செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல்.
இராகிக் கூழ், இராகிக்களி, சோளத்தோசை, வரகஞ்சோறு, தினைமாவு, கம்மங்களி, கம்மங்கூழ், குதிரைவாலிச் சோறு, சாமைச்சோறு என, சிறுதானிய உணவுகள், நம் முன்னோரின் அன்றாட உணவுகளாக இருந்தன. ஆனால், நெல்லுற்பத்தி அதிகமாகத் தொடங்கியதும் சிறுதானிய சாகுபடியும், அவற்றின் பயன்பாடும் குறைந்து போனதுடன், சிறுதானிய உணவென்பது ஏளனப் பொருளாக ஆகிப் போனது.
எங்கள் வீட்டில் நெல்லுச்சோறு என்று சொல்வதில் மக்கள் பெருமையடைந்தனர். ஆனால், மாற்றுணவே இல்லாமல் முழு உணவாக நெல்லரிசி உணவை மட்டுமே உண்பதால், மக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் விளைவால், மறந்து போன சிறுதானியங்களை மீண்டும் தேடத் தொடங்கி உள்ளனர்.
இதையறிந்த பெரிய உணவு நிறுவனங்கள், சிறுதானியங்களில் இருந்து சில உணவுகளைத் தயாரித்துச் சந்தைப்படுத்தி வருகின்றன. இவற்றைப் பல மடங்கு விலை கொடுத்து வாங்கியுண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள்.
இப்படிப் பதப்படுத்திய உணவுகளை உண்பதற்குப் பதிலாக, சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவுப் பொருள்களைப் புத்தம் புதிதாகச் சமைத்து உண்ணலாம். எடுத்துக் காட்டாகச் சோளத்தில் தயாரிக்கப்படும் சிலவகை உணவுகள் குறித்து விளக்கமாக இங்கே பார்க்கலாம்.
சோளத்தில் புரதம் 11.6 சதம் உள்ளது. இது, கோதுமை, அரிசியில் உள்ளதை விட அதிகம். இதில், லைசின், டிரிப்டோபேன் போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் உள்ளன. சோளத்தில் குளுட்டன் கிடையாது. அதனால், சீலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
சோளத்தில் 7.6 சதம் நார்ச்சத்து உள்ளதால், நீரிழிவு உள்ளோர்க்கு மிகச் சிறந்த உணவாகும். அரிசி, கோதுமை போன்ற குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே உண்பதால், சில சத்துப் பற்றாக்குறை நோய்கள் வரக்கூடும். ஆகவே, இப்படியான நோய்கள் வருவதைத் தடுக்க, எல்லாச் சத்துகளையும், பல்வேறு சிறப்புகளையும் கொண்ட சோள உணவுகளை உண்ணலாம்.
சோளமாவைக் கொண்டு, புட்டு, இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம், ரொட்டி, முறுக்கு, காரச்சேவு போன்ற உணவுகளைத் தயாரிக்கலாம். சோளப்பொரியும் தயாரிக்கலாம். இந்தப் பொரியைக் கொண்டு பேல்பூரி, இனிப்பு உருண்டைகளைத் தயாரிக்கலாம்.
சோள ரவையைக் கொண்டு, உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளைச் சமைக்கலாம். மேலும், குக்கீஸ் மப்பீன் போன்ற அடுமனை உணவுகளையும் தயாரிக்கலாம். மிகவும் எளிமையான முறையில் சோளத்தைக் கூழாகவும், களியாகவும், சோறாகவும் சமைத்துச் சாப்பிடலாம்.
சோளப்புட்டு
சோளம் 50 கிராம், மக்காச்சோளம் 50 கிராம் ஆகிய இரண்டையும் நன்கு சுத்தம் செய்து லேசாக வறுத்து மாவாக்க வேண்டும். இதில் போதுமான அளவில் நீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் புட்டுக்குப் பிசைவதைப் போலப் பிசைந்து, பத்து நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காயைச் சேர்த்தால் அருமையான சோளப்புட்டு தயார்.
சோள வடகம்
தேவையான பொருள்கள்: சோளமாவு 50 கிராம், பச்சரிசி மாவு 30 கிராம், ஜவ்வரிசி மாவு 20 கிராம், பச்சை மிளகாய் 1.5 கிராம், சீரகம் 4 கிராம், உப்பு 2 கிராம், நீர் தேவையான அளவு.
செய்முறை: சோளமாவு, பச்சரிசி மாவு, ஜவ்வரிசி மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்க வேண்டும். பச்சை மிளகாயைப் பசையைப் போல அரைத்துக் கொண்டு, தேவையான நீர், சீரகம் ஆகியவற்றை மாவுக் கலவையில் நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
மாவு அளவுக்கு நீரைக் கொதிக்க வைத்து, கரைத்த மாவைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கட்டியாக வேக வைக்க வேண்டும். இப்படி வெந்த மாவை நன்றாக ஆற வைத்து அச்சுக் குழியில் இட்டோ அல்லது கரண்டியில் எடுத்தோ தட்டி வெய்யிலில் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்ததும் சூடான எண்ணெய்யில் பொரித்தால் சுவையான, சத்தான வடகம் தயார்.
சோள மசாலா குக்கீஸ்
தேவையான பொருள்கள்: சோளமாவு 50 கிராம், கோதுமை மாவு 50 கிராம், சீனிப்பொடி 20 கிராம், வனஸ்பதி அல்லது வெண்ணெய் 50 கிராம், பச்சை மிளகாய் 5 கிராம், கறிவேப்பிலை, இஞ்சி 3 கிராம், உப்பு 1 கிராம், பேக்கிங் பௌடர் 0.5 கிராம்.
செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பசையைப் போல அரைத்துக் கொள்ள வேண்டும். சோளமாவு, கோதுமை மாவு, பேக்கிங் பௌடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, வனஸ்பதி அல்லது வெண்ணெய்யை நன்றாகத் தேய்த்துக் கொண்டு, இதனுடன் சீனிப்பொடி, இஞ்சி மிளகாய்க் கலவை, மாவுக்கலவை ஆகியவற்றைச் சிறிது சிறிதாகக் கலந்து நன்றாகச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைய வேண்டும்.
அடுத்து, சப்பாத்திக் கட்டையால் சமப்படுத்தித் தேவையான வடிவங்களில் வெட்டி 165 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 25 நிமிடங்கள் வேக வைத்தால், அருமையான சோள மசாலா குக்கீஸ் தயார்.
சோள சமோசா
சோளமாவு 40 கிராம், கோதுமை மாவு 60 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, வேக வைத்த காய்கறிக் கலவையுடன் பொடி செய்த மிளகுத் தூளைக் கலந்து பூரணம் தயாரிக்க வேண்டும்.
மாவுக் கலவையில் தேவையான அளவு நீரைச் சேர்த்து மாவுப் பதத்துக்குப் பிசைந்து, 30 நிமிடம் வரையில் ஊற வைக்க வேண்டும். பிறகு, சமோசா அச்சில் மாவை வைத்தும், பூரணத்தை அதன் நடுவில் வைத்தும் எண்ணெய்யில் பொரித்தால், ருசியான சோள சமோசா தயார்.
சோளப் பணியாரம்
தேவையான பொருள்கள்: சோளமாவு 50 கிராம், ஜவ்வரிசி மாவு 35 கிராம், உளுந்து மாவு 15 கிராம், வெல்லம் 100 கிராம், ஏலக்காய் மற்றும் சுக்குப்பொடி தேவையான அளவு.
செய்முறை: சோளம், ஜவ்வரிசி, உளுந்து ஆகியவற்றை நன்கு கழுவிக் காய வைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். நூறு கிராம் வெல்லத்தில் தேவையான நீர், ஏலக்காய், சுக்குப்பொடி ஆகியவற்றைச் சேர்த்துப் பாகாகக் காய்ச்ச வேண்டும்.
மாவுக் கலவையில் வெல்லப்பாகைக் கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, பணியாரச் சட்டியில் மாவை ஊற்றி நன்கு வேக வைத்தால் தித்திப்பான சோளப் பணியாரம் தயார். இந்த மாவைக் கொண்டு காரப் பணியாரமும் தயாரிக்கலாம்.
முனைவர் கி.ஜோதிலட்சுமி, வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி – 636 809.
சந்தேகமா? கேளுங்கள்!