நன்னீர் மீன் வளர்ப்பில் நீர் மற்றும் மண் மேலாண்மை!

நன்னீர் மீன்கள்

நன்னீர் மீன்கள், குளிர் இரத்தப் பிராணிகள். வெப்ப இரத்தப் பிராணிகளைப் போலில்லாமல் இவை, சூழ்நிலைக்கு ஏற்ப, உடல் வெப்ப நிலையை மாற்றிக் கொள்ளும். மீன்களுக்கு 28-30 செல்சியஸ் வெப்பநிலை ஏற்றதாகும்.

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர்.

மீன் வளர்ப்பில், குளத்து நீரும் மண்ணும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. நீரிலும் மண்ணிலும் ஏற்படும் இயல், வேதியியல் மாற்றங்கள் பல வகைகளில் மீன் வளர்ச்சியைப் பாதிப்பதாக அமைந்து விடுகின்றன.

மீன்களின் வளர்ச்சிக்கும், பிழைப்புத் திறனுக்கும், குளத்து நீர் மற்றும் மண்ணின் தரத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியம். எனவே, மீன் வளர்ப்புக் குளத்தில், நீர் மற்றும் மண்ணின் தரத்தை அறிவது மிக முக்கியம்.

குளத்து நீரின் தரம்

வெப்பநிலை: நன்னீர் மீன்கள், குளிர் இரத்தப் பிராணிகள். வெப்ப இரத்தப் பிராணிகளைப் போலில்லாமல் இவை, சூழ்நிலைக்கு ஏற்ப, உடல் வெப்ப நிலையை மாற்றிக் கொள்ளும். மீன்களுக்கு 28-30 செல்சியஸ் வெப்பநிலை ஏற்றதாகும்.

வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிக்க, நீரின் நிறத்தின் தரத்தைப் பராமரிக்க வேண்டும். நீரின் ஆழத்தைக் கூட்ட, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். காற்றுப் புகுத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.

கார அமிலத் தன்மை: கார அமிலத் தன்மை என்பது, நீரிலுள்ள ஹைட்ரஜன் அயனிகளின் அளவைக் குறிப்பதால், குளத்து நீரின் அமிலத் தன்மையை அல்லது காரத் தன்மையைத் தெரிந்து கொள்ளப் பயன்படுகிறது.

மீன்களின் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் ஏற்ற கார அமில அளவு 6 முதல் 8.5 வரை இருக்க வேண்டும். குறைந்த கார அமிலத் தன்மையில், கரியமில வாயு மேலோங்கிய கார்பனாக இருப்பதால், கார்பனேட்டுகள் மற்றும் பை கார்பனேட்டுகளின் அளவு கூடும்.

ஒளிச் சேர்க்கையின் போது, கரியமில வாயு மிகுதியாகப் பயன்படுவதால், மதியத்தில் கார அமிலத் தன்மை குறைகிறது. எனவே, இதற்கு ஏற்றவாறு கார அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்த வேண்டும். கார அமிலத் தன்மையில் ஏற்படும் திடீர் மாற்றம், மீன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கும். ஒரு நாளில் 0.4 அளவில், கார அமிலத் தன்மை மாறலாம்.

உயிர்வளி: வளர்ச்சியை மிகவும் பாதிக்கும் காரணிகளில் முக்கியமானது பிராணவாயு என்னும் உயிர்வளி. அநேக ஊட்டப் பொருள்களின் அளவு மற்றும் கரைதிறனை உயிர்வளி நேரடியாகப் பாதிக்கிறது. குறைந்த உயிர்வளி, மீன்களுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உயிர்வளியின் அளவு, எப்போதும் 3.5 பி.பி.எம்.க்கு மேல் இருக்க வேண்டும்.

உயிர்வளி உற்பத்தியில் ஒளிச் சேர்க்கையின் பங்கு அதிகம். நிறைய உயிர்கள் உயிர்வளியைச் சுவாசத்துக்குப் பயன்படுத்துகின்றன. இவ்வளி, பகலில் மிகுந்தும், இரவில் குறைந்தும் இருக்கும்.

நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் குறைந்திருத்தல், உண்ணப்படாத உணவு மற்றும் பிற கழிவுகள் அடி மண்ணில் மிகுதல் போன்றவை, உயிர்வளித் தேவையை மறைமுகமாகக் கூட்டும். இதனால், குளத்து நீரின் அடியில் பிராண வாயுவின் தேவை மிகுந்து, ஊடுருவும் ஒளியின் அளவு குறைந்து, அடியில் கரைந்துள்ள உயிர்வளியின் அளவு குறைக்கப்படும்.

பாசி மற்றும் நுண்ணுயிர் மிதவைகள் அதிகளவில் மடியும் போது, உயிர்வளி உற்பத்தியும் குறையும். அப்போது மீன்கள் நீரின் மேல் நிலைக்கு வருவதைக் கவனிக்கலாம். இதைத் தவிர்க்க, இறந்த நுண்ணுயிர் மிதவைகளை நீருடன் அகற்றி, புதிய நீரைச் சேர்க்க வேண்டும்.

நீர்க் கலங்கல்: நீருக்குள் ஒளி ஊடுருவலைத் தடுக்கும் பொருள்களின் அளவே நீர்க் கலங்கலைக் குறிக்கிறது. மீன் குளத்தில் நுண்ணுயிர்கள் அல்லது மிதக்கும் மண் துகள்கள் காரணமாக, நீர்க் கலங்கல் ஏற்படலாம். இது, ஊடுருவும் ஒளியைக் குறைப்பதால் ஒளிச் சேர்க்கையின் அளவும் குறையும்.

கலங்கல் மிகும் போது, உயிர்வளியின் அளவிலும் மாற்றம் ஏற்படும். நுண்ணுயிர்கள் மிதமான அளவில் இருப்பது நல்லது என்றாலும், களிமண் துகள்கள் இருப்பது நல்லதல்ல. ஏனெனில், இந்தத் துகள்கள் மீன்களின் செவிள்களை அடைத்துச் சுவாசத்தைத் தடுக்கலாம்.

களிமண் துகள்கள் மிகுவதற்கு, மண்ணரிப்பே முக்கியக் காரணம். ஆலமும், ஜிப்சமும் இந்தத் துகள்களைச் சிறந்த முறையில் நீக்கும். இவையிரண்டும் அமிலத் தன்மையை ஏற்படுத்துவதால், சுண்ணாம்பைச் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.

மீன் வளர்ப்புக் குளத்தில், 25-40 செ.மீ. செச்சித் தட்டு அளவில் நீர்க் கலங்கல் இருப்பது நல்லது. அதிக செச்சித் தட்டு அளவுகள் குறைவான உற்பத்திக்கு வழி வகுக்கும். ஆகவே, குளத்தில் உரமிட வேண்டும்.

அதே நேரம், மிகக் குறைவான செச்சித் தட்டு அளவுகள், அதிக உயிர்ப் பொருள்களைக் கொண்டிருந்தால், உயிர்வளிக் குறைவுக்கு வழி வகுக்கும். ஆகவே, குளத்து நீரை மாற்ற வேண்டும்.

நீரின் நிறம்: குளத்து நீரின் நிறம், அந்தக் குளத்திலுள்ள நுண்ணுயிர்கள், கரைந்த தாதுகள், களிமண் துகள்கள், அங்ககப் பொருள்கள், நிறமிகள் போன்றவற்றின் மீது சூரியவொளி படுவதால் ஏற்படுகிறது. ஆய்வகக் கருவிகள் இல்லாத நிலையில், நீரின் நிறத்தை வைத்து, அதன் தரத்தை மதிப்பிடலாம்.

இளம் பழுப்பு மற்றும் மஞ்சள் பழுப்பு, இளம் பச்சை, அடர் பச்சை மற்றும் இருண்ட பச்சை, அடர் பழுப்பு, இளம் மஞ்சள், புகைத் தன்மையுள்ள வெள்ளை, கலங்கிய நீர் மற்றும் தெளிவான நீர் என, பல நிறங்களில் நீர் காணப்படலாம்.

இவற்றுள், இளம் பழுப்பு, மஞ்சள் பழுப்பு நிற நீரில் மீன்கள் நன்கு வளரும். இளம் பச்சை நிற நீரை எளிதாகப் பராமரிக்கலாம். மற்ற நிறங்களில் உள்ள நீர், மீன் வளர்ப்புக்கு ஏற்றதாக அமையாது.

குளத்து மண்ணின் தரம்

கார அமிலத் தன்மை: மண்ணில் கார அமில அளவு 6-8.5 ஆக இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால் தேவைக்கு ஏற்ப, சுண்ணாம்பை இட வேண்டும். மண்ணின் கார அமில அளவு 6-7 ஆக இருந்தால், எக்டருக்கு 0.3-0.5 டன் வீதம் சுண்ணாம்பை இட வேண்டும்.

குளத்தின் அடிமண்: குளத்தின் அடியில், பயன்படாத உணவுகள் மற்றும் உயிரிகளின் கழிவுகள் படிந்திருக்கும். அங்கே தரமான மண் இருந்தால் தாதுப் பொருள்களின் இயக்கத்தால் சத்துப் பொருள்கள் தொடர்ந்து வெளிப்படும். இச்செயலுக்கு உயிர்வளி தேவை.

குளத்தில் அனங்ககப் பொருள்களின் அளவு கூடினால் மண்ணில் உயிர் வளியின் அளவு குறைந்து, ஹைட்ரஜன் சல்பைடு, அம்மோனியா, மீத்தேன் ஆகிய வாயுக்கள் உருவாகும்.

களிமண் கலந்த மணல், குளத்தின் அடியில் இருந்தால், மீன்களின் வளர்ச்சி சீராக இருக்கும். நல்ல மீன் வளர்ப்புக்கு, குளத்து மண், சத்துப் பொருள்கள் நிறைந்ததாக, தாதுப் பொருள்களை உற்பத்தி செய்யக் கூடியதாக, உணவுச் சங்கிலியைத் தொடர்ந்து நிகழ்த்துவதாக இருக்க வேண்டும்.

மீன்கள் நன்கு வளர, குளத்து மண் மற்றும் நீரின் முக்கியத்தை உணர்ந்து, உரமிடுதல், செயற்கை உணவிடுதல், நீரை மாற்றுதல் ஆகிய வேலைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இவற்றைச் செய்தால் மீன் உற்பத்தியைப் பெருக்கலாம்.


முனைவர் ம.அழகப்பன், முனைவர் சு.செந்தூர் குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், குன்றக்குடி, சிவகங்கை – 630 206.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!