சிறுதானியங்கள் தரும் சுவைமிகு உணவுகள்!

சிறுதானியங்கள்

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூன்.

சிறுதானியங்கள், மாறுபட்ட மண் வகைகளில் மானாவாரியாக விளைபவை. உலகின் மொத்தச் சிறுதானிய உற்பத்தியில் 97 சதம், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிடைக்கிறது.

இந்தியாவில், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, வரகு, சாமை ஆகியன அதிகளவில் விளைகின்றன. சிறு தானியங்களில் 10-13 கிராம் புரதச்சத்து, 6-12 கிராம் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுப்புகள் அதிகளவில் உள்ளன.

பாலில் இருக்கும் 121 மி.கி. கால்சியத்தைப் போல, கேழ்வரகில் 364 மி.கி. கால்சியம் உள்ளது. கம்பில் 7 மடங்கு இரும்புச் சத்து உள்ளது. அரிசியை விட, சிறுதானியங்களில் எல்லாச் சத்துகளும் நிறைந்துள்ளன.

நமது முன்னோர்கள் சிறுதானியங்களை உணவாகக் கொண்டதால் தான், சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்றவை இல்லாமல் நலமாக வாழ்ந்துள்ளனர். ஆனால், இன்றைய மாறுபட்ட உணவுப் பழக்கத்தால் மக்கள், பல்வேறு நோய்களால் அவதிப்படுகிறார்கள்.

சர்க்கரை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டோர் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இப்போது, சிறுதானியங்களின் தேவையை உணர்ந்து, உணவில் சேர்த்து வருகிறார்கள்.

உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்க, சிறுதானிய உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு சிறுதானியங்களில் செய்யப்படும் உடனடி உணவுகளைப் பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.

அடைக்கலவை

தேவையான பொருள்கள்: சோளம் 10 கிராம்,

தினை 10 கிராம்,

வரகு 10 கிராம்,

பச்சரிசி 15 கிராம்,

துவரம் பருப்பு 10 கிராம்,

கடலைப் பருப்பு 10 கிராம்,

கொள்ளு 5 கிராம்,

பாசிப்பயறு 10 கிராம்,

சோயா மொச்சை 10 கிராம்,

தட்டைப்பயறு 10 கிராம்,

உளுந்து 5 கிராம்.

தயாரிப்பு முறை: தானியங்களைத் தனித்தனியாகச் சுத்தம் செய்து கழுவி நன்கு உலர்த்த வேண்டும். பிறகு, ஒன்றாகச் சேர்த்து அடைக்கு அரைப்பதைப் போல, அரைக்க வேண்டும்.

இத்துடன் மிளகாய்த் தூள், பெருங்காயப் பொடியைச் சேர்த்து நன்கு கலந்தால் அடைக்கலவை தயார். இதைக் காற்றுப்புகா பைகளில் அடைத்து வைத்து, தேவையின் போது பயன்படுத்தலாம்.

கொழுக்கட்டைக் கலவை

தேவையான பொருள்கள்: கம்பு அல்லது சோளம் 50 கிராம்,

உளுந்து 10 கிராம்,

சோயா 10 கிராம்,

பச்சரிசி 30 கிராம்.

தயாரிப்பு முறை: தானியங்களைக் கழுவி நன்கு உலர வைத்து, தனித்தனியாக வறுக்க வேண்டும். லேசாகச் சூடுபடுத்தினால் போதும். பிறகு, ஒன்றாக்கி மாவாக்க வேண்டும். சூடு ஆறியபின் மாவை நன்றாகக் கலந்தால் கொழுக்கட்டைக் கலவை தயார். இதைக் காற்றுப்புகா பைகளில் அடைத்து வைத்து, தேவைக்குப் பயன்படுத்தலாம்.

இனிப்பு அப்பக் கலவை

தேவையான பொருள்கள்: கம்பு அல்லது சோளம் 50 கிராம்,

மைதா மாவு 25 கிராம்,

கோதுமை 25 கிராம்.

தயாரிப்பு முறை: தானியங்களைச் சுத்தம் செய்து கழுவி லேசாக வறுத்து மாவாக்க வேண்டும். பின், அதனுடன் மைதா மாவை நன்றாகக் கலந்தால் இனிப்பு அப்பக் கலவை தயார்.

இதைக் காற்றுப்புகா பைகளில் அடைத்து வைத்து, தேவைக்குப் பயன்படுத்தலாம். இந்தக் கலவையுடன் 70 கிராம் வெல்லம், 5-10 கிராம் நெய், 2 கிராம் ஏலக்காய்ப் பொடி, 150 மி.லி. நீரைச் சேர்த்து அப்பத்தைத் தயாரிக்கலாம்.

பணியாரக் கலவை

தேவையான பொருள்கள்: கம்பு அல்லது சோளம் 25 கிராம்,

பச்சரிசி 20 கிராம்,

புழுங்கலரிசி 10 கிராம்,

கொள்ளு 15 கிராம்,

ஜவ்வரிசி 10 கிராம்,

பாசிப்பயறு 20 கிராம்.

தயாரிப்பு முறை: கம்பு அல்லது சோளம், அரிசி வகைகள், ஜவ்வரிசி மற்றும் பருப்பு வகைகளை நன்கு சுத்தம் செய்து கழுவிக் காய வைத்து மாவாக்கி ஒன்றாகக் கலந்தால் பணியாரக் கலவை தயார்.

இதைக் காற்றுப்புகா பைகளில் அடைத்து வைத்து, தேவையின் போது பயன்படுத்தலாம். இத்துடன் தேவையான வெல்லப் பாகைச் சேர்த்துக் கலந்து, 30 நிமிடம் ஊற வைத்துப் பணியாரமாகச் செய்து சாப்பிடலாம்.

சத்துமாவுக் கலவை

தேவையான பொருள்கள்: முளைக்கட்டிய கோதுமை 30 கிராம்,

முளைக்கட்டிய கம்பு 15 கிராம்,

வரகரிசி 10 கிராம்,

முளைக்கட்டிய பாசிப்பயறு 10 கிராம்,

பொட்டுக்கடலை 10 கிராம்,

பொடித்த சீனி 25 கிராம்,

கொழுப்பற்ற பால்பொடி 5 கிராம்.

தயாரிப்பு முறை: கோதுமை, கம்பு, பாசிப்பயறு ஆகியவற்றை நன்றாகச் சுத்தம் செய்து 4 மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். பிறகு, நீரை வடித்து விட்டு, சுத்தமான துணியில் கட்டி, முளைக்கட்ட 24 மணி நேரம் காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். மறுநாள் எடுத்து 12 மணி நேரம் அறை வெப்ப நிலையில் காய வைத்து நன்றாக வறுக்க வேண்டும்.

வரகையும் பொட்டுக் கடலையையும் சுத்தம் செய்து லேசாக வறுத்து மாவாக்க வேண்டும். பின்பு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளைக் கலந்து மாவாக்க வேண்டும்.
இத்துடன் பொடித்த சீனி மற்றும் பால் பொடியைச் சேர்த்தால் சத்துமாவுக் கலவை தயார். இதைக் காற்றுப்புகா பைகளில் அடைத்து வைத்து, தேவைக்குப் பயன்படுத்தலாம்.


முனைவர் பி.அதியமான், முனைவர் பி.பி.மகேந்திரன், மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை – 622 102.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading