நீங்கள் கேட்டவை (கேள்விகளும் பதில்களும்) – பகுதி 9!

நீங்கள் கேட்டவை

கேள்வி:

கரிசல் மண்ணில் எலுமிச்சை சாகுபடி செய்யலாமா? நன்றாக வருமா?

– இரகுபதி, காடையாம்பட்டி.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!

எலுமிச்சை மரம் வளர்ப்பு!


கேள்வி:

மாட்டின் மடியில் ஒரு காம்பில் வீக்கம் ஏற்பட்டது. அதற்குச் சுண்ணாம்பு மஞ்சள் கற்றாழை அரைத்து, பத்து தடவினோம். வீக்கம் குறைந்தது. பிறகு, அந்த ஒரு காம்பில் பால் 90 சதவீதம் குறைந்தது. மீண்டும் 100 சதவீதம் பால் உற்பத்திக்கு வழி காட்டுங்கள்.

– சுப்பிரமணி, பெட்டைவாய்த்தலை.

பதில்:

அய்யா, நமது மூலிகை சிகிச்சையை, ஒரு முதலுதவி சிகிச்சையாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து, கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை எடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் மாட்டை உடனே கால்நடை மருத்துவரிடம் காட்டி சிகிச்சை செய்யுங்கள். நன்றி!


கேள்வி:

பாரம்பரிய அரிசியை மதிப்புக்கூட்டி விற்க வாய்ப்பு உள்ளதா? எங்கு விற்கலாம்?

– K.குணசீலன், திருவாரூர்.

பதில்:

அய்யா, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் தான் நமது முதல் வாடிக்கையாளர்கள். முதலில், சிறியளவில் தொடங்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக விரிவு படுத்துங்கள். சரியாகத் திட்டமிட்டு, முயற்சியைக் கைவிடாமல் உழைத்தால், எடுத்த தொழிலில் வெற்றி பெறலாம். நன்றி!


கேள்வி:

எங்களது மாடு கன்று ஈன்று 1.5 மாதம் ஆகிறது. கன்று ஈன்ற நாள் முதல் இன்று வரை பால் குடிக்கும் போதும், மற்ற நேரமும், தும்மல் மற்றும் சளி மூக்கில் வடிந்து கொண்டிருக்கிறது. மற்றும் சில சமயம் இரத்தம் கலந்த சளி மூக்கில் வடிகிறது. தீவனம் எடுக்கவில்லை. என்ன செய்வது?

– தமிழ்ச்செல்வன், பனையபட்டி.

பதில்:

அய்யா, உடனே கால்நடை மருத்துவரிடம் உங்கள் கன்றைக் காட்டி, சிகிச்சை செய்யப் பாருங்கள். நன்றி!


கேள்வி:

தீவன விவரம் தாருங்கள்.

– பி.துளசிமணி, நாமக்கல்.

பதில்:

அய்யா, பொதுவான கேள்வியாக இருக்கிறது. உங்களுக்குத் தேவைப்படுவதைக் குறிப்பிட்டுக் கேட்டால், தெளிவான விளக்கம் தர முடியும். நன்றி!


கேள்வி:

சம்பங்கியைப் பயிரிட்டு நான்கு மாதமாகிறது. இதில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பூக்களை வெட்டிப் போடுகிறது. என்ன செய்யலாம்?

– முத்தழகன், மோகனூர்.

பதில்:

அய்யா, இரண்டு சத வேப்ப எண்ணெய்க் கரைசலை, ஒட்டும் திரவம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.

பூச்சி விரட்டியைத் தயாரித்தும் தெளிக்கலாம். பூச்சி விரட்டித் தயாரிப்பு முறை இங்கேயுள்ள செய்தியில் இடம் பெற்றுள்ளது. நன்றி!

பூச்சி விரட்டித் தயாரிப்பு!

இலைப்பேன், கம்பளிப்புழு ஆகிய பூச்சிகளும், தண்டழுகல், மொட்டழுகல் ஆகிய நோய்களும் சம்பங்கியைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும். இதற்கு, ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி மானோ குரோட்டோபாஸ் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். நடவின் போது ஏக்கருக்கு 500 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட்டால் அழுகல் நோயைத் தடுக்கலாம்.

ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் டால்டாப் வீதம் கலந்த கலவையில் கிழங்குகளை ஊற வைத்து நட வேண்டும். நோயுற்ற செடிகளின் வேரில், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி கேன்டாப், 3 மில்லி கால்போமின் வீதம் கலந்த கலவையை ஊற்ற வேண்டும்.

நூற்புழுவைக் கட்டுப்படுத்துதல்

செடி மற்றும் கிழங்குகளை நூற்புழுக்கள் தாக்குவதால், சம்பங்கியில் பாதிப்பு அதிகமாகிறது. நூற்புழுக்கள் தாக்கிய கிழங்குகளை நடக்கூடாது. இதைக் கட்டுப்படுத்த, செடிக்கு 2 கிராம் பியூரிடான் வீதம் இடலாம். அல்லது எக்டருக்கு 2-5 கிலோ கார்போபியூரான் மற்றும் ஒரு டன் வேப்பம் புண்ணாக்கை இடலாம். நன்றி!


கேள்வி:

பால் உற்பத்தி அதிகரிக்க, மாட்டுக்கு என்ன கொடுக்க வேண்டும்?

– பாமுருகன், ஆத்தூர், திண்டுக்கல்.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!

சிறந்த பால் உற்பத்திக்கான தீவன மேலாண்மை!


கேள்வி:

தக்கைப்பூண்டு விதை 150 கிலோ வேண்டும்.

– சங்கர், திருவள்ளூர்.

பதில்:

அய்யா, உங்கள் ஊரில் உள்ள விவசாய டெப்போவில் கேட்கலாம்.

அல்லது உங்கள் ஊரிலுள்ள விதை விற்பனைக் கடை, உரம் விற்பனைக் கடைகளில் கேட்கலாம்.

அல்லது செவ்வாபேட்டை இரயில் நிலையம் அருகில் உள்ள திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கேட்கலாம். தொலைபேசி: 044 27697394.

அல்லது, திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கேட்கலாம். தொலைபேசி: 044 2762 0705.

அல்லது, கட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கேட்கலாம். தொலைபேசி: 044 27452371. நன்றி!


கேள்வி:

தென்னை வளர்ப்பு முறை, நோய், பூச்சி மேலாண்மை பற்றிய படிப்பு இருக்கிறதா?

– கார்த்திகேஸ்வரன், திருவண்ணாமலை.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு:

The Associate Professor and Head,

Coconut Research Station,

Aliyar Nagar – 642 101,

Phone : 04253 288722. நன்றி!

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!


கேள்வி:

பஞ்சகவ்யம் லிட்டர் என்ன விலை? எங்கு கிடைக்கும்?

– திருமலைச்சாமி, கிருஷ்ணாபுரம்.

பதில்:

அய்யா, உங்கள் பகுதியில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் இருந்தால் அவர்களிடம் கிடைக்கும். ஒரு லிட்டர் குறைந்தது 150 ரூபாயாவது இருக்கும். நீங்களே சொந்தமாகத் தயாரித்துக் கொள்ளலாம். அதற்கான விளக்கம் இங்கேயுள்ள செய்தியில் இடம் பெற்றுள்ளது. நன்றி!

பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?


கேள்வி:

நேரடி நெல் விதைப்புப் பற்றி முழுமையான தகவல் எனக்கு வேண்டும். என்னிடம் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் இந்த வட்டம் நேரடி நெல் விதைப்பு வைக்கலாம் என்று எண்ணுகிறேன். இதற்கு உங்களுடைய ஆலோசனை எனக்கு வேண்டும்.

– V.கெளரிசங்கர், வெள்ளரிப்பட்டி.

பதில்:

அய்யா, உங்களுக்குத் தேவையான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. நன்றி!

நேரடி நெல் விதைப்பு!


கேள்வி:

எந்த மாதத்தில் மல்லிகை நடவு செய்யலாம்? மல்லிகை சாகுபடியைப் பற்றிக் கூறுங்கள்.

– தெய்வாணை, பேராவூரணி.

பதில்:

அம்மா, உங்களுக்குத் தேவையான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!

குண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்!


கேள்வி:

அக்டோபரில் சம்பா பயிரிட உள்ளேன். எந்த இரகம் எங்கள் நன்னிலம் பகுதிக்கு உகந்தது? நான் சுமார் 6 ஏக்கர் நெல் பயிரிட உள்ளேன்.

– பி. இரவி, திருக்கண்டீசுவரம், நன்னிலம்.

பதில்:

அய்யா, உங்களுக்கான விளக்கம் இங்கேயுள்ள கட்டுரையில் உள்ளது. நன்றி!

சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!


கேள்வி:

மாட்டுப் பண்ணை வைக்க எவ்வளவு செலவு ஆகும்? சொந்தமாக 30 சென்ட் காலிமனை உள்ளது. அதில் குறைந்தது 6 பால் மாடு வளர்க்க ஆசை.

– ஆர் ஆர். சேகர், திருவள்ளூர்.

பதில்:

அய்யா, முதலில் நீங்கள் கறவை மாடு வளர்ப்புப் பற்றிய பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பயிற்சியில், நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா தகவல்களும் கிடைக்கும்.

திருவள்ளூர் மாவட்டத்தில், செவ்வாபேட்டை இரயில் நிலையம் அருகில் உள்ள திரூரில் வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளது. அங்கே மாட்டுப் பண்ணைப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கு, திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி: 044 – 27697394. அல்லது நேரில் சென்றும் விவரம் அறியலாம். நன்றி!


கேள்வி:

சம்பா பட்டத்தில் ஏடிடீ 38 இரகத்துக்குச் சிறந்த உரமேலாண்மை பற்றிக் கூறவும்.

– வினோத் மனுவேல், கடலூர்.

பதில்:

அய்யா, சம்பா சாகுபடியில் கையாள வேண்டிய உர நிர்வாகம்.

அங்கக உரங்கள்

ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழுவுரம் அல்லது கம்போஸ்ட் மற்றும் 2.5 டன் பசுந்தாள் உரமிட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். பசுந்தாள் பயிர்களான, சணப்பு, தக்கைப்பூண்டு போன்றவற்றை பூப்பூக்கும் முன்பு மடக்கி உழுதுவிட வேண்டும்.

இதை மடக்கி உழவு செய்யும் போது ஒரு அங்குலம் உயரத்துக்கு வயலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும். பசுந்தாள் மிதிப்பானைக் கொண்டு மண்ணுக்குள் மறைய, அமிழ்த்து விட வேண்டும். பசுந்தழை உரமெனில் சிறிது சிறிதாக நறுக்கி வயலில் பரப்பி மிதிப்பது நல்லது.

நுண்ணுயிர் உரங்கள்

சம்பா பருவத்தில் ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை, நடவு செய்த 3-5 நாட்களில் பரவலாகத் தூவி நெற்பயிருடன் வளரவிட வேண்டும். அசோலா வளர்ந்த பிறகு, களை யெடுக்கும் போது, களைக்கருவி மூலம் அல்லது காலால் மிதித்து விட வேண்டும்.

உயிர் உரங்கள்

ஏக்கருக்கு நான்கு பொட்டலம் அசோஸ் பைரில்லம் (நெல்) மற்றும் நான்கு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா வீதம் எடுத்து, 20 கிலோ தொழுவுரத்தில் கலந்து சீராகத் தூவி விட வேண்டும்.

அல்லது 200 மில்லி திரவ அசோஸ் பைரில்லம் (நெல்) மற்றும் 200 மில்லி திரவ பாஸ்போ பாக்டீரியா வீதம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கலந்து, அதை நன்கு தூளாக்கிய 10 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும்.

சூடோமோனாஸ் புளோரசன்ஸ்

ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் வீதம் எடுத்து, 10 கிலோ தொழுவுரம், 10 கிலோ மணலில் கலந்து, நடவுக்கு முன் சீராகத் தூவினால், பயிரில் நோய் எதிர்ப்புத் தன்மை கூடும்.

இரசாயன உரங்கள்

மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில் உரமிடுதல் வேண்டும். இதனால், பயிரின் தேவைக்குக் குறைவாகவோ அதிகமாகவோ உரமிடுவதைத் தவிர்க்கலாம். எனவே, உரச் செலவு குறைகிறது.

மண் பரிசோதனை செய்ய இயலாத நிலையில், பொதுப் பரிந்துரையாக, ஏக்கருக்கு 33 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ் வீதம் எடுத்து, கடைசி உழவின் போது அடியுரமாக இட வேண்டும்.

நுண்ணூட்டக் கலவை

நெல் நுண்ணூட்டக் கலவையை, ஏக்கருக்கு 5 கிலோ வீதம் எடுத்து, 20 கிலோ மணலில் கலந்து, நடவுக்கு முன் சீராகத் தூவ வேண்டும். இந்த நுண்ணூட்டக் கலவையை அடியுரமாக இடக்கூடாது.

இந்த உர நிர்வாகத்தை நெல் வயலில் மேற்கொண்டால், கூடுதல் மகசூல் கிடைக்கும். நன்றி!


 

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!