வணிக நோக்கில் மலர்கள் சாகுபடி!

ந்தியாவில் உதிரி மலர்கள், பண்டைக் காலம் தொட்டு இன்று வரை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

சங்க காலங்களில், அரளி, மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ ஆகிய உதிரிப் பூக்களை,

மடாலயங்கள் மற்றும் கோயில்களில் வளர்த்து, வழிபாட்டிலும் நறுமண எண்ணெய்த் தயாரிப்பிலும் பயன்படுத்தி வந்தனர்.

இப்போது உதிரி மலர்களை மாலைகளாகத் தொடுத்து, இறை வழிபாடு, திருவிழாக்கள் மற்றும் பெண்கள் அணியவும் பயன்படுத்தி வருவதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகிறோம்.

ரோஜா, ஜாதிமல்லி, மல்லிகை, முல்லை, சம்பங்கி போன்ற மலர்களில் இருந்து, வாசனை எண்ணெய் தயாரிப்பது, அதிக வருவாயைத் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.

இந்திய மாநிலங்களில் மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டில், நவீன சாகுபடி மற்றும் அறுவடைக்குப் பின் கையாள வேண்டிய புதிய முறைகளைப் பயன்படுத்தினால், உதிரி மலர்கள் ஏற்றுமதியை மேலும் அதிகமாக்க முடியும்.

ரோஜா

தோட்டராணி என இலக்கியங்களில் வர்ணிக்கப்படும் ரோஜாப் பூக்களை, பண்டைய தமிழர்கள், இறை வழிபாட்டுக்காக மடாலயங்களில் வளர்த்து வந்துள்ளனர்.

மேலும், நறுமணத் திரவத்தை எடுத்தும் வழிபாட்டில் பயன்படுத்தி உள்ளனர்.

ரோஜா மலர்கள், பூச்செண்டுகள், பூச்சரங்கள் மற்றும் மாலைகள் தொடுக்கவும் பயன்படுகின்றன.

ரோஜா செடிகள் தோட்டங்களில் அழகு வேலியாக, மலர் வரப்பாக, அழகுக் கொடியாக, சிறு செடிகளாக வளர்க்கப்படுகின்றன.

இப்பூக்கள், பன்னீர், அத்தர், குல்கந்து, பான்கூரி, குல் ரோகான் என்னும் நறுமணமிக்க தயாரிப்புகளில் பயன்படுகின்றன.

இப்பொருள்கள், நறுமணப் பொருள்கள் மற்றும் மருத்துவத்தில் பயன்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளில், ரோஜா இதழ்களைச் சர்க்கரையில் பதப்படுத்தி, ரோஜா வினிகர், ரோஜா ஒயின், ஜாம் மற்றும் ஜெல்லியைத் தயாரித்து வருகின்றனர்.

மல்லிகை

இப்பூக்கள், மாலைகள் தொடுக்க, இறைவனை வணங்க, திருமண விழாக்கள், மகளிர் சிகை அலங்காரம், நறுமண மெழுகு மற்றும் நறுமணத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

நறுமண மெழுகு முல்லையில் கிடைப்பதை விட 0.31-0.34 சதம் குறைவாக இருப்பினும், சிறந்த மணம் மற்றும் சிறப்புப் பண்புகளால், உலகச் சந்தையில், முல்லை மெழுகை விட, மல்லிகை மெழுகுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

இப்போது உலகச் சந்தையில் ஒரு கிலோ ஜாதிமல்லி வாசனை மெழுகின் விலை 35 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

மெழுகைச் சுத்தப்படுத்தி எடுக்கப்படும் ஒரு கிலோ வாசனை எண்ணெய் விலை 1.5 இலட்சம் ரூபாயாக உள்ளது.

முல்லையில் 0.31 சதம் என அதிகளவில் நறுமண மெழுகு கிடைத்தாலும், உலகச் சந்தையில் அதிகமாக விரும்புவது இல்லை.

பிச்சிப் பூவைக் காட்டிலும் அதிக நேரம் வாடாமல் இருப்பதால், இப்பூக்கள், மலர்ச்செண்டு, கைச்செண்டு மற்றும் மாலைகள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

சாமந்தி

சாமந்திக் குடும்பத்தைச் சார்ந்த சினரேரி போலியம், காக்சினியம் ஆகிய சிற்றினங்களில் இருந்து பெறப்படும் பைரித்திரம் என்னும் வேதிப்பொருள், பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது.

ரியோரிசிக்கு என்னும் சாமந்தி இரகம் உணவுப் பொருளாகப் பயன்படுகிறது.

சாமந்தியை உதிரிப் பூவுக்காகப் பயிரிட, முதல் மற்றும் மறுதாம்புப் பயிருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

முதல் பயிரில் 20 டன்னும், மறுதாம்பில் 10 டன் பூக்களும் கிடைக்கும்.

கனகாம்பரம்

பெரும்பாலும் பெண்கள் தலையில் சூடும் மலராகவே பயன்படுகிறது. மாலைகள் மற்றும் மலர்ச் சரங்கள் தொடுக்கவும், மல்லிகை மலர்களுடன் கலந்த மாலைகள் தொடுக்கவும் பயன்படுகின்றன.

அரளி

அரளிச் செடிகள் அழகுக்காக, மலருக்காக வளர்க்கப் படுகின்றன. இந்தியா முழுவதும் அரளிச் செடிகள் இருந்தாலும், உலர்ந்த வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளர்கின்றன.

இறை வழிபாட்டில் இப்பூக்கள் பயன்படுவதால், அரளிச் செடிகள் கோயில்களில் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

சம்பங்கி

சம்பங்கி மலர்களில் இருந்து கிடைக்கும் விலை மதிப்புள்ள வாசனை எண்ணெய், நறுமணப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படும் முக்கியப் பொருளாகும்.

இப்பூக்கள் பானங்களில் மணமூட்டவும் பயன்படுகின்றன. உலகச் சந்தையில் ஒரு கிலோ சம்பங்கி வாசனை மெழுகின் விலை ரூபாய் 25 ஆயிரம் ஆகும்.

இந்த எண்ணெய் விலை 1.25 இலட்சம் ரூபாயாகும். இத்தாலி, பிரான்ஸ், தென்னமெரிக்க நாடுகள், இந்த எண்ணெய்த் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளன.

மருத்துவத்தில் பயன்படும் வேதிப் பொருள்கள் சம்பங்கிக் கிழங்கில் இருந்து எடுக்கப் படுகின்றன.

வட மாநிலங்களில் சம்பங்கி மலர்கள் அலங்காரம் செய்ய உதவுகின்றன. தென் மாநிலங்களில் மாலை தொடுக்க, எண்ணெய் எடுக்க உதவுகின்றன.


முனைவர் சு.வேல்முருகன், முனைவர் மு.வேல்முருகன், தோட்டக்கலைக் கல்லூரி, கோவை. முனைவர் ம.ஆனந்த், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!