்சூழல், மரபுவழி மற்றும் தாவர அடர்வு ஆகியவற்றின் மூலம் மகசூல் தீர்மானிக்கப்படும்.

பயன்கள்

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதய நோயைக் குணப்படுத்த உதவுகிறது. இதிலுள்ள ஸ்கோபோலேடீன், இரத்தக் குழாய்களை விரியச் செய்வதால் இரத்தழுத்தம் குறைகிறது. உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்வதால், இரத்தக் குழாய்கள் எளிதாக விரிகின்றன.

சுழற்சி மண்டலத்தைச் சீராக்குகிறது. மூட்டு இணைப்புகள் நன்கு வேலை செய்ய உதவுகிறது. இணைப்புகள் மற்றும் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது. கணையம் நன்கு இயங்க உதவுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கிறது. நோனி பழச்சாறு பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்கிறது.

இது, கணையத்தில் சரியாகச் செயல்படாத பீட்டா செல்களைச் சீராக்குகிறது. அல்லது அவற்றுக்கு உதவுவதன் மூலம், இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைக்க உதவுகிறது. இதயச் செல்களுக்கு அதிக மக்னீசியத்தை அளித்து அதன் செயலை ஒழுங்குபடுத்துகிறது. மார்புச்சளி நோயைக் குணப்படுத்த உதவுகிறது. ஒவ்வாமையைச் சரி செய்ய உதவுகிறது. ஹார்மோனைச் சமன் செய்கிறது. நரம்பு மண்டலப் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.

நோனி டீ மலேரிய காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. நோனி தாவரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் டிகாசன், மஞ்சள் காமாலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நோனி விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், தலையில் ஏற்படும் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இலை அல்லது பழங்கள், எலும்புருக்கி நோய், தசைப்பிடிப்பு மற்றும் ரூமேட்டிச நோயைக் குணப்படுத்த உதவுகின்றன. நோனிப்பழம் பசியைத் தூண்டுகிறது. தாவரப்பட்டை சிவப்பு நிறத்தையும், வேர்கள் மஞ்சள் நிறத்தையும் கொண்டுள்ளன. இவை சாயத் தயாரிப்பில் பயன்படுகின்றன. துணிகளுக்குச் சாயம் போட உதவுகின்றன.


நோனி DR.K.PARAMESWARI PHOTO e1709294074268

முனைவர் கா.பரமேஸ்வரி, இணைப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!