பயறு வகைகளில் உற்பத்தியைப் பெருக்குதல்!

பயறு

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர்.

யறு வகைகளில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இந்தப் புரதம் நம் உடல் வளர்ச்சிக்கு, அறிவாற்றலுக்கு மிகவும் அவசியம். தானிய வகைகளில் உள்ள புரதத்தை விட, பயறு வகைகளில் 2-3 மடங்கு மிகுதியாக உள்ளது. மேலும், பயறு வகைகளை உண்பது, தானிய உணவுகளை மட்டும் உண்பதால் ஏற்படும், முக்கிய அமினோ அமிலக் குறைகளைச் சரி செய்ய உதவும்.

பயறுகள் அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ரைசோபியம் என்னும் நுண்ணுயிர்கள், பயறுவகைச் செடிகளின் வேர்கள் வழியே நுழைந்து, செடிகளில் உள்ள சர்க்கரைப் பொருளை உண்டு பெருகி, அதற்குக் கைமாறாக, காற்றிலுள்ள தழைச்சத்தை ஈர்த்துச் சேமித்து மண்ணுக்குத் தந்து உதவுகின்றன.

துவரைப்பயிர் 41-90 கிலோ, தட்டைப்பயிர் 90 கிலோ, சோயா மொச்சை 70 கிலோ, கொண்டைக் கடலை 150 கிலோ, உளுந்து 125 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்க்கின்றன. இந்தப் பயறு வகைகள் ஊடுபயிர், கலப்புப் பயிர் சாகுபடிக்கு உகந்தவை.

மேலும், பயிர்ச் சுழற்சிக்கும் ஏற்றவை. பயறு வகைகளால் மண்வளம் காக்கப்படுகிறது. இப்பயிர்கள் வறட்சியைத் தாங்கும் தன்மையும், மண்ணின் அடியிலுள்ள நீரைக் கிரகிக்கும் தன்மையும் கொண்டவை.

தட்டைப்பயறு, கொள்ளு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் சோயா மொச்சைச் செடிகள் அருமையான கால்நடைத் தீவனமாகும். தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ஏழு இலட்சம் டன் பயறு தேவை. ஆனால், சுமார் 5.3 இலட்சம் எக்டர் மூலம் 1.8 இலட்சம் டன் பயறு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் 5.2 இலட்சம் டன் பயறு பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதை ஈடுகட்ட, மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து துவரையும், பஞ்சாபிலிருந்து கொண்டைக் கடலையும், மத்திய பிரதேசத்தில் இருந்து சோயா மொச்சையும் வாங்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில், 90%க்கும் மேலான பயறு வகைகள் மானாவாரியில் விளைகின்றன. மானாவாரியில் ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்திலும், நெல் தரிசில் தை, மாசியிலும் பயிரிடப்படுகின்றன. நெல் வயலில் மீதமுள்ள ஈரப்பதத்தில் விளையும் பயறு வகைகள், பயறு உற்பத்திக்கு, வயலில் தழைச்சத்தைப் பெருக்க உதவுகின்றன.

மகசூல் குறைவுக்கான காரணங்கள்

பயறு வகைகள் பெரும்பாலும் வளங்குன்றிய நிலங்களில், குறிப்பாக, 80 சதம் பயறுவகைப் பயிர்கள் மானாவாரியில் பயிரிடப்படுவது. நிலத்தைச் சரியாகப் பண்படுத்தாமல் விதைப்பது. தரமான விதைகள் தேவைக்குக் கிடைக்காமல் போவது. தரமற்ற, குறைந்த உற்பத்தித் திறனுள்ள இரகங்களை விதைப்பது. விதையைக் குறைந்தளவில் விதைப்பது. பயிர் எண்ணிக்கைப் பராமரிப்பில் கவனம் செலுத்தாமல் விடுவது.

பருவம் தவறி விதைப்பது. விதைகளைக் கடினப்படுத்தாமல், பூசணக்கொல்லி மற்றும் ரைசோபியத்தில் விதைநேர்த்தி செய்யாமல் விதைப்பது. போதுமான அங்கக உரம் மற்றும் நுண்ணுயிர் உரங்களை இடாமல் விடுவது. களைகளைக் கட்டுப்படுத்தத் தவறுவது. டி.ஏ.பி. அல்லது யூரியாக் கரைசலைச் சரியான காலத்தில் தெளிக்காமல் விடுவது. பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கியைத் தெளிக்காமல் விடுவது.

வளர்ச்சி மற்றும் பூக்கும் காலத்தில் பாசனக்குறை ஏற்படுவது. இலைப் பூச்சிகள், காய்த் துளைப்பான் மற்றும் வண்டுகளால் பாதிப்பு ஏற்படுதல். மஞ்சள் தேமல் நோய், இலை முரணை, வேரழுகல் நோய் மற்றும் சாம்பல் நோயால் பாதிப்பு ஏற்படுதல். கால்நடைகளால் பயிர்கள் சேதமாதல்.

சாகுபடிப் பரப்பைக் கூட்டுதல்

பெருமளவில் தனிப்பயிராகப் பயிரிட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் ஊடுபயிராகப் பயிரிட வேண்டும். வரப்போரப் பயிராக வளர்க்கலாம். பயிர்ச் சுழற்சியில் பயறுவகைப் பயிர்களைப் பயிரிட வேண்டும்.

உளுந்து 328 கிலோ, பாசிப்பயறு 336 கிலோ, துவரை 540 கிலோ, கொண்டைக் கடலை 678 கிலோ, கொள்ளு 331 கிலோ என, உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. புதிய உத்திகளைக் கடைப்பிடித்தால், உற்பத்தித் திறனைக் கணிசமாக உயர்த்தலாம்.

உற்பத்தித் திறனைக் கூட்டுதல்

பருவத்துக்கு ஏற்ற உயர் விளைச்சல் இரகங்களைப் பயிரிட வேண்டும். சரியான பட்டத்தில் விதைக்க வேண்டும். சரியான அளவில், சான்றிதழ் பெற்ற விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

ரைசோபிய நுண்ணுயிர்க் கலவையைக் கலந்து விதைப்பது, பயிருக்கும், மண்ணுக்கும் நல்லது. மகசூலும் 30 சதம் வரை கூடும். குறைந்த செலவில் நிறைந்த மகசூலைப் பெறுவதற்கு, இது நல்ல வழியாகும்.

பயிர் எண்ணிக்கை சரியாக இருக்க வேண்டும். இதனால், பயிருக்குப் போதிய இடம், சூரியவொளி, நீர், உரம் சரியாகக் கிடைக்கும். பயிர் நன்கு வளர்ந்து அதிக மகசூலைத் தரும்.

விதைத்த மூன்றாம் நாளில், மண்ணில் ஈரம் இருப்பின், எக்டருக்கு 2 லிட்டர் வீதம் ஸ்டேம்ப் என்னும் பென்டி மெத்தலின் களைக் கொல்லியை, 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பாசன நிலத்தில் உயிர்நீர் விடுமுன், களைக் கொல்லியைத் தெளித்து விட வேண்டும். அடுத்து, 35 ஆம் நாளில் கொத்துக் களை எடுக்க வேண்டும்.

இறவைப் பயிருக்கு விதைப்பு நீரும், மூன்றாம் நாள் உயிர்நீரும் அவசியம். அடுத்து, தேவைக்கேற்ப 10-15 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்யலாம். பூக்கும் போதும், காய்க்கும் போதும் பாசனம் அவசியம். நிலத்தில் நீர்த் தேங்கக் கூடாது. இறவை மற்றும் நெல் தரிசிலுள்ள பயிர்களுக்கு, இலைவழி உரம் அவசியம் கொடுக்க வேண்டும்.

பூக்கள் உதிர்வதைத் தடுக்க 2 சத டி.ஏ.பி. கரைசலுடன், 40 பி.பி.எம். நாப்தலின் அசிட்டிக் அமிலம் கலந்து, பூக்கள் தோன்றத் தொடங்கியதும் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து மறு முறையும் அதே அளவில் தெளிக்க வேண்டும்.

விதை மூலம் பரவும் பூசண நோய்கள், வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் வீதம் கலந்து விதைக்க வேண்டும்.


Pachai boomi- ASRAF

முனைவர் அ.முகமது அஸ்ரப், உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை – 641 003. சி.நாசியா பேகம், முனைவர் பட்ட ஆய்வு மாணவி, பூச்சியியல் துறை, வேளாண்மைக் கல்லூரி, மதுரை – 625 104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!