செய்தி வெளியான இதழ்: 2014 மே.
அழகுக்கு அழகு சேர்ப்பவை மலர்கள். அதனால் தான், விதவிதமான வாசங்களில் வகை வகையான வண்ணங்களில் திகழும் மலர்கள், மனித வாழ்க்கையின் அன்றாடப் பொருள்களில் ஒன்றாக விளங்குகின்றன.
அப்படிப்பட்ட மலர் வகைகளில் இடம் பெறுவது தான் மருகு. இதழ் விரிக்கும் மலராக இல்லாமல், பச்சிளம் செடியைப் போல், காட்சியளிக்கும் மருகுக்குத் தனி வாசம் உண்டு. இந்த மருகு தமிழகத்தின் சில பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் செட்டியபட்டி, சாதிக்கவுண்டன்பட்டி, நடுப்பட்டி, நிலக்கோட்டை, இராமநாதபுரம், வெள்ளோடு, கவுண்டம்பட்டி, ஊத்துப்பட்டி போன்ற கிராமங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
மருகு சாகுபடி குறித்து கோட்டைப்பட்டி விவசாயி ஜெயராம் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அவர் கூறியதாவது:
“மருகு விவசாயம் செய்றதுக்கு முன்பு நல்லா புழுதிபட நிலத்த தொழுவுரம் போட்டு உழுகணும். பிறகு, தனித்தனிப் பாத்திகளா பிரிச்சி, தண்ணீரைப் பாய்ச்சி விதைச்செடியை அஞ்சு விரக்கடை இடைவெளியில் ஒவ்வொன்னா நடணும். நடவு செய்த மூனாவது நாள் உயிர்த் தண்ணி விடணும். அதுக்குப் பிறகு நாலஞ்சு நாளுக்கு ஒரு தடவை தண்ணீர் பாய்ச்சணும், இப்போ அடிக்குற வெயிலுக்கு மூனு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டியதா இருக்கு.
இப்படி வளக்குற இந்த மருகு சாகுபடியில புழுத் தாக்கம் தான் முக்கியமான பிரச்சனை. அதுக்கு மோனோ குரோட்டோபாஸ் மருந்தும், பூஞ்சாண நோய்களுக்கு மெட்டலாக்சில், மேன்கோசெப் மருந்தும் தேவைக்கேற்ப அடிக்கணும்.
நடவு செய்த 25 நாள்ல களையெடுத்து ஒரு ஏக்கருக்கு 2 மூட்டை கடலைப் புண்ணாக்கு போட்டு மண் அணைக்கணும். அடுத்த இருபது நாளில் ஒரு மூட்டை டிஏபி உரத்தையும், இரண்டு மூட்டை கடலைப் புண்ணாக்கையும் இடணும்.
முதல் அறுவடை அறுபது நாளில் இருந்து ஆரம்பிக்கும். தேவையைப் பொறுத்து ஒரு நாளைக்கு நூறு கிலோ வரை வெட்டலாம். விஷேச நாட்களில் 200 முதல் 300 கிலோ வரை கூட வெட்டலாம். இந்த மாதிரி அறுவடை செய்தால், ஏக்கருக்கு சுமார் 1,500 கிலோ வரை மருகு கிடைக்கும்.
இந்த அறுவடை பத்து நாள்ல முடிஞ்சிரும். மேல் செடிய வெட்டி எடுக்குறதுனால கீழே உள்ள வேர்ச்செடி மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கும். மீண்டும் அறுபது நாளில் அறுவடையைத் தொடங்கலாம்.
ஒரு ஏக்கர் நிலத்தைப் பண்படுத்த, விதைச்செடி செலவுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். தொடர்ந்து ஆறு அறுவடை, வேலையாட்கள் கூலின்னு பத்தாயிரம் ரூபா வரை செலவாகும். ஒரு வருசத்துல செலவு போக ரெண்டு ரெண்டரை இலட்சம் ரூபாய் வரை இலாபம் கிடைக்கும்.
வியாபாரிகளே, நேரடியாக அறுவடை செஞ்சு எடுத்துட்டுப் போற வகையில, குத்தகைக்கு விடுறது தான் எங்க பக்கம் நடக்குது. மதுரை பூச்சந்தைக்கு வளர்ந்த செடியையும், சென்னைச் சந்தைக்குக் குட்டைச் செடியையும் வெட்டி அனுப்புவாங்க. அதிலும் மதுரை, கும்பகோணம், சிதம்பரம், சீர்காழிக்கு, கிலோ கணக்கிலும், சென்னைக்கு முடிக் கணக்கிலும் அனுப்புவாங்க.
மதுரை எங்களுக்குப் பக்கமாக இருப்பதால, இரவு நேரத்துல தலையில டார்ச் லைட்டை கட்டிக்கிட்டு அறுவடை செய்து அதிகாலை நாலஞ்சு மணிக்கெல்லாம் விற்பனைக்கு அனுப்பிருவோம். பெரும்பாலும், ஆண்கள் தான் மருகு அறுவடையைச் செய்வாங்க. இந்தக் கோடைக் காலத்தில பாதுகாப்பாக வளர்த்தா, மருகு நல்ல வருமானம் தரக்கூடிய பயிர்” என்று கூறினார்.
– துரை சந்தோசு
சந்தேகமா? கேளுங்கள்!