நீர் பிரம்மி!

நீர் பிரம்மி neer

நீர் பிரம்மி உலகம் முழுவதும் ஈரப்பதமான பகுதிகளில் உள்ளது. இது, ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களில் வளர்ந்து படரும் தாவரம்.

நீர் பிரம்மி நரம்பு டானிக்காக, வலிப்புக்கும் மன நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக, மூட்டுவலி, ஆஸ்துமாவுக்கு மருந்தாக விளங்குகிறது.

இருமல், காய்ச்சல் மற்றும் நீரிழிவைக் கட்டுப்படுத்துகிறது. இத்தகைய பயன்களால் உலகம் முழுவதும் பெருமளவில் பயிரிடப்படுகிறது.

சாகுபடி முறை

மண் மற்றும் காலநிலை: இந்தியா முழுவதும் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் நீர் பிரம்மி உள்ளது.

வடிகால் வசதியில்லா மண்ணில் நன்கு வளரும். இயற்கையாக அமிலத் தன்மையுள்ள மண்ணிலும் நன்கு வளரும்.

வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும். 33-44 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை மற்றும் 60-65 சத ஈரப்பத்தில் நன்கு வளரும்.

இனப்பெருக்கம்: இளம் தண்டுகளைத் துண்டுகளாக நறுக்கி நட்டு இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

பெருமளவில் இனப் பெருக்கம் செய்ய, முழுத் தாவரமும் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, படுக்கைகளில் நடவு செய்யப் படுகிறது. எக்டருக்கு 62,500 தண்டுத் துண்டுகள் தேவைப்படும்.

பயிர் விரைவாக வளர, இளம் தண்டுத் துண்டுகள், சில இலைகள் மற்றும் கணுக்களுடன் இருக்க வேண்டும்.

இந்தத் தண்டுத் துண்டுகளை ஈர மண்ணில் 10×10 செ.மீ. இடைவெளியில் நட்டு முடித்ததும் பாசனம் செய்ய வேண்டும்.

அதிக மகசூலைப் பெற, ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.

உர மேலாண்மை: நிலத்தைத் தயாரிக்கும் போது, அடியுரமாக எக்டருக்கு 5 டன் தொழுவுரம் இட வேண்டும். மேலும், 100: 60: 60 கிலோ, தழை, மணி, சாம்பல் சத்தை இட வேண்டும்.

பாசனம்: பயிர் வளர்ச்சிக்கு நடவு செய்ததும் பாசனம் செய்வது அவசியம். பிறகு, 7-8 நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்யலாம்.

மழைக் காலத்தில் பாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

களை நிர்வாகம்: தொடக்கத்தில் 15-20 நாட்களுக்கு ஒருமுறை கைக்களை எடுக்க வேண்டும்.

பயிர் அடர்த்தியாக வளர்ந்த பிறகு அவ்வப்போது களையெடுத்தால் போதும்.

பயிர்ப் பாதுகாப்பு: நீர் பிரம்மியை வெட்டுக் கிளிகள் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி அல்லது 0.2 சத நுவாக்ரானைத் தெளிக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்

நீர் பிரம்மி அறுவடைக்கு, அக்டோபர் நவம்பர் மாதங்கள் ஏற்றவை. இதை மறுதாம்புப் பயிராக வளர்க்கலாம்.

4-5 செ.மீ. அளவுக்கு தண்டுகளை மட்டும் அறுவடை செய்து விட்டு, மீதமுள்ளதை மறு வளர்ச்சிக்கு விட வேண்டும்.

எக்டருக்கு 300 குவிண்டால் பச்சை மூலிகை கிடைக்கும். இதை உலர்த்தினால் 60 குவிண்டால் உலர் மூலிகை கிடைக்கும்.

மறுதாம்புப் பயிரிலிருந்து எக்டருக்கு 40 குவிண்டால் உலர் மூலிகை கிடைக்கும்.

இதை உலர்த்த, பாரம்பரிய முறையான அறையின் வெப்பத்தில், நிழலில் உலர்த்தும் முறை பின்பற்றப் படுகிறது.

மருத்துவக் குணங்கள்

நீர் பிரம்மி இலையைக் கொஞ்சமாக எடுத்து, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கிக் கொள்ள வேண்டும். இதை, உடலில் வீக்கமுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

பின்பு, வீக்கமுள்ள இடத்தில் துணியால் இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் விரைவில் வீக்கம் குணமாகும்.

உடல் வலி, வீக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து நீர் பிரம்மி இலைகளை வதக்கிக் கட்ட வேண்டும்.

நீர்பிரம்மி இலையின் சாற்றைச் சாப்பிட்டு வந்தால், தொண்டைக் கரகரப்பு ஏற்படாது.

தொண்டைக் கரகரப்பு உள்ளவர்கள், தொடர்ந்து நீர் பிரம்மிச் சாற்றைக் குடிக்க வேண்டும்.

நீர் பிரம்மி இலைகளைச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்; நரம்புத் தளர்ச்சி ஏற்படாது.

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள், தொடர்ந்து இந்த இலையைச் சாப்பிட வேண்டும்.


Pachai Boomi Dr.Tamil selvi

முனைவர் செ.தமிழ்ச்செல்வி, உதவிப் பேராசிரியை, வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!