செய்தி வெளியான இதழ்: ஜூலை 2021
மக்களின் உடல் நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல், பசிக்கு உணவு என்னும் உற்பத்திப் பெருக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட நவீன வேளாண்மை மீதான தாக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்து வருகிறது. ஏனெனில், நச்சு மருந்து, வேதி உரங்கள் நிறைந்த வேளாண்மை மற்றும் விளைபொருள்களால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுவது உண்மையாகி இருப்பதால், முன்னோர்கள் கடைப்பிடித்த இயல்பான வேளாண்மையை நோக்கிய பார்வை மக்களிடம் அதிகமாகி வருகிறது.
அதனால், மீண்டும் தொழுவுரம், தழையுரம் போன்றவற்றை விவசாயத்தில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும், மட்கும் கழிவுப் பொருள்களையும் சத்துள்ள இயற்கை உரமாக மாற்றிப் பயிர்களுக்கு இடும் முறையும் பரவலாகி வருகிறது. இதனால், கழிவுகள் பயனுள்ள உரமாக மாறுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் தவிர்க்கப்படுகிறது.
இவ்வகையில், மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத்தைச் சார்ந்த நிபோங்தெபால் அரசு தமிழ்ப்பள்ளி, உணவுப் பொருள்களில் இருந்து கிடைக்கும் கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை உரத்தை உருவாக்கியுள்ளது. இந்த உரம் தயாரிப்பு, அதில் சேர்க்கப்படும் கழிவுப் பொருள்கள் ஆகியவற்றைப் பற்றி, இந்தப் பள்ளியின் தமிழாசிரியர் ஞா.மோகன் விளக்கமாகக் கூறுகிறார்.
“வாழைப்பழத் தோல், சோயாச்சக்கை, உமி ஆகிய மூன்று பொருள்களின் சேர்க்கையே இந்த உரம். இரசாயனம் எதுவும் இந்த உரத்தில் கலக்கப்படவில்லை. இதைப் பூச்செடிகள், காய்கறிச் செடிகள் மற்றும் பழமரங்களுக்கு உரமாக இடலாம்.
வாழைப்பழத் தோலைக் காய வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, உமியையும் அரைக்க வேண்டும். சோயாச் சக்கையையும் காய வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து ஒன்றாகக் கலந்து நீரை ஊற்றிப் பிசைந்து வட்ட வடிவில் தயாரித்துக் கொள்ளலாம். அல்லது தூள் உரமாகவும் பயன்படுத்தலாம்.
இந்த உரத்தை இடுவதால், தாவரங்கள் தமக்குத் தேவையான நீரையும், சத்துகளையும் விரைவாக எடுத்துக் கொள்ளும். எனவே, இதைச் செடிக்கு 500 கிராம் வீதம் இடலாம். பழமரத்துக்கு மரத்தின் வளர்ச்சியைப் பொறுத்து நிதானமாக இடலாம். எந்தக் கெடுதலும் வராது.
வெள்ளரிக் கொடிகளுக்கு இந்த உரத்தை இட்ட நண்பர், கொடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருந்ததாகக் கூறினார். அதாவது, வெள்ளரி இலைகள் மிகவும் பெரியதாகவும், நிறம் மாறாமல் இருந்ததாகவும் குறிப்பிட்டார். இதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைத்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், வீடுகளில் தோட்டம் போட்டுள்ள மக்கள் இந்த உரத்தைப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால், அவர்கள் பக்க விளைவு இல்லாத மற்றும் சத்தான காய்களை உற்பத்தி செய்து உணவில் சேர்த்து வருகின்றனர்.
கழிவுகளை உரமாக மாற்றுவதன் மூலம், கழிவுகளைச் சிறந்த முறையில் பயன்படுத்த முடிகிறது. இந்தக் கழிவுகளை உரமாக மாற்றி மண்ணில் இட்டால், சுற்றுச்சூழலையும் சுகாதாரத்தையும் காக்கலாம். வீட்டுத்தோட்டம் வைத்துள்ளோர், இந்தக் கழிவுகளைக் கொண்டு மிக எளிதாகத் தங்களுக்கு வேண்டிய இயற்கை உரத்தை அவ்வப்போது தயாரித்துக் கொள்ளலாம்.
இதனால் வீட்டுத் தோட்டத்துக்கான உரச் செலவைக் குறைத்துச் சத்தான காய்கறிகளை விளைய வைக்கலாம். விரைவில் எங்கள் பள்ளியிலேயே இந்த இயற்கை உரத்தை உற்பத்தி செய்து தேவைப்படும் மக்களுக்கு விநியோகம் செய்ய உள்ளோம்’’ என்றார்.
பசுமை