கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020
எலுமிச்சை மரத்தின் தாவரப் பெயர் சிட்ரஸ் அவுரான்சி போலியா. இது ரூட்டேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. தொன்று தொட்டுத் தமிழர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புள்ள பழமரம். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், வழிபாடு என அனைத்திலும் எலுமிச்சை பயன்படுகிறது. குளிர்பானத் தயாரிப்பிலும், சமையலில் புளிக்கு மாற்றாகவும் பயன்படுகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் மருந்துகளைத் தயாரிக்க இதன் இலைகள் உதவுகின்றன.
எலுமிச்சைக் குடும்பத்தைச் சேர்ந்த, ஆரஞ்சு, கொடி எலுமிச்சை, நாரத்தை, கிரேப் புரூட், பப்ளிமாஸ் போன்றவை உலகம் முழுவதும் விளைகின்றன. இந்தியாவில் எலுமிச்சையும் ஆரஞ்சும் நன்கு வளர்கின்றன. தமிழ்நாட்டில், திருச்சி, வேலூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் எலுமிச்சை அதிகளவில் பயிராகிறது.
வகைகள்
மஞ்சளாகவும் உருண்டையாகவும் இருப்பது, சாதாரண எலுமிச்சை அல்லது செடி எலுமிச்சை எனப்படுகிறது. பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் சற்றுப் பெரிதாக இருப்பது செடி எலுமிச்சை அல்லது லெமன் எனப்படுகிறது. இவற்றில், சமவெளியில் பயிரிட, சாதாரணச் செடி எலுமிச்சையே ஏற்றது.
தட்பவெப்பம்
எலுமிச்சை வெப்ப மண்டலப் பயிர். கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி வரையுள்ள இடங்களில் விளையும். கீழ்ப்பழனிமலை, சிறுமலை, சேர்வராயன்மலை, பச்சைமலை, கல்வராயன்மலை மற்றும் கொல்லிமலையில் மானாவாரியில் விளைகிறது. மிதமான குளிருள்ள பகுதிகளிலும், ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் நன்கு வளரும். வறண்ட நிலம் மற்றும் வறண்ட கால நிலையிலும் வளரும். மிதமான பனிப்பொழிவு உள்ள இடங்களில் வளராது. 16-28 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள இடங்கள் எலுமிச்சைக்கு மிகவும் ஏற்றது.
மண்வளம்
செம்மண் கலந்த மணற்பாங்கான தோட்டக்கால், வடிகால் வசதியுள்ள இருமண் நிலங்கள் ஏற்றவை. வேர்கள் நிலத்தின் மேலாகவே இருப்பதால், நீர் தேங்கினால் வேர்கள் அழுகி விடும். குளம், ஏரி போன்ற நீர்நிலைகளின் தாழ்வான பகுதியில் இருக்கும் நிலம், பாறைப் படிவங்கள் மேலாக உள்ள நிலம், கோடையில் வெடிப்புகள் தோன்றும் களிமண் நிலம், களர் உவர் நிலம் ஆகியன, எலுமிச்சை சாகுபடிக்கு ஏற்றவையல்ல. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5-7.8 இருத்தல் அவசியம்.
இரகங்கள்
எலுமிச்சையில் அதிக மகசூலைத் தரும் வீரிய ஒட்டு இரகங்கள் இல்லை. தேர்வு செய்யப்பட்ட இரகங்களே பயிரிடப்படுகின்றன.
பி.கே.எம்.1: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் இருந்து, அதிக மகசூலைத் தரும் பி.கே.எம்.1 இரகம் 1993இல் வெளியிடப்பட்டது. இந்த இரகம் திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டது. வீரியமாக வளர்ந்து தரமான பழங்களைத் தரவல்லது. நான்காம் ஆண்டில் தொடங்கி ஆண்டு முழுவதும் காய்த்துக் கொண்டே இருக்கும். ஒரு மரம் ஓராண்டில் 1,500 பழங்களைக் கொடுக்கும். பழம், வட்டமாக, பெரியதாக, தோல் அழுகிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். பழத்தின் எடையில் 52% சாறு இருக்கும். பழத்தின் எடை 50-60 கிராம். கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.
சாய்சர்பதி: மகாத்மா புலே வேளாண்மைப் பல்கலைக்கழகம், ரகுரியில் வெளியிட்ட இரகம். கொத்தாகக் காய்க்கும். பழச்சாறு 57% இருக்கும். காய்கள் சற்றுப் பருமனாக இருக்கும். பழம் அழுகிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
பிரமாலினி: மராட்டியத்தில் உள்ள மராத்வாடா வேளாண்மைப் பல்கலைக் கழகம், பாரபாணியில் இருந்து வெளியிட்ட இரகம். பழங்கள் மஞ்சளாகவும் சற்றுப் பருத்தும் இருக்கும்.
விக்ரம்: மராட்டியத்தில் உள்ள மராத்வாடா வேளாண்மைப் பல்கலைக் கழகம், பாரபாணியில் இருந்து வெளியிட்ட இரகம். பழங்கள் மஞ்சளாகவும், 5-10 பழங்களுடன் கொத்தாகவும் காய்க்கும். சாதா இரகங்களை விட அதிக மகசூலைத் தரும். ஓராண்டில் ஒரு மரம் 1,300 பழங்களைக் காய்க்கும்.
தெனாலி: ஆந்திரத்தில் இருந்து வெளியிடப்பட்ட இரகம். பழம், பெரியதாக, உருளை வடிவத்தில் மஞ்சளாக இருக்கும். ஓராண்டில் ஒரு மரம் 900 பழங்களைக் காய்க்கும். காசிபெண்டலா என்னும் இரகமும் ஆந்திரத்தில் வெளியிடப்பட்ட இரகமாகும்.
இனப்பெருக்கம்
பெரும்பாலும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சாதாரண எலுமிச்சைக் கன்றுகளை வேர்க் கன்றுகளாகப் பயன்படுத்தி, குருத்து ஒட்டு முறையில் ஒட்டுச்செடிகளை உருவாக்கி நட்டாலும், பழங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாததால், விதைகளில் உருவான நாற்றுகள் தான் சாகுபடி செய்யப்படுகின்றன. நல்ல வளர்ச்சி, அதிகக் காய்ப்புத்திறன், நோய்கள் மற்றும் பூச்சித் தாக்குதல் குறைவான மரங்களில் விளைந்த பழ விதைகள் மூலம் நாற்றுகளை உருவாக்க வேண்டும்.
பழங்களிலிருந்து பிரித்தெடுத்த விதைகளை 1-2 நாட்களில் மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் விதைத்து விட வேண்டும். காலதாமதம் முளைப்புத்திறனைப் பாதிக்கும். வரிசைக்கு வரிசை 10 செ.மீ. இடைவெளியில் கோடுகளைக் கிழித்து, 3-4 செ.மீ. இடைவெளி மற்றும் 1 செ.மீ. ஆழத்தில் விதைகளை இட்டு மணலால் மூட வேண்டும். பிறகு, பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். 20-25 நாட்களில் விதைகள் முளைத்து விடும். பிறகு, 60-65 நாள் நாற்றுகளை நெகிழிப் பைகளுக்கு மாற்ற வேண்டும். 10-12 மாத நாற்றுகள் நடுவதற்கு ஏற்றவை.
நிலத்தயாரிப்பும் நடவும்
நிலத்தை நன்கு உழுது சமப்படுத்த வேண்டும். 5×5 மீட்டர் அல்லது 6×6 மீட்டர் இடைவெளியில் குழிகளைத் தோண்ட வேண்டும். இவ்வகையில், ஒரு ஏக்கரில் 120-150 குழிகளை எடுக்கலாம். குழியின் அளவு 75 செ.மீ. நீள, அகல, ஆழத்தில் இருக்க வேண்டும். குழிகளை 15 நாட்களுக்கு ஆறப் போட வேண்டும். பிறகு, மட்கிய தொழுவுரம், செம்மண், மணல், குழியின் மேல்மண், லிண்டேன் ஒரு சதத்தூள் ஆகியவற்றைக் கலந்து குழியில் இட்டுப் பாசனம் செய்தால், குழியிலுள்ள மண் மட்டம் கீழே இறங்கும்.
இந்நிலையில் குழிகளின் நடுவில் கன்றுகளை நட்டு, அவற்றைச் சுற்றியுள்ள மண்ணைக் காலால் மிதித்து இறுக்கிவிட வேண்டும். கன்றுகள் காற்றில் சாயாமல் இருக்க, குச்சிகளை வைத்துக் கட்ட வேண்டும். மண்வாகுக்கு ஏற்ப, நடவுக்கு மூன்றாம் நாள் பாசனம் தர வேண்டும். ஜூலை, ஆகஸ்ட்டில் நடலாம்.
பின்செய் நேர்த்திகள்
பாசனம்: செடிகள் வேர்ப்பிடித்துப் புதிய குருத்துகள் விடும் வரை, நிலத்தில் ஈரம் காயாத வகையில் 4-5 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். மழையற்ற காலத்தில் வாரம் ஒருமுறை பாசனம் செய்தால் போதும். மார்ச் முதல் ஜூலை வரை பாசனம் மிகவும் அவசியம். கோடையில் மரத்தின் அடியில் 15 கிலோ சருகு அல்லது 30 கிலோ பசுந்தாளைப் பரப்பி வைத்தால், ஈரத்தைக் காத்து, மரங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பெருக்கலாம். இதை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். இதனால், பழங்களின் எடை 45% கூடும்.
எலுமிச்சை வேர்கள் மேலாக இருப்பதால் சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் நல்லது. மேலும், நீர்வசதி குறைந்த இடங்களில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் மகசூலைக் கூட்டலாம். எலுமிச்சை ஆண்டு முழுவதும் காய்ப்பதால், கொஞ்சம் ஓய்வு கொடுக்கும் வகையில், ஆகஸ்ட்டில் பாசனத்தை நிறுத்த வேண்டும். பிறகு, அக்டோபரில் உரமிட்டு மண்ணை அணைத்துப் பாசனம் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
கவாத்து: செடியின் அடியில் தோன்றும் சிம்புகளை அவ்வப்போது வெட்டி அகற்ற வேண்டும். சுமார் 90 செ.மீ. உயரம் வரையில் பக்கச் சிம்புகள் இல்லாமல், தண்டு நேராக வளருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், வலிமையான அடிமரம் அமைவதுடன், விரைவில் காய்ப்பும் தொடங்கும். கிளைகள் தரையில் படராமல் இருக்கும். எலுமிச்சையில் கவாத்துத் தேவையில்லை. எனினும், மரத்தின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்த வேண்டும். எனவே, ஒரு பக்கமாக அதிகளவில் வளரும் கிளைகளை வெட்டி, எல்லாப் பக்கமும் ஒரே சீராகக் கிளைகள் வளரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
நோயுற்ற குச்சிகள், காய்ந்த சிம்புகள், நீர்க்குருத்துகள், குறுக்கே செல்லும் சிம்புகள் மற்றும் தரையில் தொங்கும் கிளைகளை அகற்ற வேண்டும். தரையிலிருந்து 30 செ.மீ. உயர இடைவெளி இருந்தால் தான் மரங்களுக்கு காற்றோட்டமும், சூரியவொளியும் கிடைக்கும். சூரியவொளி கிடைக்காமல் போவதாலும், சொறிநோயாலும் தான் சிம்புகள் காய்ந்து விடுகின்றன.
களையெடுப்பு: எலுமிச்சை வேர்கள் நிலத்தில் ஆழமாகச் செல்வதில்லை. பெரும்பாலான சல்லிவேர்கள் 30 செ.மீ. ஆழத்திலேயே இருப்பதால் மரத்தின் அடியில் கொத்தக் கூடாது. மேலாகக் கொத்திக் களைகளை நீக்கி மண்ணைக் கிளறி விட வேண்டும். முதல் நான்கு ஆண்டுகள் வரையில் ஊடுபயிர் செய்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
களைக்கொல்லி: அடிக்கடி கைக்களை எடுப்பதை விடக் களைக்கொல்லியைத் தெளிக்கலாம். களை முளைத்ததும் ஏக்கருக்கு ஒரு லிட்டர் கிளைபாஸேட் அல்லது 1.5 லிட்டர் கிரமாக்சோன் களைக்கொல்லியைத் திறந்த வெளியில் மட்டும் தெளிக்க வேண்டும். மரங்களின் அடியிலும், மரங்களிலும் களைக்கொல்லி படக்கூடாது.
உரமிடுதல்: எலுமிச்சையில் நல்ல மகசூல் கிடைக்க உரமிடுதல் முக்கியம். ஆண்டுக்கு இருமுறை முறைப்படி உரமிட்டு வந்தால் மகசூல் கூடுவதுடன், ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும். கன்றுகளை நடும்போது தொழுவுரம் மட்டும் இட்டால் போதும். இரண்டு ஆண்டுகள் வரை தழைச்சத்து மட்டும் கொடுத்தால் போதும். முதலாண்டில் செடிக்கு 250 கிராம், இரண்டாம் ஆண்டில் 500 கிராம் வீதம் யூரியாவை எடுத்து, அதில் பாதியை மார்ச்சிலும், மறுபாதியை அக்டோபரிலும் இட வேண்டும். மூன்றாம் ஆண்டிலிருந்து, மரத்துக்கு 25 கிலோ தொழுவுரம், 900 கிராம் யூரியா, ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட், 300 கிராம் பொட்டாசை இட வேண்டும்.
ஐந்தாம் ஆண்டிலிருந்து மரத்துக்கு 50 கிலோ தொழுவுரம், 1,320 கிராம் யூரியா, 1,250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் பொட்டாசை இட வேண்டும். எலுமிச்சையில் இளந்தளிர்கள் உருவாகும், பிப்ரவரி, மார்ச் மற்றும் செப்டம்பர், அக்டோபரில் உரத்தை இட வேண்டும். யூரியாவையும், பொட்டாசையும் இரு பாகமாகப் பிரித்து மார்ச்சிலும், அக்டோபரிலும் இட வேண்டும். சூப்பர் பாஸ்பேட் முழுவதையும் அக்டோபரில் வைத்துவிட வேண்டும்.
அடிமரத்தில் இருந்து 45-60 செ.மீ. தள்ளி, மரம் படர்ந்துள்ள பகுதி வரையில் பரவலாக ப- வடிவில் உரத்தை இட்டு, மண்வெட்டியால் மேலாகக் கொத்தி உரத்தை மண்ணோடு கலந்து விட வேண்டும். ஆழமாகக் கொத்தி வேர்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தக் கூடாது. உரமிட்டதும் பாசனம் அவசியம்.
ஊடுபயிர்: ஐந்து ஆண்டுகள் வரையில், பயறு வகைகள் மற்றும் காய்கறிகளை ஊடுபயிராக இடலாம். வடிகால் வசதி குறைவாக உள்ள நிலத்தில், நீர்த்தேவை அதிகமுள்ள பயிர்களை ஊடுபயிராக இடக்கூடாது. எலுமிச்சையின் வேர்ப்பகுதியில் நீர் நிறைய இருந்தால், இலைகள் பழுத்து உதிர்ந்து விடும், வளர்ச்சியும் குன்றி விடும்.
பிஞ்சு உதிர்தல்: எலுமிச்சையில் பிஞ்சுகள் உதிர்வது இயல்பு. அதுவும், கோடையில் பாசனம் சிறப்பாக இருந்தாலும் பிஞ்சுகள் உதிரும். அதிகளவில் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க, 2,4,5-டி என்னும் வளர்ச்சி ஊக்கியை ஒரு லிட்டர் நீருக்கு 20 மி.கி. வீதம் கலந்து, மிளகு அளவில் பிஞ்சுகள் இருக்கும் போது தெளிக்க வேண்டும்.
இலைவழி நுண்ணூட்டம்: நுண்ணூட்டக் குறை தெரிந்தால், துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் இரும்பை, தனித்தனியே 200 கிராம் வீதம் எடுத்து, 100 லிட்டர் நீரில் கலந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
துத்தநாகப் பற்றாக்குறை: தமிழ்நாட்டில் எலுமிச்சையில் துத்தநாகப் பற்றாக்குறை தான் அதிகம். இதனால், இளம் இலைகள் சிறுத்து விடும். இலைகளுக்கு இடையேயான இடைவெளி குறைந்து இலைகள் கொத்தாக இருப்பதைப் போலத் தெரியும். பழங்கள் சிறுத்து விடும். துத்தநாகக் குறையைப் போக்க, ஒரு லிட்டர் நீருக்கு ஐந்து கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் ஒரு கிராம் யூரியா வீதம் கலந்து, ஆண்டுக்கு மூன்று முறை இலைகளில் நன்கு படும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
கால்சியப் பற்றாக்குறை: மண்ணின் கார அமிலத் தன்மை 4.5க்கும் குறைவாக உள்ள அமில நிலங்களில் கால்சியம் குறைவாக இருக்கும். இதனால், மரங்கள் வளர்ச்சிக் குன்றியும், பழங்கள் கடினமான தோலையும் கொண்டிருக்கும். குருத்துகள் நுனியில் இருந்து காயும். இலைகள் கரும்பச்சை நிறத்தில் தோன்றி, மஞ்சளாக மாறிவிடும். இம்மாதிரி நிலங்களில் எக்டருக்கு 2-2.5 டன் கால்சியம் கார்பனேட்டை இடலாம்.
இரும்புப் பற்றாக்குறை: முதலில் இளம் இலைகளின் நரம்புகளுக்கு இடையில் பச்சையம் குறையும். பிறகு, இலை முழுவதும் மஞ்சளாக மாறிவிடும். கார அமிலத் தன்மை நிறைந்த நிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதைப் போக்க, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் இரும்பு சல்பேட் வீதம் கலந்து தெளிக்கலாம்.
போரான் பற்றாக்குறை: இலைகளின் அளவு குறைவதுடன், இளம் இலைகள் கருகியும் மொரமொரத்தும் இருக்கும். இதனால், பழங்கள் சிறுத்தும், கடினமாகவும், எளிதில் வெடிப்பு ஏற்படும் நிலையிலும் இருக்கும். இளஞ்செடிகளின் குருத்துகள் கருகி வளர்ச்சிக் குன்றி விடும். எனவே, போரான் குறையைப் போக்க, ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி போரிக் அமிலம் வீதம் கலந்து தெளிக்கலாம்.
பயிர்ப் பாதுகாப்பு: எலுமிச்சை சாகுபடியில் முக்கியமானது பயிர்ப் பாதுகாப்பு தான். டிஸ்ரிடிசா வைரசுக்கு எதிர்ப்புச் சக்தியுள்ள நாற்றுகளை நட்டால், திடீர் நலிவு நோய் வராமல் காக்கலாம். சொறிநோய் அல்லது கேன்கர் நோய் மிக முக்கியமானது. இது கிளை, இலை, பழம் ஆகிய பாகங்களைத் தாக்கும். இதனால், வட்டமான, சொரசொரப்பான கொப்புளங்கள் தோன்றும். பழங்களில் சொறி நோய் வந்தால் நல்ல விலை கிடைக்காது. விரைவில் அழுகி விடும். இதைத் தடுக்க, நான்கு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் ஸ்செப்டோமைசின் அல்லது பிளாண்டாமைசின் வீதம் கலந்து தெளிக்கலாம். அல்லது ஒரு சத போர்டோ கலவையையும் தெளிக்கலாம்.
எலுமிச்சையைத் தாக்கும் இலைத்துளைப்பான் சிறிய அந்துப் பூச்சியாகும். இதன் புழுக்கள் இலையைச் சுரண்டிப் பச்சையத்தை உண்ணும். இதனால், இலைகள் பளபளப்பாகவும் வெள்ளையாகவும் மாறிவிடும். மேலும், சுருண்டும் சுருங்கியும் பின்னிக் கிடக்கும். இப்பூச்சிகள் அதிகமானால் சொறிநோயும் பரவி விடும். இப்பூச்சியைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மீத்தைல் டெமட்டான் அல்லது குயினால்பாஸ் வீதம் கலந்து தெளிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மானோகுரோட்டாபாஸ் வீதம் கலந்து தெளிக்கலாம்.
இந்த மருந்துகளில் ஒன்றை, இளந்தளிர் தோன்றும் போது 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். பத்து லிட்டர் நீரில் ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கை ஒரு வாரம் ஊற வைத்து வடிகட்டிய நீரில் மருந்தைக் கலந்து தெளித்தால் இலைத் துளைப்பான் நன்கு கட்டுப்படும்.
அறுவடை
எலுமிச்சையில் ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைத்தாலும், மார்கழி, தை அதாவது, டிசம்பர், ஜனவரியிலும், ஆடி, ஆவணி அதாவது, ஜூலை, ஆகஸ்ட்டிலும் பழங்கள் அதிகமாகக் கிடைக்கும். நான்காம் ஆண்டிலிருந்து காய்ப்புக்கு வரும். நன்கு பராமரித்தால், ஏழு ஆண்டுக்குப் பிறகு ஒரு மரத்திலிருந்து 1,500-2,000 பழங்களை அறுவடை செய்யலாம்.
முனைவர் சி.இராஜமாணிக்கம்,
முனைவர் ஆ.பியூலா, முனைவர் வெ.சுவாமிநாதன்,
வேளாண்மைக் கல்லூரி, மதுரை.