வாழை சாகுபடி!

வாழை

வாழையின் தாயகம் இந்தியாவாகும். இது, மூசேஸியே குடும்பத்தைச் சார்ந்தது. எளிதில் செரித்து உடனே சக்தியைத் தரும் வாழைப் பழங்களில் பல இரகங்கள் உள்ளன. வாழைப்பூ, தண்டு, காய், பழம் என, சிறந்த உணவுப் பொருள்களைத் தரும் வாழைமரம், மனித வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் இடம் பெறுகிறது.

இது, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக நோக்கில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், தேனி. ஈரோடு, கோவை, மதுரை, கடலூர், நெல்லை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் விளைகிறது.

பயன்பாடு

வாழை வேர்ச் சாம்பலை, தேனுடன் கலந்து உண்டால், நீரிழிவு, தொழுநோய், வயிற்றில் அமிலம் மிகுதல், இரத்தச்சோகை, சிறுகுடல் புழுக்கள் ஆகியன கட்டுப்படும். இந்த வேரை நறுக்கி நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால், இரத்தழுத்தம் கட்டுப்படும். வாழைத் தண்டுச் சாறு உடல் கழிவுகளை வெளியேற்றும். இந்தத் தண்டில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 அதிகளவில் உள்ளன.

மெல்லிய வாழை இலையை வைத்துக் கட்டினால் தீக்காயம் குணமாகும். பெரிய இலையில் தேனைத் தடவி, அதில் படுக்க வைத்தால் சிற்றம்மை, படுக்கைப் புண், தீக்காயம் குணமாகும். வாழையிலை, கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. அறுவடை செய்த வாழை மரங்களை நிலப் போர்வையாக இட்டால், களைகள் கட்டுப்படும்.

இரகங்கள்

தமிழகத்தில், பூவன், கற்பூரவள்ளி, மொந்தன், இரஸ்தாளி, கிரான்ட் நயன், நெய்ப்பூவன், பச்சநாடன், ரொபஸ்டா, செவ்வாழை, வயல் வாழை, கோ-1, உதயம், மட்டி, மலை வாழை, நேந்திரன் போன்ற இரகங்கள் விளைகின்றன. சிறுமலை, கீழ்ப் பழனிமலை, கொல்லிமலையில் மலைவாழை விளைகிறது. 1000- 3000 அடி உயரமுள்ள மலைகளில், இவ்வாழை நன்கு வளரும்.

பஞ்சாமிர்தம் செய்ய உகந்தது. குறைந்த நீர்ச்சத்து, கெட்டியான தோலுள்ள மலைவாழை சுவையாக இருக்கும். பழுத்து விட்டால் தாரிலிருந்து எளிதில் உதிரும். ஒரு குலை 10-15 கிலோ இருக்கும். இதில், 6-8 சீப்புகள், 72-96 காய்கள் இருக்கும்.

நட்டு 14 மாதங்களில் பலன் கொடுக்கும். இதை, முடிக்கொத்து, பியூசேரிய வாடல் நோய், தண்டுத் துளைப்பான், கிழங்குக் கூன்வண்டு, நூற்புழு, இலைப்புள்ளி நோய் ஆகியன தாக்கும்.

வெப்பநிலை

வாழை, மிதவெப்ப மண்டலப் பயிராக இருந்தாலும், வறண்ட பகுதி, மிதவெப்பப் பகுதி மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 2,000 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதியில் பயிரிடலாம். இலை உற்பத்தி மற்றும் காய் வளர்ச்சியில், வெப்ப நிலைக்கு முக்கியப் பங்குண்டு. 25-35 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் நல்ல மகசூல் கிடைக்கும்.

நாற்பதுக்கு மேலும், பத்து டிகிரி சென்டிகிரேடுக்குக் கீழுமுள்ள வெப்ப நிலையில் வாழை நன்கு வளராது. விருப்பாட்சி, சிறுமலை இரகங்களை மட்டும் கடல் மட்டத்தில் இருந்து 2,000 மீட்டர் உயரம் வரையுள்ள இடங்களில் பயிரிடலாம்.

ஆண்டுக்கு 1,700 மி.மீ. மழை பெய்யும் இடங்கள் வாழை சாகுபடிக்கு ஏற்றவை. நிலத்தில் நீர் தேங்கினால், பனாமா வாடல் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மண்வளம்

மிகக் குறைந்த மற்றும் சத்து மிகுந்த எல்லா மண்ணிலும் வாழை வளரும். சாகுபடிக்கு முன் மண்ணை ஆய்வு செய்ய வேண்டும். நிலத்தில், வடிகால் வசதியும், வளமும், ஈரப்பதமும் இருக்க வேண்டும்.

ஆழமான, சத்துகள் நிறைந்த, இருபொறை மண்ணில், 6-7.5 கார அமிலத் தன்மையுள்ள மண்ணில் நன்றாக வளரும். நீர் வடியாத, காற்றோட்டம் இல்லாத, சத்துக் குறைந்த நிலம், தரமான வாழை சாகுபடிக்கு ஏற்றதல்ல.

வாழை

நடவு முறைகள்

நிலம் தயாரித்தல்: நன்செய் நிலத்தில் எவ்வித உழவும் தேவையில்லை. லேசாக மண்ணைத் தோண்டி, நேர்த்தி செய்த கன்றுகளை நட்டு விடலாம். தோட்ட நிலத்தில் 2-4 முறை நன்கு உழ வேண்டும்.

படுகை நிலத்தை ஒரு அடி ஆழத்துக்கு மண் வெட்டியால் கொத்திவிட வேண்டும். மலைப் பகுதியில், வனப் பகுதியைச் சரி செய்து, சம உயர வரப்புகளை அமைக்க வேண்டும்.

நடவுக்கு முன், தக்கைப் பூண்டு, தட்டைப்பயறு போன்ற பசுந்தாள் பயிர்களைப் பயிரிட்டு உழுது விட வேண்டும். சுழல் கலப்பையால் கட்டிகள் இல்லாமல் நிலத்தைப் பண்படுத்த வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 50 டன் எருவை அடியுரமாக இட வேண்டும்.

வாழைக்கட்டை: வாழையில் வாள் கன்று, நீர்க்கன்று என இருவகைப் பக்கக் கன்றுகள் தோன்றும். வாள் கன்று, வாளைப் போன்ற கூரிய இலைகளுடன் இருக்கும். இதைத் தான் நட வேண்டும். 1.5-2 கிலோ எடையுள்ள, நோய்கள் மற்றும் நூற்புழுக்கள் தாக்காத கன்றுகளை எடுத்து, அவற்றின் வேர்களை அரிவாளால் சீவிவிட வேண்டும். தண்டின் நீளம் 8 அங்குலம் இருந்தால் போதும்.

வாடல் நோய்க்கு எளிதில் உள்ளாகும் இரஸ்தாளி, மொந்தன், நெய்ப்பூவன், விருப்பாட்சி வாழைக் கன்றுகளை, பூசணக் கொல்லியில் நனைத்து நட வேண்டும். அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்த கலவையில், கிழங்குப் பகுதியை ஐந்து நிமிடம் வரை முக்கியெடுக்க வேண்டும்.

பிறகு, நான்கு பங்கு மண், ஐந்து பங்கு நீர் கலந்த சேற்றில் நனைத்து, கன்றுக்கு 40 கிராம் கார்போப்யூரான் குருணை வீதம் தூவிவிட்டு நட வேண்டும். இது, நூற்புழுக்களின் தாக்கத்தில் இருந்து, இளவயதிலேயே கன்றுகளைக் காக்க உதவும்.

திசு வளர்ப்புக் கன்று: வாழை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தாலும், ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் திறனில் பின்தங்கியே உள்ளது. இதற்குக் காரணம், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக நடுவது, நோய் மற்றும் நூற்புழுக்கள் தாக்காத மற்றும் அதிக மகசூலைத் தரும் கன்றுகள் பற்றாக்குறை தான். இவற்றை, திசு வளர்ப்புக் கன்றுகள் மூலம் ஓரளவு சமாளிக்கலாம்.

குஜராத், மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் முற்போக்கு விவசாயிகள், திசு வளர்ப்பு வாழையை விரும்பிப் பயிரிடுகின்றனர். அதிக மகசூலைத் தரும் இவ்வாழை, ஒரே நேரத்தில் விளைந்து அறுவடைக்கு வந்து விடும்.

நடவுக்காலம்: ஆண்டு முழுவதும் நடலாம். குளிரும் மழையும் மிகுந்த பகுதியில் பயிரிட முடியாது. மே, ஜூன் மற்றும் அக்டோபர் நவம்பரில் நடலாம். பாசன வசதியிருப்பின், பிப்ரவரி, மார்ச்சிலும் நடலாம்.

நடவு: ஒரு சதுரடிக் குழிகளில், வாழைக் கட்டையின் தண்டு, மண்ணுக்கு மேல் 5 செ.மீ. தெரியும்படி நட வேண்டும். பிறகு, மண்ணைத் தள்ளிவிட்டு, காற்று இடைவெளி இல்லாத அளவுக்கு மண்ணை மிதித்து விட வேண்டும்.

திசு வளர்ப்புக் கன்றுகளை, குழிகளின் மேலாக நட வேண்டும். நடுவதற்கு முன் வேர்கள் சேதமாகாமல் நெகிழிப் பைகளை நீக்க வேண்டும். நட்டதும் பாதியளவு நிழலை ஏற்படுத்திப் பாசனம் செய்ய வேண்டும். நடும் போது, குழிக்கு 25 கிராம் வீதம் சூடோமோனாசை இட வேண்டும்.

குழி நடவு

புன்செய் சாகுபடியில், குழியில் ஊன்றுதல் பொதுவான முறை. 60 செ.மீ. நீள, அகல, ஆழத்தில் குழிகளைத் தோண்டி, அவற்றில், மண், மணல், தொழுவுரத்தைச் சமமாகக் கலந்து நிரப்ப வேண்டும்.

குழிக்கு நடுவில் 2-4 கன்றுகளை நட்டு, மண்ணை அணைக்க வேண்டும். பிப்ரவரி-மே காலத்தில் நடலாம். வட இந்தியாவில், ஜூலை, ஆகஸ்ட்டிலும், இங்கே வெய்யில் காலத்தைத் தவிர மற்ற மாதங்களிலும் நடுகிறார்கள்.

குட்டை கேவன்டிஷ், இரஸ்தாளி, ரொபஸ்டா, பூவன், கற்பூரவள்ளி போன்ற வாழைகள் இம்முறையில் நடப்படுகின்றன. ஆனால், ஆட்கள் தேவையும் செலவும் அதிகமாகும். இம்முறையில் தேவையான ஆழத்தில் நடவு செய்தால், மண் அணைக்கத் தேவையில்லை. இப்போது இம்முறை பெரும்பாலும் நடைமுறையில் இல்லை.

சால் முறை

இது, பொதுவான முறையாகும். நிலத்தைத் தயாரித்த பிறகு, 20-25 செ.மீ. ஆழத்தில் டிராக்டர் அல்லது பார் அமைக்கும் கருவியால், 1.5 மீட்டர் இடைவெளியில் சால்களை அமைத்து, சரியான இடைவெளியில் கன்றுகளை நட வேண்டும்.

தொழுவுரத்தை மண்ணில் கலந்து, கன்றுகளைச் சுற்றி இட்டு இறுக்கமாக அணைக்க வேண்டும். ஆண்டுதோறும் பயிரிடும் முறையில், சால் முறை நடவே நடக்கிறது. இம்முறையில் கிழங்குகள் வெளியே தெரிவதால், அடிக்கடி மண் அணைக்க வேண்டும்.

அடர் நடவு முறை

பொதுவான இடைவெளியை விட, குறைந்த இடைவெளியில் நடுவது அடர் நடவு முறை. குறிப்பிட்ட பரப்பிலிருந்து கிடைக்கும் அதிக உற்பத்திக்கும், சாதாரண முறையில் கிடைக்கும் உற்பத்திக்கும் இடையிலுள்ள மகசூலை ஈடுகட்டும் வகையில், பயிர் இடைவெளி இருக்க வேண்டும்.

கூடுதலான மற்றும் தரமான மகசூலுக்கு ஏற்ற அடர்த்தியைப் பராமரிக்க வேண்டும். இடம், மண்வளம், நிர்வாகம் மற்றும் பொருளாதார நிலையைப் பொறுத்து, பயிர் இடைவெளி வேறுபடும். காலநிலை, நிலத்தின் வீரியம் போன்றவை, பயிரின் அடர்த்தியைத் தீர்மானிக்கும்.

இம்முறையில் எக்டருக்கு 4,444- 5,555 மரங்களை வளர்க்கலாம். 55-60 டன் மகசூல் அதிகமாகக் கிடைக்கும். சதுர அல்லது செவ்வக முறையில் நடப்படுகிறது. கேவன்டி இரகத்தை எக்டருக்கு 4,600 கன்றுகள் வீதம் பயிரிட, 1.8×2 மீட்டர் இடைவெளி விட வேண்டும். நேந்திரன் வாழையை எக்டருக்கு 5,000 கன்றுகள் வீதம் பயிரிட, 2×3 மீட்டர் இடைவெளி விட வேண்டும்.

1.2×1.2 மீட்டர் இடைவெளியில் ஏற்படும் பயிர் அடர்த்தியில், வெய்யில் குறைவாகப் படுவதால், சக்தியாக மாற்றும் திறன் அதிகமாக இருக்கும். 2.1×2.1 மீட்டர் இடைவெளியில், சக்தியாக மாற்றும் திறன் குறைவாக இருக்கும்.

பாசனம்

ஒருமுறை வாழையில் மகசூலை எடுக்க, 900-1,200 மி.மீ. நீர் தேவை. இது, மழை அல்லது பாசனம் மூலம் கிடைக்க வேண்டும். நல்ல மகசூல் கிடைக்க, வாழையின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் போதியளவு நீர் கிடைக்க வேண்டும்.

மேலும், வேர்ப் பகுதியில் நீர்த் தேங்காமல் இருக்க, வடிகாலும் தேவை. பொதுவாக, வெய்யில் காலத்தில் 3-4 நாட்களுக்கு ஒருமுறை, குளிர் காலத்தில் 7-8 நாட்களுக்கு ஒருமுறை, பாசனம் செய்ய வேண்டும்.

சொட்டுநீர்ப் பாசனம்: இம்முறையில், சரியான அளவில், சீரான இடைவெளியில், வேருக்கு அருகில் நீரைத் தரலாம். பயிர்க்காலம் முழுவதும் குறித்த இடைவெளியில், குறைந்த அழுத்தமுள்ள பெரிய, சிறிய குழாய்கள் மூலம் போகும் நீர், சொட்டிகள் வழியாகப் பயிருக்குக் கிடைக்கும்.

இந்த முறையில், மண்ணின் கொள்திறனை விடக் குறைவாக, நுண் கருவிகள் மூலம் மண்ணின் மேற்புறத்தில் அல்லது சற்று அடியில், சொட்டுச் சொட்டாக நீர் வழங்கப்படும். இது, சிறந்த அறிவியல் முறைப் பாசனமாகும்.

வேர்ப் பகுதியில் நீர் மற்றும் காற்றின் அளவைச் சீராகப் பராமரிக்க ஏதுவாக, பயிரின் தேவையைப் பொறுத்து, சிறிது சிறிதாக வேர்ப் பகுதியில் மட்டும் தினமும் நீரைத் தரலாம்.

உர நிர்வாகம்

வாழையின் வளர்ச்சிக்கு ஏற்ப, செயற்கை மற்றும் இயற்கை உரங்களை இட வேண்டும். இல்லையேல், வளர்ச்சிக் குன்றி, தார்கள் சிறுத்து, பெரியளவில் மகசூல் இழப்பு ஏற்படும்.

சமவெளி மண்ணில், சாம்பல் சத்து அதிகமாகவும், தழைச்சத்தும் மணிச்சத்தும் குறைவாகவும் உள்ளன. ஒளிச்சேர்க்கை நடக்க, காய்களில், பழங்களில் மாவு மற்றும் சர்க்கரை உற்பத்தியாக, நொதிகளைத் தூண்டிவிட, நோய் மற்றும் பூச்சிகளைத் தாங்கி வளர, சாம்பல் சத்து தேவை.

ஆனால், நிலத்தில் சாம்பல் சத்து நிறைய இருந்தாலும், உடனடியாக வாழைக்குக் கிடைப்பதில்லை. எனவே, வாழையின் உடனடித் தேவையைச் சரி செய்ய, பொட்டாஷ் உரத்தை அதிகமாக இட வேண்டும்.

ஒரு எக்டர் வாழை மரங்கள், 75 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 180 கிலோ சாம்பல் சத்து, 33 கிலோ மெக்னீசியம், 91 கிலோ கால்சியம், 7 கிலோ கந்தகச் சத்தை எடுத்துக் கொள்கின்றன.

வாழை

தமிழ்நாட்டில் ஒரு வாழைக்கான உரங்கள்

இரகங்கள் யூரியா சூப்பர் பொட்டாஷ்

தோட்டக்கால்: நேந்திரன்: 330 கிராம் யூரியா, 560 கிராம் சூபர், 550 கிராம் பொட்டாஷ்.

பிற இரகங்கள்: 240 கிராம் யூரியா, 220 கிராம் சூபர், 550 கிராம் பொட்டாஷ்.

நன்செய்: நேந்திரன்: 460 கிராம் யூரியா, 220 கிராம் சூப்பர், 750 கிராம் பொட்டாஷ்.

இரஸ்தாளி: 460 கிராம் யூரியா, 110 கிராம் சூப்பர், 750 கிராம் பொட்டாஷ்.

களை நிர்வாகம்

வாழையில் அதிக மகசூலைப் பெற, களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். களைகள் பூத்து, விதைகள் உருவாகும் முன்பே, அவற்றின் தன்மைகளைப் பொறுத்து, மண்வெட்டியால் அல்லது கைகளால் அவற்றை நீக்க வேண்டும்.

படர்ந்து வளரும் தட்டைப்பயறு அல்லது பசுந்தாளை, வாழைக்கு இடையில் பயிரிட்டு, அவை பூக்கும் முன்பே பிடுங்கி, மண்ணில் புதைத்து விடலாம். இதனால், களைகள் கட்டுப்படுவதுடன், தழைச்சத்தும் வாழைக்குக் கிடைக்கும்.

டையூரான் என்னும் களைக் கொல்லியை, எக்டருக்கு 1.5 கிலோ விதம் எடுத்து, களைகள் முளைக்கும் முன் தெளிக்கலாம். முளைத்த களைகளைக் கட்டுப்படுத்த, 5 கிலோ கிளைப்போசேட் அல்லது ரவுன்டப்பை, ஒரு லிட்டர் நீருக்கு 8-10 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.

நடவுக்குப் பிந்தைய உத்திகள்

பக்கக் கன்றுகளை நீக்குதல்: அதிகமான மற்றும் தேவையற்ற பக்கக் கன்றுகளை, நில மட்டத்தில் வெட்டி அகற்றலாம் அல்லது கன்றுகளின் குருத்துகளை மட்டும் அழிக்கலாம். தோட்டம் மற்றும் புன்செய் நிலத்தில் மாதம் ஒருமுறை இந்த வேலையைச் செய்ய வேண்டும். மலை வாழையில், ஒரு குத்தில் இரண்டு குலைகள் உள்ள மரங்கள் மற்றும் இரண்டு பக்கக் கன்றுகளை வளர விட்டால் போதும்.

மறுதாம்பு சாகுபடிக்கு, மரத்துக்கு ஒரு பக்கக்கன்று வீதம் விட வேண்டும். இவற்றின் தூர்கள் பெருக்க ஏதுவாக, 2 மாதத்தில் நுனிகளை வெட்டி விட்டு, வளர்ச்சியைத் தடுக்க வேண்டும். முதல் பயிரை அறுவடை செய்யும் போது, இந்தக் கன்றுகள் மறுதாம்புக்குத் தயாராக இருக்கும்.

முட்டுக் கொடுத்தல்: குலை தள்ளும் போது, மரத்தைத் தாங்கி நிற்கும் வகையில், முட்டுக் கொடுக்க வேண்டும். உயரமான, அதிக எடையுள்ள குலைகளைத் தரும் வாழைகளுக்கு முட்டுக் கொடுப்பது அவசியம். மூங்கில் அல்லது சவுக்கு மரங்களை இதற்குப் பயன்படுத்தலாம். கயிறு அல்லது நெகிழிக் கயிற்றையும் பயன்படுத்தலாம்.

மூடாக்கு இடுதல்: மூடாக்கு என்பது, உலர்ந்த தாவரப் பொருள் அல்லது நெகிழித் தாளால் நிலத்தை மூடுவதாகும். இது, நீர் ஆவியாவதைக் குறைக்க, ஈரப்பதத்தைத் தக்க வைக்க, மண்ணரிப்பைத் தடுக்க, களைகள் வளர்வதைக் கட்டுப்படுத்தி, அவை மட்கும் போது தாவர உரமாக்க உதவும்.

நடவுக்கு முன்பும், பின்பும் கன்றுகளைச் சுற்றி மூடாக்கை இடலாம். வாழைச் சருகு மூடாக்கு, நெகிழித்தாள் மூடாக்கு என, இருவகை மூடாக்குகள் உள்ளன.

இலைகளை நீக்குதல்: சில இரகங்களில் சூல் தண்டுகள் நிலையாக, குலை முற்றும் வரையிலும், காய்கள் மீது இருக்கும். பூ விரிந்த சில நாட்களில் பிரஷ்ஷால் தடவினால் இவை விழுந்து விடும்.

இவற்றை நீக்காமல் விட்டு விட்டால், பழுப்பு நிறமாக மாறிச் சுருங்கி விடும். பிறகு, இவற்றை நீக்குவது கடினம். நீக்காத நிலையில், காய்களின் நுனியில் சாப்ரோபைட் பூஞ்சைகள் தாக்கி நோயை உண்டாக்கும்.

மட்டாக்குதல்: அறுவடை முடிந்ததும், மரங்களைத் தரையிலிருந்து 0.6 மீட்டர் உயரத்தில் வெட்டி விடுவது மட்டாக்கி எனப்படும். இப்படி விடப்பட்ட தண்டிலுள்ள சத்துகள், பக்கக் கன்றுகளுக்கு உணவாகி, இலைகள் உயரும் போது பாதுகாக்கும்.

மண் அணைத்தல்

மண் அணைப்பு, கன்றுகளின் தூர்களுக்கு வலுவையும், நல்ல வேர் மண்டலம் உருவாகவும் உதவும். மழைக் காலத்தில் நீர்த் தேங்குவதைத் தவிர்க்கலாம். இது, பயிருக்கு வடிகால் வசதியாகவும் அமையும்.

குலையை மூடுதல்: சணல் பை அல்லது நெகிழிப் பையால் குலையை மூடினால், அதிக வெய்யில், காற்று மற்றும் தூசியில் இருந்து காய்களைக் காக்கலாம். கேவன்டிஷ் மற்றும் நேந்திரன் வாழைக் குலைகளை மூடினால், செழிப்பான நிறம் கிடைக்கும். துளையுள்ள நெகிழிப் பைகளால் மூடினால், 15-20 சதம் மகசூல் கூடும். காம்புகள் அழுகுவதும் குறையும்.

தொப்புள் நீக்கம்: பெண் பூக்கள் முற்றிலும் மலர்ந்த நிலையில், ஆண் மொட்டுகளை நீக்குவது தொப்புள் நீக்கமாகும். இதனால், ஒளிச் சேர்க்கையில் உருவாகும் சத்துகள் அனைத்தும் இங்கே சேர்வது தடுக்கப்படும். எனவே, காய்கள் விரைவாக வளரும்.

சீப்பு நீக்குதல்: குலையில் 7-8 சீப்புகள் மட்டும் இருக்கும் வகையில், அடிப்பகுதியில் சிறியளவில் இருக்கும் ஒன்றிரண்டு சீப்புகளை நீக்கி விடுவது சிறந்தது.

அறுவடை

முதிர்ந்த தார்களைக் கவனமாக அறுவடை செய்ய வேண்டும். காய்கள் நன்றாக உருண்டு திரண்டு இருத்தல், காய்களின் குறுகிய முகடுகள் அல்லது கோண வடிவம் மறைதல், தாரின் வயது, அதாவது, பூவில் முதல் சீப்பு வெளிவந்து 100-110 நாட்கள் ஆதல்,

காய்களை விரலால் தட்டினால் எழும் ஓசை, காய்களின் தோல் வெளிரத் தொடங்குதல் ஆகியவற்றின் மூலம் காய்களின் முதிர்ச்சியை அறியலாம். அறுவடைக்கு ஒருவாரம் முன்பே பாசனத்தை நிறுத்திவிட வேண்டும். இல்லையெனில், காய்களின் தரமும், அவற்றைச் சேமிக்கும் காலமும் குறையும்.

மகசூல் – எக்டருக்கு

பூவன்: 40-50 டன்,

இரஸ்தாளி: 40-50 டன்,

நெய்ப்பூவன்: 30-35 டன்,

மொந்தன்: 30-40 டன்,

ரொபஸ்டா: 40-50 டன்,

கிரான்ட் நயன்: 60-65 டன்.


PACHAI BOOMI DR.C.RAJA MANICKAM

முனைவர் சி.இராஜமாணிக்கம், முனைவர் ஆ.பியூலா, முனைவர் வெ.சுவாமிநாதன், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading