செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டிக்குச் செல்லும் சாலையில், ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது புல்லமுத்தூர். இங்கே, சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
நெல்லும் பருத்தியும் இங்கே அதிகமாக விளையும் பயிர்கள். விவசாயத்துக்கு இணையாக, ஆடு மாடு போன்ற கால்நடைகளையும் இவ்வூர் மக்கள் வளர்த்து வருகிறார்கள். தொடக்கப்பள்ளி மட்டும் இவ்வூரில் உள்ளது. அதற்கு மேல் படிப்பதற்கு, அருகிலுள்ள சாத்தங்குடிக்குத் தான் செல்ல வேண்டும்.
கால்நடை மருத்துவமனையும் சாத்தங்குடியில் தான் உள்ளது. விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் ஆலோசனைக்கு, திருமங்கலம் தான் செல்ல வேண்டும்.
இந்தப் புல்லமுத்தூரைச் சேர்ந்த பரம்பரை விவசாயி ரா.பாப்புராஜ், தனது அப்பாவுக்குப் பிறகு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயத்தைச் செய்து வருகிறார். இவரது மனைவி பாலசித்ரா, இவருக்குத் துணையாக இருந்து வருகிறார்.
இவர், தனது நான்கு பெண் பிள்ளைகளையும் பள்ளிக்கல்வி முதல் இளநிலைப் பட்டப்படிப்பு வரை, படிக்க வைத்து உள்ளார். இவரது விவசாயம் மற்றும் குடும்ப வழிகாட்டியாக இவரின் அம்மா இருந்து வருகிறார்.
இவர், ஆடிப் பட்டத்தில் பருவமழை கிடைத்ததும் நெல், நிலக்கடலை, பருத்தி, கரும்பு மற்றும் பயறு வகைகளைப் பயிரிடுவார். நெல்லைப் பொறுத்த வரை, NLR இரகத்தை, தனது சாகுபடி அனுபவ அடிப்படையில் செய்வார்.
நவீன விவசாயம் குறித்த விழிப்புணர்வு, அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் இல்லாததால், ஒரு ஏக்கரில் 72 கிலோ அளவுள்ள 35 மூட்டை நெல்லை மட்டுமே அவரால் மகசூலாக எடுக்க முடிந்தது. மேலும், பயிர்ப் பாதுகாப்பு மருந்து உள்ளிட்ட செலவும் அதிகமானது.
இந்நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கும் விவசாயிகளுக்கான இலவச ஆலோசனைகளைப் பற்றித் தெரிந்து கொண்ட அவர், அவற்றைத் தனது விவசாயத்தில் பயன்படுத்தத் தொடங்கினார்.
இதனால், அவரது விவசாயத்தில் மகசூல் கூட வருமானமும் கூடியது. ஒரே சாகுபடியில் 67,000 ரூபாயை, கூடுதல் வருமானமாகப் பெற்ற அவர், தனது மகிழ்ச்சியான அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“பத்து ஏக்கரில் நான் சாகுபடி செய்திருந்த நெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுக்களும், புகையானும் அதிகமாகத் தாக்கியிருந்தன. இதனால், கவலை அடைந்த நான் ரிலையன்ஸ் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டேன்.
உடனே எனது வயலைப் பார்வையிட்ட ரிலையன்ஸ் விவசாய வல்லுநர், நவீனத் தொழில் நுட்பத்துடன், இயற்கை முறையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை, வயலில் அங்காங்கே கட்டச் சொன்னார்.
மேலும், சூரிய விளக்குப் பொறியை வைக்கவும் ஆலோசனை வழங்கினார். அவர் கூறியபடி, இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துகளை அளித்து, பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பின்பற்றினேன்.
மேலும், நெல் சாகுபடிக்குத் தேவையான நவீன உத்திகளை, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வாட்சாப் தகவல்கள் மற்றும் கட்டணமில்லா விவசாய உதவி எண் மூலம் தெரிந்து கொண்டு, அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்தினேன்.
சூரிய விளக்குப் பொறியை, எங்கள் கிராமத்தில் யாருமே பயன்படுத்தியது இல்லை. ரிலையன்ஸ் அறக்கட்டளை வல்லுநர், அதன் பயன்பாடு மற்றும் நன்மைகளைத் தெளிவாக விளக்கிக் கூறினார்.
இதையடுத்து, விவசாயத் துறையில், மானியத்தில் விளக்குப் பொறியைப் பெற்று, வயலில் வைத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தினேன். இதனால், ஒரு ஏக்கருக்கு ஆகும் பயிர்ப் பாதுகாப்புச் செலவில், 1,200 ரூபாய் மிச்சமானது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வாட்சாப், உதவி எண், குரல்வழிச் செய்தி, மண் பரிசோதனை முடிவு ஆகியவற்றை, எனது வயலில் செயல்படுத்தியதால், ஒரு ஏக்கருக்கு சராசரி மகசூல், 35 மூட்டையிலிருந்து 40 மூட்டையாகி, பத்து ஏக்கரில் 400 மூட்டை நெல் கிடைத்தது.
ஒரு மூட்டை நெல் 1,100 ரூபாய் வீதம், 400 மூட்டை மூலம் கிடைத்த வருமானம் 4,40,000 ரூபாய். எனக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து கிடைத்த தொழில் நுட்ப வழிகாட்டுதலால், ஏக்கருக்கு 5 மூட்டை வீதம், பத்து ஏக்கரில் 50 மூட்டை நெல் கூடுதலாகக் கிடைத்தது. இதனால், கிடைத்த கூடுதல் வருமானம் (50×1,100) 55,000 ரூபாயாகும்.
மேலும், ரிலையன்ஸ் வழிகாட்டுதலில், சூரிய விளக்குப்பொறி மற்றும் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றியதால், ஒரு ஏக்கருக்கான மொத்த இடுபொருள் செலவில் 1,200 ரூபாய் குறைந்தது.
இவ்வகையில், பத்து ஏக்கர் மொத்த இடுபொருள் செலவில் 12,000 ரூபாய் குறைந்தது. எனவே, கூடுதல் மகசூலில் கிடைத்த ரூ.55,000, இடுபொருள் செலவில் மிச்சமான ரூ.12,000 என, பத்து ஏக்கரில் எனக்குக் கிடைத்த கூடுதல் வருமானம் 67,000 ரூபாய்.
பாசிப்பயறு உற்பத்தியாளர்கள் குழுவில் எனது பகுதிக்கு நான் தலைவராக இருப்பதால், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தகவல்களை அனைத்து விவசாயிகளுக்கும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறேன்.
எங்கள் ஊரில் எனக்கு மட்டுமின்றி, 150 குடும்ப விவசாயிகளுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக, விவசாய ஆலோசனைகள், கால்நடைகள் வளர்ப்பு முறைகள் குறித்த தகவல்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கி வருகிறது.
விவசாயம் நீடித்து வளர உதவி செய்யும் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு, இந்த நேரத்தில் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா இலவசத் தொடர்பு எண் 1800-419-8800 மூலம் ஆலோசனைகளைப் பெற்றுப் பயனடைந்து வருகிறோம்’’ என்றார்.
ஸ்ரீகிருபா