“அண்ணே.. மீன் அமிலம்ன்னு சொல்றாகளே.. அதைப் பத்திச் சொல்லுண்ணே..’’
“பயிர்களுக்குத் தழைச்சத்து இயற்கையாகக் கிடைப்பதற்கு உதவுவது மீன் அமிலம். மிக எளிமையாகத் தயாரிக்கக் கூடிய இயற்கை இடுபொருள் இது. உலக முழுவதும் நடைபெறும் இயற்கை விவசாயத்தில் மீன் அமிலம் பரவலாகப் பயன்பட்டு வருகிறது..’’
“இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ன்னு சொல்லுண்ணே..’’
“மீனும் நாட்டு வெல்லமும் இருந்தால் போதும். மீனை எவ்வளவு எடுக்கிறோமோ அதேயளவில் நாட்டு வெல்லத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல மீன்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்னும் கட்டாயமில்லை. மீன் கழிவுகளைக் கூடப் பயன்படுத்தலாம். தேவைக்குத் தகுந்து மீனையும் நாட்டு வெல்லத்தையும் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்..’’
“சரிண்ணே.. எப்பிடித் தயாரிக்கிறதுன்னு சொல்லுண்ணே..’’
“மீன்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.. வெல்லத்தைப் பொடியாக நொறுக்கிக் கொள்ள வேண்டும்.. இந்த இரண்டு பொருள்களையும் கண்ணாடிப் புட்டியில் இட்டு நன்கு குலுக்கி இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.. பிளாஸ்டிக் புட்டியையும் பயன்படுத்தலாம்.. ஆனாலும், அளவான கண்ணாடிப் புட்டியே சிறந்தது.. பெரிய பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது.. நீரைக் கலந்துவிடக் கூடாது.. இப்படி, 22 நாட்கள் வைத்திருந்தால், இந்தக் கலவை நன்கு நொதித்து, தேனைப் போல மாறிவிடும்.. இதுதான் மீன் அமிலம்.. இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஒரு கிலோ மீன் ஒரு கிலோ வெல்லக் கலவையில் இருந்து 300-500 மில்லி மீன் அமிலம் கிடைக்கும்..’’
“சரிண்ணே.. இதை எப்பிடிப் பயிருக்குப் பயன்படுத்துறதுண்ணே..’’
“இந்த அமிலத்தை ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வீதம் கலந்து தெளிப்பான் மூலம் பயிர்களில் தெளிக்கலாம்.. இல்லையெனில் பாசன நீருடன் கலந்தும் விடலாம்.. இதனால் பயிர்களுக்கு இயற்கையாகத் தழைச்சத்துக் கிடைக்கிறது.. செலவு அதிகமில்லாத இடுபொருள்.. அனைவராலும் எளிதாகத் தயாரிக்கக் கூடியது.. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பைத் தராத பொருள்..’’
“ரொம்ப நன்றிண்ணே..’’
பசுமை