மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள வேம்பு!

வேம்பு

செய்தி வெளியான இதழ்: 2019 மார்ச்.

வேப்பிலை, சீதளத்தைப் போக்கும். விஷக் காய்ச்சலைக் குணமாக்கும். அம்மையைத் தணிக்கும். வயிற்றுக் கிருமிகளையும், பூச்சிகளையும் கொல்லும். வீக்கங்களை வற்றச் செய்யும். அம்மைப் புண்களையும் ஆறாத புண்களையும் ஆற்றும்.

தேகத்தில் ஏற்படும் சொறி, சிரங்கைப் போக்கும். பிளவைக் கட்டிகளைக் குணமாக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும். பலவகைத் தலைவலிகளைப் போக்கும். தொழுநோயையும் குணமாக்கும்.

எவ்வகை அம்மையையும் குணப்படுத்தும் அரிய சஞ்சீவி வேப்பிலை. மூளைக்கு வேலை கொடுத்துக் களைத்து இருப்பவர்கள், உழைக்கும் மக்கள், வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்தால் மூளை சாந்தமடையும். உடல் வலி, மனக்கவலை போகும்.

மனநிலை சரியாக இல்லாதவர்களை வேப்ப மரத்தடியில் இருக்கச் செய்தால், நல்ல மனநிலை ஏற்படும். வேப்ப மரங்கள் இருக்கும் இடங்களில் கிருமிகள் பரவுவதில்லை. வேப்ப மரத்தில் இருந்து வெளியாகும் சஞ்சீவிக் காற்றுக்கு, அணுக் கிருமிகளைக் கொல்லக் கூடிய ஆற்றல் உண்டு.

சர்க்கரை வேம்பு என்னும் வேப்ப மரத்தின் இலை, பூ, காய், பழம், கட்டை, பட்டை, அடி வேர் எல்லாமே கரும்பைப் போல இனிக்கும். சர்க்கரை வேம்பின் இந்தப் பொருள்களைக் காய வைத்துத் தூளாக்கி, நாற்பது நாட்கள் சாப்பிட்டால் பலசாலி ஆகலாம்.

நன்கு வளர்ந்த வேப்பமர இலைகள், வெள்ளையாக மாறிக் காயத் தொடங்கினால், அந்தப் பகுதியில் நோய் ஏற்படப் போகிறது என அறிந்து கொள்ளலாம். வேப்ப மரத்தைப் பார்த்தாலே கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். இந்தியாவில் வேப்ப மரங்கள் ஏராளமாக உள்ளன.

வெப்பப் பகுதிகளில் தான் இந்த மரங்கள் செழித்து வளரும். ஆலமரம், அரசமரத்தைப் போல, வேப்ப மரமும் பல நூறு ஆண்டுகள் வரை வாழும். நம் நாட்டில், வேப்ப மரம் புனிதமான மரமாகக் கருதப்படுகிறது.

கோயிலைச் சுற்றிலும் வேப்ப மரங்கள் இருக்கின்றன. வேப்ப மரத்தை, வேம்பு, வேப்பு, பராசக்தி, ஆதிசக்தி எனவும் அழைப்பர். நீம் மார்கோஸா என்பது ஆங்கிலப் பெயர்.

காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் நடப்பதற்குச் சிரமப்படுவர். அவ்வளவு வலி இருக்கும். இந்தப் பித்த வெடிப்புக்குப் பல மருந்துகளைப் போட்டும் தீர்வு கிடைக்காதவர்கள்,

வேப்பிலை மற்றும் மஞ்சளை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, வெடிப்பில் நன்றாகத் தடவி மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவிவிட வேண்டும். இப்படி ஒன்பது நாட்கள் செய்து வந்தால் பித்த வெடிப்புகள் மறையும்.

நகச்சுற்றைப் போக்க, எலுமிச்சம் பழத்தில் துளையிட்டு அதை விரலில் செருகிக் கொள்வது வழக்கம். இதைப் போல, வேப்பிலையை மைபோல் அரைத்து அத்துடன் மஞ்சளைச் சேர்த்துக் கட்டினால் நகச்சுற்று விரைவில் குணமாகும்.

வேப்பிலையை மைபோல் அரைத்து, கழற்சிக் காயளவு எடுத்து, 7 மிளகு, 2 மிளகளவு கற்பூரம் சேர்த்து மைபோல் அரைத்து, வலிக்கும் இடத்தில் அரைமணி நேரம் பற்றுப் போட்டால், தலைவலி பறந்து விடும்.

இருபக்கத் தலைவலிக்கும் நெற்றியின் இருபுறமும் பற்றுப் போட வேண்டும். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோர், நாற்பது நாட்கள் இதைச் செய்தால் பூரணக் குணம் உண்டாகும்.

வேப்ப எண்ணெய்யில் வேப்பிலைகளை வதக்கிக் கட்டினால் வீக்கம் குணமாகும். வேப்பிலையுடன் வேலிப்பருத்தி இலை, மஞ்சள் சேர்த்து மைபோல அரைத்து, கட்டியைச் சுற்றிப் பற்றுப் போட்டு வந்தால் கட்டி உடைந்து விடும். வெந்நீர், வடிகஞ்சி, நெருப்புச் சுட்ட புண்ணுக்கும் இப்படிப் பற்றுப் போடலாம்.

குழந்தைகளுக்கு வேப்பங் கொழுந்து உறை மருந்தைக் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த நோயும் வராது. வேப்பம் பழத்தில் செய்யும் சர்பத்தைச் சாப்பிட்டால் பித்தம் தணியும்; இரத்தம் சுத்தமடையும். தோல் நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சொறி, சிரங்கை உருவாக்கும் அணுக்கிருமிகள் அழியும்.

சுத்தமான வேப்பம் பழங்களைப் பிதுக்கி, சதையுடன் வெளிவரும் கொட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். தோலை மேலும் அழுத்தினால் உள்ளிருக்கும் சதை வெளியே வரும். அதையும் அந்தப் பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு, கையால் பிசைந்து கொட்டைகளை அகற்றி விட்டு, பாத்திரத்தில் உள்ள சதையில் பாதியளவுக்கு நீரையும், தேவையான அளவில் சர்க்கரையும் சேர்த்து, நன்றாகக் கலக்க வேண்டும்.

இதை, கலாய் பூசிய பாத்திரத்தில் இட்டு, விரலில் தொட்டால் பிசினைப் போல ஒட்டும் வரையில் காய்ச்ச வேண்டும். இதைத் தான் வேப்பம் சர்பத் என்கிறோம். இதை ஆற விட்டுப் புட்டியில் வைத்துக் கொண்டு, தினமும் காலையில் இரண்டு தேக்கரண்டி அளவில் எடுத்து, நீரைக் கலந்து குடித்து வந்தால், சொறி, சிரங்கு, யானைச் சிரங்கு, இரணம் மற்றும் சரும நோய்கள் குணமாகும்.


வேம்பு SATHISH G 2

முனைவர் கோ.சதீஸ், முனைவர் இரா.மணிமேகலை, முனைவர் சி.தமிழ்ச்செல்வி, முனைவர் மு.சபாபதி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர் – 602 025, திருவள்ளுர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!