செய்தி வெளியான இதழ்: மார்ச் 2021
கடந்த 25 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்படும் கரிம அமிலம், உணவுப் பொருள் மற்றும் உணவு மூலப்பொருள் பதப்படுத்தலில் பயன்பட்டு வருகிறது. தற்போது திலேப்பியா மற்றும் இறால் தீவனத் தயாரிப்பில் அதிகளவில் பயன்படுகிறது. மீன் தீவன உற்பத்தியில் இதற்கு முன், நுண்ணுயிர்க் கொல்லி (ஆன்ட்டிபயாட்டிக்) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. இதனால், மக்களுக்கும் சூழலுக்கும் தீங்கு நேர்வதால், தற்போது தடை செய்யப்பட்டு விட்டது. எனவே, இதற்குப் பதிலாக, கரிம அமிலம் மீன் தீவன உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
தீவனத் தயாரிப்பில் பயன்படும் கரிம அமிலங்கள்
ப்ரப்பியானிக் அமிலம், சார்பிக் அமிலம், பென்சோயிக் அமிலம், ஃபியூட்டிரிக் அமிலம், லாக்டிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஃபியூமரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியன மீன் தீவன உற்பத்தியில் பயன்படுகின்றன. கால்சியம் ப்ரப்பியோனேட், பொட்டாசியம் சார்பேட் மற்றும் சோடியம் பென்சேயேட் ஆகியன கரிம அமில உப்புகள் ஆகும்.
கரிம அமிலம் பயன்படுத்தக் காரணம்
ஐரோப்பிய நாடுகளில் மீன் தீவனத் தயாரிப்பில் நுண்ணுயிர்க் கொல்லியைப் பயன்படுத்துவது 2006 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டு, கரிம அமிலப் பயன்பாடு நடைமுறைக்கு வந்தது. இந்த அமிலம் நோய்க் கிருமிகளை அழிப்பதுடன், மீன்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சிட்ரிக் அமிலச் சுழற்சி, வளர்சிதை மாற்றத்தின் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்து, சக்தி மூலக்கூறுகளான ATP உற்பத்தியாக உதவுகிறது.
தீவனப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களை, பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்க, பென்சோயிக், ஃபார்மிக், லாக்டிக் மற்றும் ப்ரப்பியானிக் போன்ற கரிம அமிலங்கள் பயன்படுகின்றன. இவை உணவு மூலம் பரவும் நோய்க் கிருமிகளை அழிக்கின்றன.
கரிம அமிலத்தால் ஏற்படும் நன்மைகள்
கரிமல அமிலச் சேர்க்கையால், மீன் தீவனத்தின் தரம் மேம்படுகிறது. இதனால், சத்துகளின் அளவு உயர்வதுடன், நீண்ட நாட்கள் வரை தீவனம் கெடாமல் உள்ளது. இந்தத் தீவனம், மீன்களின் குடலில் இருக்கும், நோய்க் கிருமிகளை அழித்து, செரிக்கும் திறனைக் கூட்டுகிறது. இதனால், மீன்களின் வளர்ச்சியும் கூடுகிறது.
கரிம அமிலம் கலவாத தீவனம், பூஞ்சைத் தொற்றால் எளிதில் பாதிக்கப்படும். ஆனால், கரிம அமிலம் கலந்த தீவனம், பூஞ்சைத் தொற்றால் பாதிக்காமல் இருப்பதால், நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். ஒருவகைக் கரிம அமிலம் அல்லது இருவகைக் கரிம அமிலங்கள் மீன் உணவில் சேர்க்கப்படும்.
நோய்க்கிருமிகளை அழிப்பதில் கரிம அமிலத்தின் பங்கு
கரிம அமிலம் கலந்த தீவனம், மீனின் இரைப்பையில் உள்ள கார அமிலத் தன்மையை, <4.5 எனக் குறைக்கிறது. இதனால், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகள் வாழ முடியாமல் இறக்கின்றன. அதாவது, கரிம அமிலம் பாக்டீரியாவின் செல் சுவரில் நுழைந்து புரோட்டானை வெளி விடுகிறது. இதனால், பாக்டீரியாவில் சீரான கார அமிலத் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே, புரோட்டானை வெளியேற்றிக் கார அமில நிலையைச் சீராக்க முயலும் பாக்டீரியாக்கள், அதற்காக அதிக ஆற்றலைச் செலவிடுவதால் இறந்து விடுகின்றன.
கரிம அமிலம் கலந்த இறால் தீவனத் தயாரிப்பு
நன்னீர் இறாலுக்கு 1% கரிம அமிலம் கலந்த தீவனத்தைக் கொடுத்த போது, விப்ரியோ என்னும் பாக்டீரியாவை எதிர்க்கும் ஆற்றல் உருவானது தெரிய வந்தது.
கரிம அமிலம் கலந்த மீன் தீவனத் தயாரிப்பு
கரிம அமிலம் மற்றும் OTC (Oxytetracyclene) கலந்த தீவனத்தை, சிவப்புத் திலேப்பிய மீனுக்குக் கொடுத்து நிகழ்த்திய ஆய்வில், ஸ்டெப்டோ காக்கஸ் பாக்டீரியாவுக்கு எதிராக 22 நாட்கள் மீன் உயிருடன் இருந்தது. மேலும், கரிம அமிலம் கலந்த தீவனத்தை உண்ட மீனின் உடலில் செரிப்புத் தன்மையும், பாஸ்பரசும் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.
தீவனத் தயாரிப்பு (ஒரு கிலோ கிராம்)
1.5% அளவில் கரிம அமிலம் கலந்த தீவனத்தை, திலேப்பிய மீன் குஞ்சுகளுக்குக் கொடுத்து நிகழ்த்திய ஆய்வில், 100% பிழைப்புத் திறன் இருந்தது தெரிய வந்தது.
தீவனத் தயாரிப்பு (ஒரு கிலோ கிராம்)
நுண்ணுயிர்க் கொல்லியால் தீங்கு நேர்கிறது. கரிம அமிலத்தால் சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு நன்மை கிடைக்கிறது. கரிம அமிலம், மீன் குடலில் நோய்த் தொற்றை உருவாக்கும் கிருமிகளை அழித்து நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளர உதவுகிறது. கரிம அமிலம் சேர்ந்த தீவனத்தை உண்ணும் மீன் தசையில் புரதம் அதிகமாக உள்ளது. எனவே, மீன் தீவனத் தயாரிப்பில் கரிம அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இதனால், மீன்களின் வளர்ச்சியும் தரமும் வருவாயும் உயரும்.
ஹ.மணிமாறன்,
பு.சிதம்பரம், பா.யுவராஜன், க.விஜய், டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி,
பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.