அதிக இலாபத்தைத் தரும் வாள்வால் மீன் வளர்ப்பு!

PD_Vawaal meen

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021

த்திய அமெரிக்காவில் வடக்கு மெக்சிகோ மற்றும் மேற்குப் பகுதியில் காட்டிமேலா மற்றும் ஹாண்டுரசைத் தாயகமாகக் கொண்ட வாள்வால் மீன், உலகெங்கிலும் பரவலாகக் காணப்படும் பிரபலமான வெப்ப மண்டல மீனினமாகும். இதன் அறிவியல் பெயர் ஜிப்போஃபோரஸ் ஹெல்லெரி (Xiphophorus hellerii). இது போயிசிலிடே குடும்பத்தைச் சார்ந்தது. பிளாட்டி மீனைப் போலவே இருக்கும் இந்த மீனின் வாலானது, ஒரு வாளைப் போல நீண்டிருப்பதால், வாள்வால் மீன் எனப்படுகிறது.

வாள்வால் மீன் பிளாட்டியுடன் நெருங்கிய தொடர்புடையது. பிளாட்டியைப் போலவே, மரபணு மற்றும் மருத்துவ ஆய்வுகளிலும் பரவலாகப் பயன்படுகிறது. முதலில் ஒவ்வொரு பக்கத்திலும் சிவப்புப் பட்டையுடன் கூடிய பச்சை நிறத்தில் இருந்த இம்மீன், இப்போது தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் மூலம் பல நிறங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண் மீன் 5 முதல் 8 செ.மீ. வரையிலும், பெண் மீன் 12 செ.மீ. வரையிலும் வளரும்.

வாள்வால் மீன் வகைகள்

பச்சை வாள்வால் மீன்: இந்த மீன்கள் இப்போது வளர்க்கப்படும் வாள்வால் மீன் வகைகளின் மூதாதை இனமாகும்.

அன்னாசி வாள்வால் மீன்: மிகவும் பிரபலமான இந்த வாள்வால் மீன்களின் நிறமானது, மஞ்சளில் இருந்து அடர் சிவப்பு நிறம் வரை இருக்கும். நிறமிகள் நிறைந்த உணவை அளிப்பதன் மூலம் அன்னாசி வாள்வால் மீனின் நிறத்தை அடர் தோற்றத்துக்கு உயர்த்தலாம்.

சிவப்பு வாக்லைர் வாள்வால் மீன்: இந்த மீனின் வால் துடுப்பின் மேல் மற்றும் கீழ்ப் பக்கத்தில் கருப்பு நிறத்தில் வாளைப் போன்ற அமைப்பு இருக்கும். உதடுகளும் கறுப்பாக இருக்கும்.

கறுப்புக்காலி கோவாள்வால் மீன்: இந்த மீன் ஆய்வகத்தில் உருவாக்கப் பட்டது. மேலும், இந்த மீனிலுள்ள கறுப்பு நிறத்துக்கான மரபணு, புற்றுநோய்க் கட்டிகளை உருவாக்கும் தொடர்புடையது.

செம்மறி ஆடு வாள்வால் மீன்: இந்த மீன் அசாதாரணமானது. ஏனெனில் இவ்வகை ஆண் மீனின் வால் துடுப்பில் வாளின் அமைப்பு இருப்பதில்லை. ஆயினும் இந்த ஆண் மீன்களை, கோனோபோடியம் மற்றும் பெரிய முதுகுத் துடுப்பை வைத்து, பெண் மீனிலிருந்து எளிதாக வேறுபடுத்த முடியும்.

மான்டெசுமா வாள்வால் மீன்: இவ்வகை மீனின் சிறப்பு, ஆணின் வாள் மற்ற மீன்களைப் போலக் கீழ்நோக்கி இல்லாமல் கிடைமட்டமாக இருக்கும். ஆண் மீன்களின் முதுகுத் துடுப்பு, பெண் மீன்களை விடப் பெரிதாக இருக்கும்.  

நீர்த் தரக் காரணிகள்

அலங்கார மீன்களுக்கு நீரின் தரம் மிக முக்கியமாகும். பொதுவாக நீர்த் தரக் காரணிகளின் அளவு விரும்பத் தகுந்த அளவுக்கு மேலே சென்றால், மீன்கள் அழுத்தம் அல்லது நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும். எனவே, நீர்த் தரக் காரணிகளின் மேலாண்மை அவசியம். அடிக்கடி நீரைப் பரிசோதித்து விரும்பத் தகுந்த அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். மீதமாகும் உணவு நீரில் சேர்வதால் அம்மோனியா வாயு அதிகமாகி மீன்கள் எளிதில் இறக்க நேரிடும். அதனால், உணவை அளவாக இட வேண்டும்.

இனப்பெருக்கம்

பெண் மீன் 5 செ.மீ. அளவில் வளரும் போது இனவிருத்திக்குத் தயாராகும். ஒரு ஆண் மீனுக்கு 2-4 பெண் மீன்கள் வீதம் விட வேண்டும். இம்மீன் 4-6 வாரங்களுக்கு ஒருமுறை குட்டிகளை ஈனும். 24-28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நன்கு வளர்ந்து இனப்பெருக்கம் செய்யும். நன்கு வளர்ந்த கத்திவால் மீன்களை இனப்பெருக்கத்துக்குத் தயாரிக்க வேண்டும். அதற்கு முதலில் ஆண் மற்றும் பெண் மீன்களை அடையாளம் காணுதல் அவசியம்.

இப்படி அடையாளம் காணப்பட்ட மீன்களைத் தனித்தனியாகப் பிரித்து, சத்துமிகு உணவுகளை வழங்க வேண்டும். குறிப்பாக, மண்புழு, இரத்தப்புழு, ரோட்டிப்ஃபர் போன்ற உயிர் உணவுகளை வழங்க வேண்டும். இதனால், இவை எளிதில் இன முதிர்ச்சி அடையும். இந்த மீன்களை இனப்பெருக்கம் செய்ய விடலாம்.

ஆண் மீன்கள் கோனோபோடியம் மூலம், பெண் மீனின் கருப்பைக்குள் விந்துவைச் செலுத்தும். இந்த விந்தணுக்களைப் பெண்மீன் தனது கருப்பையில் இருப்பு வைத்துக் கொள்ளும். இது கருவாக உருவாக 3-5 நாட்களாகும். ஒருமுறை கருவுற்ற பெண் மீனானது, ஆண் மீனுடன் சேராமலே 6-8 முறை குட்டிகளை ஈனும்.

ஈனும் நிலையில் உள்ள பெண் மீன்களை அவற்றின் அடிவயிற்றில் தென்படும் கரும் புள்ளியை வைத்து அறியலாம். இது கர்ப்பப்புள்ளி அல்லது கிராவிட் ஸ்பாட் எனப்படும். சினைக்காலம் 4-6 வாரங்களாகும். ஒரு கர்ப்பத்தில் 100-200 குட்டிகளை இடும்.

வாள்வால் மீன் தன் குட்டிகளை உணவாகக் கொள்ளும் தன்மை மிக்கது. எனவே, இனப்பெருக்க தொட்டியில் சிற்றிலைத் தாவரங்களைப் போட்டால்,  இளம் குஞ்சுகள் அவற்றில் மறைந்து எளிதாகத் தப்பித்துக் கொள்ளும். தாவரங்களுக்குப் பதிலாக இனப்பெருக்கப் பொறிகளையும் பயன்படுத்தலாம். குட்டிகளை ஈன்றதும் தாய் மீன்களை இனபெருக்கத் தொட்டியிலிருந்து வேறு தொட்டியில் சில நாட்கள் வைத்து நன்கு பராமரித்து மற்ற மீன்களோடு விட வேண்டும்.

இளம் குஞ்சுகளுக்கு உணவளித்தல்

வாள்வால் மீன் அனைத்துண்ணி ஆகும். இளம் குஞ்சுகளின் வாய் சிறிதாக இருக்கும், எனவே, அவற்றுக்குத் தொடக்கத்தில் இன்புசோரியா, ஆர்டீமியாக் குஞ்சுகள், ரோட்டிஃபர் போன்ற உயிர் உணவுகளை வழங்க வேண்டும். இந்த உணவுகளின் அசைவுகள் இளம் மீன் குஞ்சுகளை ஈர்ப்பதால் அவற்றை எளிதில் உண்ணும்.

இளம் குஞ்சுகளுக்குத் தினமும் 4-5 முறை உணவளிக்க வேண்டும். சரியாகப் பராமரித்து வந்தால், பிறந்த குட்டிகளில் 60-75% குட்டிகளைக் காப்பாற்றி விடலாம். மூன்று மாதங்களில் குட்டிகள் விற்பனைக்குத் தயாராகி விடும். இந்த மீன்கள் அதிக விலைக்குப் போவதால், இவற்றை அதிகமாக உற்பத்தி செய்தால் உறுதியாக அதிக இலாபத்தை ஈட்டலாம்.


PB_S. ANAND

முனைவர் சா.ஆனந்த்,

ஜெயப்பிரகாஷ் சபரி, வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பவானிசாகர், ஈரோடு.

ச.சுதர்சன், டாக்டர் எம்.ஜி.ஆர்.மீன்வளக் கல்லூரி, நாகை.

சு.பாரதி, கண்காணிப்பு ஆலோசகர், கடலோர மீன்வளர்ப்பு நிலையம், சென்னை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!