பயறு வகைகளில் தான் தாவரப் புரதம் நிறைந்து உள்ளது. எனவே தான், இது சைவ உணவாளர்கள் மற்றும் ஏழை மக்களின் மாமிசம் எனப்படுகிறது.
மேலும், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண்வளத்தைக் காப்பதில், பயறுவகைப் பயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தமிழகத்தில் 8.24 இலட்சம் எக்டரில் பயிரிடப்படும் பயறுவகைப் பயிர்கள் மூலம், 5.56 இலட்சன் டன் பயறு வகைகள் விளைகின்றன.
இவ்வகையில், துவரையைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் பார்க்கலாம்.
வாடல் நோய்
இது, பயிரின் அனைத்து நிலைகளிலும் தாக்கும் நோயாகும். இளம் செடிகளைத் தாக்கினால், விதையிலைகள் மஞ்சளாக, பழுப்பாக மாறும்.
இலைக் காம்புகளில் பழுப்பு வளையம் காணப்படும். நாளடைவில் இச்செடிகள் காய்ந்து விடும்.
வளர்ந்த செடிகளைத் தாக்கினால், அடியிலைகள் மஞ்சளாக மாறித் தொங்கி விடும். வாடிய செடியைப் பிடுங்கிப் பார்த்தால் வேர்கள் வளராமல் இருக்கும்.
தண்டைக் குறுக்காக வெட்டிப் பார்த்தால், நடுப்பகுதியில் பழுப்பு நிறப் பூசணம் வளர்ந்து இருக்கும்.
இதனால், வேரிலிருந்து செடிக்குச் செல்லும் சத்துகள் மற்றும் நீர் தடைபட்டு வாடல் நோய் ஏற்படும்.
பட்டையை உரித்துப் பார்த்தால், உள்ளே மண் நிறத்தில் கீற்றுகள் தென்படும்.
நோய் முற்றிய நிலையில், அடித்தண்டில் வெண் பூசணம் இருக்கும். இதனால், செடிக்குச் சத்துகளும் நீரும் மேல் நோக்கிச் செல்வது தடைபடும்.
எனவே, செடியின் மேற்பகுதி வாடி இறந்து விடும்.
இந்தப் பூசணம் மண்ணில் இருந்து நீர் மற்றும் விதைகள் மூலம் பரவும். நிலத்தில் உள்ள அங்ககப் பொருள்களை உண்டு, பத்து ஆண்டுகள் வரையில் வாழும்.
நிலத்தின் 50 செ.மீ. ஆழம் வரையில் இருக்கும். இந்தப் பூசணத்தால் உண்டாகும் இழை, நெடுங்காலம் வரையில் உயிருடன் இருக்கும்.
மண்ணின் கார அமிலத் தன்மை 7.6 முதல் 8.0 வரை இருக்கும் போது, இந்நோய் அதிகமாகத் தோன்றும்.
வேரழுல் நோய்
இது, இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் ஏற்படும். நோயின் தொடக்க நிலையில் இலைகள் வாடத் தொடங்கும்.
பிறகு, இந்த இலைகளும் செடியும் காய்ந்து விடும். நோய் தீவிரமானால், ஆணிவேரைத் தவிர மற்ற வேர்கள் அழுகி விடும்.
ஆணிவேரின் பட்டை அழுகிச் சிதைந்து, நார் நாராக உரிந்து விடும். இத்தகைய செடிகளை மெதுவாக இழுத்தாலும் கையோடு வந்து விடும்.
இந்தப் பூசணம் மண்ணில் இருந்து, விதை, காற்று, பாசனநீர் மூலம் பரவும்.
அதிக வெப்பம் மற்றும் களிமண் நிலத்தில், நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
மேலும், நூற்புழுக்கள் ஏற்படுத்தும் காயங்கள் மூலம், பூசண விதைகள் செடிக்குள் சென்று நோயை உண்டாக்கும்.
வாடல் மற்றும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்துதல்
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா அஸ்பெரில்லம் அல்லது 10 கிராம் பேசிலஸ் சப்டிலிஸ் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஒரு கிலோ டிரைக்கோ டெர்மா அஸ்பெரில்லம் அல்லது பேசிலஸ் சப்டிலிஸ் பொடியை, 50 கிலோ மட்கிய தொழுவுரத்தில் கலந்து,
விதைப்பின் போதும், அடுத்து 30 நாளிலும் நிலத்தில் தூவ வேண்டும்.
பாதிப்புள்ள செடிகளின் வேர்களில், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்த கலவையை ஊற்ற வேண்டும்.
சாம்பல் நோய்
இந்நோய்ப் பூசணம், இலை, இலைக்காம்பு, பூங்கொத்து, பிஞ்சு, காய் ஆகியவற்றைத் தாக்கும்.
நோயுள்ள பகுதியில், வெண்துகள் படிவப் பூசண வளர்ச்சி, இலையின் கீழ்ப் பகுதியில் இருக்கும். இந்தப் படிவங்கள் பெருகி ஒன்றுடன் ஒன்று இணைந்து விடும்.
வெண் படிவம் பழுப்பாகவும், பிறகு கறுப்பாகவும் மாறி விடும். நோயுற்ற செடிகள் வளராமலும் வாடியும் இருக்கும்.
பூக்கள் வாடி உதிர்ந்து விடும். முற்றும் நிலையில் உள்ள காய்களில், மணிகள் சிறுத்தும் உருமாறியும், வெடித்தும் இருக்கும்.
வறட்சிக் காலத்தில் காற்றிலுள்ள குறைவான ஈரப்பதம், நோய்த் தாக்கத்துக்கு ஏதுவாகும்.
இந்நோய் ஒரு பருவத்தில் இருந்து இன்னொரு பருவத்துக்கு, நோயுற்ற இலைகள், சிறு குச்சிகள் மற்றும் கிளைகள் மூலம் பரவும்.
இந்நோய்க் கிருமிகள் செடிகள் மற்றும் மண்ணில் நீண்ட காலம் உறக்க நிலையில் இருக்கும்.
கட்டுப்படுத்துதல்
நோய் அறிகுறி தெரிந்ததும், ஐந்து சத வேப்பங் கொட்டைக் கரைசல் அல்லது மூன்று சத வேப்ப எண்ணெய்க் கரைசலை, பத்து நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும்.
எக்டருக்கு 500 கிராம் கார்பன்டாசிம் அல்லது 2.5 கிலோ நனையும் கந்தகம் வீதம் எடுத்து நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இதனால் பாதிக்கப்பட்ட இலைகளில் இளம் பழுப்புப் புள்ளிகள் தோன்றும். இவை ஒன்றாக இணைந்து இலை முழுவதும் பரவும் போது, அந்த இலைகள் கருகி விடும்.
இந்நோய் ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு, காற்றின் மூலம் பரவும்.
கட்டுப்படுத்துதல்
ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் அல்லது 2 கிராம் மாங்கோசெப் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மலட்டுத் தேமல் நோய்
தொடக்கத்தில், இலை நரம்புகளைச் சுற்றிலும் வெளுத்து மஞ்சளாக இருக்கும்.
பிறகு, இலைகளில் ஆங்காங்கே இளமஞ்சள் வளையங்கள் தோன்றி, தேமல் தோற்றம் உருவாகும்.
இந்த வளையங்களால் மஞ்சள் தேமல் நோய் தோன்றாது. ஆனால், சில நேரங்களில், லேசான தேமல் தோன்றும்.
இலைகளில் கரும் பச்சை மற்றும் இளம் பச்சை மற்றும் இள மஞ்சள் நிறம் மாறி மாறித் தெரியும்.
நோயுற்ற இலைகள் கடினமாக இருக்கும். இலைக்கருகல், இலைப்பரப்புக் குறைதல், கிளைக் கணுக்கள் குறைதல், செடிகள் குள்ளமாக இருத்தல் போன்ற அறிகுறிகளும் தெரியும்.
நோய்க்கு உள்ளாகும் இளம் செடிகள் வளராமல் குட்டையாக இருக்கும்.
இலைகள் நெருக்கமாக இருப்பதால், செடியின் தலைப்பாகம் புதரைப் போலத் தெரியும்.
இத்தகைய செடிகள், மலட்டுத் தன்மையை அடைவதால் பூக்கும் திறனை இழந்து விடும்.
வளர்ந்த செடிகளை இந்த நோய்த் தாக்கினால், தேமல் அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.
இந்நோய் ஒரு செடியில் இருந்து இன்னொரு செடிக்கு, அசெரியாகஜானி என்னும் பேன் மூலம் பரவும்.
காற்றின் உதவியுடன் சிலந்திகள் மூலமும் மற்ற செடிகளுக்குப் பரவும்.
கட்டுப்படுத்துதல்
நோயுற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும். நோய் தெரிந்ததும், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி பினாசாகுயின் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
15 நாட்கள் கழித்து, ஏக்கருக்கு 100 மில்லி ஸ்பைரோ மெசிபேன் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மஞ்சள் தேமல் நோய்
முதலில், இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் புள்ளிகள் தோன்றும்.
பிறகு, அடுத்துத் தோன்றும் இலைகளில், ஒழுங்கற்ற வடிவத்தில், மஞ்சளும் பச்சையும் கலந்த பகுதிகள் தோன்றும்.
நோயுற்ற இலைகள் சில நேரங்களில் சிறுத்தும் சுருங்கியும் இருக்கும்.
காய்களும் விதைகளும் மஞ்சளாக மாறி விடும். ஒரு செடியில் இருந்து மற்ற செடிகளுக்கு வெள்ளை ஈக்கள் மூலம் பரவும்.
கட்டுப்படுத்துதல்
நோயுற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும். அடியுரத்தில் வேப்பம் புண்ணாக்கைக் கலந்து இட வேண்டும். ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகள் வீதம் வைக்கலாம்.
நோய் அறிகுறி தெரிந்ததும், பத்து லிட்டர் நீருக்கு 5 மில்லி இமிடா குளோபிரிட் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
15 நாட்கள் கழித்து ஏக்கருக்கு, 40 கிராம் தையாமீதாக்சம் வீதம் தெளிக்க வேண்டும்.
ப.நாராயணன், தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, திருவண்ணாமலை – 604 410.