மரபணு உயர்த்தப்பட்ட திலேப்பியா மீன்!

திலேப்பியா

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர்.

லகளவில் வளர்க்கப்படும் முக்கிய மீன்களில் திலேப்பியாவும் அடங்கும். அதிகப் புரதம், விரைவான வளர்ச்சி மற்றும் அளவில் பெரிதாக இருப்பது போன்றவற்றால், இம்மீன் வளர்ப்புக்கு உகந்ததாக உள்ளது.

ஆயினும், தற்போதுள்ள திலேப்பியா மீன்களின் மரபணு, தரம் குறைந்து இருப்பதால், உலக மீன்வள மையம், மரபணு மேம்படுத்தப்பட்ட (கிப்ட்) திலேப்பியாவை அறிமுகம் செய்தது.

கெண்டை மீன் வளர்ப்பைப் போலவே கிப்ட் திலேப்பியா மீன்களையும் குறுகிய காலத்தில் வளர்க்கலாம். நாட்டுத் திலேப்பியாவை விடச் சுவையும் அதிக எடையும் கொண்டது. இம்மீன், சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கலந்து இருக்கும்.

கிப்ட் திலேப்பியா, குறைந்த காலத்தில் விரைவாகவும், அதிக நெருக்கத்திலும் வளரும். சின்னக் குளத்திலும் நிறையளவில் இந்த மீன்களை வளர்க்க முடியும். கெண்டை மீன் வளர்ப்புக் குளத்தைப் போலவே, இதற்கும் குளத்தை அமைக்க வேண்டும். குளத்தில் இயற்கை மற்றும் இரசாயன உரங்களை இட்டு, இயற்கை உணவு உற்பத்தியான பின், மீன் குஞ்சுகளைக் குளத்தில் விட வேண்டும்.

நாற்றங்கால் குளம்

சதுர மீட்டருக்கு 50-75 வீதம் இளம் மீன் குஞ்சுகளை விட்டு, 2 மாதங்கள் வளர்க்க வேண்டும். மிதக்கும் சிறிய தீவனங்களை ஒரு நாளைக்கு 3-4 முறை வழங்க வேண்டும். குஞ்சுகள் 25-35 கிராம் எடையை அடைந்ததும், வளர்ப்புக் குளத்துக்கு மாற்ற வேண்டும்.

வளர்ப்புக் குளம்

ஒரு எக்டர் குளத்தில் 25,000- 50,000 மீன் குஞ்சுகளை விடலாம். இவை, ஆறு மாதத்தில் சராசரியாக 500 கிராம் எடையை அடையும்.

மிதவை வலைக்கூண்டு

கிப்ட் திலேப்பியாவை மிதவை வலைக் கூண்டில் வளர்த்தால் உற்பத்தி அதிகமாக இருக்கும். நீளம், அகலம், உயரம் முறையே 4x4x3.5 மீட்டர் அளவுள்ள மிதவைக் கூண்டில் 30 கிராம் எடையுள்ள 2,800- 8,400 மீன்களை 4-6 மாதங்கள் வளர்க்கலாம். இந்த முறையில் மீன்களின் வளர்ச்சி 400-600 கிராம் இருக்கும். பிழைப்புத் திறன் 90 சதம் இருந்தால், 2,000- 3,000 கிலோ மீன்கள் கிடைக்கும்.

உணவு

இது, இயற்கை உணவை விட, மேலுணவு மூலம் தான் நன்கு வளரும். மேலுணவாக, தீவன உணவு மற்றும் மிதக்கும் தீவனத்தை இடலாம். மிதக்கும் தீவன உணவை மட்டுமே வலைக் கூண்டில் இட வேண்டும். தினமும் இரண்டு தடவை வீதம், மீனின் உடல் எடையில் 5 சத அளவில் தீவனத்தை வழங்க வேண்டும். கெண்டை மீன்களுக்கு அளிப்பதைப் போல, மாதம் ஒருமுறை மாதிரி மீன் பிடிப்பை மேற்கொண்டு உணவளிப்பதை நிர்ணயிக்க வேண்டும்.

நோய்கள்

திலேப்பியா, நோய்களை எதிர்த்து வளரும் என்றாலும், சரியான உணவு, நீர், நோய் நிர்வாகம் இல்லா விட்டால், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள், வைரஸ் போன்றவற்றின் தாக்குதலுக்கு உள்ளாகும். இவற்றில், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணி நோய்களை, முறையான மேலாண்மை மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

ஒரு எக்டர் குளத்துக்கான வரவு செலவு விவரம்

முதலீட்டுச் செலவு

ஒரு மீட்டர் ஆழத்தில் குளம் வெட்ட: ரூ.2,00,000

உள்ளேற்று/வெளியேற்றுக் குழாய்- தொட்டி: ரூ.30,000

மோட்டார் பம்ப் மற்றும் சாதனங்கள்: ரூ.40,000

மொத்தம்: ரூ.2,70,000

ஓராண்டு நடைமுறைச் செலவு

மீன் குஞ்சுகள் 25,000 x ரூ.3 விலையில்: ரூ.75,000

மாட்டுச்சாணம் 10 டன்: ரூ.6,000

இரசாயன உரம் 400 கிலோ: ரூ.4,000

கூடுதல் தீவனம் தவிடு 12,000 கிலோ x ரூ.5 விலையில்: ரூ.60,000

கடலைப் புண்ணாக்கு 2,000 கிலோ x ரூ.20 விலையில்: ரூ. 40,000

மின் கட்டணம்: ரூ.3,000

மீன் அறுவடைக் கூலி: ரூ.15,000

பழுது பார்த்தல்/இதர செலவினங்கள்: ரூ.5,000

காவலர் கூலி: ரூ.10,000

மொத்தம்: ரூ.2,18,000

மீன் விற்பனை மூலம் வருவாய்

மீன் 9,375 கிலோ x ரூ.60 விலையில்: ரூ. 5,62,500

நடைமுறைச் செலவு: ரூ.2,18,000

முதலீட்டுச் செலவில் 20 சதவீதம்: ரூ.54,000

நிகர வருமானம்: ரூ.2,90,500


முனைவர் கி.சிவக்குமார், முனைவர் சு.செந்தூர் குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!