திறந்தவெளி வான்கோழி வளர்ப்பில், சுற்றிலும் வேலியிட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் 200-250 பெரிய வான் கோழிகளை வளர்க்கலாம்.
இரவில் கோழிகள் அடையவும், மற்ற விலங்குகளிடம் இருந்து காக்கவும், ஒரு கோழிக்கு 3-4 சதுரடிக் கணக்கில் கொட்டகையை அமைக்க வேண்டும்.
இந்த முறையில் தீவனச் செலவு 50 சதம் வரையில் குறையும். எனவே, குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் கிடைக்கும்.
திறந்தவெளி வளர்ப்பில், மண் புழுக்கள், சிறிய பூச்சிகள், நத்தைகள், சமையல் கழிவுகள், கரையான்கள் போன்ற புரதம் நிறைந்த பொருள்கள் வான் கோழிகளின் உணவாகும்.
இதனால், தீவனச்செலவு 50 சதம் வரை குறையும். இவற்றைத் தவிர, பயறுவகைத் தீவனங்களான வேலிமசால், குதிரை மசால், முயல் மசால் ஆகியவற்றையும் தீவனமாக அளிக்கலாம்.
வெட்டவெளியில் சுற்றித் திரியும் வான் கோழிகளின் கால்களில் ஏற்படும் சுணக்கத்தை, ஊனத்தைத் தவிர்க்க,
ஒரு கோழிக்கு, வாரத்துக்கு 250 கிராம் சுண்ணாம்புச் சத்தைக் கொடுக்க வேண்டும்.
காய்கறிக் கழிவுகளைக் கொடுத்தால், தீவனச் செலவைப் பத்து சதம் வரை குறைக்கலாம்.
திறந்தவெளி வளர்ப்பில், அக ஒட்டுண்ணிகளான உருளைப் புழுக்கள், புற ஒட்டுண்ணிகளான கோழிப் பேன்கள் ஆகியன வான் கோழிகளைத் தாக்கும்.
எனவே, மாதமொரு முறை, வான்கோழிக் குஞ்சுகளுக்குக் குடற்புழு நீக்கமும், மருந்துக் குளியலும் செய்வதன் மூலம், இவற்றின் தாக்குதல்களைக் குறைக்கலாம்.
மரு.ச.இளவரசன், உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.
சந்தேகமா? கேளுங்கள்!