மீன்வளத்தை மேம்படுத்துவதில் செல்பேசிச் செயலிகளின் பங்கு!

Phone Apps

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021

ன்றைய உலகில், எந்தவொரு வேலையையும், தரமாக, சரியாக, குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதற்கான உத்திகளை, அறிவியல் துறை வழங்கிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, நமது சிந்தனையை எந்திரங்கள் மூலம் செயல்படுத்தும் அளவில் செல்பேசித் தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது.

இவ்வகையில், மீன்வளத் துறையில், செல்பேசி வழியான உத்திகள், பல விதங்களில் பயன்படுகின்றன. அதாவது, தினசரி நீரோட்டங்கள், காற்றின் வேகம், கடல் மீன்களின் சந்தை விலை போன்ற தகவல்களைக் குறுஞ்செய்தி மூலமும், மீன் பண்ணையாளர்களுக்கு வேண்டிய தகவல்களை, செயலிகள் மூலம் அறியலாம்.

மீன் பண்ணை அமையுமிடம், குளம் தயாரித்தல், மீன்களின் முந்தைய மற்றும் பிந்தைய இருப்புப் போன்ற தகவல்களைப் பெற, பெரும்பாலான மீன் இறால் பண்ணையாளர்கள் செல்பேசியைப் பயன்படுத்தி வருகின்றனர், மேலும், பண்ணை சார்ந்த கேள்விகளுக்குச் செல்பேசிச் செயலி மூலம் பதில்கள் தரப்படுகின்றன.

மீனவர்கள் பிடிக்கும் மீன்களை, வெவ்வேறு இடங்களில் விற்பதற்குத் தேவையான சந்தைத் தகவல்களைச் செல்பேசிச் செயலி வழங்குகிறது. இச்செயலி, மீனவர்களின் வாழ்க்கையில் விந்தைமிகு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இத்தகைய உத்திகள், ஏழை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூகத் தகவல் பரிமாற்றத்துக்கும் உதவுகின்றன.

மேலும், செல்பேசி போன்ற தகவல் தொழில் நுட்பக் கருவிகள் மூலம் மீனவர்கள், தங்களின் பணம், நேரம் மற்றும் ஆற்றலை மிச்சப்படுத்த முடியும். மீன்வளத்துறை மற்றும் ஏனைய மீன்வள நிறுவனங்களுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். இவ்வகையில், அரசு நிறுவனங்கள்  உருவாக்கிய செல்பேசிச் செயலிகளைப் பற்றி இங்கே காணலாம்.

எம்-ஜிங்கா

இது, இறால் வளர்ப்புக்கான இருமொழிச் செயலியாகும். தேசிய வேளாண் உயர் கல்வித் திட்ட நிதியுதவியில், மும்பை மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தால், நன்னீர் உவர்ப்பு இறால் வளர்ப்போர் நலனுக்காக உருவாக்கப்பட்டது. இச்செயலி மூலம், இறால் குளம் அமைத்தல், வளர்த்தல், உணவளித்தல் மற்றும் சந்தை குறித்த விரிவான ஆலோசனைகளைப் பெறலாம். இது நிபுணர் உதவியுடன் இயங்குவதால், இறால் வளர்ப்போரின் ஐயங்களுக்குச் சரியான தீர்வுகள் கிடைக்கும்.

மேலும், இறால் வளர்ப்பு உத்திகள் மற்றும் அரசின் ஆதரவு சார்ந்த விவரங்களை அறிவதற்கான, ஹெல்ப்லைன் எண்ணும் கிடைக்கும். இது, குளம், நீரின் தரம் ஆகியவற்றைப் பதிவு செய்தல், கண்காணித்தல், அன்றாட உள்ளீடு, அறுவடை மற்றும் செலவுகளைப் பதிவு செய்யும் மின்னணு நூலாகப் பயன்படும். அன்றாட மீன் வளர்ப்புச் செய்திகள், நிகழ்வுகள் குறித்த தகவல்களை வழங்கும். இச்செயலியின் மேம்பட்ட பதிப்பையும் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சகாரா

இது, டிஜிட்டல் கேரளா திட்டத்தின் அங்கமாக, மீன்வளத் துறை மற்றும் தேசியத் தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டது. கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மீன்பிடிக் கப்பல்களைக் கண்காணிக்க மற்றும் மீன்பிடிப்புக் குழுவினரைப் பதிவு செய்து வைத்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டது. மீனவர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் இடையிலான தகவல் தொடர்பு ஊடகமாக, வானிலை மாற்றங்கள் மற்றும் பிற அவசரத் தகவல் தொடர்புகள் குறித்த தகவல்களைச் சரியான நேரத்தில் மீனவர்களுக்கு கொண்டு செல்லப் பயன்படுகிறது.

மீனவர்கள் கடலுக்குச் சென்று வருவதை, இந்தச் செயலி மூலம் எளிதாகக் கண்காணிக்க முடியும். இது பல மொழிகளில் செயல்படுகிறது. கேரள மீன்பிடிப் படகு உரிமையாளர்கள், தங்கள் கப்பல்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருக்கும் தகவல்களைப் பெற உதவுகிறது. அவசர நிலைகளில் தகவல்களை விரைவாகப் பரிமாறவும், அனைத்து மீனவக் குழுக்களையும் பொதுவான கூரையின் கீழ் கொண்டு வரவும் உதவுகிறது.

mKrish@மீன்வளம்

இது, மும்பையில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது. இந்திய தேசியக் கடல்சார் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய வேளாண் கண்டுபிடிப்புத் திட்டத்தின் மூலம், மீன்பிடிப்பைக் கூட்ட மற்றும் இயக்கச் செலவைக் குறைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது. இது அதிக மீன்பிடி மண்டலம், கடல் மேற்பரப்பு வெப்பநிலை, வானிலை மற்றும் மீனினங்களின் உணவாக விளங்கும் தாவர மிதவை உயிரியின் இருப்புக் குறித்த தகவல்களை உள்ளூர் மொழிகளில் வழங்கும்.

இந்தச் செயலியின் உதவியுடன், மராட்டிய மீனவர்கள், தங்களது எரிபொருள் செலவில் 30% வரை சேமிக்க முடியும் என்பது, ஓர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எரிபொருள் செலவை குறைத்தால், சுற்றுச்சூழலில் பல நன்மைகளைக் கொண்டு வரலாம். உலக எண்ணெய் உற்பத்தியில் 1.2% மீன்வளத் துறையில் செலவாகிறது. இந்தச் செயலி, எளிதில் பாதிக்கப்படும் மீனவர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இது, குறைந்த செலவில் சிறந்த மீன்பிடிப்பை உறுதி செய்ய; வாழ்வாதாரத்தை உயர்த்த; உயிர்கள், படகுகள் மற்றும் மீன்பிடி வலையிழப்பைத் தடுக்க உதவும். டீசல் செலவு குறைவதால், சூழல் மாசு குறையவும் வழிவகுக்கும். இந்தச் செயலியை, நாட்டின் 20 சிறந்த சமூகக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக, இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சகமும், நிதியமைச்சகமும் தேர்வு செய்துள்ளன.

தூண்டில்

இது, கடலிலுள்ள மீனவர்களுக்கு உதவும் நோக்கில், தமிழக மீன்வளத்துறை, இந்தியக் கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் பூமி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், வானிலைத் தகவல்கள், வாய்ப்புள்ள மீன்பிடி மண்டலம், அதிக அலை, சூறாவளி எச்சரிக்கை போன்ற நிகழ் நேரத் தகவல்களை மீனவர்கள் எளிதாகப் பெற முடியும். மேலும், மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இச்செயலி உள்ளது.

இது, முப்பது கடல் மைல்கள் வரை செயல்படும். இதன் மூலம் படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளின் நேரடி நிலையை, கரையிலிருந்து பார்க்க முடியும் என்பதால், சூறாவளிக் காலத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

SoS

இது, மீனவர்கள் துன்பக் காலத்தில் பயன்படுத்தும் மற்றொரு வழியாகும். இதிலிருந்து துன்பக் குறிகளை அனுப்புவதன் மூலம், தேடல் மற்றும் மீட்புக் காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். இயற்கைப் பேரழிவின் போது கடலில் எண்ணற்ற மனித உயிர்களைக் காக்கத் தேவையான முடிவுகளை எடுப்பதற்கு இந்தச் செயலி பேருதவியாக இருக்கும்.

மீன்கள்

இது, அரசிடமிருந்து மலிவு விலையில் கடல் உணவை ஒரே இடத்தில் வாங்க வழிகோலும் செயலியாகும். தமிழ்நாடு மீன்வளத் துறையின் ஒரு பிரிவான, தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியது. முதலில் சென்னை மாவட்டத்தில் சோதனைத் திட்டமாக கொண்டு வரப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் நீட்டிக்கப்பட உள்ளது. மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் கடல் உணவுத் தயாரிப்புகள் மற்றும் கடைகளைத் தேர்வு செய்யவும் கடல் உணவுகளைப் பெறவும் உதவும்.

ஷிப்ட் பிஷ்ப் ரோ

இது, கொச்சியில் உள்ள மத்திய மீன்பிடித் தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயலி. மீன்களில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டுப் பொருள்களான, பூசப்பட்ட தயாரிப்புகள், ஊறுகாய், ரொட்டித் துண்டுகள் மற்றும் சாப்பிடும் நிலையில் இருக்கும் மற்றும் சமைக்கும் தயாரிப்புகளைப் பற்றிய தகவல்களை இச்செயலி அளிக்கும்.

மதிப்புக்கூட்டுப் பொருள்களைச் செய்யத் தேவையான பொருள்களை, மீன்களின் அளவுக்கு ஏற்ப இது பரிந்துரைக்கும். இந்தப் பொருள்களை, குறிப்பிட்ட அளவு மீன்களின் அளவுக்கு ஏற்ப, தானாகக் கணக்கிடுவதால், ஒவ்வொரு உற்பத்தியின் அளவையும் அதிகரிக்க, பயனருக்கு உதவியாக இருக்கும் என்பது இதன் சிறப்பாகும்.

பொருள்களின் செலவை உள்ளீடு செய்ய வழி வகுக்கும். உற்பத்தியைக் கூட்டும் போது ஏற்படும் மொத்தச் செலவு குறித்த யோசனையைப் பயனருக்கு வழங்கும். இது, வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் உணர்வுகளால் இயக்கப்படும் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் உத்தியைக் கொண்டுள்ளது. மீன்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாகத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கத் தேவையான திட்டச் செலவைக் கணக்கிடுவது குறித்த யோசனையைத் தொழில் முனைவோருக்கு வழங்கும்.

வனாமி இறால் செயலி

இது, இறால் வளர்ப்பு உத்திகளைப் பரப்பும் நோக்கில், ஐ.சி.ஏ.ஆர்-மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டு, ஆன்ட்ராய்டு செல்பேசியில் இயங்கும் செயலி. தற்போது இச்செயலி, பசிபிக் வெள்ளை இறால் பண்ணைகளின் சிறந்த நிர்வாகம் குறித்த தகவல்களை, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் வடிவத்தில் வழங்குகிறது. இறால் வளர்ப்போர் மற்றும் கடலோர மாநிலங்களின் கள விரிவாக்கத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு இச்செயலி அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை, தலைப்பு வாரியாக அல்லது குறிப்புச் சொற்கள் வழியாகக் கண்டறியும் வகையில் இச்செயலி அமைந்துள்ளது. பயனர்களின் கேள்விகளுக்கு இரண்டு வேலை நாட்களுள் பதிலளிக்கப்படும்.

இந்தச் செயலி, இந்தி, தெலுங்கு, தமிழ், ஒரியா, பெங்காலி, குஜராத்தி போன்ற மொழிகளிலும் உள்ளது. தொழில் நுட்ப முன்னேற்ற அடிப்படையில் குறிப்பிட்ட இடைவெளியில் புதுப்பிக்கப்படும். 2017 ஏப்ரல் 4 அன்று, மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி மையத்தின் “அறக்கட்டளை நாள்” நிகழ்வின் போது “வனாமி இறால் தொடங்கப்பட்டது.

சிஃபாவின் பகிரி உதவி எண் (சிஃபாவின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன்)

நன்னீர் மீன்வளர்ப்புச் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், 7790007797 என்னும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண் மற்றும் ask.cifa@icar.gov.in என்னும் மின்னஞ்சலை, ஒடிசாவின் மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தேசிய மீன் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, மீன் விவசாயிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் செயலியின் மூலம், நன்னீர் மீன் வளர்ப்போர், தங்களின் கேள்விகளை வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி, தங்களுக்குத் தேவையான பதில்களைப் பெறலாம்.

முடிவுரை

செல்பேசிச் செயலிகளின் வருகையால் விவசாயிகள் திறமையாக இயங்கி வருகின்றனர். செலவுகளைக் குறைப்பதில், சிறந்த மீனினங்களை வளர்ப்பதில் செயலிகள் முக்கியப் பங்கு வகிப்பதால் சிறந்த வருவாய் கிடைக்கிறது; விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுகிறது. மீன் விவசாயிகள் தங்களுக்குக் கிடைக்கும் மீன் மகசூலை முன்கூட்டியே அறிவிக்கும் அளவில் செல்பேசி உத்திகள் வளர்ந்துள்ளன.

உலகின் மிக ஆபத்தான தொழிலாக, இரண்டாம் இடத்தில் உள்ள, கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களிடம், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் அவசரக் காலங்கள் தொடர்பான தகவல்களைத் தகுந்த நேரத்தில் தெரிவிப்பதால், ஏராளமான மீனவர்கள் தங்களைக் காத்துக் கொள்கின்றனர். இடைத்தரகர்கள் இல்லாமல் மீன்களை விற்று, நல்ல வருவாயைப் பெற, இந்தச் செயலிகள் உதவுகின்றன. மேலும், அதிகளவில் மீன்களைப் பிடிக்கத் தேவையான தகவல்களை இந்தச் செயலிகள் அளிப்பதால், மீன்பிடிப்பு மிகவும் எளிதாகிறது.

மீன் வளர்ப்பில் ஈடுபடுவோர் போதிய தொழில் நுட்ப அறிவு இல்லாமல் இருந்தால், மீன் உற்பத்திக் கடுமையாகப் பாதிக்கும். இதற்குத் தீர்வாக, நோய் மேலாண்மை மற்றும் பிற பண்ணை ஆலோசனைகள், செயலிகள் மூலம் உள்ளூர் மொழிகளில் கிடைப்பதால், மீன் உற்பத்திப் பெருகும். எனவே, மீன் வளர்ப்புச் சார்ந்த செயலிகளைப் பயன்படுத்தினால், பண்ணையாளர்கள் மற்றும் மீனவர்கள், தங்களின் சமூக, பொருளாதார நிலையைப் பெருக்கிக் கொள்ள முடியும்.


Hino fernando

யூ.ஹினோ பர்னான்டோ,

அ.கோபாலகண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், நாகப்பட்டினம்.

இராஜேஸ்வரன், மத்திய மீன்வளக் கல்வி நிறுவனம், மும்பை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!