எனது விவசாயத்தைப் பணம் தரும் தொழிலாக மாற்றி இருக்கிறேன்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர்.

ற்றாக்குறை மற்றும் தொழில் நுட்பத் திறனற்ற வேலையாட்கள், வளங்குன்றிய நிலங்கள் போன்றவை, மகசூல் குறைவுக்கு முக்கியக் காரணங்கள். இவற்றைத் தவிர்க்க, எந்திரமயப் பண்ணையம் நோக்கி விவசாயிகளை, குறிப்பாக, சிறு குறு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். வேளாண்மைத் துறை மூலம், விவசாயிகளுக்குப் பண்ணைக் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்களை அமைக்க வேண்டும்.

எந்திரங்களைப் பயன்படுத்தினால், வேலையாட்கள் பற்றாக்குறை, அவர்களின் குறைவான வேலைத் திறன், அதிகக்கூலி போன்ற சிக்கல்கள் அகலும். இவ்வகையில், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மகசூல் இரட்டிப்பு கிராமமான, திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் நெட்டவேலம்பட்டி விவசாயி இரா.இளங்கோவன் இயங்கி வருகிறார்.

இவருடைய பண்ணை இயந்திரப் பயன்பாடுகள் குறித்த அனுபவம் விவசாயப் பெருமக்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும் என்பதால், அதைப் பற்றிக் கூறச் சொன்னோம். அவர் கூறுவதைக் கேளுங்கள்.

“நான் மின்னியல் துறையில் பட்டயப் படிப்பை முடித்து உள்ளேன். கடந்த 31 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் ஊருக்குப் பக்கத்தில், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளது.

இங்குள்ள பேராசிரியர்கள், எங்கள் பகுதி விவசாயிகளுக்கு மட்டுமல்ல, திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மகளிர் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் செயலாற்றி வருகின்றனர்.

அதாவது, விவசாயம், தோட்டக்கலை, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, விளை பொருள்களை மதிப்புமிகு பொருள்களாக மாற்றுதல் போன்றவற்றை, நிலையப் பயிற்சிகள், களப் பயிற்சிகள், கருத்துக் காட்சிகள் மற்றும் கண்டுணர்வு சுற்றுலா என, பல வடிவங்களில் வழங்கி வருகிறார்கள்.

இப்படிப் பயனடைந்து வரும் எண்ணற்ற விவசாயிகளில் நானும் ஒருவன். இவர்கள், பயிற்சிகளை மட்டுமின்றி, சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏற்படும் ஐயங்களுக்குத் தெளிவான விளக்கங்களையும் கொடுத்து உதவுகிறார்கள்.

மேலும், விவசாயிகளின் நிலங்களையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்குகிறார்கள். இன்றைய சூழலில், விவசாயத்தில் எந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாடு எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக் கூறுகிறார்கள்.

ஆட்களை வைத்து நாள் கணக்கில் செய்யும் வேலைகள், இயந்திரம் மற்றும் கருவிகள் மூலம், சிலமணி நேரத்தில், சரியான பருவத்தில் நேர்த்தியாகச் செய்ய முடியும் என்று, இவர்கள் கூறியதை என் அனுபவத்தில் பார்த்தேன். அதனால், என்னால் முடிந்த வரையில், எனது நிலத்தில் பண்ணை இயந்திரம் மற்றும் கருவிகளைப் பயன்படுத்த விரும்பினேன்.

இதற்காக, 09.10.2018 இல், பண்ணை இயந்திரங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்புக் குறித்த பயிற்சியை, கோயம்புத்தூரில் அமைந்துள்ள மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில் பெற்றேன்.

2018-2019 இல், கோ.5 சின்ன வெங்காய சாகுபடியை முதல்நிலைச் செயல் விளக்கமாக அமைத்தேன். 2019-2020 ஆண்டு, சின்ன வெங்காய சாகுபடியில், தெளிப்புப் பாசனத்தைப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற்றேன். மேலும், நிலக்கடலை, மரவள்ளி, மஞ்சள் போன்ற பயிர்களில் நுண்ணீர்ப் பாசனத்தைச் செயல்படுத்தி வருகிறேன்.

நான் விவசாயத்துக்கு வந்த பிறகு, டிராக்டர், சட்டிக் கலப்பை, விதைப்புக் கருவி, பயறுவகை விதைப்புக் கருவி, கரும்புத் தோகையை மட்க வைக்கும் கருவி, நெல் அறுவடை இயந்திரம், கோனோவீடர் களைக்கருவி, நெல் வைக்கோல் உருட்டும் கருவி,

கரும்புக் கரணை வெட்டும் கருவி, நெல் தரிசு உளுந்து அறுவடை இயந்திரம், மாவில் ஜெட் தெளிப்பான் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறேன். இதனால், நல்ல விளைச்சல் மற்றும் வருமானம் கிடைக்கிறது.

மேலும், எனது நிலத்தை, கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் இணைந்த, ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றி உள்ளேன். மற்ற விவசாயிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறேன்.

பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருள்களைத் தயாரித்து, பக்கத்து விவசாயிகளுக்கும் கொடுத்து, இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறேன். இதனால், நஞ்சில்லா உணவுப் பொருள்கள் கிடைக்கும் என்பதுடன், இடுபொருள் செலவு பெருமளவில் மிச்சமாகும் என்பதையும், அந்த விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி வருகிறேன்.

உணவுப் பயிர்களுடன் மரப் பயிர்களையும் என் நிலத்தில் வளர்த்து வருகிறேன். குறிப்பாக, காகிதம் தயாரிக்க உதவும் தை லமரத்தை வளர்த்து வருகிறேன். இந்த மரங்களைச் சரியான பருவத்தில், கரூரில் உள்ள தமிழ்நாடு அரசு காகித ஆலைக்குக் கொடுத்து விடுகிறேன். இதனால், முடிந்த வரையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கத் துணையாக இருக்கிறேன் என்பதுடன், திட்டமிட்ட வருமானத்தையும் அடைய முடிகிறது.

விவசாயிகள் விவாதக் குழுவில் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறேன். அதனால், உப்பிலியாபுரம் வெங்காய விவசாயிகள் குழு மூலம், விவசாயிகள் பயன்படும் வகையில், இயந்திர வாடகை மையத்தை நடத்தி வருகிறேன்.

இப்படி, விவசாயம் சார்ந்த பல வேலைகளில் ஈடுபட்டு வருவதால், விவசாயிகள் என்றால், கஷ்டமான வாழ்க்கை வாழ்பவர்கள் என்னும் நிலையை மாற்றிக் காட்டி உள்ளேன். அமைதியாக, மகிழ்ச்சியாக வாழத் தேவையான பொருளாதார வசதியைத் தரும் நல்ல தொழிலாக எனது விவசாயத்தை மாற்றி இருக்கிறேன்.

அதனால், பல ஆண்டுகளாக விவசாயத்தில் நான் பயன்படுத்தி வரும் நவீன உத்திகளை, முற்போக்குச் செயல்களை அறிந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், என்னைப் பாராட்டும் விதமாகவும், மற்ற விவசாயிகளுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாகவும், 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த பண்ணை இயந்திரமாக்குதல் விவசாயி விருதை, எனக்கு வழங்கிச் சிறப்பித்தது. எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியைத் தரும் இது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான நேரமாகும்’’ என்றார்.

விவசாயப் பெருமக்களே! முற்போக்கு விவசாயி இளங்கோவன் அவர்கள் கூறிய அனுபவத்தைப் படித்தீர்கள் தானே? நீங்களும் நினைத்தால் அவரைப் போல விவசாயத்தில் சாதிக்க முடியும். திட்டமிடுங்கள், முயற்சி செய்யுங்கள். வெற்றி எட்டி விடும் தூரம் தான். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.


முனைவர் நூர்ஜஹான் அ.கா.அ.ஹனீப், முனைவர் வெ.தனுஷ்கோடி, முனைவர் கோ.அமுதசெல்வி, முனைவர் நா.தமிழ்ச்செல்வன், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks