நன்னீர்க் கூண்டுகளில் கரிமீன் வளர்ப்பு!

karimeen

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021

ரிமீன் அல்லது சேத்துக்கெண்டை மீன், திலேப்பியா அல்லாத சிச்லிட் வகுப்பைச் சார்ந்த மீனினமாகும். மதிப்புமிகு இம்மீனின் பூர்விகம் தீபகற்ப இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்கு ஆசியாவாகும்.

உவர்நீர் மற்றும் நன்னீரில் வாழும் இம்மீன், தென்னிந்தியாவில் கரிமீன் எனப்படுகிறது. அழைக்கப்படுகிறது. நீரின்௮அடியில் மூழ்கியுள்ள பொருள்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து, ஈன்ற குட்டிகளைப் பாதுகாப்புடன் வளர்க்கும் தனித்தன்மை வாய்ந்தது.

நீரின் உவர்ப்புத் தன்மையில் அதிக மாற்றம் பெற்றாலும் பொறுத்துக் கொள்ளும் திறன் உள்ளதால் கடலருகில் இருந்து ஆற்றுநீர் வரை, எல்லா நீர் நிலைகளிலும் வளர்க்கலாம்.

இது அலங்கார மீன்களைப் போன்ற நிறத்தில் இருப்பதால் அலங்கார மீனாகவும் வளர்க்கப்படுகிறது. இம்மீன் வளர்ப்பு, கேரளத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் உதவியுடன் நடந்து வருகிறது.

வணிக நோக்கம் மற்றும் மக்கள் விருப்பம் காரணமாக, கேரள மாநில அரசு இந்த மீனை  மாநில மீனாக அறிவித்துள்ளது. கேரளத்தில் ஒரு கிலோ கரிமீனின் விலை 450 ரூபாயாகும்.

அந்தளவில் கேரள மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் இம்மீன் விரும்பப்படுகிறது. இந்த மீனுக்குக் கிடைக்கும் நல்ல விலை, இம்மீன் வளர்ப்பில் ஊக்கத்தைத் தருகிறது.

கரிமீனின் வளர்ப்புக் காலம் 6-8 மாதங்கள் ஆகும். இக்காலத்தில் ஒரு மீன் 130-150 கிராம் இருக்கும். கரிமீன் விதை உற்பத்தி மற்றும் கூண்டு வளர்ப்பில் சிறப்பிடத்தைப் பெற்றிருக்கும் கொச்சி மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிறுவனம், அந்த மாநிலத்தில் இந்த மீன் வளர்ப்புக்கு ஊக்கம் தருகிறது.

கரிமீன் வளர்ப்பு மூலம் அண்டை மாநில மக்களும் பயன் பெறலாம்.

உலகம் முழுவதும் மீன்களுக்கான தேவை கூடிக்கொண்டே உள்ளது. இதனால், நன்னீர் மீன் வளர்ப்பைப் பெருமளவில் மேற்கொள்ள முடியும். மீன் வளர்ப்பு விவசாயிகள் உற்பத்தியைப் பெருக்கும் நடைமுறைகளை எதிர்பார்க்கின்றனர்.

கரிமீன் போன்ற மீனின உற்பத்திப் பெருக்கம், நடுத்தர மக்களின் வாழ்வாதாரமாக அமையும். நன்னீர் நிலைகளில் கூண்டுகளில் கரிமீனை வளர்ப்பது, சிறிய நீர்நிலை மற்றும் சிறு விவசாயிகளுக்கு ஏற்றது.

திறந்த நீர்நிலைகளில் வலைப்பட்டி அல்லது கூண்டைப் போன்ற அடைப்புகளில் மீன்களை வளர்ப்பது, அதிக உற்பத்தியை உறுதி செய்கிறது. சரியாகச் செய்தால் இயற்கை மீன்வளம் பெருகும்.

உள்ளூர்த் தேவை மற்றும் வளங்களின்படி திட்டமிட்டால், ​​கூண்டு முறை மீன் வளர்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான சிறந்த கருவியாக இருக்கும்.

உணவும் உணவுப் பழக்கமும்

கரிமீன் ஓர் அனைத்துண்ணி. ஓரணு நுண்பாசி, இழைப்பாசி, நீர்வாழ் தாவரங்கள், ரோட்டிஃபர்ஸ் என்னும் நுண் வட்டுயிர்கள், பூச்சி இலார்வாக்கள், கிளாடோசிராக்கள், துடுப்புக்கால் பூச்சிகள், பிற ஓட்டு மீன்கள், காஸ்ட்ரோபாட்கள் என்னும் வயிற்றுக் காலிகள், மட்கும் பொருள்கள் ஆகியன இதன் முக்கிய உணவுகள். தொடக்கத்தில் விலங்கு மிதவை உயிரிகளை மட்டுமே உண்ணும்.

சிறிது வளர்ந்த பிறகு, பூச்சி இலார்வாக்கள், இலைப்பாசி மற்றும் காய்கறிகளை உண்ணும். பெரிய மீன்கள், இழை ஆல்கா, மேக்ரோ தாவரங்கள் மற்றும் மிதவை உயிரிகளை உண்ணும். புழுக்கள், இறால்கள் மற்றும் பூச்சி இலார்வாக்களும் கரிமீனுக்கு உணவாகும்.

இம்மீன் 19 மி.மீ. வளர்ந்த பிறகு விலங்கு மிதவைகளை உண்ணும். மேலும் வளரும் போது, தாவர நுண்ணுயிரிகள், காய்கறிப் பொருள்கள் போன்ற இலைப் பாசிகளுக்கு மாறும். தீவனப் பழக்கத்தைப் புரிந்து கொண்டால் கரிமீன் வளர்ப்பில் வெற்றி பெறலாம்.

கூண்டு வளர்ப்பு மீன்களின் தன்மைகள்

கூண்டு முறையில் வளர்ப்பு மீன்கள், விவசாயிகளுக்குப் பல வழிகளில் நன்மைகளைச் செய்வதாக இருக்க வேண்டும். இவ்வகையில் கரிமீன், அனைத்து உண்ணியாக, அதிகத் தாங்குதிறன் மிக்கதாக, திறமையான உணவு மாற்றுத்திறன் கொண்டதாக, வேகமாக வளர்வதாக, தரமான விதை மீன்கள் கிடைப்பதாக, சந்தையில் நல்ல விலைக்கு விற்பதாக அமைந்துள்ளது.

கூண்டுமுறை வளர்ப்பு

கூண்டுமுறை மீன் வளர்ப்புக்கு, நிலையான கூண்டுகள், மிதக்கும் கூண்டுகள், நீரில் மூழ்கும் கூண்டுகள் உட்பட நான்கு வகைக் கூண்டுகள் உள்ளன. கரிமீன் வளர்ப்புக்கு மிதக்கும் கூண்டுகளே நல்லது.

கூண்டுச் சட்டமும் வலைகளும்

பொதுவாகப் பயன்படும் உயர் அடர்த்தி பாலி எத்திலீன் (HDPE), கால்வனைஸ் இரும்புக் குழாய்கள், பிவிசி குழாய்கள், கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்புச் சட்டங்களுடன் ஒப்பிடும் போது HDPE சட்டங்களின் விலை அதிகம்.

எபோக்சி பூசப்பட்ட கால்வனைஸ்ட் இரும்புச் சட்டங்களின் விலை குறைவு. அதனால், சிறிய குழுக்கள் மற்றும் மீனவர்களுக்கு இவை ஏற்றவை.

இதைப் போல, பல்வேறு வலைகளில், சடை மற்றும் எச்.டி.பி.இ. முறுக்கு வலைகள் வளரும் கட்டத்துக்கு மிகவும் ஏற்றவை. 2-5 மீட்டர் உயரம், 2 மீட்டர் விட்டமுள்ள எச்.டி.பி.இ. வலைகள், திறந்தவெளி நீரில் கரிமீன்களை  வளர்க்கப் பயன்படுகின்றன.

கூண்டுகளின் அமைப்பு

இயற்கை நீர்நிலையில் கூண்டு வளர்ப்பைச் செயல்படுத்து முன், நீரின் தரம், நீரின் ஆழம், நீரோட்டம் ஆகிய மூன்று விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீரின் தரம்: கரைந்த ஆக்ஸிஜன், பி.எச், அம்மோனியா, CO2, N மற்றும் P இன் வெவ்வேறு வடிவங்கள் போன்ற நீரின் தர அளவுகள், வளர்ப்புக்கு ஏற்ற வரம்புக்குள் இருக்க வேண்டும்.

நீரின் ஆழம்: சேறு மற்றும் வண்டலில் இருந்து பாதுகாக்க, கூண்டுக்குக் கீழே குறைந்தது ஒரு மீட்டர் ஆழத்துக்குத் தெளிவான நீர் இருக்க வேண்டும். எனவே, கூண்டுகளை ஆழமான பகுதிகளில் வைக்க வேண்டும்.

நீரோட்டம்: கூண்டுமுறை மீன் வளர்ப்பை இயல்பான நீரில் சிறப்பாகச் செய்ய முடியும் என்றாலும், நொடிக்கு 10-20 செ.மீ. நீரோட்டம் இருப்பது சிறந்தது. இந்தக் குறைந்தளவு நீரோட்டம் மீன்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வழங்குவதை உறுதி செய்யும். மேலும், கூண்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நீர்ப் பரிமாற்றம் நிகழவும் ஏதுவாகும்.

கூண்டுகளில் உருவாகும் திடக் கழிவுகளை அகற்றவும் நீரோட்டம் அவசியம். பல ஆய்வுகளின் கூற்றுப்படி, கூண்டுமுறை மீன்கள் நன்கு வளர்வதற்கு, நீரோட்டத்தின் வேகம் நொடிக்கு 40 செ.மீ.க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நீரோட்ட வேகம் அதிகமாக இருந்தால், உணவின் பெரும்பகுதி வெளியேறி விடும். மீன்கள் தொடர்ந்து நீந்த வேண்டும் என்பதால் அவற்றின் ஆற்றல் வீணாகும். கூண்டின் சரியான வடிவம் சிதைக்கப்படும்.

கூண்டு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை

சரியான இடத்தேர்வு. சரியான அளவில் இருப்பு அடர்த்தி. தரமான, சத்தான உணவு. கூண்டுகளை அவ்வப்போது கண்காணித்தல் மற்றும் சுத்தம் செய்தல். இவை கரிமீன் வளர்ப்பில் வெற்றியைப் பெற உதவும். கூண்டின் நிலையான தன்மையை உறுதிப்படுத்தும்.

திறந்த நீர்க் கூண்டுகளில் எட்ரோப்ளஸ் கலாச்சாரத் திறன்

கேரளத்தில் இப்போது கரிமீன் வளர்ப்பு, பாரம்பரியமான பொக்காலி என்னும் நெல் வயல்களில் சிறியளவில் நடந்து வருகிறது. இதில் கிடைக்கும் மொத்த மகசூலில் 20% கரிமீன் ஆகும்.

கரிமீன் பண்ணையம் ஆந்திரம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் சிறியளவில் உள்ளது. அடர்த்தி மிகுந்த கூண்டு வளர்ப்பு முறைக்குக் கரிமீன் பொருத்தமாக உள்ளது.

திறந்த நீர்க் கூண்டுகளில் 130 நாட்களில் சராசரியாக 127 கிராம் எடையை அடையும் கரிமீன், குளம் வளர்ப்பில் 120-130 கிராம் எடையை 6-8 மாதங்கள் ஆகும். 10-12 மாதங்களில் 250 கிராம் மற்றும் அதற்கு மேலும் வளரும்.

திறந்த நீர்க் கூண்டு வளர்ப்பில் மீன்கள் அதிக வளர்ச்சியை அடைவதற்குக் காரணம், இங்கே இனப்பெருக்க வேலையே இல்லை என்பது தான்.

கரிமீன் குதிக்காமலும் மென்மையாகவும் இருப்பதால், அறுவடையின் போது கூண்டு வலை சேதமாவதில்லை. உடல் வடிவம் தட்டையாக இருப்பதால், கூண்டுகளில் இருந்து தப்பிச் செல்ல முடிவதில்லை. 

கரிமீன் வளர்ப்புக் கூண்டுகளின் பெரிய கண்ணிகள் உள்ள வலைகளைப் பயன்படுத்தலாம். வலையின் பெரிய கண்ணிகள் சிறந்த நீர் வருவாய்க்குக் காரணமாக உள்ளன. கரிமீன், மூழ்கிய பொருள்களின் மீது வளரும் உயிர் மென்படலத்தை வாயால் சுரண்டித் தின்னும்.

இந்தப் பழக்கத்தால் கூண்டு வலைக் கண்ணித் துளைகள் சுத்தமாகும். இதனால், கூண்டு வலைகளில் பாசி படிதல் குறையும் மற்றும் சரியான நீர்ச் சுழற்சியை எளிதாக்கும்.

இருப்பு வைத்தல்: கூண்டுகளில் பெரிய மீன் விதைகள் மற்றும் அதிக இருப்பு அடர்த்தியைக் கொண்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். 6-8 மாதங்களில் 200-250 கிராம் அளவிலான விற்பனை எடையை அடைய 30-50 கிராம் அளவுள்ள மீன் விதைகளை இருப்பு வைப்பது பொதுவான நடைமுறை. பெரிய மீன் விதைகளை இருப்பு வைப்பதால் பிழைப்புத் திறன் பாதிக்கப்படுவதில்லை.

உணவளித்தல்: உள்நாட்டில் கிடைக்கும் கடலைப் புண்ணாக்கு, தவிடு, மரவள்ளிக் கிழங்கு மாவு, மீன் தூள், வேக வைத்த சிப்பி இறைச்சி, சமைத்த அரிசி, காய்கறிக் கழிவுகள், கோதுமை மாவு, கால்நடைத் தீவனம் போன்றவற்றை உணவாக இடலாம்.

தினமும் இருவேளை, உடல் எடையில் 10% அளவுக்கு உணவைத் தர வேண்டும். கூண்டுக்குள் வைக்கப்பட்ட உணவுத் தட்டுகளில் தீவனத்தை இடலாம். கரிமீனுக்கு, 4,000-5,000 கிலோ/ கலோரி ஆற்றல், 30-32% புரதம், 6-8% கொழுப்பு, 30-40% மாவுச்சத்துத் தேவை.

அறுவடை: மிதக்கும் கூண்டுகளை வசதியான இடத்துக்கு இழுத்துச் சென்று, தேவையின் அடிப்படையில் முழு அல்லது பகுதி அறுவடை மேற்கொள்ளலாம்.

கூண்டு முறை வளர்ப்பில் கிடைக்கும் அதிக உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியை அதிகரிப்பதில், கரிமீன் வளர்ப்பு முக்கியப் பங்கைப் பெற முடியும். கேரளத்தில் கரிமீனுக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளது.

மேலும், ஆந்திரம், தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் நல்ல தேவை உள்ளது.

குறைந்த முதலீடு மற்றும் குறைந்த நிலப்பரப்பே போதும் என்பதால், சிறிய அளவில் மீன் வளர்ப்போர் மாற்று வருமான ஆதாரத்தை அடையக் கரிமீன் வளர்ப்பு ஏற்றது. பொருளாதார நோக்கில் பார்த்தால், கூண்டு முறை வளர்ப்பு என்பது, அதிக வருவாய் மற்றும் மிகக் குறைந்த கரியுமிழ்வைக் கொண்ட சிறந்த விவசாய முறையாகும்.


B.RAMJI

பா.இராம்ஜி,

மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி. முனைவர் சா.ஆனந்த், ச.ஜெயப்பிரகாஷ் சபரி,

வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!