குண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்!

குண்டுமல்லி Gundu malliga Copy e1617935043460

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018

ஜாஸ்மினம் என்னும் பெர்சியச் சொல்லுக்குத் தமிழில் நறுமணம் என்று பொருள். இந்த ஜாஸ்மினம் பேரினத்தைச் சேர்ந்தது குண்டுமல்லி. இதன் தாவரவியல் பெயர் ஜாஸ்மினம் சம்பக். இது ஒலியேசியே என்னும் தாவரக் குடும்பத்தில் அடங்கும். குண்டு மல்லியைப் போல மணமிக்க வேறு பல மலர்களும் இக்குடும்பத்தில் உள்ளன. கவர்ந்திழுக்கும் நறுமணத்தால் முக்கிய மலராக விளங்கும் குண்டுமல்லி, தமிழகத்தில் 10,620 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. மதுரை, இராமநாதபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடியில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் குண்டுமல்லி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

காலங்காலமாகத் தென்னிந்தியக் கோயில்களில் வழிபாட்டுக்காக மல்லிகை வளர்க்கப்பட்டு வருகிறது. மல்லிகை இனங்களில் ஊசிமல்லியும், இருவாட்சியும் பண்டைத் தமிழர்கள் வாழ்க்கையில் தொடர்புடைய மலர்களாக விளங்கியுள்ளன. இலக்கியத்தில் ஊசிமல்லியானது, செம்முல்லை, கொகுடி எனவும், இருவாட்சியானது, நவமல்லிகை, நல்லிருள்நாறி, மயிலை எனவும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இரட்டை மகராவானது, அடுக்குமல்லி, இரட்டைமல்லி, காட்டுமல்லி எனவும், கஸ்தூரி மல்லியானது மகரந்தமல்லி எனவும், மன்மத பானமானது படர்மல்லி எனவும், இராமபாணமானது, கொடிமல்லி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் மலர்கள் சாகுபடியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. குண்டுமல்லி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பகுதியில் அதிகளவில் சாகுபடியில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் ஒருசில விவசாயிகள் பசுமைக் குடில்களில் மல்லிகையை வளர்த்து ஆண்டு முழுவதும் இலாபம் ஈட்டுகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் இது சிறப்பு வாய்ந்த பயிராகும். ஏனெனில் இங்கு உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் தான் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடம், நொச்சியூரணி, அக்காமடம் போன்ற பகுதிகளில் அதிகளவில் குண்டுமல்லி சாகுபடியும், நாற்று உற்பத்தியும் மிகுதியாக உள்ளன. ஆனால், இங்கு உற்பத்தியாகும் நாற்றுகளின் தாய்ச்செடிகள், நிலக்கோட்டைப் பகுதியிலிருந்து தான் கொண்டு வரப்படுகின்றன.  

பயன்கள்

இந்தப் பூக்கள் பெண்கள் அணியவும், இறை வழிபாட்டிலும் பயன்படுகின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் வாசனை மெழுகு நறுமணப் பொருள்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. சீனாவில் தேநீரை மணக்கச் செய்ய மல்லிகைப் பூக்கள் பெருமளவில் பயன்படுகின்றன. மலேசியாவில் தேங்காய் எண்ணெய்யில் மணமேற்றிக் கூந்தல் தைலத்தைத் தயாரிக்க இம்மலர்கள் பயன்படுகின்றன. இந்தப் பூக்களில் எடுக்கப்படும் மஞ்சளான சூல்முடி, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் குங்குமத்துக்கு மாற்றாகப் பயன்படுகிறது. முல்லை இன மலர்களில் மல்லிகை மலர்கள் மட்டுமே நெடுநேரம் வாடாமல் இருக்கும். மொட்டுகள் பெரியதாக, நறுமணம் மிக்கதாக உள்ளதால், சீனா மற்றும் தென்னிந்திய மகளிர் இதை விரும்பி அணிகின்றனர்.

இரகங்கள்

மல்லிகையில் பெரும்பாலும் உள்ளூர் இரகங்களே சாகுபடியில் உள்ளன. போல்டுபட், இரட்டை மகரா, ஒற்றை மகரா, இராமநாதபுரம் குண்டுமல்லி, இருவாட்சி, ஜோகி, கஸ்தூரிமல்லி, கோயா மதன்பன், லாங் பிளவர், இராமபாணம், மதூரியா, ஊசிமல்லி சூஜிமல்லி ஆகிய இரகங்கள் இருந்தாலும், இராமநாதபுரம் குண்டுமல்லி, இருவாட்சி ஆகிய இரகங்கள் தான் பெருமளவில் பயிரிடப்படுகின்றன.

இனப்பெருக்கம்

வேர்விட்ட குச்சிகள், பதியன்கள், வேர்க் கன்றுகள், திசு வளர்ப்பியல் போன்ற முறைகளில் இனவிருத்தி செய்யப்பட்டாலும் வணிக நோக்கில், வேர்விட்ட குச்சிகள் மூலம் தான் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஓரளவு முதிர்ந்த 15-20 செ.மீ. நீளமுள்ள குச்சிகளை 1,000 பி.பி.எம். ஐ.பி.ஏ போன்ற வளர்ச்சி ஊக்கியில் நனைத்து நட்டால், நல்ல பயன் கிடைக்கிறது. மதன்பன் இரகத்தில் என்.ஏ.ஏ  மற்றும் ஐ.ஏ.ஏ. ஆகிய  வளர்ச்சி ஊக்கிகளை 4,000 பி.பி.எம். அளவில் நனைத்து நட்டால் அனைத்துக் குச்சிகளும் வேர்ப்பிடித்து விடுகின்றன.

மண்வளம்

இரு மண் கலந்த செம்மண் குண்டுமல்லி சாகுபடிக்கு மிகவும் உகந்தது. மண்ணின் அமில காரத்தன்மை 6-8 வரை இருக்க வேண்டும். வடிகால் வசதியில்லாத களர், உவர் நிலங்கள் மல்லிகை சாகுபடிக்கு உகந்தவை அல்ல.

காலநிலை

பொதுவாகக் குண்டுமல்லி அதிக மழையைத் தாங்கி வளரக்கூடிய வெப்ப மண்டலப் பயிராகும். ஆனால், நிலத்தில் நீர் தேங்கினால் செடிகளின் வளர்ச்சி குறைந்து விடும். கோடையில் கூட போதுமான மழை கிடைத்தால் மகசூல் அதிகமாகக் கிடைக்கும். குளிர்ப் பருவமான அக்டோபர்-பிப்ரவரி காலத்தில் கோயா மல்லிகை மகசூலுக்கு வரும். இந்தக் காலத்தில் இதர மல்லிகை மலர்கள் மற்றும் வணிக மலர்களின் உற்பத்திக் குறைவாக இருப்பதால், கோயா மல்லிகைக்கு நல்ல விலை கிடைக்கிறது.

பருவம்

தென்னிந்தியாவில் பருவமழை பெய்யும் ஜூன்-டிசம்பர் காலம் மல்லிகை நடவுக்கு ஏற்றது. ஆனால், வட இந்தியாவில் நவம்பர்-பிப்ரவரி காலம் ஏற்றதாக உள்ளது.

நிலம் தயாரித்தல்

இரண்டு முறை ஆழமாக உழுது, கட்டிகளை உடைத்து ஒன்றரை கன அடியுள்ள குழிகளை, வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி ஒன்றேகால் மீட்டர் இடைவெளியில் தோண்ட வேண்டும். பிறகு குழிக்கு 20 கிலோ வீதம் தொழுவுரத்தை மேல் மண்ணுடன் கலந்து நிரப்பிச் செடிகளை நடுவதற்குத் தயாரிக்க வேண்டும். இப்படி நடுவதற்கு, எக்டருக்கு 6,400 பதியன்கள் தேவைப்படும்.

நடவு செய்தல்

பருவமழைக் காலத்தில் நன்கு வேர் விட்ட பதியன்களைக் குச்சியின் மையப் பகுதியில் நடவு செய்ய வேண்டும். பின்னர் லிண்டேன் 10 சதத் தூளைச் செடிகளைச் சுற்றித் தூவி, கரையானால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க வேண்டும். நட்டதும் குழிகள் நிரம்பும் வரை நீரைப் பாய்ச்ச வேண்டும்.

பாசனம்

செடிகள் நன்கு வேர்ப் பிடிக்கும் வரை வாரத்துக்கு இருமுறை பாசனம் தேவை. பிறகு, வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். பாசன வசதி குறைவாக இருந்தால் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தலாம்.

உரமிடுதல்

மல்லிகைச் செடிக்கு 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து, 120 கிராம் சாம்பல் சத்து உரங்களை இரு பகுதியாகப் பிரித்து இடவேண்டும். ஒரு பாதியை ஜூன், ஜூலையிலும், மறுபாதியை, கவாத்து முடிந்ததும் நவம்பர், டிசம்பரிலும், செடியைச் சுற்றி ஒன்றரை அடி வட்டத்தில் அரையடி ஆழத்தில் இட்டு மண்ணுடன் கலந்துவிட வேண்டும்.

இலைவழி உரம்

நுண் சத்துகளான துத்தநாக சல்பேட் 0.5 சதம், மக்னீசிய சல்பேட் 0.5 சதம் மற்றும் பெர்ரஸ் சல்பேட் 0.5 சதம் கலந்து, பூப்பதற்கு முன்னர் இலையின் மேல் தெளித்தால் மகசூல் கூடும்.

வளர்ச்சி ஊக்கிகள்

ஒரு லிட்டர் நீருக்கு எத்ரல் 250 மில்லி வீதமும், என்.ஏ.ஏ. 25 மி.கி. வீதமும் கலந்து தெளித்தால், மலர்களை உற்பத்தி செய்யும் கிளைகள் அதிகரித்து 75 சதம் மகசூல் கூடும்.

களை நிர்வாகம்

அவ்வப்போது களையெடுத்து நிலத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும். நிலப்போர்வை அமைத்துக் களைகளைக் கட்டுப்படுத்தலாம். மாதம் ஒருமுறை களையெடுத்து மண்ணை இலேசாக கிளறி விடுவதன் மூலம், பின்செய் நேர்த்தியையும் ஒருங்கே செய்து சாகுபடிச் செலவைக் குறைக்கலாம்.

கவாத்து

நவம்பர் இறுதி வாரத்தில் தரையிலிருந்து ஒன்றரை அடி உயரத்தில் செடிகளை வெட்டிவிட வேண்டும். வெட்டுப் பகுதிகளில் பைட்டலானைத் தடவி பூசணத் தாக்குதலைத் தடுக்கலாம். குறுக்குக் கிளைகள், உலர்ந்த குச்சிகள், மெலிந்த சிறிய கிளைகளை வெட்டி விட்டுச் செடிகளில் சூரிய ஒளி நன்கு படுமாறு செய்ய வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு: பூச்சிகள்

மொட்டுப்புழு மற்றும் இலைச் சுருட்டுப்புழு: இவை இளம் மொட்டுகள் மற்றும் இலைகளைத் தாக்கிக் கடும் சேதத்தை உண்டு பண்ணும். இவற்றைக் கட்டுப்படுத்த, 0.2 சத மேனோகுரோட்டாபாஸ் மருந்துக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

சிலந்திப் பூச்சி: இது இலைகளைக் கடித்துச் சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, நனையும் கந்தகத்தை 0.2 சதவீத அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நூற்புழு: நூற்புழுவால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளிர் இளம் மஞ்சளாகிக் கருகி விடும். இதைக் கட்டுப்படுத்த, பியூரிடான் குருணையைச் செடிக்கு 5-10 கிராம் வீதம் மண்ணில் கலக்கும்படி இடவேண்டும்.

நோய்கள்

வாடல் நோய்: முதலில் கிளைகளின் அடிப்பக்க இலைகள் மஞ்சளாகி, பிறகு நுனிக்குப் பரவிச் செடிகள் வாடிக் கருகி விடும். இதைக் கட்டுப்படுத்த,  போர்டோ கலவையை 1 சத அளவில் கலந்து செடியைச் சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும்.

துருநோய்: நோய் முற்றிய இலைகள் மஞ்சள் நிறத்தில் ஒழுங்கற்றுச்  சுருண்டிருக்கும். பிறகு தண்டுகளையும் பாதிப்பதால் கிளைகள் பட்டையாக வெடித்து, இறுதியில் வாடி விடும். இதைக் கட்டுப்படுத்த, நனையும் கந்தகத்தை எக்டருக்கு 20-25 கிலோ வீதம் எடுத்துச் செடிகளின் மீது தூவ வேண்டும்.

இலைகள் மஞ்சளாதல்: வேர்ப்புழுத் தாக்குதல், வேர் அழுகல் மற்றும் இரும்புச்சத்துக் குறையால் இலைகள் மஞ்சளாகும். வேர்ப்புழுத் தாக்கத்தால் இலைகள் மஞ்சளாவதைத் தடுக்க, பியூரிடான் குருணையைச் செடிக்கு 5-10 கிராம் வீதம் செடியைச் சுற்றி இட்டு மண்ணுடன் கலந்து பாசனம் செய்ய வேண்டும்.

வேர் அழுகலால் இலைகள் மஞ்சளாவதைத் தடுக்க, பைட்டலான் அல்லது தாமிர சல்பேட்டை, ஒரு லிட்டர் நீருக்கு 2.5 கிராம் வீதம் கலந்து செடிகளைச் சுற்றியுள்ள மண்ணில் ஊற்ற வேண்டும். வடிகால் வசதியுள்ள நிலத்தில் குண்டுமல்லியைப் பயிரிட்டால் இந்நோய் வரமால் தடுக்கலாம். இரும்புச்சத்துக் குறையைப் போக்க, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் வீதம் பெர்ரஸ் சல்பேட்டைக் கரைத்து 2 மாதங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

வினையியல் குறைகள்

மல்லிகையில் சில கிளைகள் பூக்காமல் இலைகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும். செடியின் ஒரு பகுதியிலுள்ள கிளைகளில் மட்டும் ஏற்படும் திடீர் மரபணு மாற்றமே இதற்குக் காரணம். இத்தகைய கிளைகளை இனவிருத்திக்குப் பயன்படுத்தினால், அவற்றின் கன்றுகளும் பூக்கள் வராத கிளைகளைத் தான் உற்பத்தி செய்யும். ஆகவே, இனவிருத்திக் குச்சிகளைத் தயாரிக்கும் போது, பூக்காத கிளைகளைத் தவிர்க்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்

செடிகள் நட்ட முதல் ஆண்டிலேயே பூக்கத் தொடங்கி விடும். ஆனால், சீரான மகசூல் இரண்டாம் ஆண்டிலிருந்து தான் கிடைக்கும். எக்டருக்கு 8,700 கிலோ பூக்கள் கிடைக்கும். ஒருமுறை நட்ட மல்லிகைச் செடிகள் 15 ஆண்டுகள் வரையில் நல்ல பலனைக் கொடுக்கும். அதற்குப் பிறகு புதிய செடிகளை நட வேண்டும்.


குண்டுமல்லி DR.C.RAJA MANICKAM e1614637148865

முனைவர் சி.இராஜமாணிக்கம்,

உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை-625104.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!