அளவாக உண்ண வேண்டிய வல்லாரைக் கீரை!

வல்லாரைக் கீரை

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர்.

நினைவாற்றலைத் தருவதில் வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இரத்தத்துக்குத் தேவையான சத்துகள் மற்றும் மூளை இயங்கத் தேவையான சத்துகள் இதில் சரியான அளவில் இருப்பதால், இதற்கு, சரஸ்வதி கீரை என்னும் பெயரும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் சென்டெல்லா ஆசியாடிகா ஆகும்.

வல்லாரைக் கீரை, ஏரி, வாய்க்கால், குளம், குட்டை மற்றும் வேலியோரம் வளர்ந்து கிடக்கும். வல்லாரை இலை அவரை விதையைப் போல இருக்கும். உலகிலேயே நினைவாற்றலைக் கூட்ட, வல்லாரைக்கு இணையான கீரையே கிடையாது.

சத்துகள்

வல்லாரைக் கீரையில், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, உயிர்ச் சத்துகள் ஏ, சி, தாதுப்புகள் உள்ளன. மேலும், செயல்திறன் மிக்க வேதிப் பொருள்களான உயிர்ச் சத்துகள் பி1, பி2, டோனிக் அமிலம் மற்றும் சென்டிலிக் சென்டோயிக் அமிலங்கள், அமினோ அமிலங்கள், கரோட்டீன், வெல்லிரைன், பிரமினோசைடு ஆகியனவும் உள்ளன.

உணவுகள்

வல்லாரைத் துவையல், ஜூஸ், பொடி, மசியல் மற்றும் கூட்டாகச் செய்து உண்ணலாம். வல்லாரையில் புளியைச் சேர்த்துச் சமைக்கக் கூடாது. ஏனெனில், புளி வல்லாரையின் சக்தியைக் குறைத்து விடும். உப்பையும் பாதியளவு இட்டால் போதும்.

இந்தக் கீரையைக் குறைவாகவே சாப்பிட வேண்டும். நிறையச் சாப்பிட்டால், மயக்கம், தலைச் சுற்றல் மற்றும் உடல்வலி ஏற்படும். எனவே, பத்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணலாம். இக்கீரையுடன், மாமிச உணவுகள், பாகற்காய் மற்றும் அகத்திக் கீரையை உண்ணக் கூடாது.

மருத்துவப் பயன்கள்

வல்லாரை லேகியம், மாத்திரை, சூரணம் போன்ற பொருள்களாகத் தயாரித்து, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தி வருகின்றனர். காலையில் கைப்பிடி வல்லாரை இலையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த ஆற்றலைப் பெறும்.

மேலும், விழுங்கிய பிறகு பசும்பாலைக் குடித்து வந்தால் மாலைக்கண் குணமாகும். மன நோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து மென்மை உணர்வு உண்டாகும்.

வல்லாரை இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, பசும்பாலில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். வைரஸ் தொற்றுக்குப் பிறகு உடல் தேறவும், உடல் வலுவாகவும் இக்கீரை உதவும்.

மூட்டு வலியைப் போக்கும். குழந்தைகளின் வயிற்றுப்போக்கை இக்கீரை குணமாக்கும். அடிவயிற்றுக் கோளாறுகள், காய்ச்சல், சுவாசக்குழல் நோய்கள், தொண்டைக் கட்டு, படை போன்றவற்றைக் குணமாக்கும்.

இக்கீரையில் பல் துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை, நெருஞ்சி, அதிமதுரம் ஆகிய மூன்றையும் சேர்த்துச் சூரணம் செய்து உண்டு வந்தால், சிறுநீர்ப் பையில் தோன்றும் கல் நீங்கும்.

பசும்பாலில் வல்லரைச் சாற்றைக் கலந்து சாப்பிட்டு வந்தால், காக்கை வலிப்பு தீரும். வல்லாரைத் துவையல் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் நோய்கள் மற்றும் நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.


வல்லாரைக் கீரை R.RAJAPRIYA

முனைவர் ர.இராஜபிரியா, பயிற்சி உதவியாளர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், பெரம்பலூர். முனைவர் பா.குஞ்சம்மாள், முதுநிலை ஆராய்ச்சியாளர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!