பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!

பயறுவகைப் பயிர் uLu f8a2e7c5b4c8a93564ddf1f7f9cecd0d

குறைந்த செலவில் மகசூலைப் பெருக்குவதில் நுண்ணுயிர் உரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த உரங்களை, தானியப் பயிர்களுக்கு இட வேண்டியது, பயறுவகைப் பயிர்களுக்கு இட வேண்டியது என வகைப்படுத்தி உள்ளனர்.

இங்கே, பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

தழைச்சத்து நுண்ணுயிர் உரங்கள்

கண்ணுக்குத் தெரியாத திறன் மிக்க நுண்ணுயிர்கள் அடங்கிய கலவையே நுண்ணுயிர் உரமாகும்.

உர நிர்வாகத்தில் நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்தினால், மண்வளம் மேம்படுவதுடன், சுற்றுச் சூழலும் காக்கப்படும். முப்பது சதத் தழைச்சத்து சேமிக்கப்படும்.

சில நுண்ணுயிர்கள் தழைச்சத்தை நிலை நிறுத்துவதுடன், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலிக் அமிலம் போன்ற, பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்கின்றன. இதனால், அதிக வேர்கள், தூர்கள் மற்றும் இலைகள் தோன்றி, பயிர்கள் சிறப்பாக வளர்கின்றன.

தழைச்சத்தை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் உரம்

ரைசோபியம்: இது, பாக்டீரிய இனத்தைச் சார்ந்த நுண்ணுயிர் ஆகும். அவரைக் குடும்பப் பயிர்களுடன் கூட்டு வாழ்க்கை நடத்தி, பயிர்களின் வேர்களில் முடிச்சுகளை உருவாக்கி, காற்றில் இருக்கும் தழைச்சத்தை, வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தும்.

செயல்திறன்: ரைசோபியத்தை இட்டால் தழைச்சத்து உரத்தைச் சேமிக்கலாம்; 20 சத மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.

பயிர்களின் வேர்களில் இருந்து உண்டாகும் வேர்க் கசிவும், வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் உயிர்ப் பொருள்களும் மண்வளத்தை மேம்படுத்தும்.

பயிர் இரகங்களுக்கு ஏற்ற, பயிரிடப்படும் இடத்துக்கு உகந்த, ரைசோபிய இராசியைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறைகள்: பத்து கிலோ விதைகளுக்கு, ஒரு பொட்டல ரைசோபியம் (200 கிராம்) வீதம் பயன்படுத்த வேண்டும்.

இலை மட்கு மண் அல்லது கரித்தூளில் கலக்கப்பட்ட ரைசோபிய நுண்ணுயிரை, 200 மி.லி. அரிசிக் கஞ்சியில் கலக்க வேண்டும்.

இக்கலவை, எல்லா விதைகளிலும் ஒட்டிக் கொள்ளும் வகையில், நன்றாகக் கலக்க வேண்டும்.

இப்படிக் கலந்த விதைகளை முப்பது நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, உடனே விதைக்க வேண்டும்.

அனைத்துப் பயறுவகைப் பயிர்களுக்கும் ரைசோபியத்தைப் பயன்படுத்தலாம்.

மணிச்சத்து நுண்ணுயிர் உரங்கள்

பயிர் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியச் சத்துகளில் மணிச்சத்தும் ஒன்றாகும். தாவர வளர்ச்சிக்குத் தழைச்சத்தும்:

தாவரங்களின் முக்கியச் செயல்களான உணவுத் தயாரிப்பு, மலர், காய், கனி உற்பத்தி மற்றும் நல்ல விதைகளை உருவாக்க மணிச்சத்தும் தேவை.

மேலும், பயிர் வேர்கள் நன்கு வளர, திசுக்கள் நன்கு வளர மற்றும் தாவர இனப் பெருக்கத்துக்கும் மணிச்சத்து தேவை.

மண்ணில் மணிச்சத்தின் நிலை

நிலத்தில் இடும் மணிச்சத்தில் பெரும்பகுதி, பயிர்கள் நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாத, நீரில் கரையாத நிலைக்கு மண்ணில் மாற்றப்படுகிறது.

நாம் இடும் மணிச்சத்தில் 20-25 சதம் தான் பயிர்களுக்குக் கிடைக்கிறது. பெரும்பகுதி உரம் கரையாத நிலைக்கு மாற்றப்படுவதால், பயிர்களுக்குப் பயன்படாமல் வீணாகிறது.

பாஸ்போ பாக்டீரியா: இது, மண்ணில் கரையாத மணிச்சத்தைக் கரைக்கும் பாக்டீரியா ஆகும்.

இது, தனது செல்களில் இருந்து சுரக்கும் அங்கக அமிலங்கள் மூலம், கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கும்.

நிலத்தில் உள்ள கரையாத மணிச்சத்துக் கரைக்கப் படுவதால், பயிர்களுக்குக் கிடைக்கும் மணிச்சத்தின் அளவு அதிகமாகிறது.

இதனால், பயிர்கள் நன்கு வளர்ந்து அதிகமாகப் பூத்து, காய்களை, தானிய மணிகளை உற்பத்தி செய்யும். இதனால், மணிச்சத்து உரச் செலவில் சுமார் 25 சதம் குறையும்.

பயறுவகைப் பயிர்களுக்கு ரைசோபியத்துடன், பாஸ்போ பாக்டீரியாவை இணைத்து இடும் போது, வேர் முடிச்சுகள் அதிகளவில் உருவாகும். தழைச்சத்தை நிலை நிறுத்தும் அளவும் அதிகமாகும்.

மற்ற நுண்ணுயிர் உரங்களோடு பாஸ்போ பாக்டீரியாவைச் சேர்த்து இடும்போது, அந்த நுண்ணுயிர் உரங்களின் செயல் திறனும் அதிகமாகும்.

பாஸ்போ பாக்டீரியாவை இடும் போது, தானியங்களில் உள்ள புரதத்தின் தன்மையும், அளவும் அதிகமாகும்.

பயன்படுத்தும் முறைகள்: விதையுடன் கலத்தல்: இரண்டு பொட்டல (400 கிராம்) பாஸ்போ பாக்டீரியா, 400 மி.லி. அரிசிக் கஞ்சி கலந்த கலவையில், ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை நன்றாகக் கலக்க வேண்டும்.

பிறகு, இந்த விதைகளை அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நாற்றங்காலில் இடுதல்: ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றாங்காலில், நான்கு பொட்டலம் (800 கிராம்) பாஸ்போ பாக்டீரியாவை, 10 கிலோ தொழுவுரத்தில் கலந்து தூவ வேண்டும்.

வேர்களை நனைத்தல்: இரண்டு பொட்டலம் (400 கிராம்) பாஸ்போ பாக்டீரியாவை 40 லிட்டர் நீரில் கலக்க வேண்டும். இந்தக் கரைசலில், நாற்றுகளின் வேர்ப்பகுதி நனையும்படி 20 நிமிடங்கள் வைத்திருந்து நட வேண்டும்.

நடவு வயலில் இடுதல்: ஏக்கருக்கு நான்கு பொட்டலம் (800 கிராம்) பாஸ்போ பாக்டீரியா, 20 கிலோ தொழுவுரம் வீதம் எடுத்து நன்கு கலந்து, நடுவதற்கு அல்லது விதைப்பதற்கு முன் நிலத்தில் தூவ வேண்டும்.

வளர்ந்த பயிர்களுக்கு இடுதல்: வளர்ந்த பயிர்களுக்கு, குறிப்பாக, மரத்துக்கு 20 முதல் 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா, ஒரு கிலோ தொழுவுரம் வீதம் எடுத்து நன்கு கலந்து, வேர்ப் பாகத்தில் இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

ஏற்ற பயிர்கள்: அனைத்துத் தானியப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் மலைப்பகுதி பயிர்களுக்கு பாஸ்போ பாக்டீரியாவை இடலாம்.

ஆர்பஸ்குளார் மைக்கோரைசா: இது, வேர் உட்பூசண வகையைச் சேர்ந்த நுண்ணுயிர் உரமாகும்.

இந்தப் பூசணம், மணிச்சத்தை அதிகளவில் உறிஞ்சிப் பயிர்களுக்குத் தரும். மேலும், எல்லாப் பயிர்களின் வேர்களுடனும் கூட்டு வாழ்க்கை நடத்தும்.

குளோமஸ், ஜிகாஸ்போரா, அக்லாஸ்போரா, ஸ்குட்டலி யோஸ்போரா ஆகியன, மண்ணில் அதிகமாக இருக்கும் முக்கிய வேர் உட்பூசணங்கள் ஆகும்.

செயல் திறன்: மண்ணில் வாழும் ஆர்பஸ்குளார் மைக்கோ ரைசாவின் வித்துகள், ஏற்ற சூழ்நிலையில் முளைத்து நூலிழை வடிவில், பயிர்களின் வேர்களை நோக்கிப் பரவும்.

வேர்களை அடைந்ததும், வேரின் செல்களுக்குள் ஊடுருவிச் சென்று ஆஸ்பஸ்கியூல் மற்றும் வெசிக்கள் என்னும் சிறப்பு வடிவ அமைப்பை உருவாக்கும்.

அத்துடன், இவை வேரிலும், மண்ணிலும் அடர்ந்து பரவி வெகுதூரம் வரை சென்று மண்ணிலுள்ள மணிச் சத்தையும், இதர சத்துகளையும், நீரையும் உறிஞ்சி, அவற்றை, நேரடியாக வேரின் செல்களுக்கு வழங்கும்.

இதன் மூலம் வேர்களின் உறிஞ்சும் திறன் கூடுவதுடன், நூலிழைகள் பரவியுள்ள மண்ணின் அளவும் கூடும். மேலும், இப்பூசணம் வேரில் அடர்ந்து பரவுவதால் வேரைத் தாக்கும் நோய், பூசணம் மற்றும் நூற் புழுக்களின் தாக்கம் கட்டுப்படும்.

நன்மைகள்: ஆர்பஸ்குளார் மைக்கோரைசா வேர் உட்பூசணம் அனைத்துப் பயிர்களின் வேர்களுடன் இணைந்து கட்டாயக் கூட்டு வாழ்க்கை நடத்தும்.

பயிர் வேர்களில் இருந்து கொண்டு பயிர் வளர்ச்சிக்குத் தேவையான, மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம், சுண்ணாம்பு ஆகிய சத்துகளை, நிலத்தில் இருந்து எடுத்துப் பயிர்களுக்குக் கொடுக்கும்.

மணிச்சத்து உரச் செலவில் 25 சதம் குறையும். வேரைத் தாக்கும் பூசண நோய்களில் இருந்து பயிர்களைப் பாதுகாக்கும்.

மண்ணில் உள்ள நீரை, பயிர் வேர்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லும். பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பதால் 10-15 மகசூல் அதிகமாகும்.

வேர் முடிச்சுகள் உருவாதல், தழைச்சத்தின் நிலை நிறுத்தும் திறன் மேம்படும்.

ஏற்ற பயிர்கள்: காய்கறிப் பயிர்கள், பழவகைப் பயிர்கள், மரக்கன்றுகள், மலைத்தோட்டப் பயிர்கள் மற்றும் அனைத்து வகை நாற்றங்கால் பயிர்கள்.

பயன்படுத்தும் முறைகள்: நாற்றங்காலில் இடுதல்: சதுர மீட்டருக்கு 100 கிராம் வேர் உட்பூசணம் போதும். விதைக்கு முன் நாற்றங்காலில் 2-3 செ.மீ. ஆழத்தில் இட வேண்டும்.

நெகிழிப்பை நாற்றுகளுக்கு: ஒரு பைக்கு 10 கிராம் உட்பூசணம் போதும். மண் கலவையைத் தயார் செய்யும் போது, 1,000 கிலோ மண் கலவைக்கு, 10 கிலோ வேர் உட்பூசணம் வீதம் கலக்க வேண்டும்.


பயறுவகைப் பயிர் DR PARIMALA DEVI

முனைவர் ர.பரிமளாதேவி, முனைவர் சு.ப.மாரிமுத்து, முனைவர் அ.சுகன்யா, தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!