பலாப்பழமும் விதவிதமான உணவுகளும்!

பலா FDHG b4aacfab549d77683bc15119152afeac

வெப்பத்தைத் தாங்கி வளர்ந்து பயனைத் தருவது பலாமரம். பலாப்பழம் பறித்ததும் அல்லது பாதுகாத்து வைத்துச் சாப்பிட ஏற்ற, சதைப் பற்றுள்ள, நறுமணமிக்க, சுவை மிகுந்த பழம். பலா விதை வேக வைத்து அல்லது வறுத்துச் சாப்பிட சத்துமிகு உணவுப் பொருள். இந்த விதைகளில் இருந்து தயாராகும் மாவு, அடுமனை உணவுகள் மற்றும் இதர உணவுகளில் பயன்படுகிறது.

இந்தியா, மியான்மர், சீனா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வளரும் முக்கிய மரமாகும். ஆப்பிரிக்கா, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் உள்ளன. விவசாயிகளின் வருமானம் உயரவும், நல்ல சூழல் உருவாகவும் உதவும்.

பழ உற்பத்திக் காலங்கள்

ஆஸ்திரேலியா: ஜூன் – ஏப்ரல்

வங்காளம்: ஜூன் – ஆகஸ்ட்

பிரேசில்: ஜனவரி – மார்ச், ஆகஸ்ட்- அக்டோபர்

கொலம்பியா: ஜனவரி – டிசம்பர்

இந்தியா: ஏப்ரல் – ஜூலை

இந்தோனேசியா: ஆகஸ்ட் – ஜனவரி

ஜமைக்கா: ஜனவரி – ஜூலை

கென்யா: ஜூன் – அக்டோபர்

மலேசியா: ஏப்ரல் – டிசம்பர்

பிலிப்பைன்ஸ்: மார்ச் – ஆகஸ்ட்

இலங்கை: பிப்ரவரி – நவம்பர்

தாய்லாந்து: ஜனவரி – மே, அக்டோபர் – டிசம்பர்

உகாண்டா: ஜனவரி – டிசம்பர்

அமெரிக்கா (புளோரிடா): மே – அக்டோபர்

மருத்துவப் பயன்கள்

பலாப்பழம் விரைவாகச் செரிக்கும். எளிய சர்க்கரைகளான ப்ரக்டோஸ், சுக்ரோஸ் இருப்பதால், சாப்பிட்டதும் சுறுசுறுப்பைத் தரும் ஆற்றல் கிடைக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நல்ல மலமிளக்கியாக உள்ளது. இந்த நார்ச்சத்து பெருங்குடல் சவ்வைப் பாதுகாக்க உதவுகிறது.

இதிலுள்ள உயிர்ச்சத்து ஏ-யில் கண்ணுக்குப் பார்வையைத் தரும் ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் உள்ளன. மேலும், நீர்ச்சவ்வு மற்றும் தோலைப் பராமரிக்கவும், நோய் எதிர்ப்புத் தன்மையைக் கூட்டவும் உயிர்ச்சத்து ஏ பயன்படுகிறது.

இயற்கையாகக் கிடைக்கும் பழங்களில் அதிகமாக இருக்கும் உயிர்ச்சத்து ஏ, நுரையீரல் மற்றும் வாய்வழிக் குழிப்புற்று நோயைத் தடுக்கிறது. இப்பழத்தில் ஆக்ஸிஜனேற்ற, பிளேவ னாய்டுகளான பீட்டா கரோட்டீனும் லூட்டினும் அதிகமாக உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் பெருங்குடல் பிராஸ்டேட், மார்பகம், கருப்பை, நுரையீரல் மற்றும் கணையப் புற்றுநோயைத் தடுக்கிறது.

இதில், பி-உயிர்ச் சத்துகளான பைரிடாக்ஸின், நயாசின், ரைபோ பிளேவின், போலிக் அமிலம் ஆகியன மிகுதியாக உள்ளன. இதில், உயிர்ச்சத்து 11%க்கு மேல் உள்ளது. இதனால், தொற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் உடலுக்குக் கிடைக்கிறது.

பலாப்பழத்தில், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஷ் மற்றும் இரும்புச் சத்து அதிகம். உடல் செல் மற்றும் திரவத்துக்குத் தேவையான முக்கியத் தாதான பொட்டாசியம், இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

மதிப்புக் கூட்டுதல்

பலாப்பிஞ்சை வேக வைத்து, காயாகவும், ஊறுகாய் செய்தும் உண்ணலாம். பலாப்பழத்தை, சட்னி, ஜாம், ஜெல்லி மற்றும் பழக்கூழாகத் தயாரிக்கலாம். இதை உலர வைத்து, சர்க்கரைப் பாகு அல்லது தேனில் சேர்த்து பலாப்பழ மிட்டாய் தயாரிக்கலாம்.

பலாப்பழக் கூழை, பனிக்கூழ் மற்றும் பானங்களில் நறுமணப் பொருளாகச் சேர்க்கலாம். பலாப்பழப் பொடியைத் தயாரிக்கலாம். பலா விதையை வேக வைத்து, காய வைத்து, வறுத்து மற்றும் உப்பைத் தூவி உண்ணலாம்.

இதர பயன்கள்

பலா இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. இந்த மரத்திலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறச் சாயம், பருத்தி ஆலைகளில் பயன்படுகிறது. பலாமரப் பால், காயத்தை ஆற்றும் மருந்தாகும். பலாமரம், மரச் சாமான்கள், துடுப்புகள், இசைக் கருவிகள் மற்றும் கட்டுமானத்தில் பயன்படுகிறது.

இது, கரையான், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் திறனுள்ளது. பழைமையான பலாமர வேர்கள் செதுக்குதல் மற்றும் புகைப்படம் கட்டமைப்பில் உதவுகின்றன. மலைகளில் காபி, மிளகுக் கொடிகள் படர் மரமாகப் பயன்படும்.

பலாப்பழ பானம்

தேவையான பொருள்கள்: பலாப்பழக் கூழ் 1 கிலோ,

சர்க்கரை 1.750 கி.கி.,

நீர் 1.25 லிட்டர்,

சிட்ரிக் அமிலம் 25 கிராம்,

நறுமணச் சாறு 1 தேக்கரண்டி,

பொட்டாசியம் மெட்டா பைசல்பேட் 3 கிராம்.

செய்முறை: நன்றாகப் பழுத்த பழங்களைக் கழுவி, மின்னம்மியில் இட்டுக் கூழாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, நைலான் வலையால் சாற்றை வடிகட்ட வேண்டும்.

ஏற்கெனவே தயாரித்து ஆற வைத்துள்ள சர்க்கரைக் கரைசலில் பழக்கலவை மற்றும் நறுமணச் சாற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தச் சாற்றில் சிறதளவு எடுத்து அதில் பாதுகாப்பானைக் கலந்து, அதை பழப் பானத்தில் சேர்த்து நன்கு கலக்கினால் பலாப்பழப் பானம் தயாராகி விடும்.

இதைச் சுத்தமான புட்டிகளில் ஊற்றிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தேவையின் போது, ஒரு பங்கு பானம், இரு பங்கு நீர் சேர்த்துக் கலந்து சுவையாகப் பருகலாம்.

சர்க்கரைக் கரைசல் தயாரிப்பு: நீரைச் சுட வைத்துச் சர்க்கரை சேர்த்து, கரையும் வரையில் சூடேற்ற வேண்டும். பிறகு, சிட்ரிக் அமிலத்தைச் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி ஆற வைக்க வேண்டும்.

தயார் நிலை பானம்

தேவையான பொருள்கள்: பலாப்பழக்கூழ் 300 கிராம்,

சர்க்கரை 477 கிராம்,

சிட்ரிக் அமிலம் 65 கிராம்,

நீர் 2.5 லிட்டர்.

செய்முறை: நன்கு பழுத்த பலாப்பழச் சுளைகளை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டி மின்னம்மியில் அரைத்து கூழாக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீர், சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலத்தைச் சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரைப் பாகைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு, ஆறிய சர்க்கரைப் பாகில் பழக்கூழைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு, 80 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரும் வரை சூடாக்கினால் இந்த பானம் தயாராகி விடும். இதைச் சுத்தமான புட்டிகளில் ஊற்றிப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், தேவையின் போது சுவையாகப் பருகலாம்.

பலாப்பழ ஜாம்

தேவையான பொருள்கள்: பலாப்பழக்கூழ் 1 கிலோ,

சர்க்கரை 500 கிராம்,

பாதுகாப்பான் 0.1 கிராம்,

சிட்ரிக் அமிலம் 25 கிராம்.

செய்முறை: பழுத்த சுளைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, மின்னம்மியில் கூழாக அரைக்க வேண்டும். பிறகு, இத்துடன் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

பாகு கெட்டியாகிப் பதமாக வரும் போது சிட்ரிக் அமிலத்தைச் சேர்க்க வேண்டும். கரண்டியில் பாகை எடுத்தால் அது தாள் போல விழ வேண்டும். இதுதான் சரியான பதம். உடனே, அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிட்டுக் கண்ணாடிப் புட்டியில் இட்டு, காற்றுப் புகாமல் வைக்க வேண்டும்.

ஆண்டின் ஒருசில மாதங்களில் மட்டுமே கிடைக்கும் பலாப் பழத்தில் 77 சதம் நீர்ச்சத்து உள்ளதால் இதைப் பாதுகாப்பது கடினம். அதனால், மதிப்புக் கூட்டுதல் முறையில் பாதுகாப்பான உணவுப் பொருள்களாகத் தயாரித்து வைத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் பலாப்பழ உணவுகள் கிடைக்கும்.

அதோடு 2-3 மடங்கு இலாபமும் கிடைக்கும் என்பதால், இதைக் குடிசைத் தொழிலாகச் செய்து, எளிய முறையில் விற்று வருமானத்தைப் பெருக்கி வாழ்க்கையில் உயரலாம்.


பலா Dr. P. KARUPPASAMY e1711511465690

முனைவர் பா.கருப்பசாமி, முனைவர் மு.ரா.லதா, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை – 622 303.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading