காளான் இயற்கை நமக்கு அளித்த இனிய படைப்பு. பூசண வகையைச் சேர்ந்த காளான், பச்சையம் இல்லாத தாவரமாகும். உலகமெங்கும் பல்வேறு கால நிலைகளில் காளான்கள் இயற்கையாகவே தோன்றுகின்றன. ஒரு சில நச்சுக் காளான்களைத் தவிர, மற்றவை உணவாகப் பயன்படுத்த உகந்தவை.
அனைத்துக் காளான்களையும் நாம் உணவுக்காகப் பயன்படுத்த முடியாது. இவற்றில், சாப்பிட உகந்த காளான் வகைகளை அறிந்து அவற்றை வீட்டளவில் உற்பத்தி செய்து, சிறந்த உபதொழிலாக மாற்றிக் கொள்ளலாம்.
கோடையில் வளரும் பால் காளானையும், குளிர் காலத்தில் வளரும் சிப்பிக் காளானையும் வளர்த்தால், வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லலாம். வீட்டில் இருக்கும் பெண்கள், வேலையில்லா இளைஞர்கள் காளான் வளர்ப்பை மேற்கொண்டால், சிறந்த பயனை அடையலாம்.
பால் காளான் தண்டு மற்றும் குடை போன்ற அமைப்பில் இருக்கும். அதிகப் புரதமும் பலவகை மருத்துவக் குணங்களையும் கொண்ட காளான்களை உண்டு வந்தால் நலமிக்க சமுதாயத்தை உருவாக்கலாம்.
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் சக்தி காளானுக்கு உண்டு. எனவே, பெரியோர் முதல் சிறியோர் வரையுள்ள அனைவருக்கும் ஏற்ற உணவு காளான்.
இரத்தழுத்தம் அதிகமாகி உட்புறச் செல்களில் உள்ள பொட்டாசிய அளவு குறையும் போது, இதயத்தின் இயக்கம் மாறி விடுகிறது. இந்த பொட்டாசிய அளவைச் சரி செய்ய, பொட்டாசியம் நிறைந்த உணவை நாம் உண்ண வேண்டும்.
இவ்வகையில், 100 கிராம் காளானில் 447 மி.கி. பொட்டாசியம் அடங்கி உள்ளது. எனவே, இது இதயத்தைக் காக்கச் சிறந்த உணவாகும். காளானில் உள்ள தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைச் சீர் செய்கிறது.
காளான் எளிதில் செரிக்கும் என்பதால், வயது பேதமின்றி எல்லோரும் உணவாகக் கொள்ளலாம். இதிலுள்ள நோயெதிர்ப்பு சக்தியானது விஷக் காய்ச்சலையும் விரட்டும். தினமும் காளான் சூப்பைப் பருகி வந்தால் உடற்சோர்வு நீங்கிப் புத்துணர்வுடன் அன்றாட வேலைகளைச் செய்யலாம்.
நூறு கிராம் காளானில் உள்ள சத்துகள்
நீர்ச்சத்து: 91 கிராம்,
ஆற்றல்: 13 கிலோ- கலோரி,
புரதம்: 2.5 கிராம்,
கொழுப்பு: 0.3 கிராம்,
கால்சியம்: 20 மி.கி.
இரும்பு: 1 மி.கி.
தயமின்: 120 மை.கி.
ரைபோபிளவின்: 500 மை.கி.
நயாசின்: 5.8 மி.கி.
வைட்டமின் சி: 3.0 மி.கி.
மதிப்புக்கூட்டல்
பொதுவாக, காளானைப் பதப்படுத்தாமல் உணவில் பயன்படுத்தி வருகிறோம். ஏற்றுமதி செய்தால் மட்டுமே பதப்படுத்துகிறோம். காளானில் நீர் மிகுந்து இருப்பதால், பறித்த இரு நாட்களில் பயன்படுத்தி விட வேண்டும்.
எனவே, காளானை முறைப்படி பதப்படுத்தினால், அதைப் பல நாட்களுக்குக் கெடாமல் பாதுகாப்பதுடன், நல்ல வருவாயையும் ஈட்ட முடியும். இவ்வகையில், மதிப்புக் கூட்டல் என்பது, காளானைத் தரம் பிரிப்பது முதல் தயார்நிலை உணவாக மாற்றுவது வரையிலான செயல்களாகும்.
காளான் உணவுகள்
காளானில் இருந்து, உலர் காளான், காளான் சூப் பொடி, காளான் பிரட், பிஸ்கட், காளான் நூடுல்ஸ், காளான் அப்பளம். காளான் பஜ்ஜி போண்டா கலவை, காளான் சப்பாத்தி, காளான் ஊறுகாய். காளான் சாஸ், காளான் ஜாம். காளான் ஊறுகனி போன்ற உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம்.
பதப்படுத்தலின் அவசியம்
உலகளவிலான காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. காய்கறிகள், குறிப்பிட்ட காலங்களில் அதிகமாக விளைவதால், விலை குறைந்து விடுகிறது. எனவே, விவசாயம் இலாபகரமான தொழிலாக இருக்க வேண்டுமெனில், விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.
இதற்கு, விவசாயப் பெருமக்கள் விளை பொருள்களை அப்படியே விற்காமல், மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றி விற்றால், அதிகப் பயனை அடையலாம். இதை, தனியாக அல்லது குழுவாகச் சேர்ந்து செய்யலாம்.
உலர் காளான்
காளானில் 90 சதம் ஈரப்பதம் உள்ளதால், ஓரிரு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடிவதில்லை. எனவே, இது பல நாட்களுக்குக் கெடாமல் இருக்க, 55 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்க வேண்டும். இல்லையெனில் பழுப்பு நிறமாக மாறி விடும்.
வெப்பக்காற்று உலர்த்தியை விட, மிதவைப் படுக்கை உலர்த்தி, காளானை உலர்த்த உகந்த சாதனம். இதில் உலர்த்திய காளான் மூன்று மாதங்கள் வரையில் கெடாமல் இருக்கும்.
இதற்கு, முதலில் காளானைச் சுத்தமான குளிர்ந்த நீரில் 2-3 முறை கழுவ வேண்டும். பிறகு, காளானின் நிறம் மாறாமல் இருக்க, 0.1 சத சிட்ரிக் அமிலக் கரைசலில் நனைக்க வேண்டும். பிறகு, நீரை வடித்து விட்டு, மைக்ரோ ஓவன் அல்லது வெய்யில் மூலம் காய வைக்கலாம்.
காளான் சூப்
தேவையான பொருள்கள்: காளான் 100 கிராம்,
சோளமாவு 100 கிராம்,
வெள்ளை மிளகுத்தூள் 2 தேக்கரண்டி,
வெண்ணெய் 100 கிராம்,
பால் ஒரு லிட்டர்.
செய்முறை: வெண்ணெய்யைச் சூடாக்கி, அதில் சோளமாவை நன்றாகக் கிளறி விட்டுக் கொஞ்ச நேரம் சூடுபடுத்த வேண்டும். அத்துடன் பாலைச் சேர்த்து, கிரீமாக ஆகும் வரை சூடுபடுத்த வேண்டும். பிறகு, இதில் நறுக்கிய காளானைச் சேர்க்க வேண்டும்.
இறுதியாக, வெள்ளை மிளகுத் தூளைத் தூவினால், பார்ப்பதற்கு அழகான, பருகுவதற்கு ருசியான சூப் தயாராகி விடும். தினமும் காளானை உணவில் சேர்ப்போம்; காலனை விரட்டுவோம்.
முனைவர் சோ.கமலசுந்தரி, முனைவர் எம்.இராமசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம் – 614 404, திருவாரூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!