மீன் வளர்ப்பில் உயிரி பாதுகாப்பு முறைகள்!

மீன் - உயிரி பாதுகாப்பு

செய்தி வெளியான இதழ்: 2018 ஜூலை.

ரம் வாய்ந்த மீன்கள் மற்றும் மீன் சார்ந்த பொருள்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளதால், மீன் வளர்ப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மீன்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

மீன்களை நலமாகப் பராமரித்து, தரமாக அறுவடை செய்வதற்கு, உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயிரி பாதுகாப்பு முறை என்பது, குஞ்சுப் பொரிப்பகம், நாற்றங்கால் மற்றும் வளர்ப்புக் குளத்தில் நோயற்ற சூழலை உருவாக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகள் ஆகும்.

உயிரி பாதுகாப்பு முறைகள் மற்றும் நடவடிக்கைகள், எந்தவொரு நோய்க் காரணியும் இல்லாத பண்ணையில், நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் நுழைவதைத் தடுக்கும் விதத்திலும், நுழைவதற்கு முன்பே அவற்றைக் குறைக்கும் விதத்திலும் இருக்க வேண்டும்.

உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளின் நோக்கம்

மீன்கள் மேலாண்மை: நல்ல பண்ணை நடைமுறைகள் மூலம், தரமான மீன்களை உற்பத்தி செய்தல் மற்றும் மீன்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல்.

நோய்க்காரணிகள் மேலாண்மை: மீன் வளர்ப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் நோய்க் காரணிகள் பண்ணையில் நுழைவதைத் தடுத்தல் மற்றும் அழித்தல்.

பண்ணையாளர்கள் மேலாண்மை: பண்ணையாளர்கள் மற்றும் வேலை ஆட்களுக்கு உயிரி பாதுகாப்பு நடைமுறைகளின் முக்கியத்தைக் கற்பித்தல்.

உயிரி பாதுகாப்பு முறைகளின் அவசியம்

மீன் பண்ணையாளர்கள் வளர்ப்புப் பண்ணைகளை அமைப்பதில் கணிசமான தொகையை முதலீடு செய்து, அதிலிருந்து பெரிய வருமானத்தை உருவாக்க முனைகிறார்கள். எனவே, குஞ்சுப் பொரிப்பகங்களில் உற்பத்தி செய்யும் குஞ்சுகள் நல்ல தரம் மற்றும் அதிகப் பிழைப்புத் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

எந்த உற்பத்தித் துறையிலும் நோய்க் காரணிகள் தொற்றும் ஆபத்து உண்டு. நோய்க் காரணிகள் பல்வேறு வழிகளில், அதாவது, சினை மீன்களின் கழிவுகள், அசுத்தமான உபகரணங்கள் மற்றும் வேலையாட்களின் சுகாதாரமற்ற செயல்கள் மூலம் வரலாம்.

இந்த நோய்த் தொற்றுகளின் விளைவுகளால், பண்ணைகளில் பொருளாதார இழப்பு ஏற்படும். இதைக் குறைக்க, உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள், நோய்க் காரணிகளின் தாக்குதலைக் குறைக்க வழி வகுத்தாலும், பண்ணையாளர்கள் இந்த முறைகளை மிகப் பெரிய அளவில் மேற்கொள்வது இல்லை.

உயிரினப் பாதுகாப்பு

பொதுவாக, நோய்த் தாக்கம் இல்லாத மீன் பண்ணையில், பார்வையாளர்களின் வருகை மற்றும் உபகரணங்கள் நகர்வு மூலமாக நோய்த் தொற்று ஏற்படலாம். எனவே, அவற்றை முறையான கட்டுப்பாட்டில் வைத்து, அவ்வப்போது கிருமி நீக்கம் செய்தால், நோய்க் கிருமிகள் நுழைவதைக் குறைக்க முடியும்.

உயிரி பாதுகாப்பு முறைகள்

சுகாதார நடவடிக்கைகளை எடுத்தல். நீர் சிகிச்சை. சுத்தமான உணவளித்தல். மீன் முட்டைகளைச் சரியாகக் கிருமி நீக்கம் செய்தல். தாய் இறால், மீன்களிடம் இருந்து குஞ்சுகளுக்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தல். இறந்த மீன்களை, இறால்களை உடனடியாக அகற்றுதல்.

உயிரினப் பாதுகாப்பில் வளர்ப்பு உயிரினம், இருப்படர்த்தி, பண்ணை இயக்கம், பார்வையாளர்கள் வருகை, நோய்கள் மற்றும் நோய்க் காரணிகளின் தாக்கம் மற்றும் பொருளாதாரச் செலவுகளைப் பொறுத்து, வெவ்வேறு நிலை உயிரி பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

நல்ல உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகள், நோய்க் காரணிகள் உயிரினங்களைத் தொற்றுவதைக் குறைக்க, பல வகைகளில் வழிவகுக்கும். அவை: வெளிப்புற உயிரி பாதுகாப்புத் தடைகள் உட்புற உயிரி பாதுகாப்புத் தடைகள்.

வெளிப்புற உயிரி பாதுகாப்புத் தடைகள்

நோய்க் காரணிகள் இல்லாத நீரைப் பண்ணையில் பயன்படுத்தல். மற்ற பண்ணைகளில் இருந்து இறால்கள், மீன்களைக் கொண்டு வருவதைத் தடுத்தல். பார்வையாளர்கள் வருகையைக் குறைத்தல். பண்ணையில் நுழையும் பார்வையாளர்கள், சுகாதார முறைகளை மேற்கொள்ளச் செய்தல். பண்ணையைச் சுற்றி வேலி அமைத்தல். பண்ணையில் நுழைவதற்கு முன், கிருமி நாசினியில் கால்களை நனைத்தல்.

உட்புற உயிரி பாதுகாப்புத் தடைகள்

பண்ணைக்கு உள்ளேயே ஒரு குளத்திலிருந்து அடுத்த குளத்துக்குப் பரவலைத் தடுத்தல். ஒரு பண்ணையில் உள்ள வெவ்வேறு பிரிவுகளை, தனித்தனியே பராமரித்தல். ஒவ்வொரு பிரிவிலும் சுகாதார முறைகளைக் கையாளுதல். பண்ணையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு, கருவிகள் மற்றும் வளர்ப்பு உயிரினங்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்தல். பூச்சிக் கட்டுப்பாட்டு மேலாண்மையைக் கையாளுதல்.

உயிரி பாதுகாப்பில் மேற்கொள்ள வேண்டிய முறைகள்

புதிதாகப் பண்ணைக்குக் கொண்டு வரும் உயிரினங்களை, சில காலம் தனிமைப்படுத்தி வைப்பது, அறிவியல் நோக்கில் மிகவும் பயனுள்ளது. இதன் மூலம், நோய்க் காரணிகள் பண்ணைக்குள் நுழைவதைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

உயிரினங்களைத் தனிமைப்படுத்தல், கிருமியகற்றம் ஆகியன, உயிரி பாதுகாப்பின் முக்கிய நடைமுறைகள் ஆகும். பண்ணைகளில் உயிரி பாதுகாப்பைச் செயல்படுத்த கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மீன் வளர்ப்புக் குளத்து நீரை, நீர்த் தேக்கங்களில் தேக்கி, கிருமியகற்றம் செய்து பயன்படுத்த வேண்டும். இறால் வளர்ப்பில், இறால் லார்வாக்களைப் பண்ணைக்குக் கொண்டு வருமுன், நோயறிதல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இது, நச்சுயிரிகளால் ஏற்படும் நோயை தொடக்கத்திலேயே அறிந்து, நோயற்ற இறால் குஞ்சுகளைத் தேர்ந்தெடுக்க உதவும்.

நோயைப் பரப்பும் நண்டைப் போன்ற உயிரினங்களைக் கட்டுப்படுத்த, பண்ணையைச் சுற்றி மீன்பிடி வலையால் வேலியமைக்க வேண்டும். பண்ணையில் பறவைகள் நுழைவதைத் தடுக்க, பண்ணையின் மேற்பரப்பு முழுவதும் சிறிய நூல் கயிறுகளைக் கட்ட வேண்டும்.

பண்ணைத் தொழிலாளர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு குளத்தில் பணி புரிந்து விட்டு மற்றொரு குளத்துக்குச் செல்லுமுன் கை கால்களைக் கிருமி நாசினியில் நனைக்க வேண்டும்.

குளங்களில் இருப்புச் செய்வதற்கு முன், பயன்பாட்டில் உள்ள கருவிகள் அனைத்தையும், கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்துக் கிருமி நாசினிகளும் மிகவும் நச்சுத்தன்மை மிக்கவை. எனவே, பயன்படுத்தும் முன் அனைத்துப் பொருள்களையும் நீரில் அலச வேண்டும்.

குஞ்சுப் பொரிப்பகங்களில் முட்டைகளைக் கிருமி நீக்கம் செய்தல்: முட்டைகளின் ஓடு கடினமாக இருந்தால், அதனை அயோடின் கலவையில் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். தாயிடமிருந்து நோய் பரவுவதைத் தடுக்க, நோயற்ற சினை மீன்களைப் பயன்படுத்த வேண்டும்.

உயிரி பாதுகாப்பின் நன்மைகள்

மீன் வளர்ப்பில் நோய் ஏற்பட்டால் அதற்குச் சிகிச்சை செய்து கட்டுப்படுத்துவது கடினம். பல நச்சுயிரி நோய்களுக்கு சிகிச்சை முறைகள் அறவே இல்லை. மேலும், சில பாக்டீரிய நோய்களை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

ஆனால், மீன்கள் மற்றும் இறால்கள் உணவுப் பொருளாக இருப்பதால், சிகிச்சைக்காக ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது, விற்பனை வாய்ப்பைப் பாதிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் கேடு வளைவிக்கும்.

எனவே, உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். மீன் வளர்ப்பில், நோய்த் தொற்று, அதிகளவில் மீன்கள் இறத்தல், பொருளாதார இழப்புகள் ஆகிய சிக்கல்களைக் குறைக்க, உயிரி பாதுகாப்பு முறைகள் வழி வகுக்கும்.

மீன் வளர்ப்புத் தொடர்ந்து வளர்ந்து வருவதால், நச்சுயிரிகளின் தாக்குதலும் கூடி வருகிறது. நாளுக்கு நாள் புதிது புதிதாக நோய்கள் வருகின்றன. நச்சுயிரித் தாக்குதலை மீன் வளர்ப்பில் முற்றிலும் அழித்துவிட முடியாது. ஆனாலும், உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகள், நோய்க் கிருமிகள் நுழைதல் மற்றும் பரவுதலைக் குறைத்து, மீன்களை நலமாகப் பராமரிக்க உதவும்.


உயிரி ANGELA MERCY e1629710377471

.ஏஞ்சலா மெர்ஸி,

யூ.ஹினோ பர்ணாண்டோ, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா

மீன்வளப் பல்கலைக் கழகம், நாகப்பட்டினம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!