My page - topic 1, topic 2, topic 3

முருங்கையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 அக்டோபர்.

முருங்கை இலைகள், காய்கள் மற்றும் மலர்களில் சத்துகள் நிறைந்துள்ளன. புரதம், இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்றவை மிகுந்துள்ளன. முருங்கை இலை கீரையாக, மருந்தாகப் பயன்படுகிறது. கீரையில் மிகுந்துள்ள கரோட்டீன், கண்ணில் உண்டாகும் புண், கண் எரிச்சில், பார்வைக்குறை போன்றவை தீர உதவுகிறது.

இலைச்சாறு, இரத்தச்சோகை மற்றும் மார்புச்சளிக்கு மருந்தாகிறது. முருங்கைக் காய்கள் மற்றும் இளம் பிஞ்சுகளை உண்பதால், சிறுநீரக மற்றும் கல்லீரல் வீக்கம் குறைவதுடன், உடல் வெப்பமும் குறைகிறது. முருங்கைக் காய்ப் பொடி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

முருங்கைப் பூக்கள் உணவாக, இதய நோய் மற்றும் நீரழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. முருங்கைப் பொடியில் தேனைச் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி குணமாகும். முருங்கை இலைச்சாறு இரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயைக் குணப்படுத்த உதவுகிறது.

முருங்கைக்காய் வற்றல்

குறைந்த அளவு விதையும் அதிகச் சதையும் சுவையும் கொண்ட பி.கே.எம்.1 மற்றும் பி.கே.எம்.2 முருங்கைக் காய்களில் வற்றல் தயாரிக்கலாம். நன்றாக விளைந்த காய்களை, ஐந்து செ.மீ. துண்டுகளாக வெட்டி, அரை சதம் பொட்டாசியம் மேட்டா பை சல்பேட் கலந்த நீரில், பத்து நிமிடங்கள் ஊற வைத்து, அகன்ற தட்டில் உலர்த்தி வற்றல் ஆக்கலாம்.

உலர் முருங்கைக்காய் சதைப்பற்று

சதைப்பற்று மிகுந்த பி.கே.எம்.1, பி.கே.எம்.2 முருங்கைக் காய்களில் இருந்து, உலர் முருங்கைக்காய்ச் சதைப்பற்றைத் தயாரிக்கலாம். சரியான அளவு முதிர்ந்த, பூச்சி, நோய்த் தாக்காத காய்களை நன்றாகக் கழுவிய பின், சதைப் பகுதியைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.

இதை, அரை சதம் பொட்டாசியம் மேட்டா பை சல்பேட் கலந்த கரைசலில் 10 நிமிடம் போட்டு எடுத்து வெய்யிலில் உலர வைத்து, காற்றுப் புகாத நெகிழிப் பைகளில் அல்லது டப்பாக்களில் பதப்படுத்தலாம். இந்த உலர்ந்த சதைப்பற்று மூலம், சாம்பார், சூப் மற்றும் புளிக்குழம்பு தயாரிக்கலாம்.

முருங்கைக்காய்ப் பொடி

முருங்கைக்காய் வற்றல் அல்லது உலர வைத்த சதைப்பற்றை அரைத்துப் பொடி தயாரிக்கலாம். இதைச் சாம்பார் மற்றும் சூப் கலவைகளில் பயன்படுத்தலாம்.

தகரக் கலன்களில் முருங்கைக்காயைப் பதப்படுத்துதல்

முதிர்ந்த மிருதுவான முருங்கைக் காய்களை நன்கு கழுவ வேண்டும். பிறகு, நறுக்கி நீராவியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். பிறகு 0.5 சத பொட்டாசியம் மேட்டா பை சல்பேட் கரைசலில் பத்து நிமிடம் ஊறவிட வேண்டும். அடுத்து, 2 சத உப்புக் கரைசலுள்ள தகரக் கலனில் நிரப்பி, பத்து நிமிடம் வரை காற்று நீக்கம் செய்ய வேண்டும்.

கலனின் மைய வெப்ப நிலையை 72 டிகிரி சென்டிகிரேடு வரை வைக்க வேண்டும். பிறகு, உடனே கலனை அடைத்துவிட வேண்டும். மூடிய கலனை ஆவி அழுத்தக் கலனில் 115 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் 40 நிமிடம் வைக்க வேண்டும்.

பிறகு, கலனை ஆவி அழுத்தக் கலனிலிருந்து எடுத்து, உடனே ஓடும் நீரில் குளிர்விக்க வேண்டும். பிறகு கலனைத் துடைத்து, குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். இப்படி ஒருவாரம் வரை பாதுகாத்து வைக்கலாம்.

உப்புக் கரைசலில் பதப்படுத்திய முருங்கைக்காய்

முருங்கைக் காய்களைக் கழுவி, ஐந்து செ.மீ. துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின், அரை சத பொட்டாசியம் மேட்டா பை சல்பேட் கலந்த நீரில் பத்து நிமிடம் போட்டு எடுக்க வேண்டும்.

இந்தத் துண்டுகளைக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட குப்பிகளில் இட்டு அதில் 10 சத உப்புக் கலந்த நீரை ஊற்றி மூட வேண்டும். அல்லது நான்கு சத உப்புக் கரைசலில் ஒரு சத அசிட்டிக் அமிலம், 400 பி.பி.எம். பொட்டாசியம் மேட்டா பை சல்பேட்டைக் கலந்து, அதில் முருங்கைத் துண்டுகளைப் பதப்படுத்தலாம்.

தேவையான பொருள்கள்: முருங்கைக்காய்த் துண்டுகள் 750 கிராம், மாங்காய் 250 கிராம், மிளகாய்த்தூள் 200 கிராம், வறுத்த வெந்தயத்தூள் 5 கிராம், பெருங்காயத்தூள் 10 கிராம், உப்பு 200 கிராம், நல்லெண்ணெய் 250 மில்லி.

செய்முறை: முருங்கைக்காயை ஐந்து செ.மீ. துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். முருங்கை மற்றும் மாங்காய்த் துண்டுகளை ஒரு ஜாடியில் போட்டு உப்பைத் தூவி, ஒரு வாரம் வெய்யிலில் வைக்க வேண்டும். இதைத் தினமும் இரண்டு தடவை குலுக்கி உப்புக் கரையும்படி செய்ய வேண்டும்.

பின்பு, மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், வெந்தயத் தூளைக் கலந்து குப்பிகளில் நிரப்பி, ஊறுகாயின் மேலே மிதக்கும் அளவில் சூடான எண்ணெய்யை ஊற்ற வேண்டும்.

முருங்கைக்காய்ச் சட்னி

முருங்கைக் காய்களில் இருக்கும் சதைப்பற்றை எடுத்து, சுவையான சட்னியைத் தயார் செய்யலாம்.

தேவையான பொருள்கள்: முருங்கைக்காய்ச் சதைப்பற்று 1 கிலோ, புளி 300 கிராம், பூண்டு 30 கிராம், பெருங்காயத்தூள் 20 கிராம், மிளகாய்த்தூள் 100 கிராம், கடுகுத்தூள் 60 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், உப்பு 50 கிராம், நல்லெண்ணெய் 200 மில்லி, புளிக்காடி 20 கிராம்.

செய்முறை: முருங்கைக்காய்ச் சதைப்பற்றை ஆவியில் வேகவிட வேண்டும். புளியைச் சுடுநீரில் ஊற வைத்துக் கெட்டியாகக் கரைக்க வேண்டும். பூண்டை விழுதாக அரைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, பூண்டு, முருங்கைக்காய்ச் சதை, புளிக்கரைசல், கடுகுத்தூள், பெருங்காயத் தூளைப் போட்டுப் பத்து நிமிடம் வேகவிட வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிட வேண்டும்.

பின்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளிக்காடியைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு, கிருமி நீக்கம் செய்த குப்பிகளில் அடைக்க வேண்டும்.

முருங்கைக்காய் ஊறுகாய்

முருங்கைக் காய்களைக் கழுவி ஐந்து செ.மீ. துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்பு, அரை சத பொட்டாசியம் மேட்டா பை சல்பேட் கலந்த கரைசலில் பத்து நிமிடம் போட்டு எடுக்க வேண்டும். இந்தத் துண்டுகளை இரண்டு நிமிடம் நீராவியில் வேக வைக்க வேண்டும். பின்பு, இதனை ஆற வைக்க வேண்டும்.

தேவையான பொருள்கள்: முருங்கைக்காய்ச் சதைப்பற்று 1 கிலோ, பெருங்காயத் தூள் 5 கிராம், மிளகாய்த் தூள் 100 கிராம், கடுகு 15 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், உப்பு 150 கிராம், நல்லெண்ணெய் 300 மில்லி.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றிச் சூடாக்கி அதில் கடுகைப் போட வேண்டும். பிறகு முருங்கைக்காயைச் சேர்க்க வேண்டும். பின்பு, மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூளைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இதை ஆற வைத்துக் கண்ணாடிக் குப்பிகளில் அடைக்க வேண்டும்.


முனைவர் சி.இராஜமாணிக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் – 623 503, முனைவர் வி.வாணி, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம் – 625 604.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks