கடல் மீன்வளத்தைப் பெருக்கும் செயற்கை பவளப் பாறைகள்!

PB_Artificial corals

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021

வளப் பாறைகள் கடல் உயிரினங்களின் வாழ்விடமாகவும், மற்ற உயிரினங்களிடம் இருந்து அவற்றைப் பாதுகாக்கும் பகுதியாகவும் விளங்குகின்றன. அதனால், கடல் உயிரினங்கள் பவளப் பாறைகளைச் சார்ந்தே வாழ்கின்றன. மீன்பிடிப்பு முறைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தாலும், கடல்வளச் சூழலுக்கும் மீன்வளத்துக்கும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இழுவலை, கரைவலை எனப்படும் ஆற்றல் மிகுந்த மீன்பிடிப்பு முறைகள் கடல் மட்டத்தில் இயக்கப்படுவதால் அங்கே வாழும் அனைத்து உயிரினங்களும், இன முதிர்ச்சியடையா மீன்களும் பாதிக்கப்படுகின்றன.  இவற்றுள் பவளப் பாறைகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றன. 

பவளப் பாறைகள் பாதிக்கப்படுவதால் அவற்றைச் சார்ந்து வாழும் மீன்களும் பாதிக்கப்படுகின்றன. இவ்வகை மீன்பிடிப்பு முறைகளால் பவளப் பாறைகள் முற்றிலும் அழிந்து வருவதால் மீனினங்களும் அழியும் நிலையில் உள்ளன. 

கடல் வளங்களை மேம்படுத்தவும், கடல் உயிரினங்களைக் காக்கவும், செயற்கை பவளப் பாறைகள் பயன்படுகின்றன. ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மீன்களைக் கவர்வதற்காகச் செயற்கை முறையில் பொருள்களை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர்.

செயற்கை பவளப் பாறைகளின் வரலாறு

உலகெங்கிலும் உள்ள கடல் நாடுகளிடையே செயற்கை நீர்வாழ் வாழ்விடங்கள் மீதான ஈர்ப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆறு கண்டங்களில் உள்ள நாற்பது நாடுகளும் இப்போது மேம்பட்ட தொழில் நுட்பங்களை இதற்காகப் பயன்படுத்தி வருகின்றன. செயற்கை பவளப் பாறைகள் மற்றும் மீன் திரட்டும் சாதனங்கள் மூன்று நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

ஜப்பானில் வணிக நோக்கில் மீன் பிடிக்கவும், அமெரிக்காவில் பொழுதுபோக்கு நோக்கில் மீன் பிடிக்கவும், இந்தியா உள்ளிட்ட ஒருசில ஆசிய நாடுகளில் சிறியளவிலான மீன் பிடிப்புக்கும் பயன்படுத்தப் படுகின்றன. சரியான முறையில் உருவாக்கப்பட்ட பவளப் பாறைகள் குறுகிய காலத்தில் சிறந்த மீன்பிடி தளங்களாக மாறுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிக நோக்கில் சூரை மீன் பிடித்தலில் மீன் திரட்டும் சாதனங்கள் திறம்படப் பயன்பட்டுள்ளன.

மீன்வளத்துக்கான செயற்கை மீன் வாழ்விடத் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதில் ஜப்பான் உலகத்தில் முன்னிலை வகிக்கிறது. அங்கே 17 ஆம் நூற்றாண்டில் ஒரு பாறையைக் கடலில் விட்டதன் மூலம் பழமையான செயற்கை பவளப் பாறைகள் உருவாக்கப்பட்டன. சிறப்புப் பொருளாதார மண்டல அறிவிப்புக்குப் பிறகு, தொலைவிலுள்ள மீன்பிடி தளத்திலிருந்து மீன் உற்பத்தி தொடர்ச்சியாகக் குறையைத் தொடங்கியது.

செயற்கை பவளப் பாறைகள் மீன் உற்பத்தியைப் பெருக்குவதுடன், மீன் வளங்களைக் காப்பதற்கும் வழிவகை செய்கிறது. ஜப்பான் இப்போது மிகவும் தீவிரமான மற்றும் தொழில் நுட்ப நோக்கில் மேம்பட்ட செயற்கை பவளப்பாறைத் திட்டத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் செயற்கை பவளப் பாறையை உருவாக்கும் தொழில் நுட்பம் பாரம்பரிய மீனவர்களால் உருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், செயற்கை பவளப் பாறைகளின் மூலம் மீன்வளத் திறனைப் பெருக்க, அரசுசாரா நிறுவனங்கள் முயற்சியை மேற்கொண்டன.

திருவனந்தபுரம், கொச்சி, இலட்சத்தீவு, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், செயற்கை பவளப் பாறைகளின் மூலம் மீன்வளத்தைப் பெருக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளன.

கடலின் ஆழம், கடல் அடிமட்டத்தின் இயற்கைத் தன்மை மற்றும் மீன்வளத்தைப் பொறுத்து, செயற்கை பவளப் பாறைகள் வடிவமைக்கப்பட்டன. முக்கோண வடிவ, செவ்வக வடிவ, வட்ட வடிவச் செயற்கை பவளப் பாறைகள் மற்றும் கான்கிரீட் படுக்கைகள், பழைய டயர்கள் போன்றவை, செயற்கை பவளப் பாறைகளாக இந்தியாவில் பயன்படுகின்றன.

செயற்கை பவளப் பாறைகளின் பயன்பாடு

கடலில் உருவான இயற்கை பவளப் பாறைகள் சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்விடம் அழிக்கப்படுதல், காலநிலை மாற்றம், மீன்வளம் சுரண்டப்படுதல், அதிக ஆற்றலுள்ள மீன்பிடிப்பு முறைகள் மற்றும் பவளப் பாறைகளில் உள்ள கால்சியம் சுரண்டப்படுதல் போன்ற காரணங்களால் இயற்கை பவளப் பாறைகள் அழிந்து வருகின்றன.

செயற்கை பவளப் பாறைகளை அமைப்பதன் மூலம், பவளப் பாறைகளை சார்ந்து வாழும் மீன்களைப் பெருக்குவதுடன், மீன்பிடித் திறனையும் கூட்டலாம். கைத்தூண்டில், கம்புத்தூண்டில், ஆயிரங்கால் தூண்டில் போன்ற மீன்பிடிப்பு முறைகள் செயற்கை பவளப் பாறைகள் அமைந்துள்ள இடங்களில் மீன் பிடிப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பொருள்களும் தேர்ந்தெடுக்கும் முறைகளும்

இரண்டு வகைகளில் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கலாம். அதாவது, இயற்கையாகக் கிடைக்கும் பாறைகள், மரக்கட்டைகளைக் கொண்டு அமைப்பது. அடுத்து, நாம் உருவாக்கும் கான்கரீட், ரப்பர், டயர்கள் போன்ற பொருள்களைக் கொண்டு அமைப்பது. இந்தச் செயற்கை பவளப் பாறைகளை அமைக்கப் பயன்படும் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேர்ந்தெடுக்கப்படும் பொருள்களின் அடிப்படையில் மீன்களை அதிகளவில் ஈர்க்கலாம். செயற்கை பவளப் பாறைகளின் மேற்பரப்புத் தன்மை, அதன் வடிவம், அளவு போன்றவையே இந்தப் பாறைகளின் வெற்றியை முடிவு செய்யும். மேலும், கடலில் இயற்கையாக உருவான பவளப் பாறைகளுக்கு எவ்விதக் கெடுதலும் நிகழா வண்ணம், செயற்கைப் பாறைகளை அமைக்க வேண்டும்.

செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கப் பயன்படும் பொருள்கள், எளிதில் கையாளும் தன்மை, நிலைத்து நிற்கும் தன்மை, அதிக வாழ்நாள் திறன் ஆகிய மூன்று காரணிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றன.

நிறைகளும் குறைகளும்

கான்கிரீட், மரக்கட்டை, ரப்பர், டயர் போன்றவை, செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கப் பயன்படுகின்றன. இவ்வகைப் பொருள்களில் சில நிறைகளும் சில குறைகளும் உள்ளன.

கான்கிரீட்: கான்கிரீட் பொருள்கள் அதிக வாழ்நாள் திறன், நீருக்குள் நிலைத்து நிற்கும் தன்மை மற்றும் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ளன. ஆனால், இவற்றின் எடை அதிகமாக இருப்பதால், இவற்றைச் செயல்படுத்த ஆகும் செலவு அதிகமாகும். இவ்வகைச் செயற்கை பவளப் பாறைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

மரக்கட்டைகள்: பழங்காலம் முதலே மரப்பொருள்களை வைத்து, செயற்கை பவளப் பாறைகள் உருவாக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. மூங்கில் மரங்கள் மற்றும் பனைமரக் கட்டைகள் பவளப் பாறைகளை அமைக்க உதவுகின்றன.

மற்ற பொருள்களைக் காட்டிலும் இவை எளிதில் கிடைக்கக் கூடியவை. இவற்றின் எடை குறைவாக இருப்பதால் இவற்றின் உருவாக்கும் செலவு குறையும். ஆனால், இவை நுண்ணுயிரிகளால் எளிதில் பாதிக்கப்படுவதால், நெடுநாட்களுக்கு இருக்காது என்பது இதிலுள்ள குறையாகும்.

ரப்பர் டயர்கள்: இவை குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். எளிதில் கையாளலாம். அதிக நாட்களுக்குப் பயன்படும். ஆனால், பிற பொருள்களைக் காட்டிலும் குறைகள் நிறைய உள்ளன. அதாவது, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருள்கள், நச்சுப் பொருள்களை உருவாக்கும். மேலும் நீரினுள் நிலைத்து நிற்கும் தன்மை குறைவாகும்.

இயற்கை பவளப் பாறைகளைக் காட்டிலும் செயற்கை பவளப் பாறைகள் மீன்களை அதிகளவில் ஈர்க்கும்; இயற்கை பவளப் பாறைகளைப் போலவே மீன்களின் உணவிடமாக, வாழ்விடமாக, இனவிருத்தித் தளமாகப் பயன்படும்; கடல்வாழ் உயிர்களைப் பாதுகாத்து, அவற்றின் இருப்பிடமாகவும் இருந்து கடல் வளங்களைப் பெருக்குவதில் செயற்கை பவளப் பாறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


.மாரியப்பன்,

த.இரவிக்குமார், மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை,

மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!