இறைச்சியானது, நுகர்வோரின் விருப்பத்துக்கு ஏற்ப, பல்வேறு வடிவங்களில், வசதிகளில் விற்பனை செய்யப்பட்டாலும், மதிப்பூட்டிய பொருள்களாக மாற்றுவதன் மூலம், நீடித்த தேவை மற்றும் வணிகத்தைப் பெருக்கி, நிலையான வருமானத்தை ஈட்டவும் வகை செய்கிறது. நகர்ப்புறங்களில் மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
தொழில்மயம், வணிகமயம் மற்றும் உலகமயத்தால், தனி நபரின் வருவாய் அதிகரித்து, வாழ்க்கைத் தரம் பெரிதும் வளர்ந்துள்ளதால், இன்றைய நுகர்வோர், வழக்கமாக உண்ணும் இறைச்சிக் குழம்பு, இறைச்சிப் பொருள்களில் மனநிறைவை அடையாமல், உடனே உண்ணும் வகையில் எளிதில் கிடைக்கும் இறைச்சிப் பொருள்களையே பெரிதும் விரும்புகின்றனர்.
மதிப்பூட்டுதல் என்பது, ஒரு பொருளின் வடிவத்தை விற்பனைக்கு ஏற்ப, சிறப்பாக மாற்றுவது. இறைச்சியை மதிப்பூட்டுதல் மூலம், அதன் பொருளாதார மதிப்புக் கூடுகிறது. மேலும், நுகர்வோரின் தேவைகள் மற்றும் விருப்பத்தைச் சரி செய்வதோடு, அவர்களைக் கவரும் வடிவத்திலும், வண்ணத்திலும் இருக்கும்.
மதிப்பூட்டிய பன்றி இறைச்சிப் பொருள்கள்
பன்றி இறைச்சியைப் சமைத்தும், பதப்படுத்தியும் உண்கிறோம். உப்புப் பதனக் கலவையில் பதனம் செய்வதன் மூலம், அதன் வைப்புக் காலம் கூடுவதுடன், பதனம் செய்த இறைச்சிப் பொருளான, ஹாம், பேக்கன் போன்ற புதுமையான பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.
புகையூட்டிய பன்றி இறைச்சி மற்றும் குழல் அப்பங்களும் மதிப்பூட்டிய பன்றியிறைச்சிப் பொருள்களாகும். பன்றி இறைச்சியின் இழை நயம் மற்றும் கொழுப்பைப் பொறுத்தே, மதிப்பூட்டிய இறைச்சிப் பொருள்களின் தரமும் சுவையும் அமையும். ஐரோப்பாவின் பாரம்பரிய இறைச்சிப் பொருள்களான, கோரிசோ, பூயட்டு, கம்பர்லேண்டு குழலப்பம், சலாமி; அமெரிக்க நாட்டில் புகழ் வாய்ந்த ஹாட் டாக் என்னும் மிகப்பெரிய குழலப்பம், பிரேக் பாஸ்ட் குழலப்பம் போன்றவை பன்றி இறைச்சியில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.
ஹாம்
இது, பதனக் கலவையில் பதனிடப்பட்ட பன்றியின் பின்னங்கால் பகுதியாகும். தொழில்மயமாகி விட்ட உலகில், அதிலும் மேற்கத்திய நாடுகளில், இந்த ஹாம் இறைச்சிப் பொருள் மிகவும் பிரபலமானது. பதனக் கலவை என்பது, உப்பு, சர்க்கரை மற்றும் நைட்ரைட் உப்பை 8:3:3 என்னும் விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவது.
பதனக் கலவையைப் பாதிப்பாதியாகப் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். எலும்பு நீக்கப்பட்ட பன்றிக் காலின் தோல் மற்றும் தசைப் பகுதியைப் முதல் பாதிப் பதனக் கலவையில் தோய்த்து 5-7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 80-90 விழுக்காடு குளிர்விப்பானில் வைக்க வேண்டும். அடுத்து, 24 மணி நேரம் கழித்து, மீதமுள்ள பதனக் கலவையில் ஊற வைக்க வேண்டும்.
பதனக்காலம், இறைச்சியின் எடையைப் பொறுத்து வேறுபடும். ஒரு கிலோ இறைச்சிக்கு இரு நாட்கள் தேவைப்படும். பதனம் செய்யும் காலத்தில், தோல் பக்கம் கீழே இருக்க வேண்டும். பதனக்காலம் முடிந்ததும், 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உள்ள வெந்நீரில், 2 மணி நேரம் ஊற வைத்து, அதிக உப்பை வெளியேற்ற வேண்டும்.
அடுத்து, 2 மணி நேரம் சாதாரண வெப்ப நிலையில் உலர வைத்து, காலின் வடிவம் மாறாமல், மெல்லிய துணியில் வைத்து, புகையூட்டும் அறையில் 65-70 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், 2 மணி நேரம் புகையூட்ட வேண்டும். மேலும், அந்த அறையிலேயே 12 மணி நேரம் வைத்திருந்து எடுத்து, குளிரூட்டியில் வைக்க வேண்டும். தேவைப்படும் போது, மெலிதாகச் சீவி அப்படியே சாப்பிடலாம் அல்லது மெலிதாகச் சீவிய துண்டுகளை வறுத்தும் சாப்பிடலாம்.
பேக்கன்
ஹாமைப் போலவே தயாரிக்கப்படும் பேக்கன் என்பது, பதனிடப்பட்ட பன்றியின் அடிவயிற்றுப் பகுதியாகும். ஐரோப்பியர்கள் பேக்கனைச் சதுர வடிவில் வெட்டி, அதன் மணம் மற்றும் கொழுப்புத் தன்மை காரணமாகச் சமையல் தயாரிப்பில், ஒரு சேர்ப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
இத்தாலியர்கள் சமையல் பொருளாக மட்டுமின்றி, சமைக்காமல் பதனம் செய்யப்பட்ட பொருளாகவும் ருசித்துச் சாப்பிடுகின்றனர். பெரும்பாலும், பேக்கனைப் பொரித்தோ, வேக வைத்தோ, தீயில் வாட்டியோ உண்கின்றனர். இந்த பேக்கனும் ஹாம் முறையிலேயே தயாரிக்கப்பட்டாலும், பேக்கன் தயாரிப்பில் சில வேறுபாடுகள் உள்ளன.
பேக்கன் தயாரிப்புப் பதனக் கலவை என்பது, உப்பு, சர்க்கரை மற்றும் நைட்ரைட் உப்பை 5:3:3 என்னும் விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவது. பதனக்காலம், இறைச்சியின் தடிமனைப் பொறுத்து வேறுபடும். பொதுவாக, ஒரு அங்குலத் தடிமனுள்ள இறைச்சியைப் பதனம் செய்ய 7 நாட்களாகும்.
இதைக் குளிர்விப்பானில் 5-7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், 80-90 ஈரப்பதத்தில் 11 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு, 50-60 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், 18 மணி நேரம் புகையூட்ட வேண்டும். பின், அதனைச் சமைத்து அல்லது புகையூட்டிய நிலையிலேயே உண்ணலாம்.
பன்றி இறைச்சிக் குழலப்பம்
இது, கொத்திப் பதனம் செய்த பன்றி இறைச்சியை மசாலாக் கலவையில் சேர்த்து அரைத்து, இயற்கையான அல்லது செயற்கையான பொதியுறையில் அடைத்துத் தயாரிக்கப்படுவது. இயற்கையான பொதியுறை என்பது, ஆடு, மாடு, பன்றி போன்றவற்றின் சிறுகுடல், பெருங்குடலில் இருந்து தயாரிக்கப்படுவது.
இப்படித் தயாரித்த குழலப்பங்களைப் புகையூட்டியோ அல்லது சமைத்தோ உண்ணலாம். இந்தக் குழலப்பத் தயாரிப்பில், பாதிப் பதனக் கலவையை இறைச்சித் துண்டுகளுடன் சேர்த்து, 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மீதமுள்ள பதனக் கலவையை, கூழ்மத் தயாரிப்பின் போது, இதர சுவையூட்டிகளுடன் சேர்க்க வேண்டும். இறைச்சிக் குழலப்பங்களைக் குளிர்விப்பானில் பத்து நாட்களும், உறைவிப்பானில் ஆறு மாதங்களும் வைத்திருக்கலாம்.
குழலப்பம் தயாரிக்கத் தேவையான பொருள்கள்: கொத்திய பன்றி இறைச்சி 1 கிலோ, கொழுப்பு அல்லது எண்ணெய் 100 மி.கி., உப்பு 20 கிராம், மசாலா 20 கிராம், வெங்காய, பூண்டு விழுது 40 கிராம், சிதைத்த பனிக்கட்டிகள் 100 கிராம், மைதா மாவு அல்லது சோயாமாவு அல்லது பால் பவுடர் 20 கிராம்.
செய்முறை: பன்றி இறைச்சித் துண்டுகளை இறைச்சி அரைப்பானில் அரைத்துக் கொள்ள வேண்டும். உப்பு 1.5-2 விழுக்காடு சேர்க்க வேண்டும். பன்றி இறைச்சிக் குழலப்பத் தயாரிப்பில், மைதாமாவு, சோயாமாவு, பால் பவுடர் ஆகிய பிணைப்பான்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்க்க வேண்டும். இந்தப் பிணைப்பான், இறைச்சிப் பொருளின் மகசூலை அதிகரிக்கச் சேர்க்கப்படுகிறது.
கூழ்மத் தயாரிப்பின் போது ஏற்படும் வெப்ப அதிகரிப்பைத் தடுப்பதற்குப் பனிக்கட்டிகள் சேர்க்கப்படுகின்றன. வெப்பம் 15-20 டிகிரி செல்சியசுக்கு மேல் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், வெப்பநிலை கூடினால், கூழ்மத்தின் ஒருங்கிணைப்பு உடையக் கூடும். சுவையூட்டிகள் மற்றும் பிணைப்பானை வரிசையாகச் சேர்க்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட நிறமிகளை மட்டும் 5-10 பி.பி.எம். அளவில் சேர்க்கலாம். இப்படித் தயாரித்த கூழ்மத்தைக் குழலப்பப் பொதியுறையில், கூழ்மத்தை அடைக்கும் கருவி மூலம் அடைத்து, சரிசமமான இடைவெளியில் கட்டி, பின்னி, நீராவிச் சமையல் அல்லது புகையூட்டுதல் மூலம் சமைத்தால், பன்றி இறைச்சிக் குழலப்பம் தயார்.
பன்றிக் கிரீட வறுவல்
இது, இடுப்பு இறைச்சியின் விலா எலும்புப் பகுதியை வட்டமாக வளைத்து, கிரீடம் போல் அமைத்து, நடுவே மசாலாக் கலவையை அடைத்துச் சமைக்கப்படும் இறைச்சி உணவாகும்.
மதிப்பூட்டிய பன்றி இறைச்சிப் பொருள்கள், இறைச்சி உற்பத்தியாளர்கள், இறைச்சியைப் பதப்படுத்துவோர், விநியோகிப்போர், நுகர்வோர் என அனைவரையும் கவர்ந்துள்ளன. மேலும், மதிப்பூட்டுதல் தொழில் நுட்பத்தின் மூலம், இவர்கள் அனைவருமே இலாபம் பெற்றுப் பயனடைய உதவுகின்றன. எனவே, எளிதில் கிடைக்கும் தரமான மதிப்பூட்டிய பன்றி இறைச்சிப் பொருள்களை வாங்கிப் பயன் பெறுவோமாக.
மூ.சுதா, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில் நுட்பத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி – 625 534.
சந்தேகமா? கேளுங்கள்!