மள்ளப்புரம் முனிச்சாமியின் அனுபவம்
கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பதைப் போல, காரமில்லாத உணவும் சுவைப்பதில்லை. அந்தளவுக்குக் காரம் அறுசுவைகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் காரத்தைத் தருவதில் மிளகும் இருந்தாலும் மிளகாயே முன்னிலையில் உள்ளது. இனிப்பான பொருள்களை விடக் காரமான பொருள்களையே மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். காய்கறி வரிசையில் இருக்கும் மிளகாய், பழமாகி வற்றலாகவும் பயன்படுகிறது. மிளகாய் உற்பத்தியில் பெரும்பகுதி வற்றலாகவே பயன்படுகிறது. மிளகாய் வற்றல் வாசனைப் பொருள்களின் பட்டியலில் இருக்கிறது.
இப்படிச் சமையலறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள மிளகாய், தோட்டக்கால் பகுதிகளில் விளைகிறது. வேளாண்மையில் தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், பாரம்பரிய இரகங்களில் இருந்து அதிக விளைச்சலைத் தரவல்ல புதிய இரகங்கள் வந்த வண்ணம் உள்ளன. காரத்துக்காக மட்டுமே பயன்படும் நிலைமாறி, தனிக்காயாகச் சமைப்பதற்காக, காரம் குறைந்த பெரிய அளவிலான மிளகாய் வகையும் புழக்கத்தில் உள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், மள்ளப்புரத்தைச் சேர்ந்த விவசாயி கு.முனிச்சாமி புல்லட் மிளகாய் எனப்படும், கட்டைக்காய் மிளகாயைச் சாகுபடி செய்திருக்கிறார். இது அதிக விளைச்சலைத் தரக்கூடிய ஒட்டு ரகமாகும். இந்த மிளகாய் சாகுபடி விவரம் குறித்து அவரிடம் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:
“நாங்க ஒண்ணரை ஏக்கருல புல்லட் மிளகாய்ங்கிற ஒட்டு இரகத்தைச் சாகுபடி செஞ்சிருக்கோம். இதைக் கட்டை மிளகாயுன்னும் சொல்லுவாக. போன புரட்டாசியில நடவு செஞ்சோம். நாங்களே நாத்து விட்டோம். பத்து கிராம் விதை 300 ரூபா. 200 கிராம் விதை தேவைப்பட்டுச்சு. மேட்டுப்பாத்திகள அமைச்சு நாத்துவிட்டு 40 நாள்ல பறிச்சு நடவு செஞ்சோம்.
அதுக்கு முன்னால நெலத்த புழுதிப் புரள உழுதோம். அடியுரமா எருவைப் போட்டோம். அதோட ரெண்டு மூட்டை பாக்டம்பாஸ் உரத்தையும் அடியுரமா போட்டோம். செடிகள்ல வேர்ப்புழுக்கள் தாக்காம இருக்க, பச்சைக் குருணைங்கிற உரத்தையும் போட்டோம். இதுக்கு அப்புறம், பாத்தி பிடிச்சு நாத்துகள நட்டோம்.
நாத்துகள் நல்லா உசுரு பிடிச்சு வளரத் தொடங்கி 20 நாள் கழிச்சு யூரியா, அம்மோனியா உரங்கள மேலுரமா போட்டோம். இதனால செடிக மளமளன்னு வளந்துச்சு. எங்க மண்வாகுக்கு ஏத்த மாதிரி நாலு நாளைக்கு ஒரு தடவை பாசனம் குடுத்தோம். மிளகாய்ச் செடிகள்ல பூச்சித் தாக்குதல், நோய்த் தாக்குதல் நெறையாவே வரும். இதுகள கட்டுப்படுத்துறதுக்கு அப்பப்போ மருந்து தெளிச்சாகணும்.
இப்பிடிச் சிக்கல் இல்லாம மிளகாய்ச் செடிகளைப் பாதுகாத்து வளர்த்தா 70 நாள்ல பலனை எடுக்க ஆரம்பிக்கலாம். பதினஞ்சு நாளைக்கு ஒருமுறை காய்களைப் பறிக்கலாம். பறிப்புக் கூடக்கூடக் காய்களும் ஒரே சீரா கூடிக்கிட்டே இருக்கும். அஞ்சாறு பறிப்புக்கு மேல ஒரு அஞ்சாறு பறிப்புக்கு மகசூல் அதிகமா கெடைக்கும். எங்களுக்கு இந்த ஒண்ணரை ஏக்கருல 80 கிலோ எடை கொண்ட 80 மூட்டை மிளகாய் அதிகபட்ச மகசூலா கெடச்சது. இந்த அளவுல நாலஞ்சு பறிப்பு இருந்துச்சு.
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மகசூல் குறஞ்சுக்கிட்டே வந்துச்சு. இப்போ 30 மூட்டை மிளகாய் கெடைக்குது. மகசூல் தொடர்ந்து சீரா வர்றதுக்கு 15 நாளைக்கு ஒருமுறை பாக்டம்பாஸ், கடலைப் புண்ணாக்குக் கலவையை நாங்க நீர்வழி உரமா குடுக்குறோம்.
போன புரட்டாசியில இந்தக் கட்டை மிளகாயைச் சாகுபடி செஞ்சோம். இப்போ பதினோரு மாசமாச்சு. இதை, ஒரு வருசப் பயிருன்னு சொல்லலாம். இதுல பராமரிப்புச் செலவு, பறிப்புக் கூலின்னு நெறையா செலவிருக்கு. ஆனா அதுக்கேத்த மாதிரி வருமானமும் இருக்கு. நல்ல வெலை கெடச்சுட்டா இந்த மிளகாய் சாகுபடி நம்மள கைதூக்கி விட்டுரும். நல்ல உச்சத்துல மகசூல் இருந்தப்போ ஒரு கிலோ மிளகாய் 6-7 ரூபாய்க்குத் தான் போச்சு. இப்போ பத்து ரூபா வரைக்கும் கெடைக்குது.
நாங்க மதுரை சந்தைக்குத் தான் கொண்டு போறோம். இந்த ஒண்ணரை ஏக்கருல இப்போ இருக்கும் நிலவரப்படி பார்த்தா நாலு இலட்ச ரூபா வரைக்கும் வருமானம் வரும். இதுல செலவுக் கணக்கு ரெண்டரை இலட்ச ரூபா ஆகிரும். இதுபோக நமக்கு ஒண்ணரை இலட்ச ரூபா நிகரமா நிக்கும். அதாவது, ஒரு வருசத்துல ஏக்கருக்கு ஒரு இலட்ச ரூபா இலாபம்.
பொதுவா, தானியப் பயிர்கள விட, காய்கறிப் பயிர்கள்ல கூடுதலா வருமானம் கெடைக்கும். நம்ம நல்ல நேரத்துக்கு வெலையும் நல்லபடியா அமையணும். காய்கறிப் பயிர் சாகுபடிங்கிறது, பச்சைப் புள்ளையைப் பாதுகாக்குறதைப் போல. எந்நேரமும் பயிர் மேல கண்காணிப்பு இருந்துக்கிட்டே இருக்கணும். உழைப்பும் இருக்கு. அதுக்கேத்த வருமானமும் இருக்கு.
சமயோசிதமா செயல்பட்டா காய்கறிப் பயிர்கள்ல நல்ல வருமானம் எடுக்கலாம். அது எப்பிடின்னா, ஒரே காய்கறிய அதிகப் பரப்புல சாகுபடி செய்யக் கூடாது. அதுபோல, எல்லாரும் தக்காளியைத் தான் பயிர் பண்றாங்கன்னு சொல்லிட்டு நாமளும் தக்காளியைச் சாகுபடி செய்யக் கூடாது. அதிகப் பரப்புல ஒரு காய்கறிப் பயிர மட்டும் சாகுபடி செஞ்சா மகசூல் அதிகமா வரும். காய்கறிகள் இருப்பு வச்சு விக்கிற பொருள்கள் இல்ல. அதை உடனடியா வித்தாகணும். அப்போ நாம வியாபாரியை நம்பித் தான் இருக்கணும். அப்போ அவங்க கேட்குற வெலைக்குக் குடுத்துட்டுத் தான் வரணும்.
இதையே நாம கொஞ்சமா சாகுபடி செஞ்சா, அதன் மூலமா கிடைக்கக் கூடிய காய்கள நம்ம ஊருக்குள்ள, நம்ம பக்கத்து ஊருக்குள்ள நாமளே நேரடியா விற்பனையில எறங்கிறலாம். நமக்கும் நல்ல வெலை கிடைக்கும். மக்களுக்கும் நியாயமான வெலையில காய்க கெடைச்ச மாதிரி ஆகிரும். அதேபோல எல்லாரும் ஒரே காயைச் சாகுபடி செஞ்சாலும் உற்பத்தி அதிகமாகிச் சந்தையில வெலை மந்தமாத் தான் இருக்கும். இதையெல்லாம் கவனிச்சுச் செஞ்சா காய்கறி சாகுபடி இலாபம் தரும் சாகுபடி தான்.
எழுமலை சுப்பிரமணியம்
சந்தேகமா? கேளுங்கள்!