சோயா மொச்சை சாகுபடி முறைகள்!

சோயா மொச்சை li uncooked soybeans 1482842632

ழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும்.

சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிடுட்டால், மகசூல் 25 சதம் அதிகரிக்கும். பெயிண்ட், பிளாஸ்டிக், அச்சு மை, செயற்கை ரப்பர் மற்றும் மருந்து வகைகளைத் தயாரிக்க சோயா மொச்சை பயன்படுகிறது. சோயா மொச்சையில் 40 சதம் புரதச்சத்தும் 20 சதம் எண்ணெய் சத்தும் உள்ளன. சோயாப் புண்ணாக்கு, கால்நடை மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. சோயா மொச்சை, கொழுப்பு, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாதுப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து அளிக்க வல்லது.  இப்பயிர் எல்லாப் பருவங்களிலும் பயிரிட ஏற்றது. இதனைக் கரும்பு, மரவள்ளி, வாழை ஆகிய பயிர்களில் ஊடுபயிராகவும், நெல் தரிசில் தனிப்பயிராகவும் பயிரிடலாம்.

சோயா சாகுபடியால் ஏற்படும் நன்மைகள்

வேர் முடிச்சுகளில் தழைச்சத்தைச் சேகரித்து வைக்கும். அறுவடைக்கு முன்பே உதிர்ந்து விடும் தழைகள் அந்தப் பயிருக்குத் தழைச்சத்தாகக் கிடைக்கும். நிலம் வளமாவதுடன் உபரி வருமானமும் கிடைக்கும். ஈரத்தைச் சேமித்து நீரை மிச்சப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கும்.

பட்டம், இரகம், வயது

ஜூன், ஜூலையில் வரும் ஆடிப்பட்டம், செப்டம்பர் அக்டோபரில் வரும் புரட்டாசிப் பட்டம், பிப்ரவரி மார்ச்சில் வரும் மாசிப்பட்டம் ஆகியன சோயா மொச்சை சாகுபடிக்கு ஏற்றவை. கோ.1, கோ.2, கோ.3 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம். கோ.1 இரகம் இறவையில் பயிரிட ஏற்றது. நெல் தரிசில் கோ.1, கோ.2 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம். கோ.1 இரகம் 85-90 நாட்களில் விளையும். கோ.2 இரகம் 75-80 நாட்களிலும், கோ.3 இரகம் 85-90 நாட்களிலும் விளையும்.

விதையளவு மற்றும் இடைவெளி

கோ.1 இரகத்தை இறவையில் பயிரிட, எக்டருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். இவ்வகையில், எக்டருக்குச் சுமார் 6,66,000 பயிர்கள் இருக்கும். கோ.2 இரகத்தை மானாவாரியில் தனிப்பயிராகப் பயிரிட, எக்டருக்கு 60-70 கிலோ விதைகள் தேவைப்படும். ஊடுபயிராக இடுவதற்கு 25 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளை ஒன்றரை விரல்கடை, அதாவது, 2-3 செ.மீ. ஆழத்தில், செடிக்குச் செடி நான்கு அங்குலம், அதாவது, 10 செ.மீ., வரிசைக்கு வரிசை ஒரு அடி, அதாவது, 30 செ.மீ. இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

விதை நேர்த்தி

பூசண விதை நேர்த்தி: ஒரு கிலோ மைதா மாவு, 300 கிராம் துத்தநாக சல்பேட், 10 லிட்டர் நீர் ஆகியன கலந்த கலவையில், விதைகளை முக்கியெடுத்துச் சிறிது நேரம் உலர வைத்து விதைத்தால் செடிகள் செழிப்பாக வளரும். அல்லது, ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் திரம் அல்லது 3 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து, 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.

நுண்ணுயிர் விதை நேர்த்தி: ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை; 600 கிராம், அதாவது, மூன்று பொட்டலம் ரைசோபியம் ஜப்பானிக்கம், மற்றும் இதே எடையிலான மூன்று பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா மற்றும் ஆறிய அரிசிக் கஞ்சி கலந்த கலவையில் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இப்படி விதை நேர்த்தி செய்ய இயலாத நிலையில், ஏக்கருக்கு 20 கிலோ தொழுவுரம், நான்கு பொட்டலம் ரைசோபியம் ஜப்பானிக்கம், நான்கு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, கடைசி உழவுக்கு முன் நிலத்தில் தூவி விட வேண்டும்.

விதைப்பு

ஏருக்குப் பின்னால் விதைத்து விட்டு மண்ணால் மூடலாம். அல்லது டிராக்டரில் இணைக்கப்பட்ட கரும்புப் பார் கலப்பை மூலம் பார்களை அமைத்து, அந்தப் பார்களில் விதைக்கலாம். நாட்டுக் கலப்பையில் சணல் சாக்கை மடித்து வைத்துக் கட்டி உழுது பார்களை அமைத்தும், பார்களின் ஓரங்களில் குழிக்கு இரண்டு விதைகள் வீதம் நடலாம். விதைத்து ஏழு நாட்களுக்குள் விதைகள் முளைக்காத இடங்களில், மீண்டும் விதைகளை நட்டு இடைவெளியை நிரப்ப வேண்டும்.

உரமிடல்

ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் வீதம் இட வேண்டும். மேலும், 8:32:16 வீதம் தழை, மணி, சாம்பல் சத்தையும் அடியுரமாக இட வேண்டும். அதாவது, ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 41 கிலோ சூப்பர் பாஸ்பேட், 17.2 கிலோ பொட்டாஷையும், 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 100 கிலோ ஜிப்சத்தையும் அடியுரமாக இட வேண்டும். மேலும், நிலத்தில் துத்தநாகம் அல்லது மாங்கனீசு பற்றாக்குறை இருந்தால், 10 கிலோ துத்தநாக சல்பேட்டையும், 10 கிலோ மாங்கனீசு சல்பேட்டையும் அடியுரமாக இட்டால், சோயாவில் நல்ல மகசூலைப் பெறலாம்.

நீர் நிர்வாகம்

விதைப்பின் போது மண்ணில் சீரான ஈரம் தேவை, விதைத்ததும் நீர் பாய்ச்ச வேண்டும்.  பிறகு, மண்ணின் தன்மைக்கேற்ப 10-15 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்யலாம். எக்காரணம் கொண்டும் வயலில் நீர் தேங்கக் கூடாது. பூக்கும் போதும், காய்கள் முற்றும் போதும், வறட்சியின்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பாசனப் பற்றாக்குறையால் ஏற்படும் வறட்சியைச் செடிகள் தாங்கி வளர, கயோலின் என்னும் வெள்ளைக் களிமண்ணை, ஒரு லிட்டர் நீருக்கு 30 கிராம் வீதம் எடுத்து 200 லிட்டர் நீரில் கலந்து, பூக்கும் பருவத்தில் இருந்து முதிர்ச்சிப் பருவம் வரை 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

களை நிர்வாகம்

போதுமான ஈரத்தில் விதைத்த சோயா மொச்சை நிலத்தில், விதைத்து மூன்று நாட்களுக்குள், கீழ்க்கண்ட களைக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை மாலை வேளையில் டிப்ளெக்டர் தெளிப்பு முனையுள்ள கைத்தெளிப்பான் மூலம், பின்னோக்கி நடந்து மண்ணில் தெளிக்க வேண்டும். இறவைப் பயிருக்கு எக்டருக்கு, 3.3 லிட்டர் பென்டிமித்திலின் அல்லது 4 லிட்டர் ஆலகுளோரைத் தெளிக்க வேண்டும். இதன் மூலம் விதைத்ததில் இருந்து 30 நாட்கள் வரை களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

அதற்குப் பிறகு, ஒருமுறை கைக்களை எடுத்து விட்டுப் பாசனம் தர வேண்டும். களைக்கொல்லியை இடாத நிலையில், விதைத்த 20 மற்றும் 35 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். அல்லது விதைத்த 20 நாட்களில் இமாசிதிபர் களைக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 30 நாட்களில் ஒருமுறை கைக்களை எடுக்க வேண்டும்.

இலைவழியே ஊட்டமிடல்

ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி., ஒரு கிலோ பொட்டாஷ் வீதம் எடுத்து, 10 லிட்டர் நீரில் கரைத்து 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்ட வேண்டும். பிறகு, இந்தக் கரைசலைத் தெளிப்பதற்குச் சற்று முன் 600 கிராம் யூரியாவையும் சேர்த்து, 200 லிட்டர் நீரில் கலந்து, செடிகள் பூக்கும் காலத்திலும் காய்கள் பிடிக்கும் காலத்திலும், கைத்தெளிப்பானால், செடிகள் நன்கு நனையும் வகையில் தெளிக்க வேண்டும். இதனால், 10 சத மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.

மேலும், விதைத்த 30 மற்றும் 45 நாட்களில், 20 கிராம் சாலிசிலிக் அமிலத்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்தால், பூக்கும் தன்மையும், ஒளிச்சேர்க்கையும் அதிகமாகி, 30 சத மகசூல் கூடுதலாகக் கிடைக்கும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்: சுருள்பூச்சி: இப்பூச்சிகளின் புழுக்கள், தொடக்கத்தில் பச்சையத்தைச் சுரண்டித் தின்னும். பிறகு, 2-3 இலைகளை மடித்து அதனுள் இருந்து கொண்டு இலைகளைத் தின்று உயிர் வாழும்.

கட்டுப்படுத்தும் முறை: ஏக்கருக்கு 6 கிலோ வேப்பங்கொட்டை வீதம் எடுத்துப் பொடியாக்கி 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து, இத்துடன் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்துத் தெளித்து இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வீதம் வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்றி, பூச்சித் தாக்குதலைக் குறைக்கலாம். ஆறு வரிசைக்கு ஒரு வரிசையில் கம்பை ஊடுபயிராக இட்டால், இப்பூச்சிகளின் பெருக்கம் வெகுவாகக் குறையும்.

நிலத்தை வறட்சியின்றி வைத்திருந்தால் இப்பூச்சித் தாக்குதல் குறையும். ஏக்கருக்கு 10 கிலோ குயினைல்பாஸ் 5 சதத் தூள் வீதம் எடுத்து, விதைத்த 15 மற்றும் 25 நாளில் தூவி, இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 300 மி.லி. குயினைல்பாஸ் 25 இ.சி. அல்லது 300 மி.லி. பாசலோன் 35 இ.சி. மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்தும் இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். இந்த மருந்துகளை 2 லிட்டர் நீருக்கு 3 மி.லி. வீதம் கலக்க வேண்டும்.

பச்சைக் காய்ப்புழு: இது, காய்களைத் துளைத்துத் தின்னும். இதனைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சிப் பொறியை வைத்து, பூச்சிகளின் நடமாட்டத்தைக் கணித்து, தேவைக்கேற்ப பூச்சி மருந்தை அடிக்க வேண்டும். வளர்ந்த புழுக்களைக் கையால் பொறுக்கி அழிக்கலாம். பயிருக்குத் தழைச்சத்தை அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஏக்கருக்கு 40 ஆயிரம் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி மற்றும் 1,000 கிரைசோபா இரை விழுங்கிகளை நிலத்தில் இட்டு இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 100 நியூக்ளியர் பாலிஹெட்ராஸிஸ் புழுக்கள் வீதம் எடுத்து, அத்துடன் ஒரு கிலோ வெல்லத்தைக் கலந்து, புழுக்களை நசுக்கிக் கரைத்த கரைசலைச் செடிகளில் தெளித்து, இப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

கீழ்க்காணும் மருந்துகளில் ஒன்றைத் தெளித்தும் இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். அதாவது, ஏக்கருக்கு 400 மி.லி. டைகுளோரோவால் அல்லது 800 மி.லி. குளோர்பைரிபாஸ் அல்லது 500 மி.லி. மோனோகுரோட்டோபாஸ் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நோய்கள்

மொச்சைக் குருத்தழுகல் நோய்: நோயுற்ற செடிகளை நீக்க வேண்டும். பிறகு, இதனைப் பரப்பும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு, ஏக்கருக்கு 200 மி.லி. மோனோகுரோட்டோபாஸ் வீதம் எடுத்து, விதைத்த 15 மற்றும் 25 நாட்களில் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் தேமல் நோய்: நோயுற்ற செடிகளின் இலைகளில் மஞ்சள் நிறத் திட்டுகள், மொசைக் தரையைப் போல வழவழப்பாகக் காணப்படும். இதுவே, மஞ்சள் தேமல் நோயாகும். சேதம் அதிகமாகும் போது இலைகள் கருகி விடும்.

கட்டுப்படுத்தும் முறை: விதைத்த 30 நாட்களில் பாதிக்கப்பட்ட செடிகளைப் பிடுங்கி எரிய வேண்டும். விதைத்த 15-30 நாட்களில், ஏக்கருக்கு 200 மி.லி. மோனோகுரோட்டோபாஸ் அல்லது 200 மி.லி. மித்தைல் டெமட்டான் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். பெருந்துத்தி, கண்டங்கத்தரி, காட்டு வெண்டை ஆகிய களைச்செடிகளை அகற்ற வேண்டும்.

துரு நோய்: இந்நோய் ஒருவகைப் பூசணத்தால் உண்டாகிறது. இலைகளின் கீழ்ப்பரப்பில் எண்ணற்ற செந்நிறத் துருப் படிவங்கள் காணப்படும். நோய் தீவிரமாகும் போது, இந்தத் துருப் படிவங்கள் ஒன்றாக இணைந்து இலை முழுவதும் பரவுவதால் இலைகள் காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை: ஏக்கருக்கு 100 கிராம் காலிக்ஸின் அல்லது 50 கிராம் காலிக்ஸின் மருந்துடன் 50 கிராம் பெவிஸ்டின் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ரையாடி நெப்பான் அல்லது 200 கிராம் பிரோபி கொளாசோல எக்சாகோளாசோல் 0.1% மருந்தை, 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் காலத்தில் தெளிக்கலாம்.

அறுவடையும் சேமிப்பும்

விதைத்த 70 நாட்களில் செடிகளில் உள்ள இலைகள் உதிர்ந்து விடும். காய்கள் மஞ்சள் நிறமாகி விடும். இதுவே அறுவடைக்கு ஏற்ற காலம். இதில் தாமதம் ஏற்பட்டால், காய்கள் வெடித்து விதைகள் சிதறி இழப்பு ஏற்படும். எனவே, சரியான காலத்தில் அறுவடை செய்து, செடிகளை இரண்டு நாட்களுக்கு சிமெண்ட் தரையில் காய வைத்துச் செடிகளை உலுக்கினால் காய்கள் உதிர்ந்து விடும். காய்களை மீண்டும் இரண்டு நாட்களுக்குக் காய வைத்தால் பருப்புகள் வெடித்து உதிர்ந்து விடும்.

பிறகு, சுத்தம் செய்து பருப்புகளைச் சேகரிக்க வேண்டும். பிறகு இவற்றை, ஒரு லிட்டர் நீருக்கு 10 மி.லி. மாலத்தியான் வீதம் கலந்து தெளித்துச் சுத்தம் செய்த கோணிப்பைகளில் சேகரித்து வைக்க வேண்டும். விதைக்காகப் பயன்படுத்தும் காய்களை, சிறிய குச்சியால் செடிகளைத் தட்டிக் காய்களைப் பிரித்துப் பருப்புகளை உதிர்க்க வேண்டும்.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர் .வேங்கடலட்சுமி, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!